கொற்கை'க்கு சாகித்திய அக்காதெமி விருது 2013

.
ஜோ டி குரூஸ் எழுதிக் காலச்சுவடு வெளியீடாக வந்து இலக்கிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்த கொற்கை நாவல் 2013ஆம் ஆண்டுக்கான சாகித்திய அக்காதெமி விருதைப் பெற்றிருக்கிறது. விருது பெறும் ஜோ டி குரூஸுக்குக் காலச்சுவடு இதழின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

புதிய நூற்றாண்டில் தமிழில் வெளியான குறிப்பிடத்தகுந்த நாவல்களில் கொற்கை முக்கியமான படைப்பு. ஆழி சூழ் உலகு என்ற தனது முதல் நாவல் மூலம் இலக்கிய உலகில் சலனத்தை ஏற்படுத்திய ஜோ டி குரூஸ் தனது இரண்டாவது நாவலான கொற்கையில் தன்னை நம்பிக்கைக்குரிய நாவலாசிரியராக நிலைநிறுத்திக் கொண்டார்.

''நான் கண்டு கேட்டு அறிந்து வாழ்ந்த பரதவர் சமூகத்தை அடையாளப்படுத்த விரும்பினேன். அந்தச் சமூகத்தின் அடையாளத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டவும் அந்தச் சமூகத்தின் மீது எனக்குள்ள அக்கறையையும் அன்பையும் பதிவு செய்யவே இந்த நாவலை எழுதினேன்'' என்று கொற்கை நாவலை முன்வைத்து நடந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் (நெய்தல் அமைப்பு ஏற்பாடு செய்த கொற்கை நாவல் விமர்சனக் கூட்டம் . 07.08.2010 ) குறிப்பிட்டார் ஜோ டி குரூஸ்.நெய்தல் நிலத்தின் சந்ததியரான பரதவ குல மக்களைப் பற்றிய அசலான இலக்கிய ஆவணம் கொற்கை. சுமார் ஆயிரத்து இருநூறு பக்கங்களில் கடல் மனிதர்களின் வாழ்வையும் கடலின் வாழ்வையும் பற்றிப் பேசுகிறது. கூடவே மிக விரிவான காலத்தைப் பற்றியும் பேசுகிறது. 1914 முதல் 2000ஆவது ஆண்டு வரையிலான பரந்த காலப் பின்னணியில் 86 குடும்பங்களின் கதையை நுட்பமாகவும் விஸ்தாரமாகவும் சொல்கிறது. ஒரு கண்ணோட்டத்தில் இந்த நாவல் காலத்தைப் பற்றிய கதை. நீண்டகாலத்தின் பின்புலத்தில் புவியியல், அரசியல், சமூகம், மதம், பொருளாதாரம் என மனித வாழ்வைத் திசைமாற்றும் எல்லா அம்சங்களையும் கலைத் தேர்ச்சியுடன் முன்வைக்கிறது. உண்மை உணர்வுடன் ஒரு சமூகத்தின் வாழ்வைப் பகிர்ந்துகொள்கிறது. கொற்கை நாவலில் நிகழும் பயணம் நெடியது. அது கொற்கை என்ற 'பரதவர் மலிந்த பயங்கெழு மாநகரை' மட்டுமே களமாகக் கொள்வதில்லை. கொற்கைக் கடல்முகத்திலிருந்து புறப்படும் தோணி எங்கெல்லாம் செல்கிறதோ அந்த இடங்கள் எல்லாவற்றையும் அங்குள்ள எல்லா மனிதர்களையும் பற்றியும் சித்திரிக்கிறது. அந்த வகையில் இந்த நாவல் இலக்கியத்தைக்கடந்த மானுட ஆவணமாகவும் அமைகிறது.

அண்மைக்காலமாக சாகித்திய அக்கா தெமியின் போக்கில் செயல்பாட்டில் நிகழ்ந்து வரும் இலக்கியத்துக்கு இணக்கமான போக்கின் விளைவே கொற்கையை விருதுக் குரியதாக்கியிருக்கிறது.

பெரும்பாலும் மூத்த படைப்பாளிகளுக்கு ஓய்வுக் கால ஊதியமாக வழங்கப்பட்டு வந்த அக்காதெமி விருதுகள் நிகழ்கால இலக்கியவாதிகளுக்கு உரியதாக மாறியிருக்கின்றன. படைப்பாளி ஊக்கத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் காலத்திலேயே அவை வழங்கப்படுகின்றன. இதற்கு முன்னர் விருது பெற்ற எழுத்தாளர்களான நாஞ்சில்நாடன், சு.வெங்கடேசன் போன்றோர் எழுதிக்கொண்டிருக்கும் காலத்திலேயே விருது பெற்றார்கள். அந்த வரிசையில் ஜோ டி குரூஸூம் இணைகிறார் என்பது இளமை ததும்பும் செய்தி.

நல்ல இலக்கியத்தைப் பாராட்டுதல், எழுத்தாளர்களின் லாபியிங் சாமர்த்தியத்தைப் புறக்கணித்தல் என்ற சுதந்திர நிலைப்பாட்டுக்கு சாகித்திய அக்காதெமி வந்து சேர்ந்திருக்கிறது என்றும் எண்ணலாம். கொற்கை நல்ல நாவல் என்ற இலக்கிய உலகத்தின் பரிந்துரையே இவ்விருதுக்கு காரணம். சாகித்திய அக்காதெமியின் புதிய வழிகாட்டும் குழுவின் அமைப்பாளர் டாக்டர். கி. நாச்சிமுத்து இந்த நம்பிக்கையை அளிக்கிறார். சாகித்திய அக்காதெமி விருதுக்காக இந்த நாவலைத் தேர்வு செய்த நடுவர்குழு பாராட்டுக்குரியது. எந்தக் குழுவின் பின்துணையும் இல்லாமல்தான் இந்த விருது ஜோ டி குரூஸை அடைந்திருப்பதை இலக்கியச் செயல்பாடுகளை அறிந்த எவரும் இதைச் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்த முடியும்.

சரியான இலக்கியத்துக்குச் சரியான விருது என்பது அந்த விருதுக்கு மதிப்பைக் கூட்டுகிறது. 2013ஆம் ஆண்டின் சாகித்திய அக்காதெமி தமிழ்ப் படைப்புக்கான விருதுத் தேர்வில் அது நிகழ்ந்திருக்கிறது.
- பொறுப்பாசிரியர்

No comments: