கனடா தின கவிதை"

.

News Service

பல்லினம் வாழும் கனடாவாம்
பன்மொழி பேசும் கனடாவாம்
நல்லிணக் கத்தைக் காப்பாற்றி
யாவரும் வாழும் கனடாவாம்! 
தனித்தனி யாயெம் பண்பாட்டின்
தனித்தனி யாயெம் தாய்மொழியின்
தனித்துவம் பேணிக் காக்கின்றோம்!
சகலரும் சேர்ந்து வாழ்கின்றோம்!! 


வேற்றுமை ஆயிரம் இருந்தாலும்
விருப்புடன் கூடி வாழுகிறோம்
போற்றிடும் ஒற்றுமை உறவால்நாம்
புகழ்பெறச் செய்வோம் கனடாவை 
வாழ்த்திடுவோம்!
காலைப் பதித்து நாம்வாழக்
கைகொடுத் திட்ட கனடாவே!
யூலை முதலாம் நாளிதிலே
நூறு வாழ்த்துகள் கூறுகிறோம்!! 
தனித்துவம் பேணி வாழ்ந்திடவும்
தலைநிமிர்ந் துழைத்து உயர்ந்திடவும்
கனிவுடன் எம்மை அணைக்கின்ற
கனடியத் தாயை வாழ்த்திடுவோம்! 
வாழ்த்துகள் கூறி வணங்குகிறோம்!
மனநிறை வோடு வாழ்த்துகிறோம்!!
வாழ்வளித் தெம்மைக் காத்துவரும்
வளம்மலி கனடா வாழியவே!! 
பிறந்த நாளில் வாழ்கவெனப்
பிள்ளைகள் நாங்கள் வாழ்த்துகிறோம்!
சிறந்த வாழ்வை தந்தாய்நீ!
செல்வச் செழிப்புடன் வாழியநீ!! 
கனடியக் கொடிமுன் தலைசாய்ப்போம்!
கண்ணிய மாயதைப் போற்றிடுவோம்
அனைவரும் எழுந்து நின்றதற்கு
அன்பாய் வணக்கம் சொல்லிடுவோம்.
சபா. அருள்சுப்பிரமணியம்- 

No comments: