தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே -சந்திரிகா சுப்ரண்யன்

.
சிட்னியில் சிவகாமியின் சபதம்


அமரர் கல்கியின் அழியாக் காவியமானசிவகாமியின் சபதம்’ - இப் புதினத்தை  ஐம்பது , அறுபதுகளில் வாசிப்பைத் தொடங்கியவர் எவருமே  வாசிக்காமல் இருந்திருக்க முடியாது. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி  (1899-1954  ) எழுதி 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த கதை இது.
ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு கொடி கட்டிப் பறந்த பல்லவர்களது வரலாறு சார்ந்த புதினம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் பல்லவ  இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவன் ஒரு சிற்பியின் மகளிடம் கொண்ட காதல், அதன் தொடர்ச்சியாக சாளுக்கிய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது கருப் பொருளாக உள்ளது.
மனதினை விட்டு இன்றும் அகலாத, காலத்தை வென்ற கதா பாத்திரங்களான   மகேந்திர பல்லவர், அவர் மகன் நரசிம்ம பல்லவன்(மாமல்லர்) சிற்பி ஆயனர், அவர் மகள் சிவகாமி , புலி கேசி, அவன் சகோதரன் பிட்சு நாக நந்தி என முக்கிய கதை மாந்தர்கள். மாமல்லரால் எழுப்பப்பட்ட கலைக்கோயில் அவனது பெயரைத் தாங்கி மாமல்லபுரமாக இன்றும் பெரும் பாறைகளைக் குடைந்து கற்றளி என்று அழைக்கப்படும் கோயில்களைக் கொண்டு நிற்கிறது. 




இந்த காஞ்சி , சாளுக்கியம் பல்லவ கால பின்ணனி யாவும் மேடையில் டிஜிடல் திரையில் காட்சிகள் பின்ணணியில் இயங்க சிவகாமியின் சபதம்நாட்டிய நாடகம் சிறப்பாக மேடையேற்றப்பட்டது. இந் நாட்டிய நாடகத்தை நெறிப்படுத்தியவர் மதுரை முரளீதரன். இயக்கம், பாடல்கள், இசை, நடனம், மதுரை முரளீதரனின் கைவண்ணனமும் கலை வண்ணமும் மிளிர்கின்றது. இந்தியக் கலைஞர்களான முரளீதரன் , காவ்யா முரளீதரன் , உமா முரளி , சிதம்பரம் ஆர் சுரேஷ் ஆகியோருடன் இணைந்து  சிட்னி நடன ஆசிரியை சுகந்தினி தயாசீலன் தன் குழுவினருடன் இணைந்து கதை  மாந்தர்களுக்கு உயிரூட்டினர். சுமார் இரண்டரை மணி நேரம் அரங்கில் ஆயனரும் சிவகாமியும், மகேந்திர பல்லவரும், மாமல்லரும், புலிகேசியும், நாகநந்தியும், அப்பரும் உயிரோடு எழுந்து வந்து காட்சி தந்தார்கள். அவையோர் மெய்மறந்து வைத்த கண் வாங்காமல் கடைசிவரை அவர்களைக் கண்டு களித்தார்கள்.




இதன் சிறப்பு என்னவென்றால் சிட்னியில் உள்ள நாட்டியம், இசை, நாடகம் என்ற மூன்று துறையும் சார்ந்த இளங்கலைஞர்கள், தேர்ந்த கலைஞர்கள் வளரும் கலைஞர்கள் என்று பலரும் பாராட்டத்தக்க முறையில் ஆடி நடித்தார்கள்.இந்த நிகழ்ச்சி இங்குள்ள கலைஞர்களைக் கொண்டு அரங்கேறியது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. மேடையில் தோன்றிய, நடித்த யானை நிஜ யானையின் உருவத்தை ஒத்து மிகவும் தத்ரூபமாக இருந்தது, சிறப்பாகவும் நடித்தது. யானை, போர்காட்சிகள்மற்றும் காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, போன்ற தமிழர் கலாச்சார அடையாளங்கள்  போன்ற ஏராளமான பிரமிக்கவைக்கும் அம்சங்கள் நிகழ்ச்சியின் தரத்தை வெகுவாக உயர்த்தின.இத்தனை இருந்தும் நகைச்சுவை இல்லாமலா? நம்ம ஊர் ஸ்ரீபாலனும், கருணாகரன் நடராஜாவும் அடிக்கும் பிசாசுக் கூத்து அரங்கை சிரிக்க வைத்தது.என் இருக்கைக்கு பின்னால் இருந்த சிறுமி தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தாள்.

சிவ நடனத்துடன் தொடங்கி நரசிம்ம பல்லவர் அரசி வானமாதேவியிடம் தனது இளமைக் காலத்தில் ஆயன சிற்பியின் மகள் சிவகாமியிடம் கொண்ட காதலை ஒப்புக் கொள்ளும் காட்சியில் தொடங்கி, நரசிம்மர் சிவகாமியின் இளமைக் காலம், புலிகேசியின் சகோதரன் நாகநந்திக்கு சிவகாமி மீது ஏற்படும் காதல், பரஞ்சோதி புலிகேசியிடம் பிடிபடல், புலிகேசியிடம் சிவகாமி சிறைப்படல், வஜ்ரபாகுவாக மகேந்திர பல்லவர் நடித்துப் புலிகேசியின் படையெடுப்பைக் காலதாமதம் செய்தல், நரசிம்மர் புலிகேசி படையை வெற்றிகொள்ளல் உள்ளிட்ட காட்சிகளுடன்  நாடகம் விறுவிறுப்பாக போகிறது.
இறுதியாக நரசிம்மர் வருவார் தன்னைக் கைப்பிடிப்பார் என்று காத்திருக்கும் சிவகாமி, நரசிம்மர் மணம் முடித்துவிட்டார் என்பதறிந்து, அப்பரின் தேவாரமான,
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் 
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் 
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் 
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் 
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் 
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் 
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

என்று சிவகாமி இறைவன் ஏகாம்பரேஸ்வரரையையேக் கணவனாக ஏற்கிறாள்.

நிகழ்ச்சியில்  காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக மின்னல் வேகத்தில் வந்து மறைந்தன. காட்சிகள் நகர்ந்த வேகம் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. உடை, காட்சி அமைப்புக்கள், ஒளி, ஒலி எல்லாமே சிறப்பாக அமைந்திருந்தன.


சிவகாமியாக நடித்த காவ்யாவின் ஆடல் கண்முன் நிற்கின்றது. நாக நந்தியாகவும் , புலிகேசியாகவும் இரட்டை வேடத்தில் நடித்த மதுரை முரளீதரன், முக பாவத்திலும், ஈர்த்த உமா முரளி ஆகியோர் மற்றும் சுகந்தி தயாசீலன்  மற்றும் அவரது குழுவினர் அனைவரும் சிறப்பாகவும், இயல்பாகவும் தங்கள் பணியை செய்திருந்தனர்.
எங்கே சுகந்தி  பிடித்தீர்கள் இவ்வளவு புஜ பல பராக்கிரமம் கொண்ட நமது இளைஞர்களை? அவர்களின் ஆர்வமும், உழைப்பும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.
மிகச்சவாலான ஒரு பிரமாண்டமான படைப்பை சில மணீ நேரங்களுக்குள் ரசிக்க செய்த முரளீதரன், சுகந்தி கூட்டணிக்கு ஒரு சபாஷ் போடலாம்.

No comments: