மேற்கு அவுஸ்திரேலியா தமிழ் அரங்கு நிகழ்வில் ஏகோபித்த குரல்

.
தமிழை    உயிர்ப்புடன்   வாழவைக்க    புகலிடத்  தமிழர்கள்  தமது    வீட்டிலே  தமிழ்    பேசுங்கள்
மேற்கு  அவுஸ்திரேலியா   தமிழ்  அரங்கு   நிகழ்வில்  ஏகோபித்த  குரல்


தமிழர்கள்  தாம்  எங்கு  வாழநேரிட்டாலும்   தமது   வாழ்விடங்களில் தமிழில்   பேசவேண்டும்.  புகலிட  வாழ்வு   எம்மையும்  எமது சந்ததியினரையும்  தாய்மொழியிலிருந்து அந்நியப்படுத்திவிடாமலிருக்க  நாம்  முயற்சி   செய்யவேண்டும் - என்று  மேற்கு    அவுஸ்திரேலியா   மாநிலத்தில்  பேர்த்   நகரத்தில் கடந்த   ஞாயிற்றுக்கிழமை  29  ஆம்   திகதி  நடந்த  தமிழ் அரங்கம் நிகழ்வில்  உரையாற்றியவர்களின்   கருத்தில்   ஏகோபித்த  குரல் எழுந்தது.
மேற்கு  அவுஸ்திரேலியா   தமிழ்ச்சங்கமும்   பேர்த்  மாநகர ஸ்ரீபால முருகன்   ஆலயமும்  இணைந்து  பாலமுருகன்   ஆலய  மண்டபத்தில் நடத்திய  தமிழ் அரங்கம்   நிகழ்வில்   இக்கருத்து  வலியுறுத்தப்பட்டது.
ஸ்ரீபால முருகன்  ஆலய  நிருவாக  அமைப்பின்   தலைவர்    திரு. ஜெயசீலன்   மங்கள   விளக்கேற்றி   இந்நிகழ்வை  தலைமையேற்று நடத்தினார்.
                         மேற்கு   அவுஸ்திரேலியா   தமிழ்ச்சங்கத்தின்  தலைவர்  திரு. அருண். அண்ணாதுரையின்   வரவேற்புரையுடன்  தொடங்கிய  தமிழ்  அரங்கு   நிகழ்வில்  மெல்பனிலிருந்து   வருகை    தந்து கலந்து கொண்ட  எழுத்தாளரும்   ஊடகவியலாளருமான  திரு. லெ.முருகபூபதி    வாழ்வு   அனுபவமும் படைப்பு   இலக்கியமும்    என்னும்    தலைப்பில்  உரையாற்றுகையில், இலக்கியத்துறையில்    கட்டுரைகள்   கருத்துக்களையும்   படைப்பு இலக்கியங்களான  கவிதை,   சிறுகதை,  நாவல்,  புனவிலக்கிய பதிவுகள்  வாழ்வு    அனுபவங்களையும்  வழங்குகின்றன  எனவும் தொடர்பாடல்    மனித  வாழ்வுக்கு   முக்கியமானது -  மின்னல் வேகத்திற்கு    இணையாக    தொடர்பாடல்   நவீன   மின்னியல் சாதனங்களில்    வீச்சோடு    பயணித்தாலும்  மனிதர்கள்  பரஸ்பரம்  உரையாடல்    தொடர்பாடல்களை    பேணிக்கொள்ளவேண்டும்    எனவும்  குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரிடமும்   வாழ்வு   பற்றிய  புரிதல்  அனுபவங்கள் நிரம்பியிருந்தாலும்    படைப்பு    இலக்கியவாதிகள்தான்    அவற்றை பதிவுசெய்து   வருகிறார்கள்.    அந்தப்பதிவுகளில்   வாசகர்கள் தங்களைத் தேடிக்கொள்கிறார்கள்.   அனுபவங்கள்   தொடர்பாடலிலும் தங்கியிருக்கின்றன.   தங்குதடையற்ற    தொடர்பாடல்தான் விக்ரோரியா    மாநிலத்தில்   வசிக்கும்  தனக்கு    இன்று    மேற்கு அவுஸ்திரேலியா    மாநிலத்தில்   பேர்த்    மாநகரத்தில்  பேசுவதற்கு சந்தர்ப்பம்   வழங்கியிருக்கிறது    என்றும்    முருகபூபதி  தமது உரையில்    குறிப்பிட்டார்.





கவிஞர்    திரு. எம். ஜெயராம சர்மா   நாங்களும்    தமிழும்  என்னும் தலைப்பில்  உரையாற்றினார்.
அவர்  தமது   உரையில்,     தமிழர்  அல்லாத   பெரும்பாலான   வேற்று   இனத்தவர்கள்   பரஸ்பரம்   உரையாடும்பொழுது   தத்தமது தாய்மொழியில்தான்    உரையாடுகின்றனர்.    ஆனால் தமிழைத்தாய்மொழியாகக்கொண்டவர்கள்   தமிழ்   நன்கு பேசத்தெரிந்திருந்தும்    ஆங்கிலத்திலேயே    உரையாடுகின்றனர். அவர்களில்    பெரும்பாலானவர்கள்    வெளியிலும்   வீட்டிலும் அவ்வாறு    தமது   உறவுகளுடன்   உரையாடுவதனால்    அவர்களின் சந்ததியினரான     தமிழ்க்குழந்தைகளுக்கும்    தமிழ் அந்நியமாகிவிடுகிறது.    மெல்பன் ,   சிட்னி    முதலான  மாநகரங்களில்   உயர்தரப்பரீட்சைக்கு   தமிழ்  மாணவர்கள் தமிழையும்  ஒரு   பாடமாக    பயின்று    தோற்றுகின்றனர்.    இந்த முன்னேற்றம்    மேற்கு    அவுஸ்திரேலியா    மாநிலத்திலும்    பரவுவதற்கு   வழிவகை     செய்தல்    வேண்டும்.    - என்றார்.

இலங்கையிலும்   தமிழர்    புகலிட    நாடுகளிலும்    பிரசித்தம்பெற்ற தமிழ்   நூலகம்   - ஆவணகாப்பகம்   அமைப்பின்   அவுஸ்திரேலியா இணைப்பாளர்   திரு. கோபிநாத்    வலைப்பூக்களும் இணையத்தளங்களும்    என்னும்   தலைப்பில்    உரையாற்றுகையில், தமிழ்   மக்களின்    வரலாறு    முறையாக    ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.    அதற்கு     அவுஸ்திரேலியாவில்   இயங்கும்   தமிழர் அமைப்புகள்   தங்கள்   பணிகளை    வரலாற்று    ரீதியாக    பதிவுசெய்து     ஆவணப்படுத்துவதற்கு    உரியமுறையில் ஆக்கபூர்வமாக     ஒன்றிணைந்து     இயங்கவேண்டும்    என்றும். தற்காலத்தில்     வலைப்பூக்களும்   இணையத்தளங்களும்   தமிழர் சம்பந்தமான   செய்திகளை   -   தகவல்களை   -   படைப்பு இலக்கியங்களை   பதிவுசெய்துவந்தாலும்    காலப்போக்கில்    அவை காணாமல் போய்விடுவதற்கான    வாய்ப்புகளும்  தொடருகின்றன. எனவே    தமிழர்   சம்பந்தப்பட்ட     வரலாறுகளின்    பதிவுகள் ஆவணப்படுத்தப்படல்    வேண்டும்    எனவும்   இனிவரும்   தமிழ் சந்ததியினரின்    கல்விக்கும்    மற்றும்   அவர்களின்    தேவைகளுக்கும் குறிப்பிட்ட    ஆவணங்கள்    பயனுடையதாகவிருக்கும்    எனவும் குறிப்பிட்டார்.
கருத்துரைகளையடுத்து     இடம்பெற்ற   கலந்துரையாடலில்    மேற்கு அவுஸ்திரேலியா    மெடொக்     பல்கலைக்கழக   பொருளியல்  பீட விரிவுரையாளர்    கலாநிதி  அமீர்  அலி  அவர்கள் உரையாற்றும்பொழுது,    இலங்கையில்   முஸ்லிம்களும்   தமிழையே   தமது    அன்றாட   வாழ்வில்     பேசிவருகிறார்கள். இலங்கையில்    அவர்கள்   சிங்கள    மக்கள்   செறிந்து  வாழும் பிரதேசங்களிலும்    தமிழ்   மொழியிலேயே   பேசுகின்றனர். அதனால்தான்    அவுஸ்திரேலியாவில்   கடந்த   முப்பத்தியேழு வருடகாலமாக   நான்    வாழ்ந்துகொண்டிருந்தாலும்    தமிழில் தொடர்ந்து    பேசியும்   எழுதியும்   வருகின்றேன்.    எனது பேரக்குழந்தையை    கண்ணா    என்று     அன்பொழுக   நான் அழைப்பதைப்பார்த்த   எனது    மகனின்   மனைவி -  அவர்  ஆங்கிலேய   வெள்ளை    இனத்தவர் -    கண்ணா    என்பதன்   அர்த்தம் கேட்டுவிட்டு   தானும்    தமிழில்    பேசுவதற்கு     முயற்சி   செய்கிறார் என்று   குறிப்பிட்டார்.



யாழ். பல்கலைக்கழகத்தின்  முன்னாள்  நூலகரும்    மேற்கு அவுஸ்திரேலியா    மாநிலத்தில்    நூலகராக    பணியாற்றி ஓய்வுபெற்றவருமான    திருமதி   ரஞ்சனா    பரமேஸ்வரன் உரையாற்றுகையில்,     தமிழ்க்கல்வி    இலக்கியம்  மற்றும்   தமிழ் சமூக   அமைப்புகள்    சார்ந்த    அன்பர்கள்   அவ்வப்போது    இவ்வாறு ஒன்று   கூடல்களை   நடத்தி  தமிழ்    அரங்கு   நிகழ்ச்சிகளை நடத்தினால்  பயனுள்ள   அனுபவங்களை  எம்மவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.    நீண்ட   இடைவெளிக்குப்பின்னர்   தமிழ் குறித்த   எதிர்காலச்சிந்தனைகளுக்கு   களம்    அமைத்த   நிகழ்ச்சியில் கலந்துகொண்டதையிட்டு    மிகவும்   மகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்ச்சியை   ஒழுங்கு  செய்த    அன்பர்களுக்கு   நன்றியையும் தெரிவிக்கின்றேன்  என்றார்.
மேற்கு    அவுஸ்திரேலியா    தமிழ்ச்சங்கத்தின்   துணைத்தலைவர்  திரு. பத்மநாதன்   ஸ்ரீநிவாசன்   மற்றும்    திரு. அரன் கந்தையா ஆகியோரும்  கலந்துரையாடலில்   உரையாற்றினர்.
செல்வி. அபிதா   நிகழ்ச்சிகளை    தொகுத்து   வழங்கினார்.

                         ---0---

No comments: