.
மத்திய இந்தியாவின் தண்டகாரன்யா காடுகளில் இருக்கும் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்பதை எதிர்த்து பழங்குடி மக்கள் வில், அம்புடன் வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருக்க, அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறார் அருந்ததி ராய். ‘ஆபரேஷன் பசுமை வேட்டை’ என்ற பழங்குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய் தண்டகாரன்யா காடுகளுக்குள் நேரடியாக சென்றுவந்தார்.
பிரதமரும், உள்துறை அமைச்சரும் ‘இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சக்தி’ என மாவோயிஸ்ட்டுகளை வர்ணித்துக் கொண்டிருக்க, அருந்தி ராயோ அந்த அச்சுறுத்தம் சக்திகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை நேரடியாக சென்று பார்த்து வந்திருக்கிறார். ஆபரேஷன் பசுமை வேட்டையைக் கண்டித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்திருந்த அருந்ததி ராயை சந்தித்துப் பேசியதில் இருந்து…
தண்டகாரன்யா காடு என்பது இன்று இந்தியாவின் மர்மப் பிரதேசம் போல் காட்சி அளிக்கிறது. அங்கு நேரடியாக போய் வந்தவர் என்ற அடிப்படையில் தண்டகாரன்யாவில் என்னதான் நடக்கிறது என்பது பற்றி சொல்ல முடியுமா?
“மத்திய இந்தியாவில் சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளை இணைப்பதாக இருக்கும் தண்டகாரன்யா காடு, இந்தியப் பழங்குடிகளின் பூர்வீகப் பிரதேசம். குறிப்பாக டோங்ரியா,கோண்டு இன மக்களின் தாயகம். இந்தியா என்றொரு நாடு தோன்றுவதற்கு முன்பிருந்தே அந்த மக்கள் தண்டகாரன்யா காடுகளுக்குள் வாழ்கின்றனர். காட்டின் வளங்களை அவர்கள் பணம் கொட்டும் இயந்திரங்களாகப் பார்ப்பது இல்லை. காடு என்பது அவர்களின் கடவுள். ஆனால் அவர்களின் கடவுளை அவர்களுக்குத் தெரியாமலேயே பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்றுவிட்டது இந்திய அரசு. நல்லவிலை கிடைக்கிறது என்பதற்காக உங்கள் கடவுளை விற்பீர்களா? (அது ‘நல்ல விலை’யும் இல்லை என்பது வேறு விஷயம்).
தண்டகாரன்யா காட்டின் மலைத் தொடர்களில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்ஸைட் கனிமவளம் இருக்கிறது. இதுதான் வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் இலக்கு. இந்த நிறுவனங்களுக்காக தரகர் வேலைப் பார்க்கும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைப் பிடுங்குகின்றனர்.
அந்த மக்களுக்கு இந்த அரசினால் இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடம், மருத்துவமனை, சாலைவசதி, சுத்தமான குடிநீர், வனம்சார் விளைபொருட்களுக்கான விலை, குறைந்தது போலீஸ் பயமற்ற நிம்மதியான வாழ்க்கை… எதுவும் இல்லை. ஆனால் எஞ்சியிருக்கும் நிலங்களையும் வன்முறையாக பிடுங்குகின்றனர். நாட்டின் இதரப் பகுதி மக்கல் போலீஸ், ராணுவம் மூலம் அரசு கட்டவிழ்த்துவிடும் வன்முறைக்கு பணிந்துபோக பழகிவிட்டனர். ஆனால் பழங்குடி மக்கள் வீரத்துடன் எதிர்த்து போரிடுகின்றனர்.
ஒடுக்கப்படும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்தி களத்தில் நிற்கின்றனர். உடனே அவர்களை ‘இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சக்தி’ என வர்ணிக்கிறார் பிரதமர். மாவோயிஸ்ட்டு கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்குத்தான் ஆபரேஷன் பசுமை வேட்டை நடத்தப்படுகிறது. ஆனால் இந்த நாட்டில் மாவோயிஸ்ட்டுகள் மட்டும்தான் கிளர்ச்சி செய்கிறார்களா? நிலமற்றவர்கள், தலித் மக்கள், சிறுபான்மையினர், தொழிலாளர்கள், விவசாயிகள் என நாடு முழுவதும் ஒரு பெரும் போராட்ட களமே விரிந்துகிடக்கிறது. சுதந்திர இந்தியாவின் 60 ஆண்டு கால வரலாற்றில் போர் நடக்காத ஆண்டு என ஒன்று கூட இல்லை.
நாகாலாந்து மக்களுக்கு எதிராக, மணிப்பூரி மக்களுக்கு எதிராக, காஷ்மீரிகளுக்கு எதிராக, சீக்கியர்களுக்கு எதிராக, தலித் மக்களுக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக, பழங்குடி மக்களுக்கு எதிராக… எப்போதும் ஏதோ ஒரு போரை இந்த அரசு நடத்திக்கொண்டேதான் இருக்கிறது. அதனால் இப்போது தண்டகாரன்யா காட்டில் நடப்பதை வெறுமனே ‘கிளர்ச்சியாளர்களை அடக்கும் நடவடிக்கையாக’ மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. அங்கு நடப்பது ஒரு போர். உள்நாட்டுப் போர். சொந்த மக்களுக்கு எதிராக, பட்டினியில் வாடும் ஏதுமற்ற ஏழைப் பழங்குடி மக்களுக்கு எதிராக இந்திய அரசு தொடுத்திருக்கும் போர்.”
அதற்காக மாவோயிஸ்ட்டுகள் ரயில்களை கவிழ்ப்பதையும், அப்பாவிகளைக் கொள்வதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
‘‘நீங்கள் மாவோயிஸ்ட்டுகளின் இத்தகையை வன்முறைக்குள் எந்த நியாயத்தையும் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். நான் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை -அதை யார் செய்தபோதிலும்- ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. ஆனால் ரயில் கவிழ்ந்தவுடன் எந்தவித ஆதாரங்களும் கிடைப்பதற்கு முன்பே ‘இதை மாவோயிஸ்ட்டுகள்தான் செய்தார்கள்’ என தீர்ப்பு எழுதுபவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்படும்போதும், காடுகளை விட்டு துரத்தப்படும்போதும் எங்குப் போயிருந்தனர்?
போராடும் மக்களின் சாதிப் பிரிவினையை அதிகப்படுத்தி ’சல்வா ஜூடும்’ என்ற பெயரில் அரசக் கூலிப்படைகளை உருவாக்கி சொந்த மக்களை வாழ்விடங்களில் இருந்து விரட்டி அடிக்கிறது அரசு. இந்த சல்வா ஜூடும் கூலிப்படை இதுவரை சுமார் 700 கிராமங்களை தீயிட்டு அழித்திருக்கிறது. மூன்று லட்சம் மக்களை காடுகளுக்குள் துரத்தி இருக்கிறது. மூன்று வயது பிஞ்சுக் குழந்தையின் விரல்களை வெட்டி எரிகிறது. எல்லாம் எதற்காக? அந்த மக்களை அங்கிருந்து துரத்தி நிலத்தை அபரித்து பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுப்பதற்காக. இந்த அரசக் கூலிப்படையை உருவாக்கியவர் அப்பகுதியின் காங்கிரஸ் பிரமுகர் மகேந்திர வர்மா என்பவர்.
சல்வா ஜூடுமிற்கு சம்பளம் தருவது ஜிண்டால், எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள். இப்படி சொந்த அரசாங்கத்தால் எல்லா வகையிலும் கைவிடப்பட்ட மக்கள் வேறு வழியின்றிதான் மாவோயிஸ்ட்டு படையுடன் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். ஆபரேஷன் பசுமை வேட்டை ஆரம்பித்ததற்குப் பிறகு மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுகள் என்பவர்கள் திடீரென வந்தவர்கள் இல்லை. அவர்கள் பல்லாண்டுகளாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளின் உரு திரண்ட வடிவம். அவர்கள் விளைவுகளே அன்றி, காரணம் அல்ல.
ஆயுதத்தின் வலிமையில் இந்த அரசை தூக்கி எரிந்து புதிய புரட்சிக்கர அரசை கட்டி எழுப்புவதுதான் மாவோயிஸ்ட்டுகளின் அரசியல் சித்தாந்தம். ஆனால் ‘ஆயுத வழி’ தவறென சொல்லும் இந்த நாட்டின் புத்திஜீவிகளும், அஹிம்சையாளர்களும் அதே ஆயுதங்களைக் கொண்டு நம் சொந்த மக்களை கொன்றொழிப்பது எப்படி சரியாகும் என்று ஏன் அரசாங்கத்தை நோக்கி கேட்க மறுக்கிறார்கள்? இந்த பசுமை வேட்டை நடவடிக்கையானது அஹிம்சை பேசுபவர்களின் முகத்திரையை கிழித்திருக்கிறது.
நீங்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. அவர்கள் காடுகளுக்குள் போராடுகின்றனர். உண்ணாவிரதம் இருக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் அவர்களால் முடியாது. நிஜத்தில் அவர்கள் வேறு வழியின்றி உண்ணாமல்தான் இருக்கின்றனர் என்பதே நமக்குத் தெரியாத நிலையில், அதை ஒரு போராட்டமாக செய்தால் மட்டும் புரிந்துவிடப் போகிறதா? தமது வீடுகளையும், நிலங்களையும் காப்பாற்றிக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு என அவர்கள் நம்புகின்றனர். அதில் என்ன தவறு இருக்கிறது?”
‘பசுமை வேட்டை’ நடவடிக்கையில் நீங்கள் ப.சிதம்பரத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றீர்கள். ஏன்?
‘‘ஏனெனில் அவர்தான் இந்தப் போரின் சி.இ.ஓ. இப்போது தண்டகாரன்யா காட்டின் பாக்ஸைட் கனிமத்தை கொள்ளையிடத் துடிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் அவர். அமைச்சராக பதவியேற்பதற்கு முந்தைய நாள்தான் வேதாந்தா பதவியை ராஜினாமா செய்தார். இப்போது தன் முன்னால் எஜமானருக்கு விசுவாசமாக சொந்த நாட்டின் மக்களைக் கொன்றொழிக்கிறார். இந்தப் போருக்கு மக்களிடம் தார்மீக மனநிலை ஆதரவை பெறுவதற்கு ’நீங்கள் எங்களோடு இல்லை என்றால் எதிரியோடு இருப்பதாக அர்த்தம்’ என்ற புஷ் கோட்பாட்டை கையில் எடுத்துள்ளார். இதன்மூலம் நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் எண்ணற்றப் பிரச்னைகள் மாவோயிஸ்ட்டு பிரச்னைகளாக மாற்றப்படுகின்றன.
முன்பு ‘முஸ்லிம் பயங்கரவாதம்’ என்ற சொல்லை வைத்து பெரும் பிரசாரம் செய்துகொண்டிருந்த ஊடகங்களும், ஆளும் வர்க்கங்களும் இப்போது ‘சிவப்பு பயங்கரவாதம்’ பற்றி வாய் ஓயாமல் பேசுவதை கவனிக்க வேண்டும். பழங்குடிகளின் தாயகமான தண்டகாரன்யா காட்டுப் பகுதியை ஊடகங்கள் இப்போது ‘சிவப்புத் தாழ்வாரம் அல்லது மாவோயிஸ்டு தாழ்வாரம் (Maoist corridor) என்று அழைக்கின்றன. ஆனால் உண்மையில் அது எம்.ஓ.யு.யிஸ்ட் தாழ்வாரம் (MoUist corridor) அதாவது புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தாழ்வாரம் என்று அழைக்கப்படுவதே பொருத்தம். ஏனெனில் உலகின் பணக்கார நிறுவனங்கள் அனைத்தும் அந்த பழங்குடி மக்களின் வளங்களை சுரண்டுவதற்கு நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கின்றன. அங்குள்ள ஒவ்வொரு நதியின் மீதும், ஒவ்வொரு காட்டின் மீதும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதை மறைப்பதற்குதான் உள்துறை அமைச்சர் மாவோயிஸ்ட்டு அபாயம் என்ற பூதத்தை கையில் எடுத்திருக்கிறார்.
அப்படியானால் உண்மையில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சக்தி யார்?
‘‘இந்திய நடுத்தர வர்க்கத்தின் மனநிலை. இவர்களின் மனநிலைதான் அரசின் பயங்கரவாதங்களையும், ராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகளையும் சகித்துக்கொள்கிறது, ஏற்றுக்கொள்கிறது, அங்கீகரிக்கிறது. நாட்டின் அனைத்துப் பிரச்னைகளையும் மாவோயிஸ்ட் பிரச்னையாக மட்டும் சுருக்கி ‘மாவோயிஸ்ட் அபாயம்’ பெரிதுபடுத்திக் காட்டப்படுகிறது. இது, தனது ராணுவமயப்படுத்தும் நடவடிக்கையை நியாயப்படுத்திக் கொள்ள அரசுக்கு உதவுகிறது. ‘எங்கோ தண்டகாரன்யா காட்டில் நடக்கிற யுத்தம்தானே, நமக்கென்ன?’ என நீங்கள் நினைத்தால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இந்தப் போர் நாளை மறுநாளோடு முடியப்போவது இல்லை. இது வருடக் கணக்கில் தொடரப்போகும் யுத்தம். இந்தப் போர் விழுங்கப் போகும் தீனி, நாட்டின் பொருளாதாரத்தையே உறிஞ்சி ஊனமாக்கும். அது உங்களையும் மோசமாக தாக்கும்.”
இலங்கையில் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்கக் கோரி தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனாலும் எதையும் தடுக்க முடியவில்லையே?
‘‘இந்திய அரசு தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைகளை ஆதரிக்கிறது. அதனால் உங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதால் அரசாங்கம் வெட்கப்பட்டு பிரச்னையை சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது.
தமிழர்கள் மட்டுமல்ல… நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எத்தனையோ வகையினர் முதலாளித்துவ பொருளாதாரத்தின் கொடுமையால் தற்கொலை செய்துகொள்கின்றனர். உண்மையில் அவர்கள் தனக்கு துன்பத்தை பரிசளிக்கும் அரசுக்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும். அப்படிப் போராடாமல் தற்கொலை செய்துகொள்வதால் அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. எதிர்ப்பவர்களை ராணுவம், போலீஸ், சல்வா ஜூடும் என கூலிப்படைகளை வைத்து கொல்வதற்கே தயங்காத அரசு, அவர்கள் தானாகவே முன்வந்து தற்கொலை செய்துகொண்டால் மகிழ்ச்சி அடையத்தானே செய்யும்? இதோ இப்போது இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளுக்காக எந்தவித குற்ற உணர்ச்சியும் அடையாத இந்திய வணிகக் கூட்டமைப்பு சிக்ரி, தனது அடுத்தக்கட்ட பொருளாதார நலன்களுக்காக இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கின்றது.”
ஈழப் போரில் தமிழர்கள் அழிக்கபட்டது பற்றியும், அது ஓர் இன அழிப்பு என்பது பற்றியும் நீங்கள் எழுதினீர்கள். ஆனால் போர் நடந்தபோது அறிவுத்துறையினர் பலர் மௌனமாகவே இருந்தார்கள். ஈழப்போர், பசுமை வேட்டை போன்ற மக்களுக்கு எதிரான அரச நடவடிக்கைகளின்போது எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்பான பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்?
‘‘எழுத்தாளர்களும், கலைஞர்களும் விநோதமான டி.என்.ஏ.வில் இருந்து வரவில்லை. இந்த சமூகத்தின் எல்லா வகைமாதிரிகளையும் அவர்களிடமும் காணலாம். நவீன கார்பொரேட் உலகத்தில் அறிவுத்துறையினர் பலரை கார்பொரேட் நிறுவனங்களே ஸ்பான்ஸர் செய்கின்றன. நாட்டின் மிகப்பெரிய அறிவுஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலபேர் கார்பொரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்துக்கு பல நூறு கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடம் இருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிர்பார்க்க முடியும்?
இலங்கை இன அழிப்பைப் பொறுத்தவரை நான் எழுதினேன். ஆனால் அது என் கட்டுரைகளின் எண்ணிக்கையில் மேலும் ஒன்றைக் கூட்டியதே அல்லாமல் வேறு எதையும் சாதிக்கவில்லை. உண்மையில் இலங்கையின் இன அழிப்பை தடுத்து நிறுத்தக்கூடிய செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள் தமிழக அரசியல் கட்சிகள்தான். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. போராட்டங்களை ஒரு சடங்காக மட்டும் நிறுத்திக்கொண்டுவிட்டனர். இப்போதைய பசுமை வேட்டை நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொறுப்பும் அரசியல் கட்சிகளுக்குதான் இருக்கின்றது. ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில் நம் நாட்டில் காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் புறத்தோற்றத்தில் மட்டுமே அந்தப் பெயருடன் உள்ளன. உண்மையில் அவை டாடா கட்சி, அம்பானி கட்சி, மிட்டல் கட்சியாகத்தான் செயல்படுகின்றன.
மாவோயிஸ்ட் வேட்டைக்கு விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று யெச்சூரி சொல்கிறார். சி.பி.எம்-ம் இதை ஒட்டிய கருத்தைதான் சொல்கிறது. கம்யூனிஸ்ட்டுகளின் இந்தக் கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
‘‘(சிரிக்கிறார்)… அவர்கள் டாடாவிடமும், அம்பானியிடமும் சரணடைந்த பிறகு பாட்டாளிகளுக்கான கட்சி என்ற தகுதியை எப்போதோ இழந்துவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் பழங்குடி மக்கள் மீது விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வதும். உடனே ‘மாவோயிஸ்ட்டுகள் வேறு, பழங்குடிகள் வேறு’ என்று யாரேனும் இலக்கணம் சொல்வார்களானால் அவர்களுக்கு நான் சொல்கிறேன், 99 சதவிகித பழங்குடிகள் மாவோயிஸ்ட்டுகள் அல்ல. ஆனால் 99 சதவிகித மாவோயிஸ்ட்டுகள் பழங்குடிகளே.”
நீங்கள் நேரடியாக பார்த்து வந்ததன் அடிப்படையில் மாவோயிஸ்ட்டுகள் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது?
“மாவோயிஸ்டுகளின் வளர்ச்சி என்பது திடீரென நடந்தது இல்லை. அதற்கு 30 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. காட்டு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் போராடி விலை உயர்வைப் பெற்றுத் தந்ததில் தொடங்குகிறது, பழங்குடிகளுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்குமான நல்லுறவு. இப்போது அங்கு ஒரு மக்கள் அரசு செயல்படுகிறது. 500 முதல் 5000 பேர் வசிக்கும் கிராமங்கள் ஒரு மக்கள் அரசைத் தேர்ந்தெடுக்கின்றன. அதில் வேளாண்மை, தொழிற்சாலைகள், பொருளாதாரம், நீதி, பாதுகாப்பு, மக்கள் நலம், மக்கள் தொடர்பு, கல்வி-கலை, வனம் என ஒன்பது துறைகள் செயல்படுகின்றன. இந்த மக்கள் அரசுகள் இணைக்கப்பட்டு டிவிஷன்கள் உருவாக்கப்படுகின்றன. தண்டகாரன்யாவில் இப்படி பத்து டிவிஷன்கள் செயல்படுகின்றன. இவற்றை மாவோயிஸ்ட்டுகள் ஆட்சி செலுத்த, அவர்கள் காட்டில் ஓர் அரசாங்கத்தை நடத்துகின்றனர்.
பல ஆண்டுகளாக அரசு எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் இப்பகுதியில் நிறைவேற்றாத நிலையில் பழங்குடி மக்கள் இயல்பாகவே மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்துவிட்டனர். அன்பும், எளிமையும் நிறைந்த அந்தப் பழங்குடி மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்கின்றனர். அவர்களிடம் பேராசை இல்லை. சட்டீஸ்கரில் நான் சந்தித்த போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னார், ‘இந்த மக்களை ஆயுதத்தால் அழிக்க முடியாது. ஏனெனில் இவர்களிடம் பேராசை இல்லை. பேராசையை ஏற்படுத்த வேண்டும் என்றால் ராணுவத்தையும், போலீஸையும் திரும்பப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு ஒரு டி.வி. பெட்டியை தந்துவிட்டால் போதும்’ என்று. உங்கள் அரசியல்வாதிகள், உங்களுக்கு செய்வதைப் போல”
நன்றி: ஆனந்த விகடன்
No comments:
Post a Comment