.
இயல்புகளும்
வாழ்க்கைப்பின்னணியும் மனிதர்களின்
விதியை தீர்மானிக்கும்
அனைத்துக்கும் காலம்
பதில் சொல்லும்
இலங்கையில் ஹெல உருமைய பொதுபலசேனா முதலான அமைப்புகளின் இனவாதப்பேச்சுக்களும் செயற்பாடுகளும் இன - மத நல்லிணக்கம் இன ஒருமைப்பாடு
குறித்து சிந்திப்பவர்களுக்கு சவாலாகவே தொடருகிறது.
நாடும் வேண்டாம்
அரசும் அரசியலும் அதிகாரமும்
வேண்டாம் என்பதுடன் நில்லாமல் இல்லறத்தையும் துறந்து வனம்
சென்று நீண்டநாள் நிஷ்டையிலிருந்து
நிர்வாணம் எய்தி
அன்புமார்க்கத்தை போதித்தவர் கௌதம புத்தர்.
துறவறத்திற்கு முன்னர் அவர் ஒரு
மன்னர். அவரால்
தோற்றம் பெற்ற பௌத்த மதத்தில்
தமிழர்களும் இருந்திருக்கிறார்கள்.
பகுத்தறிவுவாதியும் உளவியல்
பேராசிரியரும் திரைப்பட நடிகருமான (பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர்) பெரியார்
தாசன் அவர்களை சில
வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு அவர் வருகை
தந்தபொழுது சந்தித்திருக்கின்றேன்.
அவரது மூதாதையர்கள் பௌத்தர்கள்
என்று சொன்னார்.
அன்பு மார்க்கத்தையே பௌத்த மதம்
உட்பட அனைத்து மதங்களும் போதித்து வருகின்றன.
இலங்கையில் தற்காலத்தில் தீவிரமாக
இனவாதம் பேசும் பௌத்ததுறவிகள் அடங்கிய
இயக்கங்கள் அதனைச்சரியாகப்புரிந்துகொண்டிருந்தால் இலங்கையில்
மத - இனநெருக்கடி போருக்குப்பின்னரும் நல்லிணக்கத்திற்கு சவாலாக இருந்திருக்கமாட்டாது.
இந்துக்கோயில்கள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் குறிப்பிட்ட புனித இடங்களில்
அத்துமீறி அட்டகாசம் புரிதல்
பிறசமயங்களின் மரபுகளை அவமதித்தல்
என்பன தொடரும்பட்சத்தில் இலங்கையில் இன நல்லிணக்கம் கேள்விக்குறியாகவே தொடரும்.
சிறுவயதில்
நீர்கொழும்பில் ஒரு இஸ்லாமிய
பாடசாலையில் நான் கற்றபொழுது வீட்டிலே இந்து
சமயப்பாடத்தை அக்காவிடம் பயின்று அரசாங்கப்பரீட்சையில் சித்தியடைந்தேன்.
அதற்கு முன்னர்
யாழ்ப்பாணத்தில் புலமைப்பரிசிலுடன்
ஸ்ரான்லிக்கல்லூரியில் விடுதியில்
தங்கியிருந்து கற்றபொழுது தவணை விடுமுறைக்கு ஊருக்கு
வீடு திரும்பி அந்த ஒரு மாத கால
விடுமுறையில் ஒரு சிங்கள ஆசிரியரிடம் சிங்களம்
எழுத வாசிக்க பேசக்கற்றேன்.
அரசாங்கப்பரீட்சையில்
பயிற்சிச்சிங்களத்தில் விசேட சித்தியும்
பெற்றேன்.
இளம் வயதிலேயே
மூவின மக்களுடனும்
கல்வி மற்றும் சமூக விடயங்களில் இணைந்து
பயணித்தமையாலும் நீர்கொழும்பு
பிரதேச கத்தோலிக்க மீனவர் சமூகத்தைச்சேர்ந்த கடற்தொழிலாளர்
குடும்பங்களுடன் சகோதர வாஞ்சையுடன் உறவாடியதனாலும் அவர்களின் பிரதேச
பேச்சு மொழி வழக்கை
எனது சிறுகதைகளில் பதிவுசெய்து படைப்பு
இலக்கியத்தில் அறிமுகப்படுத்தினேன்.
எனது முதலாவது
நூல் சுமையின் பங்காளிகள் சிறுகதைத்தொகுப்பு அந்த மக்களுக்கே சமர்ப்பிக்கப்பட்டது. அதில்
அம்மக்களின் பிரதேச மொழிவழக்கு சிறுகதைகள்
சிலவும் இடம்பெற்றன.
1975 இல் அதற்கு தேசிய சாகித்திய
விருது கிடைத்தது.
அதனைப்பெற்றுக்கொண்ட இடம்
தென்னிலங்கையில் முன்னாள்
பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தேர்தல் தொகுதியான அத்தனகல்லையில் அமைந்த
பத்தலகெதர ஆசிரியப்பயற்சிக்கல்லூரி.
விருதுகளை வழங்கியவர்
முன்னாள் ஜனாதிபதி
வில்லியம் கொபல்லாவ.
அந்த இடம்
எனக்கு முற்றிலும் புதியது.
அதனால்
- விருது பெறுவதற்கு முதல்
நாள் என்னை அந்த இடத்திற்கு
அழைத்துச்சென்று காண்பித்தவர் என்னிடம்
தமிழ் கற்றுக்கொண்ட மினுவாங்கொடை
உடுகம்பொல கொரஸ்ஸ ஸ்ரீசுதர்மானந்த விஹாரையின்
பிரதம குரு வண. ரத்னவன்ஸ
தேரோ.
இந்தப்பின்னணிகளிலிருந்துதான் நூற்றுக்கணக்கான இனங்கள் வாழும் பல்தேசிய கலாசார நாடான அவுஸ்திரேலியாவில் எனது வாழ்க்கைப்பயணம் தொடருகிறது.
சமீபத்தில் அவுஸ்திரேலியா மெல்பனில் நடந்த
தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு கொண்டாட்டத்தில் உரையாற்றுவதற்காக என்னை அழைத்திருந்தார்கள். இலங்கையின் பௌத்த
சிங்கள இன மக்கள் முன்னின்று வருடாந்தம்
நடத்தும் இந்தப்பெருவிழா ஒரு பெரிய
மைதானத்தில் ஆயிரக்கணக்கான
மக்களின் பிரசன்னத்துடன் கொண்டாடப்படுகிறது.
அமைச்சர்கள் பாராளுமன்ற
உறுப்பினர்கள் எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் மாநகர மேயர் மற்றும்
கௌன்ஸிலர்கள் இலங்கைத்தூதரக அதிகாரிகள் உட்பட பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளும் பொது நிகழ்வுதான் இந்தப் புத்தாண்டுப்பெருவிழா.
கடந்த ஏப்ரில் 21 ஆம் திகதி
நடந்த
இவ்விழாவில் குளிர்காற்றையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளும் பெரியவர்களும் பல விளையாட்டு
நிகழ்ச்சிகளிலும் இணைந்திருந்தார்கள்.
தமிழ்
- சிங்கள
மக்களின் பிரதான பலகார பட்சணங்கள் உணவு வகைகளுடன் காலை
முதல் மாலை வரையில் விருந்துபசாரமும் இடம்பெற்றது. அந்த
நிகழ்வில் பிரதேச
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அரசியல்
பிரமுகர்களும் கவுன்ஸிலர்களும் உரையாற்றினார்கள்.
எனது உரையில்
நாம் தற்பொழுது
இங்கே பல் தேசிய கலாசார
நாடொன்றில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
இந்தப்பிரதேசத்தில் மாத்திரம் சுமார்
120 நாடுகளைச்சேர்ந்த பல்வேறு
இன மக்கள் வாழ்வதாக
அறிகின்றேன்.
இனங்களின் உரிமை
அவர்களின் மதம் கலை -
கலாசாரம் ஆகியனவற்றை பரஸ்பரம் மதித்து
வாழும் வாழ்க்கை இங்கு
எமக்கு அறிமுகமாகியிருக்கிறது. இந்தச்செய்தியை தொடர்ந்தும்வலியுறுத்துவதற்காகத்தான் நாம்
இன்று இங்கே தமிழ் சிங்கள
- புதுவருடப்பிறப்பு ஒன்று
கூடலில் இணைந்திருக்கின்றோம்.
இந்த நல்ல
செய்தியையே நாம் எமது தாயகம் இலங்கையில்
இருக்கும் அனைத்து
இன மக்களுக்கும்
வழங்குகின்றோம்.
எனக்குறிப்பிட்டேன்.
இதனை இங்கு பதிவுசெய்யும் பொழுது 2009
ஆம் ஆண்டு
மல்லிகையில் எழுதிய ஒரு கட்டுரை நினைவுக்கு
வருகிறது. காலங்கள் எப்படி மாறும் என்பதை
எம்மால் சொல்ல
முடியாதுதான்.
ஆனால்
- அனைத்துக்கும் காலம்
பதில் சொல்லும் என்ற வரலாற்று
உண்மையானது யாதார்த்தமானது என்பதற்காகவே இளமைக்கால
சம்பவம் ஒன்றை சமகால நிகழ்வுடன் ஒப்பிட்டு
மீண்டும் அதனை இங்கு பதிவுசெய்கின்றேன்.
அதற்கு வந்த கருத்தையும்
மீளவும் இந்த ஆக்கத்தின் இறுதியில்
இடம்பெறச்செய்கின்றேன்.
2009
இல் மல்லிகையில் எழுதியது......................
சமீப காலத்தில்
உலக
அரங்கிலும் சர்வதேச சினிமா
அரங்கிலும் பிரபலமாக பேசப்பட்ட இரண்டு
வசனங்களில் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி பராக்
ஒபாமா கெய்ரோவில் உரையாற்றும்போது
தொடக்கத்தில் சொன்ன அஸ்ஸலாமு அலைக்கும். மற்றது
- ஸ்லம் மில்லியணர் டோக் - திரைப்படத்தின் ஒஸ்கார் விருது
வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன -எல்லாப்புகழும் இறைவனுக்கே.
ரஹ்மான்
தமிழில் அப்படிச்சொன்னதையும் ஒபாமா
தனது வணக்கத்தை அரபு மொழியில்
சொன்னதையும் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பார்கள்.
மதநல்லிணக்கத்தையும் தேசங்களுக்கிடையிலும் இனங்களுக்கு மத்தியிலும் புரிந்துணர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்ற உயர்ந்த
நோக்கத்துடன் அமெரிக்க
ஜனாதிபதி இயங்கிக்கொண்டிருக்கிறார்
என்பதற்கு பல உதாரணங்கள் தொடருகின்றன.
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்ற இஸ்லாமிய
மார்க்க வாசகமும்
மனிதர்களை பண்படுத்தும்
வார்த்தைப்பிரயோகமே.
இருவரதும்
உரையின் தொடக்க
வசனத்தைக்கேட்டதுமே நானும் பரவசப்பட்டேன்.
இலங்கைத்தமிழர்கள் உலகில் பல நாடுகளிலும் புலம்பெயர்ந்து
வாழ்கிறார்கள். அவுஸ்திரேலிய ஐரோப்பிய நாடுகளிலெல்லாம்
எம்மவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் விழாக்கள்
ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும்
அந்தந்த நாட்டின் வெள்ளை
இன அரசியல்
மற்றும் தொழிற்சங்கப்பிரமுகர்கள் தமது உரையை ஆரம்பிக்கும் முன்னர்
தமிழில் வணக்கம் என்று
சொல்லிவிட்டுத்தான் ஆங்கிலத்தில்
உரையைத் தொடங்குகிறார்கள்.
அவர்கள்
வணக்கம் என்றதும் எம்மவர்களின் கரகோசம்
உச்சத்தில் ஒலிக்கும்.
அப்படித்தான் ஒபாமா கெய்ரோவில்
அந்த பிரம்மாண்டமான மண்டபத்தில் அஸ்ஸலாமு
அலைக்கும் சொன்னதும் கரகோசம் எழுந்தது.
ஏ.ஆர். ரஹ்மான் தமிழில்
எல்லாப்புகழும் இறைவனுக்கே
என்றதும் தமிழர்கள் - தமிழ்
பேசும் இஸ்லாமியர்கள் உள்ளம்
பூரித்தார்கள்.
ஒரு மேல் நாட்டில் தனது தாய்மொழியை வேற்று
இனத்தவர்களின் முன்னிலையில் இசையமைப்பாளர் உச்சரித்ததும் மலர்ந்த பரவசத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லைத்தான்.
இலங்கை
ஜனாதிபதியும் அண்மைக்காலங்களில் பாராளுமன்றத்திலும்
வெளியிலும் தமிழில்
பல வசனங்களைப்பேசுகின்றார்.
மக்களை உளவியல்
ரீதியாக கவர்வதற்கும் அரசியல் தலைவர்கள் அப்படிப்பேசக்கூடும்.
எனினும் இந்த மாற்றங்கள்
வரவேற்கத்தகுந்ததே.
இச்சந்தர்ப்பத்தில் இந்த பாழாய்ப்போன ஞாபக
சக்தி இருக்கிறது பாருங்கள். அது வந்து எனது கடந்த காலத்தை
அழைத்து வந்துவிட்டது.
1966 ஆம் ஆண்டில்
நானும்
எனது தாய்மாமனார் மகன்
முருகானந்தனும் ஒன்றாக நீர்கொழும்பில் அல்.ஹிலால் மகா வித்தியாலயத்தில் க.பொ.த.
சாதாரண தர வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம்.
இருவரும்
ஒரே ஆண்டில்
பிறந்து ஒன்றாகவே
வளர்ந்து ஆறாம் வகுப்பில் புலமைப்பரிசிலும் பெற்று சில வருடங்கள்
யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி கல்லூரியில் படித்துவிட்டு Home
Sick காரணமாக
மீண்டும் நீர்கொழும்பு வந்து அல்.ஹிலால் மகா
வித்தியாலயத்தில் கல்வியைத்தொடர்ந்தோம்.
குறும்புத்தனங்களுக்கும் குழப்படிகளுக்கும் குறைவில்லாதவர்கள் என்று இருவர்
குடும்பத்துப்பெற்றோர்களிடமும் பெயரெடுத்தவர்கள் நாமிருவரும்.
இந்த முருகானந்தனைப்பற்றி எனது நினைவுக்கோலங்கள்
கதைத்தொகுப்பிலும் ஒரு கதை எழுதியிருக்கின்றேன்.
உன்னால
அவன் கெட்டான் - அவனால நீ கெட்டாய் --- என்ற எங்கள்
குடும்பங்களின் புகழ்பெற்ற வாசகத்தை அடிக்கடி
சொல்லும் அத்தையும் ( முருகானந்தனின் அம்மா)
மேல் உலகம் சென்றுவிட்டார்கள்.
முருகானந்தன்
தற்போது தமிழ்நாட்டில் குடும்பத்துடன் வசிக்கிறான். எமது தொடர்புகள் இன்றும்
அதே குறும்புத்தனங்களுடனும் நீடிக்கின்றன.
சரி - இனி
விடயத்துக்கு வருகின்றேன்.
அல்ஹிலாலில்
எமது வகுப்பின் ஆசிரியர்
சுபியான் அவர்கள்தான் பாடசாலையில் உப-அதிபர். அத்துடன்
எங்களுக்கு தமிழ்ப்பாடம்
எடுத்தவரும் அவர்தான்.
மாதாந்தம்
பாடசாலையில் மாணவர் இலக்கிய மன்ற
நிகழ்ச்சி நடக்கும். அதிலே ஆசிரியர்கள் மாணவர்களின் சுயவிருத்தியை வளர்ப்பதற்காக ஒரு புதுமையான
நிகழ்வை சேர்த்துக்கொள்வார்கள்.
துண்டு
எழுதிப்போட்டு மாணவர்களை எடுக்கச்சொல்வார்கள். அதிலே
யாராவது ஒரு பெரியாரைப்பற்றி கூட்டத்தில்
பேச வேண்டும். அல்லது பாடவேண்டும். தனிநபர்
நடிப்பு நடிக்கவேண்டும்.
மாணவர்களாகிய
எங்களுக்கு நெஞ்சு திக்குத்திக்கென அடிக்கும்.
யார் இன்று மாட்டப்போகிறோம் என்ற
பயவுணர்வு ஆட்டிப்படைக்கும்.
அன்றைய
கூட்டத்தில் முருகானந்தன் வசமாக மாட்டிக்கொண்டான்.
அவன் எடுத்த
துண்டில் ஒரு பெரியாரைப்பற்றி பேசவேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
என்ன பேசுவது?
என்று
என்னிடம் இரகசியமாக ஆலோசனை
கேட்டான். எங்கள் அக்கா
பாடசாலை பேச்சுப்போட்டியில் முன்பு
பேசிய
பேச்சு ஓரளவு எனக்கு
மனப்பாடம்..
அதுமட்டுமல்ல
- உடப்பூர் சோமஸ்கந்தர்
அக்காவுக்கும் மற்றும் சில மாணவிகளுக்கும் பழக்கி
வட்டாரப்போட்டியில் முதலிடம்
பெற்ற செழியன் துறவு நாடகத்தில்
பாண்டிய மன்னன் செழியனாக
நடித்த அக்கா பேசிய வசனங்களும்
மனப்பாடம். இன்றும்தான்.
சேர மன்னன் படையெடுத்து
வரப்போகிறான் என்றதும் அரசவையிலே அக்கா செழியன்
- மந்திரி வீரபாண்டியரை
நோக்கி - வீரபாண்டியரே---- எங்கே எமது
படைகள். வேலும் வாளும்
வீரமிகு தோள்களும்
சேனைகளும் யானைகளும்
அணிவகுத்து நிற்கட்டும் சேரன் படை புறமுதுகிட்டு ஓடட்டும். வெற்றி--- வெற்றி---
பேரப்பிள்ளைகளும் கண்டுவிட்ட அக்காவுக்கு
அந்த வீரம் செறிந்த வசனங்கள் இன்றும்
மனப்பாடமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
முருகானந்தனுக்கு அக்கா முன்பு பேசிய பேச்சுப்போட்டி வசனங்களை காதுக்குள் மெதுமெதுவாக
சொல்லிக்கொடுத்தேன்.
சேற்றில்
மலர்ந்த செந்தாமரை போன்று முட்களின்
நடுவிலே மோகன ரோஜா போன்று
ஆழ் கடலிலே முத்துப்போன்று பாரத நாட்டிலே
திருநெல்வேலி ஜில்லாவிலே எட்டயபுரம் என்ற ஊரிலே
சின்னச்சாமி ஐயருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்தவர்தான் சுப்பிரமணியன். சிறுவயதிலேயே பாட்டியற்றி பாரதி
பட்டமும் பெற்றவர். என்று
சொல்லிவிட்டு ஓடிவிளையாடு பாப்பாவில்
சில வரிகளையும் பாடிவிட்டு வந்துவிடு
என்று அவனுக்கு
எனது அற்புதமான ஆலோசனையைச்சொன்னேன்.
நீதான்டா என்ற அருமையான மச்சான் --
என்று அவன் எனக்கு
சான்றிதழும் வாயாலேயே தந்தான்.
இப்பொழுது
அவன் பேசவேண்டிய
முறை வந்து விட்டது.
அவன் மேடையேறும்போதுதான் எனக்கு
மின்னல் வெட்டியது.
சபையைப்பார்த்து எப்படி பேச்சைத்தொடங்கவேண்டும் என்று
நான் அவனுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை.
அதிபர்
அவர்களே ஆசிரியர்களே மாணவர்களே உங்கள்
அனைவருக்கும் வணக்கம் என்ற வசனத்தையும் நான் சொல்லிக்கொடுத்திருக்கவேண்டும். அப்படிச்சொல்லிக்கொடுக்காதமையால் நானும் ஒரு பாவத்துக்கு
அன்று ஆளாகிவிட்டேன்.
இதையுமா சொல்லிக்கொடுக்க வேண்டும்.
அவனுக்கு சுயபுத்தி இருக்கும்தானே என்று
அவனது பேச்சை மேடையில் கேட்க ஆவலானேன்.
பாடசாலை
அதிபர், தமிழ் சொல்லித்தரும்
உப அதிபர் மற்றும் பெரும்பான்மையான ஆசிரியர்கள்
மாணவர்கள் அனைவரும்
இஸ்லாமியர்கள்.
முருகானந்தன்
அஸ்லாமு அலைக்கும் என்று சொன்னதுதான் தாமதம் முழு மண்டபமுமே சிரிப்பொலியில் ஆழ்ந்தது.
பரவாயில்லையே --- மச்சான் என்னைவிட
புத்திசாலிதான் என்று மனதிற்குள் மெச்சிக்கொண்டு அவனது பேச்சை
கவனித்தேன். கிளிப்பிள்ளை போன்று சொன்னதைச்சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கி வந்தான்.
உப - அதிபர்
அவனைத்தனியே அழைத்துச்சென்று எச்சரித்தார். - நீ ஒரு இந்து
மாணவன். ஒரு இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்தவர்தான் அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லலாம்.
இனிமேல் அப்படிச்சொல்லாதே வணக்கம் என்று
சொல்லிப்பழகு. - என்றார்.
அவனுக்கு
முகம் வாடிவிட்டது. அழாக்குறையாக அவரிடம் மன்னிப்புக்கேட்டான்.
எல்லோரும்
இஸ்லாமியர்களாக இருந்தமையால் அப்படிச்சொல்லிவிட்டேன் சேர்.
இனிமேல் அப்படி பேசமாட்டேன் - என்றான்.
வீட்டுக்கு
திரும்பி வரும்போதும்
மிகவும் கவலையுடன்தான் வந்தான்.
மறுநாள் பாடசாலைக்கு
வந்தபொழுது சக மாணவர்கள் அவனைப்பார்த்து அஸ்ஸலாமு
அலைக்கும் என்று கிண்டலாக சொன்னார்கள். அவன்
பதிலுக்கு வணக்கம்
எனச்சொல்லி தப்பித்துக்கொண்டான்.
கடந்த
2007 ஆம் ஆண்டு
தமிழகத்தில் முருகானந்தனை
சந்தித்தபொழுது இந்தச்சம்பவத்தை நினைவுபடுத்தினேன். வணக்கம்....வணக்கம்.....வணக்கம் என்று கையெடுத்துக் கும்பிட்டுச்சொல்லி சிரித்தான்
முருகானந்தன்.
இதனை கணினியில்
எழுதிக்கொண்டிருந்தபோது அருகே வந்து வாசித்த எனது
மனைவி இப்படிச்சொன்னாள்:
முருகானந்தன்
சொன்னது இருபதாம் நூற்றாண்டில். பராக் ஒபாமா சொன்னது இருபத்தியோராம் நூற்றாண்டில்.
இக்கட்டுரை மல்லிகையில் வெளியானதும் இலங்கையில் பேருவளையிலிருந்து வாசகர்
றபீக் மொஹிடீன்
என்பவர் பின்வரும் குறிப்புகளை எழுதியிருந்தார்
மல்லிகையில் பதிவான
பதில்
உங்கள்மீது சாந்தி
உண்டாவதாக
2009 ஆகஸ்ட் மல்லிகையில்
வெளிவந்த முருகபூபதியின் கட்டுரை தொடர்பாக எனது
இக்கருத்தை எழுதுகின்றேன்.
இது நம் இலக்கிய
உறவுகளுக்கான புரிந்துணர்வுகளுக்காகவேயன்றி வேறல்ல. பிற இதழ்களைப்போலச் சென்ற
மல்லிகை இதழின் அனைத்து
விடயங்களையும் எழுத்தெண்ணிப்படித்தபோது - முருகபூபதி அவர்களின் தொடர்கட்டுரையான கங்காரு நாட்டுக்காகிதம் - அஸ்ஸலாமு
அலைக்கும் என்ற தலைப்பில்
வந்ததை உற்றுநோக்கி
அதில் ஆழ்ந்திருந்தேன்.
இது தொடர்பான
எனது கருத்தை இங்கு குறிப்பிட
விரும்புகின்றேன். இக்கருத்தை குறிப்பிடும்போது இஸ்லாம்
பற்றியும் சிறிது குறிப்பிடுவது தவிர்க்க
முடியாததாயிற்று.
இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் அருளப்பட்ட
மார்க்கமல்ல. அது அனைத்துக்காலப்பகுதியிலும் வாழும்
அனைத்து மனித சமுதாயத்தினருக்குமே அருளப்பட்டது. இஸ்லாம்
அருளப்படும்போது, முஸ்லிமல்லாதவர்களாக
இருந்தவர்களே இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களானார்கள். இத்தகையவர்களின் வாழ்க்கையைச்
செழுமைப்படுத்துவதற்காகவும் பிறரோடு சகோதரத்துவத்தோடும் - சமத்துவத்தோடும் நடப்பதற்காகவுமே இஸ்லாம்
மனிதர்களுக்குச் சில வார்த்தைகளைக்கற்றுக்கொடுத்திருக்கிறது. இதில்
ஒன்றுதான் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற
வார்த்தைப்பிரயோகமாகும்.
இதன்
பொருள் உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்
( உங்கள் வாழ்வில் நிம்மதி உண்டாகட்டும்) என்பதுதான்.
இதை யாரும் யாருக்கும்
கூறலாம். முஸ்லிம்கள் மட்டும்தான்
பயன்படுத்தவேண்டும் என்பதில்லை.
ஆனால் - இந்த வார்த்தையை அன்று
முதல் இன்று வரை முஸ்லிம்கள் - முஸ்லிகளுக்கு மட்டுமே
பயன்படுத்திவருகிறார்கள். இது தவறானதாகும். இஸ்லாத்தைப்பற்றி இஸ்லாத்தைப்பின்பற்றும் முஸ்லிம்களுக்கே இது பற்றிய
புரிதல் இல்லாததுமாகும். ஒரு மனிதன்
இன்னொரு மனிதனோடு கொண்டுள்ள பகை
- குரோதம் முதலியன
நீங்குவதற்கு இஸ்லாம் கூறும் இலகு வழிகளில் இதுவும்
ஒன்று. அதுதான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒரு மனிதன் புன்முறுவல் பூத்த முகத்தோடு இன்னுமொரு
மனிதனுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
– உங்கள் மீது சாந்தி
உண்டாவதாக எனக்கூறுவானேயானால் அவர்களுக்கிடையிலுள்ள அன்பு மேலும் மேலும் பெருக்கெடுத்தோடும். மற்றும்
தன்னோடு குரேரதம்
கொண்டுள்ள மனிதனுக்கு ஒருவன் இவ்வார்த்தையைக்கூறுவானேயானால் அம்மனிதன்
கொண்டுள்ள குரோதமும் படிப்படியாக
-- கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி அவர்களுக்கிடையில் அன்பு மலரும்.
இத்தகைய ஓர் அன்புப்பிணைப்பை உருவாக்குவதற்காகத்தான் இஸ்லாம் - இந்த வார்த்தையை மனிதர்களுக்கிடையே கூறிக்கொள்ளுமாறு கூறுகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும்
- உங்கள் மீது சாந்தி
உண்டாவதாக ஒருவர் கூறுவாரேயானால் - அதற்கும்
அழகிய
முறையில் பதிலளிக்குமாறு இஸ்லாம் கூறுகிறது.
அந்தப்பதில் வஅலைக்குமுஸ்ஸலாம் - உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக என்பதுதான்.
அஸ்ஸலாமு
அலைக்கும் - வ அலைக்குமுஸ்ஸலாம் ( உங்கள் மீது சாந்தி
உண்டாவதாக - உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக)
எவ்வளவு அழகான வார்த்தைகள் இவைகள். ஆனால்
- இதனை முஸ்லிம்கள் தமக்குள் மாத்திரமே
கூறிக்கொள்வதும் - பிறசமயத்தவர்களுக்கு
கூறாமல்
இருப்பதும் - பிறசமயத்தவர்கள் கூறுகின்றபோது - அதற்குப்பதிலளிக்காததும் - பதிலளிக்காதது மட்டுமன்றி
அவர்களைக்குறை கூறுவதும் - கண்டிப்பதும் வருந்தக்கூடிய விடயம். அதுமட்டுமன்றி இது இஸ்லாம்
பற்றி
முஸ்லிம்களுக்கே போதிய தெளிவில்லை என்பதைக்காட்டுகிறது.
முருகபூபதி
அவர்கள் குறிப்பிட்டுள்ள விடயமும்
இதுதான். பால்ய பருவத்தில் முருகபூபதி
அவர்களும் முருகானந்தன் அவர்களும் நீர்கொழும்பு அல்-ஹிலால்
மகா வித்தியாலயத்தில் கற்றபோது, அவர்களுக்கேற்பட்ட ஓர்
அனுபவத்தை மல்லிகை வாசகர்களாகிய எம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார் என்பது
மகிழ்ச்சியானது.
ஆனால் -
இன்றோ - இந்நிலை கொஞ்சம்
கொஞ்சமாக மாறிவருவதனை அவதானிக்கலாம். சில முஸ்லிம்கள்
- பிற சமயத்தவரைப்பார்த்து - அஸ்ஸலாமு
அலைக்கும் எனச்சரளமாகக் கூறுவதும் - அதற்கு அவர்களும் வஅலைக்குமுஸ்ஸலாம் - எனச்சிரித்துக்கொண்டே பதிலளிப்பதும் - அத்தோடு
பிற
சமயத்தவர்களே தம்மோடு நெருங்கிப்பழகும் முஸ்லிம்களைப்பார்த்து - அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கூறுவதும் - முஸ்லிம்கள் - வஅலைக்குமுஸ்ஸலாம்
எனப்பதிலுக்கு கூறுவதும் வரவேற்கதக்க விடயமாகும்.
ஏனெனில் -
இந்த வார்த்தை முஸ்லிம்களுக்கு மட்டும்
சொந்தமானதல்ல. முழு மனித சமூகத்துக்கும் சொந்தமானது.
முருகபூபதி அவர்களே
- உங்கள் மனைவி
கூறியதாக கூறிய உங்களுடைய வார்த்தையை
உங்களுக்கு ஞாபகப்படுத்தி அதனை நானும்
இதில் என்னுடையதாகப் பதிக்கின்றேன்.
முருகானந்தன்
சொன்னது இருபதாம் நூற்றாண்டில்.
‘பராக் ஒபாமா சொன்னது இருபத்தியேராராம் நூற்றாண்டில்.
நான் உங்களுக்கும் மல்லிகை வாசகர்களுக்கும் சொல்லி விடைபெறுகிறேன்:- அஸ்ஸலாமு அலைக்கும் -
உங்கள் மீது சாந்தி உண்டாவதாக.
முடிந்தால்
நீங்களும் சொல்லுங்கள்.
ஏனெனில் - இன - மத -
சாதி - பேதம் கடந்தது இந்த வார்த்தை.
எனது பிற்குறிப்பு:-
இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வதற்கு
இடையூறாகவிருக்கும் சக்திகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து
மனித உரிமைகள் இன நல்லிணக்கம் தொடர்பாக
தொடர்ச்சியான சந்திப்பு கலந்துரையாடல்களை நடத்திப்பார்க்கலாம். பல் தேசிய கலாசார நாடுகளில்
மக்களின் வாழ்க்கைத்தரம் பற்றிய கருத்தரங்குகளை தகவல்
அமர்வாக நடத்திப்பார்க்கலாம்.
அனைத்துக்கும் காலம்
பதில் சொல்லும்.
---0----
No comments:
Post a Comment