2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்

.

jakirraja.jpgவழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.
கீரனூர் ஜாகீர் ராஜா
கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார்.
கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் மட்டுமே சொல்லிச்செல்பவையுமான அழகியல் கொண்டவை அவரது ஆக்கங்கள். 


ஆகவே அவரது நாவல்கள் எல்லாமே சிறியவை.
allaa.jpeg
ஜின்னாவின் டைரி ஓர் அரசியல் நாவல் அல்ல- ஆனால் அரசியல் உடைய நாவல். அல்லாப்பிச்சை என்னும் பிச்சைக்காரரிடமான உரையாடல் வடிவம் கொண்ட இந்நாவல் ஒரேசமயம் அடித்தள மக்களின் வாழ்க்கையையும் அதனூடாக ஓடிச்செல்லும் சூஃபி மரபின் மெய்த்தேடலையும் தொட்டுச்செல்லக்கூடியது. தமிழிலக்கியத்தின் புதிய எழுத்துலகுகளில் ஒன்று கீரனூர் ஜாகீர்ராஜா உருவாக்குவது. [மின்னஞ்சல் keeranur1@gmail.com ]







m-pushparaajan.jpg
எம்.புஷ்பராஜன்
கட்டுரை இலக்கியத்தில் எம்.புஷ்பராஜன் கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருதைப் பெறுகிறார். ‘நம்பிக்கைகளுக்கு அப்பால்’ என்ற நூலுக்காக இப்பரிசு வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘அலை’ என்னும் நவீன இலக்கிய இதழின் இயக்கத்துடன் தொடர்புடையவரான புஷ்பராஜன் அ.யேசுராஜா போன்றவர்களுடன் சேர்த்து ஈழ இலக்கியத்தில் கறாரான அழகியல் நோக்கை முன்வைக்கும் சிந்தனையாளராக அடையாளம் காணப்பட்டவர்.
புனைவிலக்கியத்துக்காக பேரா கணபதிப்பிள்ளை விருது ஸ்ரீதரன் கதைகள் என்னும் நூலுக்காக ஸ்ரீதரனுக்கு வழங்கப்படுகிறது.
isai1.jpg [இசை ]
கவிதைக்காக கவிஞர் இசை [எம்.சத்தியமூர்த்தி] ‘சிவாஜிகணேசனின் முத்தங்கள்’ என்னும் தொகுப்புக்காக ‘ஏ.டபிள்யூ.மயில்வாகனம் நினைவு’ விருதை பெறுகிறார். இன்று எழுதிவரும் நவீனக்கவிஞர்களில் முதன்மையான சிலரில் ஒருவரான இசை கோவையைச் சேர்ந்தவர்.
தமிழ் நவீனக்கவிதை இயக்கத்தின் இறுதியில் திரண்டு வந்த சமைக்கப்பட்ட படிமங்கள், செயற்கையான இறுக்கம், அந்தரங்கக்குறிப்பு என்னும் வடிவம், போலியான உணர்வெழுச்சிகள் ஆகியவற்றை துறந்து புத்துணர்ச்சியுடன் வெளிப்பட்ட புதியகவிதைகள் இசை எழுதுபவை. தமிழ் நவீனக்கவிதையில் எல்லாவகையான சுதந்திரங்களையும் எடுத்துக்கொண்ட படைப்புகள்
sivaa.png
இசையின் கவியுலகின் இரு அம்சங்கள் , ஒன்று விளையாட்டுத்தனம் கொண்டமொழி. இன்னொன்று சமகாலச் செய்தியுலகுடன் கொண்டுள்ள இயல்பான உறவு. தொலைக்காட்சியும் சினிமாவும் அரசியலும் உருவாக்கும் உலகிலிருந்து எழும் படைப்புகள் இவை. எளிய அன்றாடத்தன்மை கவித்துவமான எழுச்சிகளை நிகழ்த்தும் அற்புதம் அவரது கவிதைகளில் உள்ளது. [மின்னஞ்சல் isaikarukkal@gmail.com ]
simoo.jpg
மொழியாக்கத்துக்கான விருதை சி.மோகன் அவரது ஓநாய்குலச்சின்னம் நாவலுக்காக பெறுகிறார்.மதுரையைச் சேர்ந்த சி.மோகன் இலக்கியத்தில் கடந்த முப்பதாண்டுக்காலமாகவே இலக்கியக் கோட்பாட்டாளர், பிரதிமேம்படுத்துநர், எழுத்தாளர் ஆகிய தளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். தமிழிலக்கியத்தில் அவருக்கான பங்களிப்பு இம்மூன்று தளங்கள் வழியாகவும் சீராக உருவாகி வந்த ஒன்று. சிறந்த உரையாடல்காரராக அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் பாதிப்பை உருவாக்கியவர்
சி.மோகன் மொழியாக்கம் செய்துள்ள ஓநாய்குலச்சின்னம் எல்லா வகையிலும் இந்தத் தலைமுறை இலக்கியத்தில் ஒரு முன்மாதிரி மொழிபெயர்ப்பு. அதன் சரளமான மொழி மிகக்கச்சிதமாக ஓர் அன்னியவாழ்க்கையை நம் வாழ்க்கையாக ஆக்குகிறது.
IMG_6727.jpg
தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கான மொழியாக்க விருதை அனிருத்தன் வாசுதேவன் அவரது One Part Woman நூலுக்க்காகப் பெறுகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழியாக்கங்களும் கவிதைகளும் எழுதிவருகிறார் அனிருத்தன் . மின்னஞ்சல் aniruddhan.vasudevan@gmail.com ]
தகவல்தொழில்நுட்ப எழுத்துக்கான ‘சுந்தர ராமசாமி நினைவு’ விருந்தை மணி மணிவண்ணன் பெறுகிறார்
பரிசுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களின் பணிசிறக்கட்டும்.


No comments: