அண்ணை எங்கே’ – முடிவில்லாத நாடகம் - பராசக்தி சுந்தரலிங்கம்

.
இன்று முள்ளிவாய்க்கால் ஐந்தாவது நினைவு நாள்.
காட்சிகள் மாறுகின்றன, ஆனால் நாடகம் முடியவில்லை.
இந்த முடிவில்லாத நாடகத்தின் சில சேதங்களை
இளைய பத்மநாதனின் ‘அண்ணை எங்கே’  ’ மீண்டும் நிகழ்த்தியது.
சேதம் எனப்படுவது யாதெனில்   தெரிந்த முழுக் கதையிலிருந்து சேதித்து எடுக்கப்பட்ட ஒரு கட்டம். இவ்வாறான சில சேதங்கள்  மறைந்த உறவுகளைத் தேடும் பொருளாகக் கொண்டு ‘அண்ணை எங்கே’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.என்று விளக்குகிறார் இளைய பத்மநாதன்
மேலும் ‘அண்ணை எங்கே’ ஒரு ‘தொகைநிலை நாடகக் கூத்து’ என வகைப்படுத்துகிறார்.
‘தொகைநிலை’ என்பதற்குத் தண்டியலங்காரம் விளக்கம் கூறும்:
 தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
 ஒருவ ருரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
 பொருளிடங் காலந் தொழிலென நான்கினும்
 பாட்டினு மளவினும் கூட்டியவாகும்.
கதை தழுவிப் பாடி ஆடல் நாடகக் கூத்து என்பதாம்.
கடத்தல், கைது, கொலை, காணாமல் போதல் என அச்சமும் சோகமும் நிறைந்த வாழ்க்கையும் அதில் இருந்து விடுபடப் போராடுவதும் ஆறு சேதங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன.
மக்களின் ஆர்ப்பாட்டத்துடன் காட்சி தொடங்குகிறது.
அன்ரிகனி என்பாள் தன் அண்ணன் உடலைப் புதைக்கப் போராடிய கிரேக்க நாடகம்
சங்ககால மன்னன் ஆஅய் எயினன் உடலைப் பறவைகள் மூடிய கதை
இன்றைய சோக வரலாறு ‘பாலன் படுகளம்’
அரிச்சந்திர மயானகாண்டம் சந்திரமதி புலம்பல்
என இடைவிடாது காட்சிகள் ஒன்றுக்குள் ஒன்றாய்த் தொடர்கின்றன.
மீண்டும் மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவில்லாமல் தொடர்கிறது.
நாடகம் இங்கும் முடியவில்லை,அங்கும் முடியவில்லை.


‘அண்ணை எங்கே – தொகைநிலை நாடகக் கூத்து’ குலசேகரம் சஞ்சயன் அவர்களின் நெறியாள்கையில் கவிதை நாடகப் பாணியில் ‘மே பதினெட்டு’ நினைவுகூரும் நாள் அன்று சிட்னியில் அரங்கேறியது.
மேடையிலே‘அண்ணை எங்கே' 'என்ரை அண்ணை எங்கே’ என்று ஓலமிட்டபடி,அந்த வாசகம் எழுதிய பதாகையைக் கையிலே ஏந்தியவண்ணம் சின்னஞ் சிறு பெண் ஓடி வருகிறாள்.
அந்தச்  சிறுமியைத் தொடர்ந்து‘அண்ணை எங்கே அம்மா எங்கே அப்பா எங்கே அக்கா எங்கேதம்பி எங்கே’என்ற ஓலங்களுடன் பதாகைகளைத் தாங்கிய  மக்களின் ஆர்ப்பாட்டத்துடன் நாடகம் தொடங்குகிறது.
அடுத்த காட்சி‘அன்ரிகனி’ என்ற கிரேக்க நாடகத்திலிருந்து தொடர்கிறது.  கிரேக்க இளவரசி அன்ரிகனி  கிரேக்க மன்னனின் ஆணையை மீறித் தனது சகோதரனின் சடலத்தைப் புதைத்துவிடுகிறாள்.

நாய் நரிகளுக்குத் தீனியாக விட்டுவிட ஆணை.
களத்தில் கிடப்பது என் சொந்த அண்ணன் உடலம்.
நிலத்துள் அவன் உடலம் புதைப்பது என் பிறப்புரிமை.
இறத்தோர்க்கு மரியாதை செய்வது மனிதப் பண்பு.
என்றுகிரேக்க மன்னன் கிரியோனுடன் வாதாடிய அன்ரிகனி ஈற்றிலே மன்னனால் தண்டிக்கப்பட்டு உயிரிழக்கிறாள்.
இங்கே நீதிக்கு இடமில்லை
அடுத்து கிரேக்கத்தை விட்டு தமிழகத்தில் சங்க காலத்துக்குள் செல்கிறோம். பறவைகள் மீது அன்புகாட்டிய ஓர் அரசன் போரிலே வீழ்ந்து கிடக்க அவன்மீது வெய்யில் பிடிக்குதே என்று ஐந்தறிவுப் பறவைகள் தமது சிறகுகளை விரித்துக் குடை பிடிக்கின்றன.
 பொருது புண்பட்டு மன்னன் ஆஅய் எயினன் மாண்டுபோனான்.
 தன்னுயிரிலும் மேலாய் மன்னுயிர் காத்தவன்.
 தன்பால் பறவைகளின் அன்பையும் ஈர்த்தவன்.
 சிறகு விரித்து நிழல் செய்து
 காவிரி ஆற்று மணல் கோலிக் கொண்டு வந்து
 காவலன் உடல் மேல் தூவி மேடுசெய்து மூடி
 ஈமச் சடங்கை பறவைகள் செய்தன.
 கூகைக்குப் பகலில் கண் தெரியாது.
 ஆகவே அதனால் ஈமச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை.
 அதனால் அது மிகவும் வருந்தியதாம்.
இது புறநானூற்றுப் பாடலில் விரியும் காட்சி.
அடுத்து வருவது நெஞ்சத்தைப் பதைக்கவைத்த ஒரு நிகழ்வு. ‘பாலகன் படு களம்’ என்று ஒருமையில் விளிக்கும் இந்தப் பகுதியின் காலமும் களமும் சொல்லாமலே விளங்கும்.
பாரதியாரின் ‘ஓடி விளையாடு பாப்பா’ பாடல் பின்னணியில் கேட்க
தன்னை ஒத்த சிறுவருடன் விளையாடும் பாலகனைப் பார்க்கிறோம்.
திடீரென அவர்களை இராணுவம் சுற்றி வளைக்கிறது.
சிறுவர்கள் சிதறி ஓடுகிறார்கள்.
அரைக்கால் சட்டையும் வெறும் மேலுடனும் இருந்த சிறுவனை மட்டும்
இராணுவம் பிடித்துக்கொண்டு செல்கிறது.
சிறுவன் ‘அம்மா அப்பாஅண்ணா அக்கா’ என்று அலறுவதும்
தொடரும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும்
எமக்கு உணர்த்துவன பல செய்திகள்.
உறைந்து போகிறோம்.
இராணுவத்தின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.
கல்லறைகளை இடித்துச் சிதைக்கிறார்கள்.
  இனிமேலும் என்னதான் செய்வார்களோ
   இந்நிலத்தையும் உழுது விதைப்பார்களோ
  விதையாகிப் போன எம் சொந்தங்கள்
   விதைப்புக்கு உரமாகிப் போவாரோ
புராண காலத்துக்குள் செல்கிறோம்.
சந்திரமதி மகனைத் தேடி ஓடிவருகிறாள்.
சிதைந்து கிடக்கும் நடுகற்களை
ஒவ்வொன்றாய்ப் புரட்டித் தேடுகிறாள்.
அரிச்சந்திர புராணம் மயான காண்டம்
சமகால ‘சந்திரமதி புலம்பல்’
பாலனை விதைத்த இடம் இதுதானோ - எந்தன்
 பாலன் உறங்கும் இடம் இதுதானோ
 காலன் அவனைக் கொண்டு போனானோ - அந்தக்
 காலன் அவனைக் கொன்று போட்டானோ
 உயர் வாழ்வு பெற்ற எங்கள் தெய்வங்கள் - எங்கள்
 துயர் தீர்க்க உயிர் தந்த நம் சொந்தங்கள்
 உயிர் வாழ்ந்த போதும் உடல் அடிதாங்கி - தங்கள்
 உயிர் மாய்ந்த பின்னும் உடல் இடிதாங்கி
 உங்கள் படுக்கைகளைச் சிதைத்தாரோ - ஐயோ
  உங்கள் உறக்கத்தினைக் கெடுத்தாரோ - ஐயோ
  உங்கள் உடல்களையும் எடுத்தாரோ - ஐயோ
  எங்குபோட்டுக் கொழுத்தி எரித்தாரோ - ஐயோ
  என் கழுத்து மாங்கலியமும் பொய்யோ
  என் கெற்பப்பையில் வளர்ந்ததும் பொய்யோ
  என் முலையில் பால் சுரந்ததும் பொய்யோ
  என் நெஞ்சில் இரத்தம் வடிவதும் பொய்யோ
  பொம்மையைக் காட்டி உண்மையை மறைத்தவர்கள்
  எம்மையா ஏய்த்தார்கள் தம்மையும்தானே
  இம்மையில் வேண்டிய ஈமச் சடங்கு செய்ய
  எம்மவர் புகழ் உடம்பை எம்மிடம் தாருங்கள்
பிள்ளைகளை அநியாயமாகப் பறிகொடுத்த எல்லாத் தாய்மாருக்காகவும் கதறி ஒப்பாரி வைத்து அழும்போது அவையே நிலைகுலைந்து போய்விடுகிறது. வாய்விட்டு அழமுடியாமல் கண்ணீர் சொரிந்தார்கள்.

 அழுது தீர்த்துவிட்டால் மட்டும் தீர்ந்துவிடுமா என்ன.

மீண்டும்  தொடங்கிய இடத்தில் நாடகம்

ஆர்ப்பாட்டம் 
 பதாகைகள்
.
மீண்டும் மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவில்லாமல் தொடர்கிறது.

;நாடகம் இன்னும் முடியவில்லை’
திரை விழுகிறது.
கண்ணில்லையோ உலகே - உன்
   காதென்ன செவிடோ
  மனிதமும் மாண்டு போச்சோ - உன்
   மனமும்தான் மரத்துப் போச்சோ
அழுது தீர்த்தாச்சு மனமும் கனத்துப் போச்சு.
 அரங்கை விட்டு வெளியேறுகிறோம். நாடகத்தை விட்டு அல்ல.
இளைய பத்மநாதனின் ஆழமான கருத்துகளும் அவற்றைப் பிரதிபலிக்கும் அவரது சொல்வன்மையும் இந்நாடகத்துக்கு வலுவூட்டின என்பதுதான் யதார்த்தம். கிரேக்க நாடகம் சங்கத் தமிழ் மயான காண்டம் பாரதி பாடல் ஆகியவற்றுடன் சமகால நிகழ்வுகளைத் தொடர்பு படுத்துவது அவரது ஆளுமை.
இளைய பத்மநாதனின் உணர்வுபூர்வமான எழுத்தை மேடையிலே உணர்வுபூர்வமாகக் கொண்டுவந்தவர் குலசேகரம் சஞ்சயன். சஞ்சயன் நவீன நாடகத்துக்குப் புதியவரல்ல. இலங்கையில் இந்தியாவில்  அவுஸ்த்திரேலியாவிலும் நாடகங்கள் செய்தவர். நாடகங்களுடனான அவருடைய  ஊடாட்டம்  தொடர்ச்சியானது. 
அவருடைய நெறியாள்கையிலே பார்வையாளர்களைக் கண்கலங்கவைத்து நாடகத்திற்கு உயிரூட்டியவர்கள் அதில் பங்குபற்றிய அனுபவம் மிக்க நடிகர்கள். உரைஞர்களாக வந்த சௌந்தரி கணேசன் ,மற்றும் சிறீபாலன் ,சந்திரமதியாகக் கண்ணீர்விட்டுக் கதறிப் பார்வையாளர்களையும் கண்ணீர் விடவைத்த சோனா பிரின்ஸ் கிரேக்க ,அரசனாக வந்த மனோ ,அன்ரிகனியாகப் போராடிய ஜனனி ,ஆகியோர் தமது தனித்துவமான நடிப்பின் மூலம் நாடகத்தை விறுவிறுப்புடன் நகர்த்திச் சென்றனர்.
பரதக் கலைஞர் சேரனின் பங்களிப்பு நாடகங்களிலும் தொடர்வதைக் காண்கிறோம். ஏனைய இளையோரும் படைவீரர்களாகவும் இழந்த உறவுகளுக்காகப் போராடுபவர்களாகவும் திறமையாகச் செயற்பட்டனர்.
பங்குபற்றிய சிறுவர் பதாகைகளை ஏந்தியபோதும்,
அவற்றைப் பறவைகளின் விரிந்த சிறகுகளாக மாற்றியபோதும்,
பின்னர் ஓடிப்பிடித்து விளையாடியபோதும் திறமையாக நடித்திருந்தார்கள்.
அவர்களுக்கேற்ற வகையில் எமது பாரம்பரிய விளையாட்டுகளையும்,,,ஓடிப்பிடித்தல் கெந்தி அடித்தல் போன்றவை , புகுத்தியது பொருத்தமாக இருந்தது.
https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEhCnSlFmYN0RAdNM56sLfuHowYxwvWkfqFmLn2phWftgwDLHB1ZueQCjSAgqJXuaQiSE3j4fstb2UG23tv794UZNOUsEZQGt9qAWY46mxTxtdw0_fQIF-4AL7HsPfdDd9It0eFoZWaMS9jLGNi3AXFc_5AzRw=s0-d-e1-ft
நடிகர்கள் சாதாரண உடைகளிலே மேடையில் தோன்றி நடித்ததும் யதார்த்தமாக இருந்தது.. சிவப்பு நிறச் சால்வை, கறுப்பு இடுப்புப் பட்டி, போன்ற சில அடையாளங்கள் மூலம்,பாத்திரங்களுக்குள் பாத்திரங்களை அடையாளங் காணக்கூடியதாக இருந்தது.
பதாகைகளைப் பலவகையாகப் பயன்படுத்திய அரங்க உத்தி வியப்பளித்தது. ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளாக, பறவைகளின் விரிந்த சிறகுகளாக,  மாளிகைத் தூண்களாக,வீட்டுக் கூரைகளாக, நடுகற்களாக அவற்றைப் பயன்படுத்திய விதத்தால், ஒன்றுக்குள் ஒன்றாய் நாடகக் காட்சிகள் புகுந்து விளையாடின.
கோபதிதாஸ் அவர்கள் நாடறிந்த வயலின் வித்துவான். இசைக் கச்சேரிகள், பரதக் கச்சேரிகள் மட்டுமல்லாது நாடக அரங்குகளிலும் அவரின் பங்களிப்பைப் பலமுறை பார்த்துள்ளோம். இந்நாடகத்தில் அவரும்,அவரின் வழிகாட்டலில் இரட்டையர்களான சேந்தனும், சேயோனும் பொருத்தமான பின்னணி இசையை வழங்கி நாடகத்திற்குத் திறம் சேர்த்தார்கள்.
மேடை அமைப்பு ஒலி. ஒளி என்பனவும் நன்றாக அமைந்திருந்தன.
நாடகத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை சொல்லலாம்தான். ஆனால்  கண்ணீர் மறைத்துவிட்டது.
இளைய பத்மநாதனின் நாடகங்கள் பலவற்றைச் சிட்னியில் பார்த்திருக்கிறோம். அவர் மேலும் பல  நாடகங்களைத் தரவேண்டும். குலசேகரம் சஞ்சயனிடம் இருந்து இன்னும் பல நாடகங்களை எதிர்பார்க்கிறோம்.


1 comment:

Anonymous said...

திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் எழுதியிருந்த அண்ணாவியார் இளையபத்மநாதனின் அண்ணை எங்கே கவிதை நாடக நயப்புரை சிறப்பாகவிருந்தது. பராசக்தி தேர்ந்த ரசனை மிக்கவர். அதனால் அவரது நயப்புரையிலிருந்து அண்ணை எங்கே சிறப்பாக அரங்கேறியிருக்கும் என நம்பலாம். மெல்பன் மற்றும் இதர மாநில மக்களும் அதனை பார்த்து அனுபவிக்க அண்ணாவியாரும் இயக்குநர் குலசேகரம் சஞ்சயன் அவர்களும் ஆவன செய்யவேண்டும் என்பது எமது விருப்பம்.
கிரேக்க நாடகம் அரிச்சந்திரன் மயான காண்டம் வன்னிப்போர் அவலம் அனைத்தையும் இணைத்திருப்பதனால் அண்ணை எங்கே நாடக உலகிற்கு புதியவரவாக இருக்கும்.
முருகபூபதி
மெல்பன்.