நடிகர் நாகேஷ் நினைவு தினம் -ஜனவரி 31

.
 
(முற்குறிப்பு:    தமது   75  ஆவது    வயதில்   2009   ஜனவரி  31  ஆம் திகதி மறைந்த   நடிகர்     நாகேஷ்      பற்றிய     இந்தப்பதிவு    2009   பெப்ரவரி    மெல்பன்      வானமுதம்    வானொலியிலும்      இலங்கை     தினக்குரலிலும்  வெளியானது.     மேலும்    சில   தகவல்களுடன்      நகேஷின்   5  ஆவது  நினைவு   தினத்தில்      இந்தப்பதிவு)
இயக்குநர்களின்     ஆளுகைக்கு     உட்படாமல்     தனது    சுயஆற்றலை வெளிப்படுத்திய    கலைஞர்      நாகேஷ்

                                                                   
                           

  ‘தன்   வாழ்க்கையில்     என்ன   அவலங்கள்   இருந்தாலும்     தன்    மனத்தில்     எத்தனை     சோகச்சுமையிருந்தாலும்     அதையெல்லாம்   மறைத்து     தன்   நகைச்சுவையால்    மக்களை   விலாநோகச்சிரித்து மகிழச்செய்பவர்தானே    மிகச்சிறந்த       நகைச்சுவை நடிகர்’ -என்று     நடிகர் சிவகுமாரால்    1986   இல்    விதந்து    எழுதப்பட்டவர்தான்   நடிகர்  நாகேஷ்.
 சுமார்     ஆயிரத்துக்கும்      மேற்பட்ட       திரைப்படங்களில்    நடித்து இலட்சக்கணக்கான      ரஸிகர்களை    தனது    அபாரமான    நடிப்பினால் கவர்ந்தவர்    நாகேஷ்.
 ஆங்கில      திரைப்பட      உலகில்    புகழ்பெற்ற    ஜெர்லூயிஸைப்போன்று தமிழ்த்திரையுலகில்    தனது      ஒடிசலான    தேகத்தையும் அம்மைத்தழும்புகள்      ஆக்கிரமித்த     முகத்தையும்      வைத்துக்கொண்டு அஷ்டகோணலாக      உடலை     வளைத்தும்      நெளித்தும்     கருத்தாழமிக்க வசனங்களை      உதிர்த்தும்     தமிழ்த்திரையுலகில்     புகழ்பெற்ற நட்சத்திரமாகத்     திகழ்ந்த    நாகேஷ்இ      கமலஹாஸன்     தயாரித்த   ‘மகளிர் மட்டும்’ படத்தில்       பிரேதமாகவும்     நடித்தவர்.     2009 ஜனவரி 31 ஆம் திகதி      உண்மையாகவே      பிரேதமாகிவிட்டார்.



 குண்டுராவ்   என்ற    இயற்பெயரைக்கொண்ட    நாகேஷ்     நடித்த   முதல் திரைப்படம்    தாமரைக்குளம்.
ஆந்திராவிலிருந்து      சென்னைக்கு    வந்து    ரயில்வேயில்    கிளார்க்காக பணியாற்றியவாறு       ஆரம்பத்தில்    மேடைநாடகங்களில்     நடித்தும் திருமணவைபவங்களில்    நகைச்சுவைநிகழ்ச்சிகளை     நடத்தியும் வாழ்க்கையைச்சிரமப்பட்டு      ஓட்டிய      நாகேஷை     தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை    நடிகராக     மட்டுமன்றி     சிறந்த      குணச்சித்திர நடிகராகவும் மாற்றிய      பெருமை     பாலச்சந்தர்      மற்றும்    ஜெயகாந்தனையே    சாரும்.
 பாலச்சந்தரின்      நீர்க்குமிழி   -   எதிர்நீச்சல்  -    ஜெயகாந்தனின்     யாருக்காக அழுதான்?     என்பன      அவரது     குணச்சித்திர     நடிப்புக்குச்    சிறந்த சான்று. ஸ்ரீதரின்       காதலிக்கநேரமில்லை   -   ஊட்டிவரை உறவு  -   ஏ.பி. நாகராஜனின்       திருவிளையாடல்  -   தில்லானா மோகனாம்பாள்      உட்பட பல   நூறு   படங்கள்    நாகேஷின்    நகைச்சுவை    ததும்பும்    தனித்துவமான நடிப்பாற்றலுக்கு     சான்று    பகர்பவை.
 நடிகர்    சிவகுமார்    நடிகர்    மட்டுமல்ல.      இலக்கியப்பிரக்ஞையுமிக்க எழுத்தாளருமாவார்.     சில    நூல்களையும்      நூல்     விமர்சனங்களையும்  எழுதியிருப்பவர்.      பல     தமிழக    இலங்கை     எழுத்தாளர்களுடன் நட்புறவுடன்     பழகுபவர்.     இவர்     ஜூனியர்   விகடனில்     முன்பு    எழுதிய ‘இது   ராஜபாட்டை   அல்ல’   தொடரில்      நடிகர்     நாகேஷ_க்கென    ஒரு தனி அத்தியாயமே     எழுதியிருக்கிறார்.
 உலகப்புகழ்பெற்ற    நகைச்சுவை    நடிகர்    சார்லிசப்லின்    தனது வாழ்க்கையில்    சந்தித்த      அவமானங்கள்     வேதனைகள்  -  சோதனைகள் போன்று       தமிழ்த்திரையுலக    நாகேஷ_ம்     எதிர்நேக்கிய     இன்னல்கள் ஏராளம்.


 ஆயினும்     தன்னம்பிக்கையுடன்       திரையில்     மட்டுமல்ல     தன்   சொந்த வாழ்விலும்      எதிர்நீச்சல்     போட்டவர்.
  சில     வெளிநாட்டு      ஊடகங்களில்     (புலம்பெயர்ந்தவர்கள் நடத்தும் வானொலிகளில்)      நாகேஷ்     நடித்த    முதல்    திரைப்படம்      நவக்கிரகம் என்று     சொல்லப்பட்டது.     ஆனால்  -   இந்தத்    தகவல்    தவறு.     தாய் நாகேஷ்     என்ற    பெயருடன்      அவர்      தோன்றிய    முதல்   திரைப்படம்      தாமரைக்குளம்.     1960    களில்     இத்திரைப்படம்    வெளியானது.
 இரவு   பகலாக     ஒய்வு     ஒழிச்சலின்றி    நடித்த    நாகேஷ் ஏழ்மையிலும்      தன்னை      கஷ்டப்பட்டு    வளர்த்த      தாயாரைத் திருப்திப்படுத்தி    சந்தோஷமாக     வைத்திருக்கவேண்டுமென்பதற்காக கடினமாக     உழைத்து     பணமும்       சம்பாதித்து    சொந்தமாக    காரும் வாங்கிக்கொண்டு      தாயாரைத்தேடிச்செல்லும்போது    தாயார்     இறந்து அக்கினியில்      சங்கமமாகிக்கொண்டிருந்தார்.
 அவரது    வாழ்வில்    மீளமுடியாத       சோகத்தைத்    தந்தது இந்தச்சம்பவம்தான்      என்று      அவர்     தெரிவித்திருப்பதாக    நடிகர் சிவகுமார்     தமது    கட்டுரையில்     வாசகரை நெகிழச்செய்யும்   விதமாக எழுதியிருக்கிறார்.
 ஜெயகாந்தனின்    யாருக்காக   அழுதான்                      குறுநாவலை திரைப்படமாக்க       விரும்பிய       இயக்குநர்     ஸ்ரீதர்    அதற்கான      அனுமதியை      கேட்டபொழுது       ஜெயகாந்தன்      மறுப்புத்தெரிவித்து குறிப்பிட்ட      கதையில்     வரும்       திருட்டுமுழி   ஜோஸப்    பாத்திரத்துக்கு     நகேஷை     தேர்வு     செய்து     படப்பிடிப்பையும் தொடங்கினார்.      வசூலைப்பொறுத்தவரையில்      பெரிய     லாபத்தை   அந்தத் திரைப்படம்      ஜெயகாந்தனுக்கு    கொடுக்காது     போனாலும்    தரமான தமிழ்த்திரைப்படங்களின்     வரிசையில்     யாருக்காக    அழுதான்    இன்றும் பேசப்படுகிறது.
 ஜெயகாந்தனின்    பார்வையில்    நாகேஷ்:-
  ‘ நகேஷின்      நடிப்பு    தமிழ்த்திரைப்பட     உலகிற்கு   -   இதன்    தகுதிக்கு மிஞ்சிய      ஒரு    வரப்பிரசாதம்     என்று     செல்லவேண்டும். நல்லவேளையாக    டைரக்டர்களின்     ஆளுகை     தன்மீது     கவிழ்ந்து அமிழ்த்தி     விடாதவாறு      பாதுகாத்துக்கொள்ளும்      அதேசமயத்தில்    ஒரு நடிகனுடைய    எல்லைகளை    மீறி      நடந்துகொள்ளாதவர்.     தனது பாத்திரத்தைத்      தன்    கற்பனையினால்      டைரக்டரோ  -     தயாரிப்பாளரோ எதிர்பாராத     முறையில்      மிகவும்     சிறப்பாக      அமைத்துக்கொள்கிற   ஒரு     புதுமையான      கலைஞராகவும்       இருந்தார்.     ( நூல்:  ஓர் இலக்கியவாதியின்    கலையுலக     அனுபவங்கள்)
ஜெயகாந்தனின்       இந்தக்கூற்றுக்கு     இரண்டு    சம்பவங்களை      இங்கு ஊதாரணமாகக்   குறிப்பிடலாம்.
அபூர்வராகங்கள்      படத்தில்     நhகேஷ்     ஒரு     டொக்டர்.      இரவானதும்     மதுவுக்கு      அடிமையாகிவிடுபவர்.     ஆனால்    மது    அருந்தும் பழக்கமுள்ளவர்     தான்    அல்ல    தனது    தம்பிதான்     என்று    ஸ்ரீவித்தியா  - கமல்ஹாசன்    உட்பட    அனைவரையும்     நம்பவைத்துக்கொண்டிருக்கும்      பாத்திரம்.
ஒரு     காட்சியில்       நhகேஷ்     மதுக்கிளாஸ_டன்      வருவார்.      பின்னால் சுவரில்      அவரது    நிழல்     படும்விதமாக      ஒளியிருக்கும்.     சுவரில் தோன்றும்      அவரது    நிழலிலும்     மதுக்கிளாஸ்     இருந்தமையால் இயக்குநர்      பாலச்சந்தர்     நடிக்கச்சொன்னதும்      நாகேஷ்     அந்த     நிழலில் தெரிந்த     மதுக்கிளாசுடன்     நிஜகிளாஸை    'சியேர்ஸ்'      எனச்சொல்லி அடித்து    நொருக்கிவிடுவார்.
இயக்குநர்     உட்பட   செட்டில்    இருந்த     அனைவரும்    அந்தக்காட்சியை பெரிதும்     பாராட்டினர்.    படத்திலும்     அந்தக்காட்சி     வந்த  பொழுது ரசிகர்களை    பலத்த    சிரிப்புக்குள்ளாக்கியது.     இத்தனைக்கும்    அவ்வாறு    கிளஸை     சுவரில்      மோதச்சொல்லி     இயக்குநர் நகேஷ_க்குச்   சொல்லவில்லை.


மற்றுமொரு      படத்தின்      காட்சியில்      கமல்ஹாசனும்     நகேஷ_ம் உணவருந்துவார்கள்.      கமல்    பிளேட்டிலிருக்கும்       பொரித்த    கோழியை முள்ளுக்கறண்டியினால்     குத்திக்கொண்டிருப்பார்.
' என்னப்பா      இன்னும்     அது      சாகவில்லையா? '      என்று  நாகேஷ் கேட்பார்.       இவ்வாறு    பேசி   நடிக்குமாறும்    இயக்குநர் அவருக்குச்   சொல்லவில்லையாம்.
பாலச்சந்தரின்     திரையுலகப்  பணிகளை   பாராட்டி     கலைஞர்கள் இணைந்து    நடத்திய      பாராட்டு     விழாவில்      நாகேஷ்  பேசிக்கொண்டிருப்பார்.      அவர்     பேசும்     ஒலிவாங்கி    (மைக்)     மெதுவாக கீழ்நோக்கி      சரியும்.      உடனே    மேடையில்   நின்ற     ஒருவர்     ஓடிவந்து அதனை    நிமிர்த்தி   சரிசெய்வார்.
உடனே    நாகேஷ்     ' இதுவரையும்   பேசியது     கேட்கவில்லையா? '   என்று    ஒரு    போடுபோடுவார்.     மண்டபம்     சிரிப்பில்     அதிர்ந்தது.
  நகேஷ_ம்      ஜெயகாந்தனும்    நல்ல    நண்பர்கள்.      ஜெயகாந்தனின் யாருக்காக      அழுதானில்      கதாநாயகனாக    நடித்த  நாகேஷ்தான் பாலச்சந்தரின்      எதிர்நீச்சல்     நாடகத்திலும்      கதாநாயகன்.    (இந்நாடகமும்      பாலச்சந்தரின்    இயக்கத்தில்      பின்பு     படமாகியது.)
 இரண்டு     கதைகளுக்கும்      இடையில்     ஒற்றுமை    இருப்பதாக    சில சினிமா     விமர்சகர்கள்     குசும்புத்தனமாக    பேசத்தொடங்கிவிட்டதனால் பாலச்சந்தர்      கவலைப்பட்டிருக்கிறார்.      ஆனால்      ஜெயகாந்தனிடம் அத்தகைய       அபிப்பிராயம்     இருக்கவில்லை.     எனினும்     ஜெயகாந்தனுக்கும்    பாலச்சந்தருக்கும்    நல்ல      நண்பராகத்திகழ்ந்த நாகேஷ்    -   அவர்கள்     இருவருக்குமிடையில்      பகைமை தோன்றிவிடக்கூடாது      என்ற     நல்ல     எண்ணத்தில்     ஜெயகாந்தனின் இருப்பிடத்திற்கு      ஒருநாள்     காலை   வேளையிலேயே     வந்துஇ ஜெயகாந்தனை      குறிப்பிட்ட     எதிர்நீச்சல்      நாடகத்துக்கு      அன்று மாலையே      அழைத்துச்சென்றுள்ளார்.       நாடகத்தைப்பார்த்த    ஜெயகாந்தன்       தனது     கதைக்கும்    எதிர்நீச்சலுக்கும்      ஒரு     சம்பந்தமும் இல்லையென்று     நாடக     அரங்கின்   பின்புறம்    சென்று    அவர்கள் இருவருக்கும்    தெரிவித்து      சங்கடத்தைப்    போக்கியுள்ளார் .    
 ‘நேரடியாக      விடயத்தைச்    சொல்லாமல்      நாகேஷ்    சமயோசிதமாக சிக்கலை     அவிழ்த்துவிட்டார்’-    என்று      சொல்லி    நாகேஷின்     உயர்ந்த பண்பைப்      பாராட்டுகிறார்      ஜெயகாந்தன்.    பாலச்சந்தரின்     எதிர் நீச்சல்     ஒரு     வங்க நாடகக்கதையின்    தழுவல்    என்பதுதான்    ஜெயகாந்தனின் அபிப்பிராயம்.
  திருவிளையாடல்    படத்தில்     ஏழைப்புலவன்     தருமியாகத்    தோன்றி அசத்தியவர்     நாகேஷ்.      அதில்     சிவனும்     (சிவாஜி)    தருமியும்    (நாகேஷ்)     தோன்றும்    காட்சி     மிக    முக்கியமானது.     இந்தப்படப்பிடிப்பு முடிந்ததும்    அதனை    சிவாஜிக்கு  -     படத்தின்    இயக்குநரும் வசனகர்த்தாவுமான    ஏ.பி.நாகராஜன்     போட்டுக்காண்பித்தாராம். நாகேஷின்    நடிப்பினால்      சிலிர்த்துப்போன       சிவாஜி    அந்தக்காட்சிகளில் கத்திரிக்கோலை      வைக்கவேண்டாம்    என்று     அன்புக்கட்டளை போட்டாராம்.
 குறிப்பிட்ட    திருவிளையாடல்     காட்சியை      எம்மவர்கள்      புலம்பெயர்ந்த நாடுகளில்      மேடைநாடகமாக     நடிக்கிறார்கள்.     சில    வருடங்களுக்கு முன்னர்     அவுஸ்திரேலியாவில்      விக்ரோரியா    மாநிலத்தின் ஈழத்தமிழ்ச்சங்கத்தின்      முத்தமிழ்      விழாவில்  இங்குள்ள    உயர்தர வகுப்பு     மாணவர்கள்      அந்தத்திரைப்படக்காட்சியை     நாடகமாக்கியபொழுது பார்த்து      ரசித்திருக்கிறேன்.
 வாழ்வில்     ஏற்ற  -   இறக்கங்களையும்    வெற்றி    தோல்விகளையும் சந்தித்த    நாகேஷ_க்கு     ஒரு     சந்தர்ப்பத்தில்    சோதனையான    காலம்  தோன்றியது.
 அவரது     மனைவி    ரெஜினாவின்    சகோதரன்     ஒருவனின்     மர்ம மரணம்     அவரது    குடும்பத்தில்     பெரும்     புயலையே     ஏற்படுத்திவிட்டது. நாகேஷின்     மனைவி    உட்பட    சில      குடும்ப     உறுப்பினர்கள் பொலிஸாரின்      தீவிர    விசாரணைக்கு    உட்படுத்தப்பட்டபோது நாகேஷ_ம்     எச்சமயத்திலும்    கைதாவார்     என்ற    வதந்தி பரவிக்கொண்டிருந்தது.     அதனால்       ஏ.பி. நாகராஜன்      தனது      தில்லானா மோகனாம்பாள்       படத்தின்    படப்பிடிப்பு    வேலைகளையும் ஒத்திவைக்கத்தீர்மானித்தார்.      காரணம்:    குறிப்பிட்ட    படத்தில்      தரகராக வரும்     வைத்தி     பாத்திரத்துக்கு     நாகேஷைத்      தவிர    பொருத்தமான வேறு     ஒருவர்      இல்லை    என்பதுதான்     நாகராஜனின்     அபிப்பிராயம்.
 எனினும்     அந்தச்சம்பவத்தில்    நகேஷ_க்கு    சம்பந்தம்      இருக்கவில்லை.      தமிழக    கிசு    கிசு   திரைப்பத்திரிகை     உலகம் எதிர்பார்த்த    அவல்   சப்புவதற்கு     கிடைக்காமல்போனது      நாகேஷின் நல்லகாலம்தான்.
 நாகேஷ்    ஒரு     சந்தர்ப்பத்தில்    சொன்னார்.     தான்     திரையில் தோன்றியதுமே    ரஸிகர்கள்     சிரித்து     ஆரவாரம்     செய்கிறார்கள். அதற்காக     மகளிர்    மட்டும்    படத்தில்     பிரேதமாகவும் தோன்றிப்பார்த்தாராம்.      அதற்கும்      ரசிகர்கள்     அழாமல்     சிரித்தார்களாம்.
 நாகேஷ்    தத்துவார்த்தமாக   அதேசமயம்      சுவாரஸ்யமாகவும்    பேச வல்லவர்.      நண்பர்களுடனான     சந்திப்புகளில்     அவர்    உதிர்க்கும் தத்துவக்கதைகள்    பொருள்     பொதிந்தவை.
  நாகேஷ்    சொன்ன    பல    துணுக்குகளில்      இரண்டு     வாசகர்களுக்கு:-
1. தெருவோரத்தில்    கிடந்த    மலத்தைப்பார்த்தவர்கள் மூக்கைப்பொத்திக்கொண்டு    அருவெருப்போடு     சென்றார்களாம். அதனைப்பார்த்த     அந்த    மலம்     சொன்னதாம்.     ‘நான்     முன்பு    ஒரு பலகாரப்பட்சணக்கடையில்      அழகிய      கேக்காக      கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்தேன்.      உங்களைப்போன்ற      ஒரு    மனிதன்தான்      என்னை    வாங்கி      உண்டு    இப்படி      இந்தக்கதியில்    விட்டுப்போய்விட்டான். கண்ணாடிப்பெட்டிக்குள்    நறுமணத்துடன்       சுவையாகத்தான்     நான் இருந்தேன்.     என்னை     இந்த     நிலைமைக்கு      ஆளாக்கியவன் மனிதன்தான்.

2. குதிரை  ரேஸ்   நடக்கும்   மைதானத்தில்    இலட்சக்கணக்கான மனிதர்கள்      குதிரைகளின்     மீது      பணத்தைக் கட்டிவிட்டு    அவற்றின் ஓட்டத்தைப்பார்ப்பார்கள்.       ஆனால்    குதிரைகளுக்கு    என்ன    நடக்கிறது      என்பது      தெரியாது.

முருகபூபதி


                           ----0----

No comments: