சங்க இலக்கியக் காட்சிகள் 14- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காட்சி 14

என்னிடம் திரும்பி வந்தான், எதையோ விரும்பிச் சென்றான்!

பண்டைத் தமிழகத்திலே ஆண்கள் பல்வேறு பணிகளுக்காக நாடுவிட்ட நாடு செல்வது சாதாரணமான விடயம். அரசனின் தூதுவராக அல்லது ஒற்றராகச் செல்வோர், வியாபார நோக்கத்திற்காகச் செல்வோர், வௌ;வேறு தொழில்கள் மூலம் பொருளீட்டச் செல்வோர் என்றிப்படி இன்னோரன்ன காரணங்களுக்காக ஆண்கள் ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு செல்வார்கள். நாட்கணக்கில், மாதக்கணக்கில் மட்டுமல்ல சிலவேளை வருடக்கணக்கில்கூட வெளியிடங்களிலே அவர்கள் தங்கவேண்டி வரலாம். அக்காலங்களில் மனைவியை, காதலியை மற்றும் குடும்பத்தவரைப் பிரிந்திருக்கும் துன்பம் நேரும். ஆண்களைப் பிரிந்த பெண்கள் வீட்டிலிருந்தபடி பிரிவுத் துயரிலே வாடித் தங்கள் துணைவர்கள் திரும்பிவருகின்ற நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இத்தகைய விடயங்களைக் கூறும் பாலைத்திணையில் அமைந்த பாடல்கள் சங்க இலக்கியங்களிலே ஏராளமாக உள்ளன. அத்தகைய ஒரு பாடல் சொல்லும் காட்சியொன்றை இங்கே பார்ப்போம்.



வெளியூர் சென்ற தலைவன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வீடு திரும்பினான். அவனுக்காக அதுவரை ஏங்கிக்கொண்டு வருந்தியபடி காத்திருந்தவள் அவனின் மனைவி. ஆனால் அவன் வந்த பின்னர் இயல்பாக இருக்கக்கூடிய மகிழ்ச்சி அவளிடம் இல்லை. முகத்திலே மலர்ச்சி இல்லை. கணவன் திரும்பிவந்துவிட்டான் என்று மற்றவர்கள்முன் நடந்து கொள்ளும் பெருமித நடை அவளிடம் இல்லை. நீண்டநாள் பிரிவின் பின்னர் கணவனோடு கூடி இன்பம் அனுபவித்த குதூகலச் செழிப்பை அவளிடம் காணமுடியவில்லை. இதையெல்லாம் கவனித்த அவளின் தோழிக்கு அதிர்ச்சியாகவும்ää ஆச்சரியமாகவும் இருந்தது.

பிரிந்திருந்த தலைவன் வரும் வரை அவள் ஏங்கியிருந்த ஏக்கத்தைää தவித்த தவிப்பையெல்லாம் நன்கு அறிந்தவள் அந்தத் தோழி. தலைவன் வந்தபின்னர் அவனோடு எப்படியெல்லாம் நடந்துகொள்வேன் என்று தலைவி கற்பனை செய்து மகிழ்ந்து கூறிய கதைகளையெல்லாம் அவள் அறிவாள். எனவே இப்போது அவன் வந்தபிறகு எதனையோ இழந்தவள்போலத் தலைவி இருப்பதன் காரணம் அவளுக்குப் புரியவில்லை. அதனால் அவள் நேரடியாகவே தலைவியிடம் கேட்டுவிடுகிறாள். “அடி மடப்பெண்ணே! அவன் எப்போது வருவான் எப்போது வருவான் என்று ஒவ்வொருநாளும் எதிர்பார்த்து ஒழுங்காக உண்ணாமல், உறங்காமல் காத்திருந்தாயே! இப்போது அவன் வந்தபிறகு அவனை ஆரத் தழுவி, கூடிக்குலவி, இரண்டறக்கலந்துää இன்பமாயிருப்பதை விட்டுவிட்டு இப்படித் தளர்ந்துபோய், மகிழ்ச்சி இழந்துபோய் இருக்கிறாயே என்னடி விடயம் சொல்”
என்று கேட்கிறாள்.

அப்போது தலைவி தன் மாற்றத்திற்கான காரணத்தை மனந்திறந்து தோழியிடம் கூறுகின்றாள். “ அவருக்காக நான் ஏங்கியிருந்தேன். அவரின் வருகைக்காகக் காத்திருந்தேன். வந்ததும் மகிழ்ச்சியில் என்னையே மறந்திருந்தேன். அவர் விரும்பியவாறெல்லாம் இணங்கி நடந்தேன். அவரோடு இன்பமாய்க் கலந்திருந்தேன். ஆனால் அவருக்கு என்மேல் விருப்பமில்லை என்பதை அறிந்ததும் உடைந்துவிட்டேன்” என்று சொல்லி அழுகிறாள்.

நடந்ததென்ன?

தலைவனுக்காகக் காத்திருந்த தலைவி அவன் வந்ததும் தாங்கொணா மகிழ்ச்சியிலே நீந்தினாள். அவன் விரும்பியதையெல்லாம் சமைத்துப் பரிமாறினாள். அவன் விரும்பியவாறெல்லாம் நடந்து உறவாடினாள். இரண்டொரு நாட்கள் இன்பமாகவே பொழுது கழிந்தது. ஆனால். மற்றொருநாள் மாலையிலே அவன் வெளியே சென்றுவிட்டு இரவுநேரம் வீடு திரும்பியபோது அவன் அணிந்திருந்த ஆடையில் வீசிய மணம் அவளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலாடையை அவன் கழற்றியபோது அவனது மார்பிலே காணப்பட்ட அடையாளங்கள் அவளது சந்தேகத்தை வலுவடையச் செய்தன. தனிமையில் அவனோடு கூடமுயன்றபோது அவளது சந்தேகம் உறுதியானது. தன் கணவன் பரத்தையரின் வீட்டுக்குச் சென்றுவந்திருப்பதற்கான எல்லாக் குணங்குறிகளையும் அவனிலே அவள் கண்டாள். அடுத்த நாளும்,  மறு நாளும் என்று அடிக்கடி அவன் பரத்தையொருத்தியைத் தேடிச்சென்றதும் அவளால் தாங்கவே முடியவில்லை. நாளாக நாளாக அவன் அந்தப் பரத்தையின் உறவிலே காட்டுகின்ற சிரத்தையில் சிறிதளவுகூட அவளிலே காட்டாத அவனது நடத்தை அவளுக்கு விரக்தியைத் தந்தது. ஏற்கனவே அவன் உடலால் அவளைப் பிரிந்திருந்தபோது வாடியிருந்த அவள், இப்பொழுது அவன் உள்ளத்தால் தன்னைப் பிரிகிறான் என்ற எண்ணத்தால் வதங்கினாள். அதனால் பிரிந்திருந்த காதலர் கூடுவதால் உண்டாகும் பெருமகிழ்வின் பிரதிபலிப்பை அவளில் காண முடியவில்லை. அதனை உணர்ந்த தோழி அதுபற்றிக் கேட்டதும் தலைவி அவளிடம் இந்த விபரங்களையெல்லாம் சொல்லித் தன் நிலைமைக்கான காரணத்தைக் கூறுகின்றாள்.

இந்தக் காட்சியினை நம் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதுபோன்றதொரு பாடல் தலையியின் கூற்றாக அமைந்து நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

பாடல்:

கற்றை ஈந்தின் முற்றுக்குலை அன்ன
ஆள்இல் அத்தத் தாள்அம் போந்தைக்
கோளுடை நெடுஞ்சினை ஆண்குரல் விளிப்பின்
புலிஎதிர் வழங்கும் வளிவழங்கு ஆர்இடைச்
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி
பிரியாது ஒருவழி உறையினும், பெரிது அழிந்து
உயங்கினை மடந்தை! என்றி தோழி!
அற்றும் ஆகும் அஃது அறியா தோர்க்கே
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லுமற்று எவனோ அன்புஇலங் கடையே?

(நற்றிணை பாடல் இல: 174. பாலைத்திணை. பாடியவர்: (தெரியவில்லை)

இதன் கருத்து:

‘தோழியே! மக்கள் பாருமே இல்லாத அந்த இடத்தில் ஒரு தாளிப்பனை இருக்கிறது. அது ஈச்சைமரத்தின் முற்றிய காய்களைக் கொண்ட குலைகளைப்போலச் செறிவான குலைகளைத் தள்ளியிருக்கின்றது. களிறு ஒன்று பசியினால் அந்தத் தாளிப்பனையின் மடல்களைப்பிய்த்துத் தின்றது. அப்போது அந்தக்களிறுக்குப் தன் பிடியின் நினைவு வந்தது. உடனே அது பிளிறியது. அந்தப் பிளிறலுக்கு எதிர்க்குரலாகக் கேட்கவேண்டிய பிடியின் குரலுக்குப் பதிலாக, அதன் பகையாளியான புலியின் குரல் கேட்டது. பயணிப்பதற்கு அச்சம்தருகின்ற அத்தகைய காட்டுவழியிலே பொருள்தேடச் சென்ற என் காதலரும் வந்ததுவிட்டார்(உண்மைதான்). “மடந்தையே! இருவரும் இனிமையாக ஒருவரையொருவர் தழுவியவாறு. பிரிவேயில்லாமல் ஒன்றாயிணைந்து இன்புற்றிருக்கவேண்டிய இந்த நேரத்திலே நீ மகிழ்விழந்து வரந்துகின்றாயே? இது முறையா?” என்று என் தோழியே நீ என்னிடம் கேட்கின்றாய். உண்மையையை உணராத உன்னைப் போன்றவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். தம்மோடு உறவாடும் ஆண்களை அவர்கள் கொடுக்கும் பொருளுக்காக அல்லாமல்ää உண்மையாகவே உள்ளத்தால் விரும்புகின்ற வழக்கம் இல்லாதவர்கள் பரத்தையர்கள். அப்படிப்பட்ட பரத்தை ஒருத்தியின் மேல் காதல்கொண்டுää தன் மார்பிலே அவளை அணைத்து உறவாடியமைக்கான அடையாளங்களுடன் என்தலைவன் என்னிடம் வருகின்றான். அவ்வாறு என்மேல் அன்பில்லாத அவனைத் தழுவிக்கொள்வதால் எனக்கு இன்பம் உண்டாகுமா? அதனால் என்ன பயன் விளையும்? நீயே சொல்’

என்று தலைவி சொல்வதாக. முற்றிலும் தலைவி கூற்றாக இந்தப்பாடல் உள்ளது.

(தாளிப்பனையின் குலைகள் ஈச்சை மரத்தின் குலைகளைப்போல இருந்தாலும், தாளிப்பனை ஈச்சைமரத்திற்கு இணையாகுமா? ஆவ்வாறே என்னைப் போலப் பரத்தையும் ஒருபெண்தான் என்றாலும் பண்பிலே அவள் தாழ்ந்தவள் என்பதையும், களிறு குரலெழுப்பித் தன் பிடியை அழைக்கப் புலி எதிர்க்குரல் கொடுத்ததைப்போல, என் தலைவனுக்காக நான் காத்திருக்க திரும்பிவந்த அவனை அந்தப் பரத்தை தன்கைக்குள் போட்டுக்கொண்டுவிட்டாள் என்பதையும் உணர்த்துகின்றவாறான கருத்துப்படவே தலைவி தாளிப்பனை, ஈச்சை, களிறு, பிடி, புலி என்பவற்றைப்பற்றிக் குறித்துக்கூறினாள் என்பதை உணர்ந்து இரசித்து பெயரறியாப் புலவரின் திறமையை வியக்க வேண்டும்)

No comments: