திரும்பிப்பார்க்கின்றேன் -25 - முருகபூபதி

.


இலங்கையில்     அயராமல்     இயங்கிய       இலக்கிய    கலாசார     தூதுவர்   சோமகாந்தன்                                    

யாழ்ப்பாணம்  நல்லூரில்  1822  ஆம்     ஆண்டு    பிறந்த   ஆறுமுகநாவலரின் 150  ஆவது   ஜனன  விழா   நிகழ்வுகள்   இலங்கையில்    பல  பாகங்களிலும்   1972    காலப்பகுதியில்    நடந்தது.      முற்போக்குச்சிந்தனையுடன்    வெளியான    மல்லிகை    இதழும்    ஆறுமுகநாவலரின்   படத்தை   அட்டையில் பதிவுசெய்து    சிறப்பிதழ்   வெளியிட்டது.
நாவலரையும்    இலங்கை    தமிழரசுக்கட்சியினரும்    இடதுசாரிகளும்    விட்டு வைக்கவில்லை.    அவர்    இரண்டு   தரப்பினரதும்    வாதப்பிரதிவாதங்களுக்கு ஆளானார்.
இந்நிலையில்     தமிழ்நாட்டிலிருந்து    இலங்கை   வந்த    பயண   இலக்கியவாதியும்     அந்த   பயணத்தொடருக்காகவே    சூட்டிய    இதயம் பேசுகிறது    என்ற    பெயரில் - ஆனந்தவிகடன்    ஆசிரியப்பொறுப்பிலிருந்து வெளியே வந்ததும்     இதழ்    நடத்திய  மணியனிடம்     நாவலரைத்தெரியுமா?     எனக்கேட்டபொழுது    தனக்கு    நாவலர் நெடுஞ்செழியனைத்தான்    தெரியும்     என்றார்.     இந்த    இலட்சணத்தில் அன்று    தமிழகத்தின்   வணிக   இதழியல் துறை    இருந்தது.
நாவலரை    தேசிய விழிப்பின்    சின்னம்     என    முற்போக்கு    எழுத்தாளர் சங்கம்    கொண்டாடியது.
அதே    வேளையில்    சமஷ்டி    பேசியவர்கள்    நாவலரின்    சைவ சமய நம்பிக்கைகளுக்கு    முக்கியத்துவம்   கொடுத்து    அவரை குருபூசைச்சிமிழுக்குள்     அடைத்துவிட்டிருந்தனர்.
எமது    நீர்கொழும்பில்   இந்து   இளைஞர்   மன்றம்   நடத்திய    நாவலர் விழாவுக்கு    உரையாற்ற    வந்த    ஆலாலசுந்தரம்    எம்.பி.   நாவலருக்கு சிறப்பிதழ்    வெளியிட்ட     மல்லிகையையும்   அதன்    ஆசிரியர்     டொமினிக் ஜீவாவையும்     கடுமையாகச்சாடினார்..
சமஷ்டிக்கட்சியின்    தலைவர்   செல்வநாயகம்     கிறிஸ்தவர்.    அந்தக்கட்சி  நாவலருக்குரிய     முக்கியத்துவத்தை    வழங்கவில்லை    என்ற     தொனியில் மல்லிகை    ஆசிரியத்தலையங்கம்    அமைந்திருப்பதாக     அவர்    விஷம் கக்கினார்.
ஆனால்   ஜீவா   அந்தத்தொனியில்   எழுதவில்லை.
தமிழ்   தமிழ்   என்று   உணர்ச்சியுடன் பேசுபவர்கள்     நாவலரின்  150 ஆவது ஜனன விழாவை    கொண்டாட     முன்வராமல்     பின்னடிக்கிறார்கள்     என்றும்  ஜீவா    எழுதிவிட்டார்.
இக்கூற்று     ஆலாலசுந்தரத்தை    உசுப்பிவிட்டது.    இத்தனைக்கும்    அவர் மல்லிகையை   விலை    கொடுத்து    வாங்கிப்படிக்கவும்   இல்லை. மன்றத்தின்   நூலகத்திற்கு   நான்   வழங்கியிருந்த   குறிப்பிட்ட    மல்லிகை நாவலர்    சிறப்பிதழை   படித்துவிட்டே     சத்தம்போட்டார்.
(தந்தை   செல்வா   மறைந்தவேளையில்   மல்லிகை   அவரது    படத்தையும் முகப்பில்   பதிவுசெய்து    ஆசிரியத்தலையங்கம்    எழுதியது.)
அதென்ன     பின்னடிப்பு?     சட்டைக்கு    குத்தும்    பின்னையா     மல்லிகை ஆசிரியர்     சொல்கிறார்     எனக்கிண்டலாக     வேறு    கேள்வி    எழுப்பினார்  ஆலாலசுந்தரம்.






நாவலர்     சாதி   பார்த்தாராம்  - என்ற   விமர்சனமும்    இருந்தது.     அதே வேளையில்    யாழ்ப்பாணத்தில்   பஞ்சம்    தலைவிரித்தாடிய    காலகட்டத்தில்    நாவலர்    கஞ்சித்தொட்டி   இயக்கம்    நடத்தி    பலரதும் பசிபோக்கிய      உத்தமர் - சமூகப்பணியாளர்    என்ற   கருத்தும்    வெளியானது.
அப்படியாயின்     ஆறுமுகநாவலர்    யார்?    அவரது   உண்மையான   சித்திரம் என்ன?    அவர்   முற்போக்காளரா?   அல்லது    பிற்போக்காளரா?    என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.    அவ்வேளையில்      இலங்கை   முற்போக்கு எழுத்தாளர்    சங்கம்    நாவலர்    ஆய்வரங்கொன்றை    வெள்ளவத்தை  இராமகிருஷ்ண    சிறிய    மண்டபத்தில்    ஒரு   மாலைவேளையில்    ஒழுங்கு செய்திருக்கும்    தகவலை   நண்பர்   மு.கனகராஜன்    எனக்குச்சொன்னார்.
     நான்    மல்லிகையூடாக   அறிமுகமாகியிருந்த   காலப்பகுதி   அது. குறிப்பிட்ட    ஆய்வரங்கைப்பற்றிய     செய்திக்கட்டுரையை   மல்லிகையில் எழுதுவதற்காக    அங்கு    சென்றிருந்தேன்.
    சங்கச்செயலாளர்    பிரேம்ஜி    வரவேற்புரை   நிகழ்த்தினார்.   வேட்டி அணிந்து    வந்த   பேராசிரியர்     கைலாசபதியும்   (அன்றுதான்   அவரை முதல்    முதலில்    வேட்டியுடன்    பார்த்தேன்.   அழகாக   இருந்தார்)   முகம்மது    சமீமும்   விரிவான    உரையை    நிகழ்த்தினார்கள்.
சபையில்    ஈழவேந்தனும்    இருந்தார்.    கைலாசபதி   பேசியபொழுது குறுக்கிட்டு   வாதம்    செய்தார்.   இவ்வாறு   நாவலர்    இரண்டு   தரப்பினரதும் வாதப்பிரதிவாதங்களுக்கு    இலக்கானவர்தான்.
     சிறுவயதில்    சமயபாடவகுப்பில்   நாவலரின்   சைவவினாவிடையை படித்தபொழுது   என்னையும்    எனது    சக வகுப்பு    நண்பர்களையும் சிரிப்பூட்டியவர்   இந்த   ஆறுமுகநாவலர்.    காரணம்    அவர்    காலையில் எந்தத்திசையில்    இருந்து   மலம்   கழிக்கவேண்டும்   என்று சொன்னதுதான்.
    வகுப்பில் - பேச்சுப்போட்டிகளில்    அவர்   சம்பத்தப்பட்ட   குருபூசை - விழாக்களில்   எல்லாம்    எனக்கு    சைவவினாவிடைதான்      நினைவுக்குவந்து    சிரிப்பூட்டும்.    அந்தளவுக்கு    நாவலரைப்பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட    அறிவிருந்த   எனக்கு   -   புதிய வெளிச்சத்தை    தந்தது அந்த    ஆய்வரங்கு.
   கைலாசபதியும்    முகம்மது   சமீமும்    தத்தமக்கேயுரித்தான கண்ணோட்டங்களுடன்   நாவலரைப்பற்றி    பேசினார்கள்.
யாழ்ப்பாணத்தில்     பஞ்சம்    நிலவிய    காலத்தில்    உயிரிழந்த    ஒருவரின் உடலைக்   கீறி    சோதனை செய்த   மருத்துவர்கள்   அவரது    வயற்றில்    புற்கள்    செமிபாடின்றி    அப்படியே    இருந்ததாக    சொன்னார்கள்    என்று   ஒரு ஆங்கிலேய    சமூக    ஆய்வாளர்   எழுதியிருக்கும்   அதிர்ச்சியான   தகவலை சமீம்   சொன்னார்.
மாடு   மேயும்   புல்லை   மனிதர்கள்   உண்ணும்   அளவுக்கு   பஞ்சம் தலைவிரித்தாடிய   கொடுமையும்    துயரமும்    கப்பிய   காலகட்டத்தில்  நாவலரின்   கஞ்சித்தொட்டி    இயக்கம்   விதந்து   போற்றுதலுக்குரியது என்றும்   சமீம்    குறிப்பிட்டார்.
( நாவலர்   ஆய்வரங்கு   கட்டுரைகள்    தனியாகத்தொகுக்கப்பட்டு   புதுமை இலக்கியம்   இதழும்   பின்னர்   வெளியானது)
 அந்த    ஆய்வரங்கில்   வரவேற்புரை   நிகழ்த்திய   பிரேம்ஜி    நாவலரின் பெயருடன்   இன்னும்   ஒருவரின்   பெயரையும்   அடிக்கடி   உச்சரித்தார். அந்தப்பெயர்    சோமகாந்தன்.
  சிரித்த     முகம்.   எவரையும்   கவரத்தக்க தோற்றம்.   சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்.
   எவரும்   அவரை    எனக்கு   அறிமுகப்படுத்தவில்லை.   ஆனால் கனகராஜன்    மூலம்    என்னைத்தெரிந்துகொண்டு     ( காரணம் அன்று அந்தக்கூட்டத்தில்    நானொரு   புதுமுகம்   அவருக்கு)   கூட்டம்    முடிந்ததும் அருகே   வந்து   தோளைத்தொட்டு   -    ‘ நீர்கொழும்பிலிருந்து    வந்திருக்கிறீர். இந்த     இரவில்    திரும்பி    ஊர்போய்ச்சேருவதற்கு   பஸ்   இருக்குமா?’   என்று   வாஞ்சையோடு    கேட்டார்.
  அக்காலப்பகுதியில்     எழுத்துலகில்    பிரவேசித்திருந்த    இந்தப்புதியவன்இ சந்தித்த   வாஞ்சையான    மனிதர்களில்    ஒருவர்     சோமகாந்தன்.
இறுதியாக   2005   ஆம்   ஆண்டு   டிசம்பரில்    அண்டர்சன்    தொடர் மாடியில் எனக்கு    விடைகொடுத்து   -   நண்பர்    எழுத்தாளர்     புலோலியூர் இரத்தினவேலோன்    வீட்டுக்கு    வழிகாட்டி    ஒரு    ஓட்டோ   வாகனத்தை எனக்காக    ஒழுங்கு   செய்து   வழியனுப்பினார்.    அதுவே   அவருடனான இறுதிச்சந்திப்பு.
  அவருடனான   முதல்   சந்திப்பு  எப்படி   என்னால்   மறக்கமுடியாததோஇ அதே  போன்றதுதான்   அந்த    இறுதிச்சந்திப்பும்.
  ‘இரத்தினவேலோன்     வீட்டுக்குச்சென்றபின்னர்      எங்கே போகிறீர்?’- எனக்கேட்டார்.
  ‘ஜீவாவிடம்    போகிறேன்.’
  ‘ அப்படியா.    எனக்கு   ஒரு    உதவி    செய்யவேண்டும்.   மல்லிகை 41 ஆவது ஆண்டு    மலருக்கு    ஒரு    கட்டுரை    எழுதியிருக்கிறேன்.    இதோ படித்துப்பாரும்.    ஜீவாவிடம்    இதனைச்சேர்ப்பித்துவிடுங்கள்.’
  அவரைப்போலவே    அழகான   கையெழுத்திலிருந்த    அந்தக்கட்டுரையை படித்தேன்.
மல்லிகை    ஆசிரியரும்   வாசகர்கள்   மலரிலும்    படிப்பதற்கு    முன்பே அதனைப்படித்தவர்கள்   இருவர்.   ஓன்று    நான்.   மற்றவர்   அதற்கு   முன்னர்    அதனைப்படித்த    அவரது   மனைவியும்   அவரது   முதல் வாசகியுமான   திருமதி  பத்மா   சோமகாந்தன்.
  1976 - 1977  காலப்பகுதியில்    முற்போக்கு    எழுத்தாளர்   சங்கத்தின் பணிகளுக்காகவும்   அதன்   மற்றுமொரு   அங்கமான   எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பக   வேலைகளுக்காகவும்        150  ரூபா      மாதாந்த அலவன்ஸ _டன்    முழுநேர    ஊழியராக    பிரேம்ஜியாலும்   சோமகாந்தனாலும்    நான்   நியமிக்கப்பட்டிருந்தேன்.
 இந்தப்பணத்தை   எனக்கு   மாதாந்தம்    தருவதற்காக    சங்கத்திடமோ கூட்டுறவுப்பதிப்பகத்திடமோ   கையிருப்பில்   பணம்    இருக்கவில்லை என்பது   எனக்கு   நிச்சயமாகத்தெரியும்.
 எனது    போக்குவரத்து   சாப்பாட்டுச்செலவுக்காவது   ஏதும்   தரவேண்டும் என்று   அவர்கள்   இருவரும்   விரும்பியதனால்   எப்படியோ   தமது மாதச்சம்பளத்தில்தான்    எடுத்துத் தந்திருப்பார்கள்    என்று   நினைக்கின்றேன். அவர்களை    தொடர்ந்து    கஷ்டப்படுத்தக்கூடாது   என்ற   தீர்மானத்துடன் நான்   1977   இல்    வீரகேசரியில்    சேர்ந்துவிட்டேன்.    அதற்காக   சங்கத்தின் பணிகளிலிருந்து   ஒதுங்கவில்லை.   அந்த   இருவரின்   நிழலில்    சங்கமும்   கூட்டுறவுப்பதிப்பகமும்   மேற்கோண்ட   அனைத்து    பணிகளிலும் நானும்   இணைந்திருந்தேன்.
   தேசிய    ஒருமைப்பாடு   மாநாடு -   பாரதி    நூற்றாண்டுவிழா - இ.மு.எ.ச. கொழும்புக்கிளை  - கொரஸ    என்ற    தென்னிலங்கை    சிங்களக்கிராமத்தில்   நடந்த   கருத்தரங்கு   சங்கத்தின்    வெள்ளி   விழா கொழும்பில்    மாதாந்த   கருத்தரங்குகள்  - 1986   இறுதியில் யாழ்ப்பாணத்தில்   நடந்த    மாநாடு  ----   இப்படியாக   பல்வேறு   நிகழ்வுகளில்     சோமகாந்தனுடன்    இணைந்து   வேலை  செய்தபோது அவரது     ஓய்வற்ற       செயல்பாடுகள்    எனக்கு   மட்டுமல்ல   பலருக்கும் முன்மாதிரியானதுதான்    என்பதையும்    புரிந்துகொள்ள முடிந்தது.


     அமைதியாகவிருந்து    சிந்திக்கும்போது    நானும்   அவரைத்தான் பின்பற்றி   வாழ்ந்திருக்கின்றேனோ   என்ற   உண்மை   துலங்குகிறது.
   எடுத்த   கருமத்தை   ஊண்   உறக்கம்   பாராது   செய்து முடிக்கும்   திறன் அவர்   கைவரப்பெற்றிருந்த    கலை.
   சங்கம்   பல   சோதனைகளை    கடும்   விமர்சனங்களை    நெருக்கடிகளை சந்தித்த    தருணங்களில்   எல்லாம்   நிதானமாக    அதேசமயம்   வேகமாகவும்   இயங்கும்   ஆற்றல்   அவருக்கே   உரித்தானதுதான்.
   எப்போதோ   எழுதத்தொடங்கியவர்.   முற்போக்கு    எழுத்தாளர்    சங்கம்இ நாவலர் சபை -   இந்து மாமன்றம்    உட்பட   பல   வெகுஜன   இயக்கங்களின் வேலைத்திட்டங்களில்   அமைப்புச்செயலாளராக   அவர்    தீவிரமாக இயங்கியதனால்   ஆக்க      இலக்கிய   முயற்சிகளில்   ஈடுபாடு    அரிதாகியிருந்தது.
  ‘ ஐஸே    கணகாலம்   சிறுகதை   எழுதவில்லை.   சிறுகதைகள்    படிக்கவும் இல்லை.   எனக்கு    உம்மிடமிருக்கும்   புதிய தொகுதிகளை    கொண்டுவந்து தாரும்.’-    என்றார்.
  நானும்     கொடுத்தேன்.    ஞாபகமாகத்   திருப்பித்தந்ததுடன்    மீண்டும் சிறுகதைகள்   எழுதவும்    தொடங்கினார்.
   முதலில்    ஒரு   விடயத்தை   குறிப்பிட்டேன்   அல்லவா?   அதாவது   நானும்   இவரைத்தான்   பின்பற்றி   வாழ்ந்திருக்கிறேனோ?    என்ற   குறிப்பு.
   எவரையும்    வெறுக்கத்தெரியாதவர்.   மற்றவர்கள்   வெறுத்தாலும்    அதற்காக    கோபித்து    வெறுக்கத்தெரியாதவர்   -    ஆனால்    எவரேனும் கோபித்து   ஒதுங்கிக்கொண்டால்    தானும்    ஒதுங்கிக்கொள்ளும்    சுபாவம் கொண்டவர்.
   இந்தச்சுபாவம்   எனக்கும்    உண்டு.
   இலக்கிய    பொது வாழ்வில்   நாம்   சந்திக்கும்   மனிதர்களிடம்தான் எத்தனைவகையான   இயல்புகள்.   இணைந்து    இயங்குவது -   உடன்படுவது – முரண்படுவது    முகத்தை   திருப்பிக்கொள்வது  -   மறைந்திருந்து எழுதித்தாக்குவது     இப்படியாக     விந்தையான   குணவியல்புகளை கொண்ட   பலரையும்   சந்தித்தவர்   சோமகாந்தன்.
  நான்   அவருடன்   பயணித்த   நாட்களில்  -    ஒருநாள்    சொன்னார்.
  “ தம்பி  -   எனக்குப்பிறகு     எழுத    வந்தனீர்     குறுகிய    காலத்திற்குள்ளாகவே ஒரு    சிறுகதைத்தொகுதியும்   வெளியிட்டு    சாகித்திய    மண்டலப்பரிசும் பெற்றுவிட்டீர்.    பார்க்கப்பெருமையாக   இருக்கிறது.”
 “ ஏன்    தாமதிக்கிறீர்கள்.    இதுவரையில்   வெளியான   உங்கள் கதைகளையும்   தொகுத்து   ஒரு   தொகுதி    வெளியிடலாம்தானே”   என்றேன்.
 “ ஒருவரிடம்    எனது   கதைகள்    யாவும்   இருக்கின்றன.    இப்போது எங்களுக்கிடையில்    ஊடல்.    பேச்சுவார்த்தை   இல்லை.   அவரும் அந்தக்கதைகளைத்    திருப்பித்தருவதாகத்   தெரியவில்லை.    நானும் கேட்பதாக இல்லை.”    என்றார்.
 “ யார்?    என்று    சொல்லுங்கள்.   நான்    கேட்டுப்பெற்றுத்தருகிறேன்.” என்றேன்.
 ஆனால்    அவர் -   அந்த   நபர்   யார் ?  என்பதை     சொல்லமறுத்துவிட்டார். தொகுதி    வெளியிடும்   அவரது   கனவும்   தொடர்ந்துகொண்டிருந்தது.
 வடமராட்சி    எழுத்தாளர்களின்   கதைகள்   இடம்பெற்ற   ‘உயிர்ப்பு’      தொகுதியிலும்    சோமுவின்    சிறுகதை   இடம்பெறவில்லை. இதனாலும்    அவர்   சற்று   சோர்வுற்றிருந்தார்.
 1983   கலவரம் -  சில   சிலிர்ப்பான   நிகழ்வுகளையும்   ஈழத்து   இலக்கிய உலகினுள்    ஏற்படுத்தியிருந்தது.
 ஏற்கனவே   இ.மு.எ.ச.வுடன்   முரண்பட்டுச்சென்று   திருகோணமலையில் மாநாடு   நடத்தியவர்களில்    டானியல்  -   சில்லையூர் செல்வராசன் - என். கே. ரகுநாதன்  -   புதுவை    இரத்தினதுரை   ஆகியோர்    முக்கியமானவர்கள்.
 எனினும்   1983   கலவரத்தின்    பின்னர்   இவர்களுக்கும்   இ.மு.எ.ச. முக்கியஸ்தர்களுக்குமிடையில்   நீடித்த   நிழல்யுத்தத்தில்   செறிவு குறைந்தது.   சோமகாந்தனின்   கதைகளை   பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டே    சோமகாந்தனுடன்   ஊடலில்   இருந்த சில்லையூரிடமிருந்தே   குறிப்பிட்ட   கதைகளடங்கிய   கோவை   மீண்டும் உரியவரிடம்   வந்து   சேர்ந்தது.
 சில்லையூர்   அந்தச்சம்பவத்தை   இப்படி   நினைவுகூருகிறார்:
 “நெடுங்காலம்.    நம்   சகவாசம்.   ஒரு    முப்பது   வருடங்களுக்கு   மேல் இருக்குமா?   இருக்கும்.   அவ்வப்போது   எடுபட்ட    உறவும்   விடுபட்ட துறவுமாகச்    சின்னஞ்சிறு    இடைவெளிகள்   ஏற்பட்டிருக்கலாம்.    ஆனாலும்  நெடுங்காலம்.
 கடைசியாக   எப்பொழுது   கண்டோம்?   1983    ஆடிக்கலவரத்தில்   உடல் ஆடிப்   பொருள்  ஆடி  விலகி  உயர்வு   ஆடிப்போகாமல்    நீங்கள் திரும்பியசமயம்   உங்கள்   உயிர்த்துணைவி   பத்மாவுடன்    எங்கள் வீட்டுக்கு   வந்தீர்கள்.
 உபசரணைகள்    முடிந்தபிறகு   அச்சுத்தாள்   நறுக்குகள்   ஒட்டிய   ஒரு கச்சிதக்கோவையை    மாடியிலிருந்து    எடுத்துவந்து   உங்கள்   கைகளிற் கொடுத்தேன்.    விரித்துப்பார்த்தீர்கள்.
வியப்பால்    உங்கள்    விழிகளும்   விரிந்தன.
 “செல்வா    இத்தனை   காலம்   இதை   இப்படிப்    பாதுகாத்து    வைத்தீர்களா?” என்று   கசிந்தீர்கள்.
 அந்தக்கோவையில்   இருந்தவை   உங்கள்    சிறுகதைப்படைப்புக்கள்.    நீங்கள் தொகுத்து   வைத்து   பத்துக்கும்   மேற்பட்ட   ஆண்டுகளுக்கு   முன் என்னிடம்   கொடுத்த   உங்கள்   சிறுகதைகள்   மட்டுமல்ல.   வாலிப எதேச்சையில்   நீங்கள்   பத்திரப்படுத்தத்தவறி   -  என்   சேகரத்தில்   நான் பவித்திரம்   செய்த   இலக்கியக்   களஞ்சியத்தில்   நீங்கள்   கொடுத்தவற்றோடு   நான்   சேகரித்து   வைத்தவற்றையும்   சேர்த்து   அந்தச் சிறுகதைகளின்   கோவையை   உங்களிடம்   கொடுத்தபோது   உங்களுக்கு மறுபடி   ஒரு   ‘உயிர்ப்பு’   வந்திருக்கவேண்டும்.    என்று   நினைக்கிறேன்.
 ஏனெனில்    கோவையைக்   கையில்   வாங்கியபோது   உங்கள்   கசிவில் ஒரு    சிலிர்ப்பும்   இருந்ததை   அவதானித்தேன்.
 “ பத்தாண்டுகளுக்கு   மேல்   என்   ஆத்மா   படுத்துக்கிடந்ததா?”    என்பது போன்ற   ஒரு   சிலிர்ப்பு.
 ஆனாலும்   நீங்கள்   அப்போது   ஒன்றும்   பேசவில்லை.   கோவையையும் பெற்று   ஆசாரமாக   விடையும்   பெற்றுப்போய்விட்டீர்கள்.
 சோமாந்தனின்    முதலாவது   கதைத்தொகுதி   ‘ஆகுதி’ பிறந்த   கதையின்   முன்னுரைக்கதை    இதுதான்.
வீரகேசரி    ஆசிரிய பீடத்திலிருந்த   பொழுது   நல்லூரில்   நாவலர்   சிலை இடப்பெயர்வு    விவகாரத்தில்   நானும்   தலையை பிய்த்துக்கொள்ள  வேண்டியதாயிற்று.
நாவலர்   சபையில்   ஒரு   சாரார்   நல்லூர்   கந்தசாமி   கோவிலுக்கு   முன்பாக   இருந்த   நாவலர்  சிலையை     நாவலர்  வீதியிலிருந்த   நாவலர் கலாசார    மண்டபத்தின்   முன்னால்   வைப்பதற்கு   ஏற்பாடுகளைச்செய்தனர்.
சபையிலிருந்த   மற்றுமொரு   சாரார்   அதற்கு   எதிர்ப்புத்  தெரிவித்தனர். எதிர்த்த   தரப்பினர்   முதலில்   தமது   கண்டனத்தை   தெரிவித்து   வீரகேசரியில்    அறிக்கை   வெளியிட்டுவிட்டனர்.
அந்தக்கண்டனம்   குறித்து   சிலையை   இடம்பெயரச்செய்ய   விரும்பிய தரப்பிடம்   அன்றைய   ஆசிரியர்   சிவநேசச்செல்வன்   பிரசுரிக்க   முன்னர் கேட்கவில்லை   என்ற   கோபம்   சோமகாந்தனுக்கிருந்தது.
அவர்   சிலையை   இடம்பெயரச்செய்ய   விரும்பியவர்கள்   பக்கம்   இருந்தார்.   ஒரு   புறத்தில்   சிவநேசச்செல்வனும்   சோமகாந்தனும் தெல்லிப்பழை   மகாஜனா   கல்லூரியின்   முன்னாள்   மாணவர்கள். பால்யகாலத்  தோழர்கள்.
சிவநேசச்செல்வன்   குறிப்பிட்ட   செய்தி   அறிக்கை   தொடர்பாக   தன்னுடன் பேசியிருக்கலாம்   என்பது   சோமகாந்தனின்   வாதம்.
தான்   பத்திரிகை    ஆசிரியர்.   தனது   கடமையைத்தான்    செய்தேன்   என்பது சிவநேசச்செல்வனின்    வாதம்.
இதற்கிடையில்   குப்பை    ஏற்றிச்செல்லும்   யாழ்ப்பாணம்   மாநகர சபைக்குச்சொந்தமான    ஒரு   லொறியில்   நாவலர்   சிலை   ஏற்றப்பட்டு  இடம்பெயர்க்கப்பட்டதாம்    என்ற   செய்தியும்   வெளியாகிவிட்டது.   படித்த வாசகர்களுக்கு    மெல்லுவதற்கு   அவல்   கிடைத்தது.
சிவத்தமிழ்ச்செல்வி   பண்டிதை   தங்கம்மா   அப்பாக்குட்டி   உட்பட பலரதும்    கண்டனக்குரல்கள்   எழுந்தன.     ஆறுமுகநாவலர்   தாம்   வாழ்ந்த காலத்தில்   பலருடனும்   கருத்துப்போராட்டம்    நடத்தியவர்.
அவரது     உருவச்சிலையும்    போராட்டங்களை    சந்தித்தது.
சிவநேசச்செல்வனும்     சோமகாந்தனும்    எனது     நண்பர்கள்.   இருவருக்கும் இடையில்    அகப்பட்டு    அவர்களின்     வாதங்களைக்     கேட்டுவிட்டு இயலாமையுடன்    கையை   பிசைந்துகொண்டு   நின்றேன்.
யாருக்காகத்தான்    பேசுவது?
நல்லூர்    நாவலர்   கலாசார    மண்டபத்தில்   முற்போக்கு    எழுத்தாளர் சங்கத்தின்   மாநாடு   1986   செப்டெம்பர் 17    ஆம்   திகதி   நடந்தபொழுது  அங்கு    இடம்  பெயர்ந்த   நாவலர்   சிலையை   சோமகாந்தன்   எனக்கு காண்பித்தார்.
நாவலர்    சிலையாக    மௌனமாக    இருந்தார்.
இப்படி    மௌனித்து   சிலையாகிப்போய்விட்டவர்களைப்பற்றித்தான் உயிருடனிருப்பவர்களின்     சச்சரவுகள்    தற்காலத்தில்  தொடருகின்றன.
 சோமகாந்தனின்     ஆகுதி    வெளியீட்டு    விழா    எமது   மாநாட்டுக்கு    மறுநாள்    நல்லூரில்     நடந்தபோது    பிரேம்ஜி  -   ஜீவா - நந்தி  -முருகையன் - மௌனகுரு  - சொக்கன்    ஆகியோருடன்     நானும்     உரையாற்றினேன்.
 பின்னர்    கொழும்பு  கமலா   மோடி   மண்டபத்தில்   முன்னாள்   நீதியரசர் எச்.டபிள்யூ. தம்பையா   அவர்களின்   தலைமையில்   நடந்த அறிமுகவிழாவிலும்    உரையாற்றினேன்.
 அன்றைய   நிகழ்வில்   அவர்   சற்று   சோகமாக   இருந்தார்.   ‘என்ன?’   என்று கேட்டேன்.        “நீர்   வீரகேசரியிலிருந்து   விலகப்போவதாக   அறிந்தேன். உமக்கு   வேறு   ஒரு   இடத்தில்   கூடுதல்   சம்பளத்துடன்   வேலை   பார்த்து    வைத்துள்ளேன்.   எங்கும்   போய்விடவேண்டாம்.     அதுவும் பத்திரிகைதான்.   உம்மைப்  போன்றவர்கள்   பத்திரிகை   உலகத்தை விட்டுச்செல்லக்கூடாது.   அது   எங்கள்   சங்கத்துக்கும் இலக்கியவாதிகளுக்கும்   நட்டம்.   உமது   எதிர்காலம்   குறித்து   எனக்கு கவலையும்   அக்கறையும்   இருக்கிறது   பூபதி.”-  என்று   எனது கைகளைப்பற்றிக்கொண்டு   கண்கள்   மின்னலிடச்  சொன்னார்.
  நான்   அவுஸ்திரேலியா   புறப்படப்போகின்றேன்   என்ற   தகவல்   அவருக்கு அந்த   நிமிடம்   வரையில்   மட்டுமல்ல    அதன்   பின்னரும்    தெரியாது.
 1987 ஆம்   ஆண்டு   பெப்ரவரி    மாதம்  5  ஆம்  திகதி  கொழும்பில் விமானப்பயணச்சீட்டை    எடுக்கச்சென்றபோது   அந்த   அலுவலகத்திலிருந்த அவரது   ஒரு   மகனிடம்தான்    “அப்பாவிடம்   சொல்லுங்கள்.   நான் நாளை   பயணம்.   அவுஸ்திரேலியா   போய்ச்சேர்ந்ததும் தொடர்புகொள்வேன்”   என்றேன்.
 அந்தக்காலமும்   கணங்களும்   எனது    நெஞ்சை   அடைத்தவர்கள்   -   நான் விடைபெற்றுச்செல்லும்    குடும்ப   உறவுகளும்   உளமார   நேசித்த   இலக்கி ய    உறவுகளும்தான்.
 அதனால்     பலரை    நேரில்    சந்தித்து   விடைபெறத்திராணியற்றவனாக கனத்த   இதயத்துடன்    விமானம்    ஏறினேன்.
 எனினும்   வந்தபின்னர்   நான்   எழுதிய   நூற்றுக்கணக்கான   கடிதங்களில் சில    சோமகாந்தனுக்கு   எழுதியவையும்   அடங்கும்.    அவர்   இருதய அறுவைச்சிகிச்சையின்    பின்பு   நாடு   திரும்பிய   செய்தி   அறிந்து தொலைபேசி   ஊடாக   அவரது   சுகசேமங்களைக் கேட்டேன்.
 எனது   குடும்பமும்   என்னிடம்   வரப்போகிறார்கள்   என   அறிந்து நீர்கொழும்புக்கு   தமது   மனைவியுடனும்   மேலும்   சில   இலக்கிய நண்பர்களுடனும்   சென்று   பிரியாவிடை   கொடுத்தபோது   எனது தொலைபேசி   உரையாடலை   பலதடவை   சிலாகித்துச்சொன்னாராம்.
 சோமகாந்தன்   நீர்கொழும்பைச்சேர்ந்த   என்னை   மாத்திரம்   நேசிக்கவில்லை.    திக்குவல்லை  -   அநுராதபுரம் - புத்தளம் -  மினுவாங்கொடை  - சிலாபம்   -  மலையகம்     உட்பட    அனைத்து தமிழ்ப்பிரதேசங்களையும்     சேர்ந்த    சகல    தமிழ்   எழுத்தாளர்களையும் உளமாற   நேசித்தவர்.
அவர்   பல   மலர்கள்   நூல்களின்   பதிப்பாசிரியர்.   தொகுப்பாசிரியர்.
மல்லிகை   ஜீவா  -  டொக்டர்   நந்தி    ஆகியோரின்   மணி விழா மலர்த்தொகுப்பு   1998    இல்    வெளியான   பிரேம்ஜியின்    எழுத்துலக பொன்னாண்டு   தொகுப்பு   நூல்   ஆகியனவும்   சோமகாந்தனின் முன்முயற்சிகள்தான்.
 இறுதியாக   கொழும்பில்   அவரது   ஆகுதி   அறிமுகவிழாவில் விடைபெற்று   மீண்டும்   பதினொரு   வருடங்களின்  பின்னர்  கொழும்பில் மற்றுமொரு   இலக்கியச்சந்திப்பில்தான்   அவரைச்சந்தித்தேன்.
துரைவி   பதிப்பகம்   நடத்திய    துரை  விஸ்வநாதனின்   வியாபார ஸ்தாபனத்தின்   மேல்   மாடியில்   தினகரன்   ஆசிரியராக   பதவியேற்ற ராஜஸ்ரீகாந்தனுக்கும்   நீண்ட   நாட்களுக்குப்பின்பு   இலங்கை   திரும்பியிருந்த எனக்கும்   வரவேற்புக்கூட்டமும்   1997 டிசம்பர்   6 – 7 ஆம்   திகதிகளில் கொழும்பில்   நடத்தவிருந்த   இலக்கிய   ஆய்வரங்கு   தொடர்பான ஆலோசனைச்   சந்திப்புமாகவும்   அந்த   நிகழ்வு   ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
 குறிப்பிட்ட   ஆய்வரங்கு  மலருக்கு   ஒரு   கட்டுரை   வேண்டுமென்றார் சோமகாந்தன்.
இன்னும்    இரண்டு   நாளில்   நடக்கவிருக்கும்   ஆய்வரங்கில் வெளியிடப்படவுள்ள   மலருக்கு   கட்டுரை   கேட்கிறீர்களே?   எப்படி சாத்தியம்?   என்றேன்.
 ‘உமது   கட்டுரை  இடம் பெறவேண்டும்.  உடனே  எழுதித்தாரும்.’   என்றார்.
புலப்பெயர்வும்   ஒட்டுறவும்   என்ற   சிறிய   கட்டுரையை   உடனே எழுதிக்கொடுத்துவிட்டு   வந்துவிட்டேன்.
 எனக்குச்    சந்தேகம்.   இடையிலிருந்த   குறுகிய   கால   அவகாசத்தில்    எனது கட்டுரையையும்   பதிப்பித்து   மலரையும்   அச்சிட்டுவிடுவாரா?
 என்ன    ஆச்சரியம்.
 ஆய்வரங்கு   தொடங்குவதற்கு   முன்பாக   அந்தக்காலை  வேளையில் இராமகிருஷ்ண   மண்டபத்தில்   எனது   கட்டுரையும்    இடம்பெற்ற   மலரின் பிரதிகளுடன்   சோமகாந்தன்தான்   முதலில்    தரிசனம்   தந்தார்.
 இப்படியும்   ஒரு   அபூர்வமான   -  இயந்திரமாக   இயங்கும்   ஒருவரை   எனது   வாழ்நாளில்   இதுவரையில்  நான்  சந்தித்ததில்லை.
சோமகாந்தன்   ஒரு      யுஉவiஎளைவ    றசவைநச
 ஈடுசெய்யப்படவேண்டிய      அவரது      ஆசனம்    இன்னமும்  வெற்றிடமாகத்தான்    இருக்கிறது.
 எனது     புலப்பெயர்வின்    பின்னர்     எங்கள்      நீர்கொழும்பூருக்கு    மிகவும் தேவைப்பட்ட     மனிதரானவர்    சோமகாந்தன்.   நீர்கொழும்பு   இந்து இளைஞர்   மன்றத்தின்   மணி விழா   சிறப்பாக   நடப்பதற்கும்   மணிவிழா மலர்   அன்று   வெளியிடப்படுவதற்கும்   சோமகாந்தன்   வழங்கிய ஆதரவையும்    கடின   உழைப்பையும்    நினைவுபடுத்துவார்   அந்த மன்றத்தின்   ஸ்தாபகர்களில்   ஒருவரும்   மணிவிழாக்காலத்தில் மன்றத்தலைவராக    இருந்தவருமான   எனது    மாமனார் அ.மயில்வாகனன்.
 நீர்கொழும்பில்    பல   நாவன்மைப்  போட்டிகளுக்கெல்லாம்   தனது உடல்நலத்தையும்    பொருட்படுத்தாமல்   தமது   துணைவியாரையும் அழைத்துக்கொண்டு   சென்று   நடுவராக   பணியாற்றியிருக்கிறார்.
 நீர்கொழும்புக்கும் -  கொழும்பு   உட்பட    ஏனையபிரதேசங்களுக்கும்   ஒரு கலாசாரத்  தூதுவராகவும்     இலக்கியப்பாலமாகவும்   மிளிர்ந்தவர் சோமகாந்தன்.   அவரது   பணிகள்   பன்முகத்தன்மை   வாய்ந்தவை.
 2006 சித்திரை   மாதம்   எனது   மாமனார்   (மனைவியின் அப்பா)   டொக்டர் பஞ்சநாதன்   பிலிப்பைன்ஸில்   மறைந்ததையடுத்து   அங்கு   சென்று அவரது   இறுதிச்சடங்குகளை   முடித்துவிட்டு   சிங்கப்பூர்   திரும்பிய   சமயம் - சோமகாந்தன்   எங்களையெல்லாம்   விட்டு    மறைந்தார்   என்ற அதிர்ச்சியான    செய்தி   கிடைத்தது.   அவரது   மகள்    கலாஞ்சலியுடன் தொலைபேசியில்    தொடர்புகொண்டேன்.
 எவருடன்    உரையாடும்  பொழுதும்   தனது   நெஞ்சில்   அடிக்கொருதரம் கை   வைத்தபடி   பேசும்   சோமகாந்தன்.   நெஞ்சில்   கை   வைத்தவாறே போய்விட்டார்.
 “நீங்கள்   அனைவரும்   எப்பொழுதும்   எனது   நெஞ்சுக்குள்தான் இருக்கிறீர்கள்”
என்பதைத்தான்    அடிக்கடி   உணர்த்தினாரோ   தெரியவில்லை.
 அந்த   அண்டர்ஸன்   தொடர் மாடிக்குடியிருப்பிலிருந்து   இன்னமும்   அவர் மலர்ந்த   முகத்துடன்   கையசைத்து விடைகொடுத்துக்கொண்டுதானிருக்கிறார்    என்ற   குருட்டு    உணர்வோடுதான்   நான்    ஆயிரக்கணக்கான   மைல்களுக்கு    அப்பால் இருக்கின்றேன்.
      அவரைப்பற்றி    தமிழ்   விக்கிபீடியாவின்   பதிவுகள்    இதோ:
1991  இ ல்    இவரது      இலக்கியப் பணியைக்    கெளரவித்து திருகோணமலை    இலக்கிய    நண்பர்கள்   இலக்கியக் குரிசில்   பட்டம் வழங்கிச்    சிறப்பித்தார்கள்.
1994   இல்     இலங்கை     கலாச்சார      அமைச்சு    தமிழ்     மொழிக்கும்    தமிழ்ச் சமூகத்திற்கும்      அவர்    வழங்கிய    சேவையைப்     பாராட்டி    'தமிழ் ஒளி'      என்னும்     பட்டத்தினை    வழங்கிக் கெளரவித்தது.
வெளிவந்த    நூல்கள்
நிலவோ    நெருப்போ (   சிறுகதைத் தொகுதி)
விடிவெள்ளி     பூத்தது    (நாவல் -  வரதர்    வெளியீடு)
ஈழத்து     இலக்கிய   வரலாறு - பல்துறை நோக்கு   (ஆய்வு)
பொய்கை   மலர்   (நாவல்)
நிகழ்வுகளும்   நினைவுகளும் -   காந்தன் கண்ணோட்டம்
தத்துவச் சித்திரங்கள்    (வானொலி உரைகள்)
ஆகுதி    (சிறுகதைத் தொகுதி)
ஈழத்தமிழருக்கு ஏன் இந்த வேட்கை?
Lanka  and  Ramayanam
Ancient Temples of Shiva in Sri Lanka
சோமகாந்தனின்      பன்முகப்பணிகளை     சித்திரிக்கும்     பலரதும் ஆக்கங்களுடன்    சோமகாந்தம்     என்ற    தொகுப்பும் வெளியாகியிருக்கிறது.

                                ----0----

No comments: