பெண் மீதான திறந்தவெளி வன்முறை - - கவிதா முரளிதரன்

கழிப்பறை வசதி இல்லாததே ஒரு பெண் மீது செலுத்தப்படும் ஆகப் பெரிய வன்முறை
உத்தரப் பிரதேசத்தின் கதாரா கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் மிக விரைவில் கழிப்பறைகளைக் கட்டித்தரப்போவதாக அறிவித்திருக்கிறது சுலப் இண்டர்நேஷ்னல் என்கிற அமைப்பு. இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தருவதே இந்த அமைப்பின் நோக்கம். ஆனால், கதாரா கிராமத்துக்கு அவசர அவசரமாகக் கழிப்பறைகளைக் கட்டித்தரக் காரணம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில்தான் மிகச் சமீபத்தில் பதின்வயதைத் தாண்டாத இரண்டு பெண்கள் கொடூர மாகப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுத் தூக்கில் தொங்க விடப்பட்டார்கள். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத அவர்கள், இரவில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வெளியேறியதால்தான் இந்தக் கொடூரம் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இது மட்டுமல்ல, உத்தரப் பிரதேசத்திலுள்ள பல கிராமங்களில் நடக்கும் பெரும்பாலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், இதுபோல கழிப்பறை வசதியில்லாத நிலையில், பெண்கள் வெளியே வரும்போது நிகழ்த்தப்படுவதாகத் தரவுகள் சொல்கின்றன.

திறந்தவெளி இந்தியா

இது உத்தரப் பிரதேசத்தின் பிரச்சினை மட்டும்தானா? இந்தியாவில் 60 கோடிப் பேர் - அதாவது நம் மக்கள்தொகையில் சரிபாதியினர் கழிவறை வசதி இல்லாதவர்கள் என்கிறது யுனிசெஃபின் ஆய்வு. இதில் குறைந்தது 30 கோடிப் பேர் பெண்கள். கழிப்பறை வசதியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான்.


பெரும்பாலான கிராமங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்க, பெண்கள் சூரியன் மறையும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்போதும் ஆண் துணையோடுதான் செல்ல வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, அவர்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். வீடுகளில் கழிப்பறை வசதி இருந்தால் குறைந்தது 400 பெண்களாவது பாலியல் வல்லுறவிலிருந்து தப்பித்திருக்கலாம் என்று சமீபத்தில் சொல்லியிருக்கிறார் பிஹாரைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர். கடந்த வருடத்தில் மட்டும் பிஹாரில் 870 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில்கூட குடிசைப் பகுதிகளில் வாழும் பெண்களைக் கேட்டால் தெரியும் – இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையை. ஆபாசமான வார்த்தைகள் தொடங்கி, கல்லடி வரை பலவிதமான வன்முறைகளை அவர்கள் நாள்தோறும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சமயங்களில் சீண்டல்களையும் பாலியல் அத்துமீறல்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

ஆகப் பெரிய வன்முறை

கழிப்பறை வசதி இல்லாததே ஒரு பெண் மீது செலுத்தப்படும் ஆகப் பெரிய வன்முறை என்பதை எழுத்தாளர் இமையம் ஒருமுறை சொன்னார். கிராமங் களில் பெண்கள் எப்படி வரிசையாக உட்கார்வார்கள் என்றும் யாராவது ஆண் அந்த வழியாகச் செல்ல நேர்ந்தால் உடனடியாக உடைகளை உதறிக்கொண்டு எழுந்துவிடுவார்கள் என்றும் இப்படியாக உட்கார்ந்து எழுந்து உட்கார்ந்து எழுந்தே அவர்கள் தமது காலைக் கடன்களைத் தீர்க்க வேண்டியிருக்கும் என்று ஒரு கூட்டத்தில் சொன்னார் இமையம். பெண்கள் மீதான வன்முறையின் பல வடிவங்களில் இந்தியா, நைஜீரியா, உகாண்டா போன்ற நாடுகளில் கழிப்பறை வசதி இல்லாததும் வன்முறையின் மோசமான வடிவம்.

இந்தியாவைப் பொறுத்தவரை கழிப்பறைகள் என்பவை கலாச்சாரப் பிரச்சினையாகவும் இருக்கின்றன. இன்றுவரை பல சட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்குப் பிறகும் கையால் மலம் அள்ளும் தொழில் தொடர் வதையும் அதையும் ஒரு குறிப்பிட்ட சாதியினரே செய்வதையும் என்னவென்று சொல்வது? கழிப்பறை வசதியை மறுப்பது சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, சாதிப் படிநிலைகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் அடக்குமுறைக்கு வழிவகுக்கும் ஒரு உத்தியாகவே அது சுதந்திரத்துக்கு முந்தைய காலம் முதல் இருந்து வந்திருக்கிறது. அதனாலேயே, காந்தி போன்ற தலை வர்கள் கழிப்பறை பிரச்சினையில் தனிக் கவனம் செலுத்தினார்கள்.

கழிப்பறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காந்தி

கழிப்பறைகள் பிரச்சினையைப் பற்றி ஒரு தீவிரத் தன்மையோடு காந்தி இருந்தார் என்கிறார் அவரது வரலாற்றாசிரியர்களுள் ஒருவர். ஒருமுறை குஜராத், ராஜ்கோட்டில் கழிப்பறைகளைப் பார்வையிட்ட காந்தி, அது எவ்வளவு மோசமாக, இருட்டாக, புழுக்கள் நெளியும்விதத்தில் இருந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார். கழிப்பறை வசதி இல்லாத தாழ்த் தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர், “அதெல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்களுக்குதான்” என்று காந்தியிடம் சொன்னதும் பதிவாகியிருக்கிறது.

இந்த அனுபவங்களுக்குப் பிறகே தனது தொண்டர் களைக் கழிப்பறை வேலைகளில் ஈடுபடச் சொன்னார் காந்தி. ஆனால், இன்றுவரை இந்தப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவில்லை.

கோயில்களும் கழிப்பறைகளும்

காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஆட்சியின்போது கோயில் கருவறைகளைவிட கழிப்பறைகளே இப் போதைய இந்தியாவின் தேவை என்று சொன்னார், முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். அப்போது பல சர்ச்சைகளைக் கிளப்பியது அந்த வாசகம். ஆனால், கடந்த வருடம் இளைஞர்களுக்கான ஒரு கூட்டத்தில், நாட்டில் கோயில் கட்டுவதைவிட முக்கியம் கழிப்பறைகளைக் கட்டுவது என்றார் நரேந்திர மோடி. இப்போது பிரதமராக ஆகியிருக்கும் மோடி, இந்தப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

கழிப்பறைகளும் சாதியமைப்பும்

இந்தியாவைப் பொறுத்தவரை வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும் சேர்ந்தவர் களாகவே இருப்பார்கள் என்பது நிதர்சனம். உத்தரப் பிரதேசத்தில் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்

பட்டவர்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தாம். தலித் பெண்கள் இதைவிட அதிக அளவில் பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள். ஆதிக்க சாதியின் வெறிக்குப் பெண்ணுடல் பலியான முதல் சம்பவமும் இது அல்ல. கயர்லாஞ்சிக்கு முன்னாலிருந்து இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பல சமயங்களில், தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும்போது அது வெளிச்சத்துக்கு வருவதில்லை என்று சொல்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

உத்தரப் பிரதேசத்தில் நடந்த பாலியல் படுகொலை குறித்துக் கேள்வி கேட்ட பெண் நிருபரிடம் “உங்களுக்கு நடக்கவில்லைதானே” என்று சொன்ன உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவும், ஆண்கள் இது போன்ற தவறுகள் செய்வது சகஜம்தான் என்கிற தொனியில் பேசிய அவரது தந்தை முலாயம் சிங் யாதவும் பெண்ணுடல் என்பது ஆண் மற்றும் சாதி போன்ற ‘அதிகாரங்கள்' ஆதிக்கம் செலுத்த வேண்டிய ‘பொருள்' என்கிற மன நிலையிலிருந்து வெளியேறவில்லை என்பது தெளிவு.

இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளையும் உள்ளடக்கியதுதான் இந்தியாவில் பெண்கள் தினமும் எதிர்கொள்ளும் வன்முறையின் பல வடிவங்கள்.

இந்தியாவில் நிலவும் சமூக ஒழுங்கு, சாதிக் கட்டமைப்பு, ஆண்மய சிந்தனை, அரசியல் நிறுவனங்கள் போன்றவை எல்லாம் பெண்ணுடல்மீது ஒரு போரைக் கட்டவிழ்த்துக்கொண்டிருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அந்தப் போர் இப்போது தீவிர மடைந்திருக்கிறது. ஆனால், ஒரு சமூகமாக இந்தியா சில உடல்களின் மீதான போர்களுக்கு மட்டுமே எதிர் வினை செய்கிறது என்பது முகத்தில் அறையும் வெட்கக்கேடு. நிர்பயாவின் பெயரையோ படத்தையோ இறுதிவரை வெளியிடாமல் கண்ணியம் காத்த பல பத்திரிகை களும் ஊடகங்களும்கூட உத்தரப் பிரதேசச் சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்களுக்கு அந்த மரியாதையைத் தரவில்லை என்பது மற்றுமொரு வெட்கக்கேடு.

இந்த அதிகார மையங்களிடமிருந்துதான் விடுதலை யைக் கோரி நிற்கிறது இந்தியப் பெண் சமூகம்.
​ - கவிதா முரளிதரன், தொடர்புக்கு: kavitha.m@thehindutamil.co.in  (Tamil.thehindu)

No comments: