03/07/2014 இந்தியாவிலிருந்து 153 இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவுக்கருகில் வந்தடைந்த இலங்கையர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க எடுக்கும் முயற்சி இரகசியமானதல்ல என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மனித உரிமை நிலைமைகளில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு நிலைமைகளில் சாதகத் தன்மை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பான முறையில் புகலிடக் கோரிக்iகாயளர்களை கடல் வழியாக திருப்பி அனுப்பி வைப்பது தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
02/07/2014 இந்தியாவிலிருந்து 153 இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவுக்கருகில் சென்றடைந்த இலங்கையர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க எடுக்கும் முயற்சி படுகொலை செய்வதற்கு சமமானது. அவர்கள் அனைவரும் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவிருப்பது
துரோகமான செயலாகும் என அவுஸ்திரேலியா அகதிகள் செயல் நடவடிக்கை குழுவும் அவுஸ்திரேலியா தமிழ்க் காங்கிரசும் கடுமையாக கண்டித்துள்ளது.
மேற்படி, குழுவினர் தொடர்புகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்;
இந்தியாவிலிருந்து 153 இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியா நோக்கி சென்ற படகு எண்ணெய் கசிவு காரணமாக கிறிஸ்மஸ் தீவுக்கருகில் நடுக்கடலில் சிக்கித் தவித்தது. படகையும் அதில் பயணம் செய்த 153 இலங்கைத் தமிழர்களையும் கடந்த சனிக்கிழமை (யூன் 28) அவுஸ்திரேலியா கடற்படையினர் பொறுப்பேற்றுக்கொண்டார்கள் என்றும் மறுநாள் ஞாயிறு அவுஸ்திரேலியா அரசாங்கத்துடன் மனித உரிமை அமைப்புக்கள் தொடர்புகொண்டு குறித்த நபர்களை கையேற்க எடுத்த முயற்சிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் எதிர்கட்சிகளான தொழில் கட்சி, கிறின் கட்சியாகியன எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோது அவுஸ்திரேலியா அரசாங்கம் 153 பேருடைய புகலிடக் கோரிக்கையை முற்றாக நிராகரித்ததுடன், இலங்கையரசுடன் பேசி அவர்களை இலங்கையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக அவுஸ்திரேலியாவில் வெளியாகும் மோர்னிங் கேர்ட் (Morning Herald) இன்றுக்காலை (2.7.2014) செய்தி வெளியிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. (அவுஸ்திரேலியா அகதிகள் செயல் நடைமுறைக்குழு மற்றும் அவுஸ்திரேலியா தமிழ்க் காங்கிரஸ் ஆகியோர் அளித்த தகவலின்படி குறித்த 153 பேரும் இலங்கையிடம் ஒப்படைக்க தீவிரமுயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் இவர்களைப் பொறுப்பேற்பதற்காக இலங்கைக் கடற்படை சர்வதேச கடல் பரப்புக்கு செல்வதாகவும் அக்கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலியா கடற்படையினரால் 153 இலங்கையரும் இலங்கை கடற் படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் குறித்த பயணிகள் திருகோணமலைக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.
திருகோணமலைக்கு இவர்கள் கொண்டுவரப்படுவதற்குரிய காரணம் கொழும்புக்கு இவர்கள் கொண்டு செல்லப்படுவார்களேயானால் விடயம் அம்பலமாகிவிடுமென்ற காரணத்தினால் இரகசியம் பேணுவதற்காக திருகோணமலைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜி.ரி.என். என்னும் செய்திஸ்தாபனம், வெளியிட்டிருக்கும் செய்தியின்படி 153 இலங்கையர்களையும் பொறுப்பேற்ற இலங்கைக் கடற்படை புறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை இலங்கைக் கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய மறுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் செய்திகளின்படி 98, மீற்றர் நீளமான அவுஸ்திரேலியா கடற்படை படகு குறித்த இலங்கையர் படகை காவல்காத்து வருவதாகவும் இந்தப் படகில் 37 சிறுவர்களும், 32 பெண்களும் ஏனையோர் ஆண்களுமாக புகலிடம் கோருகிறவர்களாக இருக்கின்றார்களென்றும், இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பாமல் அவர்களின் புகலிடக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இவர்களுக்கு தஞ்சம் அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் வேண்டுகோளாக விடுத்திருக்கின்ற போதும் அக்கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆவணத்தின்படி ஒரு நாட்டிலிருந்து அகதி அந்தஸ்து கோரிவருவோரை அந்நாட்டிடமே திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்ற செயலென அந்த மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இதேவேளை, கிறின் கட்சியின் செனட் சபை உறுப்பினர் சேரா கான்சம்சங் என்பவர் அவுஸ்திரேலியா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், புகலிடம் கோரி இலங்கையிலிருந்து வந்த சிறுவர்களையும் பெண்களையும் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்ற அதேவேளை மனித உரிமையை மீறும் செயல் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்றே தென்துருவ தமிழ்ச்சங்கங்களின் சம்மேளத்தின் தலைவர் விக்ரா ராஜகுலேந்திரனும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்திருப்பதாகத் தெரிகிறது.
இதேவேளை, 153 இலங்கையர்களும் இந்திய புதுச்சேரி கடற்பரப்பிலிருந்து அவுஸ்திரேலியா செல்லவில்லையென இந்தியக் கடலோரப் பாதுகாப்பு படையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இன்றைய அவுஸ்திரேலியா தேசிய ஒலிபரப்புச் சேவையின் (ABC) அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்தியின்படி 153 இலங்கையர்களையும் பொறுப்பேற்க இலங்கைக் கடற்படையினர் சர்வதேசக் கடல் பரப்பு நோக்கிப் புறப்பட்டுள்ளனர். குறித்த ஓர் இடத்தில் இவர்கள் கைமாற்றப்படவுள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இன்னுமொரு 50 பேர் அடங்கிய படகொன்றும் சர்வதேச கடல்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இப்படகு ஜாவா சுமாந்திரா பகுதியில் இருந்து வந்ததா அல்லது இலங்கையிலிருந்து வந்துள்ளதா என விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
03/07/2014 அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்களாயின் அவர்களை ஏற்க இலங்கை கடற்படையினர் ஆயத்தமாகவே உள்ளனர் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது
கேள்வி 153 பேருடன் கப்பல் ஒன்று தத்தளித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதே? அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பதில் இது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது. கடற்படை தளபதியை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. தகவல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும். எவ்வாறெனினும் அவர்களை பெற்றுக்கொள்ள கடற்படை தயாராக இருக்கின்றது.
கேள்வி பாகிஸ்தான் புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே?
பதில் அது தொடர்பில் ஆராயப்படவேண்டும். பாகிஸ்தானுடன் உள்ள உடன்படிக்கை எவ்வாறானது என்று பார்க்கவேண்டும். அதன்படியே இவை இடம்பெறும்.
கேள்வி முஸ்லிம் தீவிரவாதிகள் இருப்பதாகவும் அரசாங்கம் கவனத்திற்கொள்ளாமல் இருப்பதாகவும் ஞானசார தேரர் குற்றம் சாட்டியுள்ளாரே?
பதில் முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படும்.
கேள்வி பேருவளையில் நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் என்ன விடயங்கள் பேசப்பட்டன?
பதில் அது ஒரு திறந்த கலந்துரையாடல் என்று கூறலாம். பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டன. கருத்துக்கள் பறிமாறப்பட்டன. அபிவிருத்திகள் அரசியல் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அது ஒரு சிறந்த கலந்துரையாடல் என்று கூறலாம். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment