திரும்பிப் பார்க்கின்றேன் - 13 -முருகபூபதி


சிவாஜி  முதல்  சிவாஜி  வரையில்  எழுதி ஓய்ந்த சுஜாதா

எனது  தாய்மாமனாரின்  மூத்தமகன்  ஸ்ரீஸ்கந்தராஜா  எனக்கு  மைத்துனராக  மட்டுமன்றி  வீட்டில்   கணிதம்   விஞ்ஞானம்  கற்றுத்தந்த   ஆசானாகவும்  விளங்கியவர்.  யாழ்ப்பாணம்   இந்துக்கல்லூரிக்கு   எங்கள்   ஊரிலிருந்து   மட்டுமல்ல   முதல்தடவையாக   எங்கள்  உறவினர்களின்   குடும்பங்களின்   மத்தியிலிருந்து   (வெளியூருக்கு)  படிக்கச்சென்றவர்.
அதனால்  எங்கள்  மத்தியில்  நன்கு  படித்தவர்  என்ற  பெயரை 1960 களில்  சம்பாதித்தவர்.   அவருக்குப்பின்னர்தான்   நானும்  அவரது  தம்பி  முருகானந்தனும்  யாழ்ப்பாணம்  ஸ்ரான்லி   கல்லூரிக்கு  புலமைப்பரிசில்  பெற்று  படிக்கச்சென்றோம்.

மைத்துனர்   ஸ்ரீஸ்கந்தராஜா  தமது  கல்வியைத்தொடர்ந்து  கொழும்பில்  சிலோன் தியேட்டர்ஸ்   கம்பனியில்   பணியாற்றினார்.  அப்பொழுது  அவர்  கொழும்பில்  வேலைக்குச்சென்று   திரும்பும்பொழுது  வாராந்தம்  குமுதம்   இதழை  வாங்கிவந்து ஆர்வமுடன்   படிப்பார்.  அக்காலப்பகுதியில்  சுஜாதாவின்  நைலான் கயிறு   என்ற மர்மத்தொடர்கதை   குமுதத்தில்  வெளியாகிக்கொண்டிருந்தது.  அந்த  விறுவிறுப்பான  தொடருக்காகவும்    சுஜாதாவின்   புத்தம்புதிய    எழுத்துநடைக்காகவும்   அதனை  நானும்  விரும்பிப்படித்தேன்.





தொடர்    முடிவுற்றதும்  அனைத்து  குமுதம்  இதழ்களிலிருந்தும்   நைலான் கயிறு வெளியான   பக்கங்களை  தனியாக  எடுத்து  தொகுத்து  பைண்ட்செய்து  பாதுகாத்தார்  மைத்துனர்    ஸ்ரீஸ்கந்தராஜா.    அவர்    கொண்டுவரும்    குமுதம்    இதழ்களில்    சுஜாதாவின்     எழுத்துக்களைப்    படித்திருந்த    போதிலும்    தொடர்ந்து படிப்பதற்கு    ஆர்வமூட்டாத    எழுத்துக்களாக  என்னை   சோர்வடையச்செய்திருந்தன.
எனினும்   பாலம்   என்ற   சிறுகதை   மாத்திரம்   நீண்ட   நாட்கள்   மனதில்  தங்கி   நின்றது.  அச்சிறுகதை   உளவியல்   சார்ந்து   வித்தியாசமாக   எழுதப்பட்டிருந்தது.

நான்   தீவிரமாக   வாசிக்கத்தொடங்கிய  1970   காலப்பகுதியில்     சுஜாதாவின் பெரும்பாலான   கதைகள்  மர்மக்கதைகளாக  இருந்ததனாலோ   என்னவோ   பின்னர் அவற்றிலிருந்த    ஆர்வம்   குறைந்துவிட்டது.

  ஒருநாள்   இந்திராபார்த்தசாரதியின்   தந்திரபூமி   நாவலைப்படித்தபொழுது அந்நாவலுக்கு   சுஜாதா   எழுதியிருந்த   முன்னுரை  என்னைப்பெரிதும்   கவர்ந்தது.   அந்நாவலின்  நாயகன்   கஸ்தூரியின்   தோல்வியை   ஜூலியசீஸரின்  வீழ்ச்சிக்கு   ஒப்பானது   என    சுஜாதா  எழுதியிருந்தார்.
  பின்னர்  மீண்டும்   அவரது எழுத்துக்கள்    மீது   ஆர்வம்   தோன்றியது.   சுஜாதாவின்    பாணியில்    இலங்கையில்   எழுதிய  ஒரு  எழுத்தாளரும்  எனது  இனிய   நண்பர்தான்.    அவர்தான்  தெளிவத்தை  ஜோசப்.     சுஜாதா   சங்கர் -  கணேஷ்   என்ற  இரட்டையர்களை  தமது  தொடர்கதைகளில்  துப்பறியும்   நிபுணர்களாக    படைத்திருந்தார்.  தெளிவத்தை  ஜோசப்  ரமேஷ் -ரவிந்திரன்   என்ற  புனைபெயரில்  சில  கதைகளை  சுஜாதாவின்   பாணியில்   எழுதிப்பார்த்தார்.   பிறகு  தொடரவில்லை.





     இப்படி  சுஜாதாவின்   பாதிப்புக்குள்ளான    பல எழுத்தாளர்கள்   தமிழகத்திலும்  இலங்கையிலும்  மட்டுமல்ல   அவுஸ்திரேலியாவிலும்     இருக்கிறார்கள்.
1984 இல்  சென்னைக்குச்சென்றிருந்தேன்.   ஏப்ரில்   மாத  கத்திரி  வெய்யில்  அப்பொழுது    எரித்துக்கொண்டிருந்தது.   ஒரு  மாலைவேளையில்  மயிலாப்பூர்  இராஜேஸ்வரி    கல்யாண   மண்டபத்தில்   இலக்கியச்சிந்தனை   அமைப்பின்  பரிசு  வழங்கும்    விழா.
ஜானகிராமனின்   நளபாகம்    நாவலுக்கு  பரிசு  வழங்குகிறார்கள்  என  அறிந்து சென்றிருந்தேன்.

 அச்சமயம்    ஜானகிராமன்   உயிரோடில்லை.   அவரது   மனைவிதான்   பரிசுவாங்க வந்திருந்தார்;.  மேடையில்   சுஜாதாää  நீலபத்மநாபன்   திருமதி  ஜானகிராமன்    உட்பட   பலர்  பேசவிருந்தனர்.
 சபையில்   கோமல்சுவாமிநாதன்    சிற்பி பாலசுப்பிரமணியம்   அறந்தை நாராயணன்  திரைப்பட   நடிகர்   சகஸ்ரநாமம்   சிட்டி   சுந்தரராஜன்    வானதி  பதிப்பகம்  திருநாவுக்கரசு    உட்பட   ஏராளமான    கலை   இலக்கிய   ஆர்வலர்கள்.

  1981 ஆம்  ஆண்டு   யாழ்ப்பாணம்   பொது    நூலகம்   எரிக்கப்பட்டபின்னர் சுஜாதா   எழுதிய    இலட்சம் புத்தகங்கள்     என்ற   சிறுகதை வாசகர் மத்தியில் மட்டுமன்றி    எழுத்தாளர்    வட்டாரத்திலும்   விதந்து   பேசப்பட்டது.
   சுஜாதா   பெரும்பாலான    எழுத்தாளர்களைப்போன்று    புத்தகங்களை  பெரிதும் நேசித்தவர்.

   யாழ்.  நூலகம்    எரிக்கப்பட்டு   இரண்டு   நாட்களில்    யாழ்ப்பாணம்சென்று மல்லிகை    ஜீவாவுடன்  நேரில்சென்று   பார்த்து   கொதிப்படைந்திருந்த  என்னை சுஜாதாவின்   கதை    சிலிர்க்கவைத்தது.
   கேள்வி   ஞானத்தில்  அவர்   எழுதிய   அக்கதை  அற்புதமாக  படைக்கப்பட்டிருந்தது.





     இலங்கை   வரலாற்றிலேயே    கறைபடிந்த   காட்சியாகிப்போன   யாழ் பொது நூலக    எரிப்பின்  பின்னர்தான்   சுஜாதாவுக்கு     இலங்கைத்தமிழர்கள்    மீது    ஆழ்ந்த    அனுதாபமும்    ஈழத்து   இலக்கியம்   குறித்த    அக்கறையும்  தோன்றியிருக்கவேண்டுமென்று   நம்புகிறேன்.
   சென்னை    இலக்கியச்சிந்தனை     விழாவில்  சுஜாதா   சுவாரஸ்யமாகப்  பேசினார்.     இடைக்கிடை  ‘கொஞ்சம்  தண்ணீர்;  குடிச்சிக்கிறேன்|    எனச்சொல்லிச்சொல்லி    அதற்கு  அனுமதியுங்கள்  என்றும்   கேட்டு  சபையோரை   சிரிக்கவைத்தார்.  அடிக்கடி   தண்ணீரும்  அருந்தினார்.
அவருக்கு   அப்பொழுதே   நீரிழிவு   உபாதை  வந்துவிட்டதோ  என்றும்  யோசித்தேன். அவரது  பிறந்த  திகதியிலிருந்து  பார்த்தால்   அச்சமயம்   அவருக்கு  49  வயதுதான்.

   விழா  முடிந்ததும்  மேடைக்குச்சென்று  அவருடன்  உரையாடினேன்.
ஓரு   பெண்மணி   ஐந்து   ரூபா  நாணயத்தாளை   நீட்டி    அதில்    அவரது ஓட்டோகிராஃப்     பெற்றுக்கொண்டார்.
( அவுஸ்திரேலியாவைப்பொறுத்தமட்டில்   டொலர்  நாணயத்தாளில்  ஒப்பமிடுவது  குற்றம். முன்னாள்    பிரதமர்   போல்கீட்டிங்    மேற்கு    அவுஸ்திரேலியா  மாநிலத்தில்  தேர்தல்    பிரசாரத்துக்குச்சென்றபோது  ஒரு  ஆதரவாளர்  நீட்டிய   ஐந்து   டொலர்  நாணயத்தாளில்  ஓட்டோகிராஃப்   போட்டுக்கொடுத்ததை    தொலைக்காட்சி   ஊடகங்கள்  பெரிதுபடுத்தி    விமர்சித்ததை   அறிவீர்கள்.    போல்கீட்டிங்  பிரதமராவதற்கு    முன்னர்    நிதியமைச்சராகவும்    இருந்தார்    என்பது  குறிப்பிடத்தகுந்தது)
    அக்காலப்பகுதியிலேயே  ஒரு  தமிழ்  சினிமா   நட்சத்திரத்துக்கு கிடைக்கும் அந்தஸ்தினை   அவரது   வாசகர்கள்   அவருக்கு   கொடுக்கத்தொடங்கிவிட்டனர் என்பதற்கு    அந்தக்காட்சி   பதச்சோறு.
   அன்றைய  பேச்சில்  எங்கள்   பேராசிரியர் கா. சிவத்தம்பி   அவர்களையும் மேற்கோள்   காட்டி   சில   கருத்துக்களை   சுஜாதா   சொன்னார்.
   இலங்கையிலிருந்து  வந்திருக்கிறேன்    எனச்சொன்னதும்ää  அவர்  ஆர்வத்துடன் உரையாடினார்.   பெங்களுர்  வீட்டு   முகவரியையும்  தொலைபேசி   இலக்கத்தையும் தானே    எழுதிக்கொடுத்தார்.   அப்பொழுது   அவரிடம்   விசிட்டிங்   கார்ட்   இல்லாத  காலம்    என    நினைக்கின்றேன்.
  இலட்சம் புத்தகங்கள்  கதை   எப்படி   எழுதத்தோன்றியது?   தகவல்களை  எவ்வாறு பெற்றீர்கள்?    எனக்கேட்டேன்.





 தாம்   சந்தித்த   ஒரு   இலங்கைத்தமிழ்ப்பிரஜையூடாகவே   தகவல்களை  அறிந்து எழுதியதாகவும்    இலங்கைத்தமிழ்மக்கள்   மீது   தனக்கு   மிகுந்த    அனுதாபம் இருப்பதாகவும்   சொன்னார்.
இலங்கை    திரும்பியதும்   வீரகேசரியில்  ஒரு  தொடர்  எழுதினேன்.  அதில்  ஒரு  அங்கம்  சுஜாதா  பற்றியது.   அக்காலப்பகுதியில்  சுஜாதா   வாசகர்  சந்திப்புகளில்  சுவாரஸ்யமாகவும்   அங்கதச்சுவையுடனும்   சில  சமயங்களில்  அசட்டுத்தனமாகவும்  பேசிவந்தார்.   ஒரு   சந்திப்பில்     டோபிக்கு   வெளுக்கப்போடும்  தனது  ஆடைகளின்   லிஸ்டும்   இலக்கியமாகலாம்   என்றார்.

யாராவது    தமக்கு  மாதாந்தம்   இரண்டாயிரம்  ரூபா   தந்தால்  எழுதுவதையும்  நிறுத்திவிடுவேன்   எனவும்    சொல்லியிருந்தார்.
அச்சமயம்  ஜெயகாந்தன்  கல்பனா   என்ற  மாதம் ஒரு நாவலை வெளியிடும்  இதழின்  ஆசிரியராகவிருந்தார்.   கல்பனா  இதழின்   கேள்வி - பதில்  பகுதியில்  சுஜாதாவின்  மேற்படி   கூற்று   தொடர்பாக   ஒரு  வாசகர்  கேள்வி   எழுப்பியிருந்தார்.

அதற்கு     ஜெயகாந்தன் --  இதோ   நான்   தருகிறேன்   இரண்டாயிரம்  ரூபா   என்று  கையுயர்த்தி  சொல்வதற்கு  அங்கு   எவரும்   இருக்கவில்லையா?  என்று    பதில்   எழுதினார்.
   சுஜாதாவின்  அக்கருத்து   ஜெயகாந்தனையும்  வெறுப்பேற்றியிருந்தது.
சுஜாதா  பற்றிய  தொடரில்  இந்தச்சம்பவத்தையும்  பதிவுசெய்திருந்தேன்.  அத்துடன்  நான்   நின்றிருக்கவேண்டும்.  சுஜாதாவின்   பெங்களுர்  முகவரிக்கு  வீரகேசரி  பிரதியை  தபாலில்  அனுப்பிவிட்டேன்.   அதனைப்படித்த   சுஜாதா   கொஞ்சம்  கடுப்பாகிவிட்டார்.  தனது  கோபத்தை  நர்மதா  பதிப்பகம்  இராமலிங்கத்திடம்  தெரியப்படுத்தினார்.   பின்னர்  காவலூர்   ஜெகநாதன்  மூலம்  சுஜாதாவின்   கோபத்தை  அறிந்தேன்.
 நாமறிந்தவரையில்   சுஜாதாவைப்போன்று  சகல   துறைகளும்   சார்ந்த  எழுத்துக்களை   படித்த -  எழுதிய  தமிழ்   எழுத்தாளர்   வேறு  எவரும் இல்லை என்று  கூறலாம்.

  நவீன   தமிழ் இலக்கியம் -  பழந்தமிழ் இலக்கியம் -நாட்டார்  இலக்கியம் -  நாடகம் - சினிமா - ஆன்மீகம்- விஞ்ஞானம் - கணினி - தொல்காப்பியம் - ஆழ்வார்  பாசுரம் - உலக இலக்கியம்     இப்படி   பல்வேறுதுறைகள்   பற்றியும்   எழுதியவர்.

சிறீரங்கத்தில்   படிக்கின்ற  காலத்தில்  சமஸ்கிருதம்   படிக்காமல்  தமிழைப்படிக்க ஆர்வம்காட்டியவர்.  1960  களில்   வெளியான  சிவாஜி  என்ற  இதழில்  முதல் முதல்  எழுதியபொழுது   அவர்  பாடசாலை  மாணவன்.  அதன்  பிறகு சுமார்  13  ஆண்டுகள்  அவர்  எதிலும்  எழுதாமல்  தமது  கல்வியிலும்  மேற்படிப்பிலும்தான்  அக்கறை  காண்பித்தார்.   முன்னாள்   இந்திய  ஜனாதிபதியும்  விஞ்ஞானியுமான  அப்துல்காலமுடன் உயர்கல்வி    கற்றவர்.   தனது   கணினி  பொறிமுறை  அறிவினால்  தேர்தலில்  வாக்களிக்கும்  இயந்திரத்தை   கண்டுபிடித்து  அறிமுகப்படுத்தியவர்.  சுமார்  நூறு  நாவல்களும்   இருநூறுக்கும்  மேற்பட்ட  சிறுகதைகளும்  ஏராளமான  விஞ்ஞான  அறிவியல்   கட்டுரைகளும்   பல  திரைப்படங்களுக்கு  வசனமும்  எழுதியிருப்பவர்.  சுருக்கமாகச்சொன்னால்   அவர்  ஒரு   எழுத்துச்சாதனையாளர்.

சிவாஜி   சிற்றிதழில்  எழுதத்தொடங்கியவர்  ரஜினியின்  சிவாஜி  படம்  வரையில் மட்டுமன்றி  அதன்  பிறகும்  அயராமல்  எழுதி  தமது  72 ஆவது  வயதில்  மறைந்தார்.
எழுத்திலே  புதிய   நடையை  புகுத்தியவர்.  அதனால்    இலக்கணச்சுத்தமின்றி எழுதுகிறார்   என   விமர்சகர்களினால்   கடுமையாக  விமர்சிக்கவும்பட்டவர்.
புன்னகைசெய்தான்   என்பதை   புன்னகைத்தான்  என்றும்  சவரம்  செய்துகொண்டான்  என்பதை  சவரித்துக்கொண்டான்  என்று   எழுதுவதும்  தமிழ்மொழிக்கு  நீங்கள் செய்யும் துரோகம்  அல்லவா  எனக்கேட்டபொழுதுää
ஆழ்வார்   செய்திருக்கிறார்  சார்.   காண்கின்றனர்களும்   கேட்கின்றனர்களும்   என்று எழுதி   இருக்கார்.   காண்கின்றனர்  என்பதே  பன்மை.  அப்புறம் - கள்-  விகுதி  சேர்த்திருக்கிறார். -

என்று    பதிலளித்தவர்   சுஜாதா.  ( சுபமங்களா நேர்காணல்- 1991-நவம்பர்)
  அவருக்கு   கம்பராமாயணமும்    தெரியும்   கம்பியூட்டரும்   அத்துப்படி.
ஆயிரம்   தலைவாங்கிய   ஆபூர்வ  சிந்தாமணியும்  படித்தார்  ஆழ்வார்  பாசுரங்களும் தெரிந்து  வைத்திருந்தார்.
ரவுண்டு  ரவுண்டா  நா  ஒண்ணுக்கு  உடுறேம்பாரு.... அப்படி  நீ   உடுவியா   என்று   ஒரு  சிறுவன்   சிறுமியிடம்  கேட்பதாக   எழுதிய   சுஜாதாதான்   ஆனந்தவிகடனில்  கற்றதும்   பெற்றதும்   எழுதிய   அறிவியல்  மேதாவி  என்றும்  சுஜாதாவின்  மறைவின்பின்னர்;    பதிவுசெய்திருக்கிறார்கள்.
 கணையாழி  இலக்கியச்சிற்றேட்டின்  ஆசிரியர்குழுவில்   இருந்திருக்கிறார்ää குமுதம் ஜனரஞ்சக   இதழிலும்  ஆசிரியராகப்  பணியாற்றியுள்ளார். 
தமிழ்நாட்டில்   பிரபல  ஜனரஞ்சக  தமிழ் வார இதழ் நடிகை குஷ்புவுக்காக கவிதைப்போட்டி  நடத்துவதாக  அறிவித்தபொழுதுää ‘ யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமி கழுத்தில்  சயனைற்  அணிந்துகொண்டு  கையில்   ஆயுதம்   ஏந்திப்போராடிக்கொண்டிருக்கும்   பொழுது  இங்கு  நாம்    நடிகை   குஷ்புவுக்கு    கவிதைப்போட்டி   நடத்திக்கொண்டிருக்கின்றோம் ||  எனக்காட்டமாக    எழுதினார்.

  அதே   யாழ்ப்பாணத்தில்   பிறந்து   ஐரோப்பிய  நாடொன்றுக்கு  அகதியாக புலம்பெயர்ந்த   ஒரு  ஈழத்தமிழர்   அங்கு  வந்த   நடிகை  குஷ்புவுக்கு  தங்கச்செயின் அணிவித்தார்  -   என்ற   தகவலுடன்   சுஜாதாவுக்குத்தெரியாத    மற்றுமொரு பக்கம் என்ற    தலைப்பில்   லண்டனிலிருந்து   வெளியான  இதழொன்றில்   ஒருகட்டுரையை பதிவுசெய்திருக்கின்றேன்.
  ஈழத்துக்கவிஞர்களின்   போர்க்காலக்கவிதைகளையும்  விரும்பிப்படித்து  சந்தர்ப்பம் கிடைக்கும்   பொழுதெல்லாம்  அவர் மேற்கோள் கட்டியுள்ளார்.  பல வருடங்களுக்கு   முன்னர்   சென்னை   மித்ர பதிப்பகம்    வெளியிட்ட   பனியும்  பனையும்  கதைத்தொகுதியிலும்  சுஜாதா  தமது  கருத்துக்களை  பதிவுசெய்துள்ளார்.

  குறிப்பிட்டதொகுதி  புலம்பெயர்ந்த  ஈழத்தமிழ்  எழுத்தாளர்களின்  புகலிட வாழ்வைச்சித்திரிக்கும்  கதைகளைக்கொண்டது.  அதில் இடம்பெற்ற எனது மழை   கதையில் -  தாயகத்தில்  யுத்த  சூழலில்   பரிதவிக்கும்  மனைவியையும் பிள்ளைகளையும்  விட்டுவந்து  வெளிநாட்டில்   ஏக்கத்துடன்   வாழும்  ஒரு இளம் குடும்பஸ்தன்    ஒரு   வெள்ளை   இன  மாதுவிடம்   உறவுகொள்ளச்சந்தரப்;பம்   கிடைத்தும்  ஊரிலிருக்கும்  மனைவிக்கு  துரோகம்   செய்வதற்கு  தயங்குகிறான்.
 இந்த மழை   கதையைப்பற்றி   சிலாகித்து   எழுதிய   சுஜாதா   புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு   இப்படியும்    ஒரு   குற்றவுணர்வு   இருக்கிறது  என பதிவுசெய்திருந்தார்.

  பல   திரைப்படங்களுக்கு  திரைக்கதையும்  வசனமும்  எழுதி தமிழ்சினிமா  அடையாளமும்   பெற்றிருந்த  சுஜாதா   ஈழத்தமிழ்மக்களின்   போராட்ட -  அகதிவாழ்வை   சித்திரிக்க   முயன்ற (? )   மணிரத்தினத்தின்   கன்னத்தில் முத்தமிட்டால்    என்ற  பாரதியின்   பாடல்வரியிலமைந்த   படத்திற்கும்   திரைக்கதைவசனம்   எழுதி  விமர்சனத்திற்குள்ளானார்.
 யாழ். சுப்பிரமணியம்   பூங்கா   பற்றி  அறிந்துவைத்திருந்த   சுஜாதா   அதனை திரைக்கதையில்  காண்பித்த  இடம்தான்   தவறானது   என்ற   விமர்சனமும்   எழுந்தது.

 2004   இறுதியில் சுனாமி கடற்கோளினால்  கிழக்கிழங்கையில்    உயிரிழந்த ஈழத்தமிழ்ப்பிள்ளை   அநாமிகா    பற்றியும்  அதே பெயரில்    அவர்  ஒரு கதை எழுதியிருக்கின்றார்.
சுனாமி   அசுரப்பேரலை   அந்தப்பிள்ளையின்  உயிரைவிழுங்கியபோது   அப்பிள்ளையின் கரத்தில்  சுஜாதாவின்   புத்தகம்தான்  இருந்திருக்கிறது.
 சடலம்   கண்டெடுக்கப்பட்டபொழுது    கையிலே   அந்தப்புத்தகத்தை  கண்ட பெற்றோர்கள்   இந்த  இழப்பை  -    நெகிழ்ச்சியான  தகவலை  சுஜாதாவுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்
 இந்தத்துயரமான    செய்தியினால்    கலங்கிப்போன   சுஜாதா  மிகுந்த   மன அழுத்தத்துடன்   ஒரு   சிறுகதையே   எழுதி   அவரது   பிரிய  வாசகிக்கு  சமர்ப்;பித்து   தமது கண்ணீர்  அஞ்சலியை  அக்கதைமூலம்   செலுத்திக்கொண்டார்.

 இவ்வாறு  ஈழத்தமிழ்   மக்களிடம்   ஆழ்ந்த அனுதாபம் கொண்டு விளங்கிய சுஜாதாவுக்கும்   ஒருகட்டத்தில்   சத்திய  சோதனை  வந்துதானிருக்கிறது.
 2005 ஆம் ஆண்டு  வெளிவந்த ‘வாய்மையின்வெற்றி| -  ராஜிவ்காந்தி  படுகொலை- புலனாய்வு -  என்ற டி.ஆர்.கார்த்திகேயன்-  ராதா வினோத்ராஜூ   ஆகிய இருவரும்  இணைந்து எழுதிய (தமிழில்- எஸ். சுந்திரமௌலி)   பரபரப்பான   நூலுக்கு  சுஜாதா வாழ்த்துரை    வழங்கியுள்ளார்.
 கார்த்திகேயன்   சுஜாதாவின்   நீண்டநாள்   நண்பர்.  எழுபதுகளில்   பெங்களுரில் குற்றப்பிரிவு   உதவி  ஆணையாளராக   கார்த்திகேயன்  பணியாற்றிய   காலத்திலேயே இருவருக்குமிடையே   நட்பு  மலர்ந்திருக்கிறது.

கார்த்திகேயனின்   திறமைகளை  அருகிலிருந்தே   கவனித்து  பல  துப்பறியும்   நாவல்களையும்    சிறுகதைகளையும்   நேரடி   அனுபவம்  சார்ந்து   எழுதியிருப்பதாக  சுஜாதா   இந்த   வாழ்த்துரையில்   சொல்கின்றார்.
 சிறீபெரும்புதூரைக்கடந்து   செல்லும்போதெல்லாம்   தமக்கு  ஏற்படும்  அதிர்ச்சிகலந்த   நெருடலையும்   குறிப்பிடுகிறார்.  ராஜீவ்   காந்தி   கொல்லப்பட்ட   அந்த  இராத்திரியை   இரத்த  இராத்திரி   என்று   உவமைப்படுத்தியிருக்கிறார்.
தமிழகம்  சென்றால்  வேலூரிலிருக்கும்  எனது  தம்பியின்  குடும்பத்தினைப்பார்ப்பதற்காக  சென்னை  -  பெங்களுர்   சாலையில்   பயணிப்பேன்.   குறிப்பிட்ட   சம்பவம்  நடந்த  ஸ்ரீபெரும்புதூரைக்கடக்கும்பொழுதெல்லாம்   சுஜாதா   சொல்லும்   இரத்தராத்திரி   என்ற  சொல்  நினைவுக்கு  வரும்.
  மசாலாத்தனமான   தமிழ்சினிமா   உலகம்  சுஜாதாவை   உள்ளிழுத்திருந்தபோதிலும்   தேர்ந்த   இலக்கியவாதியாகவும்   தன்னை  தக்கவைத்துக்கொண்டவர்.

  ஈழத்து   இலக்கியப்படைப்புகளிலும்  அவருக்கு ஆர்வமும் அக்கறையும் இருந்தது. ஒருசமயம்  மல்லிகை  ஆண்டுமலர்  ஒன்றையும்  அவர்விரிவாக  விமர்சித்து   தமிழக ஜனரஞ்சக  ஏட்டில் எழுதியிருக்கிறார்.
  திரைக்கதை எழுதுவது எப்படி?   என்ற   சுஜதாவின் நூல்  பலபதிப்புகளைக் கண்டது. பல இளம்தலைமுறையினரை   திரைப்பட -  குறும்படத்துறைக்குள்  ஆர்வமுடன் நுழையத்தூண்டியது.
  நூறு   வருஷத்துக்குப்பிறகு   தமிழே   இருக்குமான்னு   எனக்குச்சந்தேகமாக  இருக்கு  என்று 1991 இல் சொல்லியிருக்கும் சுஜாதாää  2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டைம்ஸ் ஒஃப் இந்தியா  நிறுவனத்தின்    வேண்டுகோளுக்கிணங்க  டைம்ஸ் இன்று என்னும்   தரமான    கதைகள்   கவிதைகள்  கட்டுரைகள்   கொண்ட  சிறப்பான  இலக்கியமலரை   தொகுத்து   வெளியிட்டுள்ளார்.

   இந்தப்புத்தகத்தைக்கண்டு   இம்மாதிரியான    இலக்கிய  முயற்சிகளை  வேறு அகில    இந்திய    நிறுவனங்கள்  மேற்கொள்ளும்   என்று   நம்புகிறேன்.  தமிழுக்கு 2008   ஒரு   நல்ல   காலம். -  என்று தமது கருத்தைப்பதிவுசெய்துள்ளார்.  
1991   இல் அவர்   இவ்வாறு  சொன்னது   போன்று  நூறு   வருடங்களுக்குப்பின்னர்  தமிழ் இருக்குமா  என்பதற்கு எம்மால்  இப்பொழுது   சரியாக பதில் சொல்லமுடியாமல் போனாலும்     2008 தமிழுக்கு   ஒரு   நல்ல   காலம்   என்று மறைவதற்கு 60 நாட்களுக்கு   முன்னர்   சொல்லிவிட்டுத்தான்   போயிருக்கிறார்   ஏதோ  நம்பிக்கையோடு.
  சுஜாதாவின்   பிறப்பிடம்  சென்னையாக  இருந்தாலும்  அவர்  வளர்ந்தது  படித்தது  ஸ்ரீரங்கத்தில்.   அவருக்கு   பிறந்த   இடம்  சென்னையைவிட   ஸ்ரீரங்கத்தின்மீதே  அதிகம்   பற்றுதலும்  ஒட்டுதலும்  இருந்திருக்கிறது.
ஸ்ரீரங்கத்தின்   மாந்தர்களையும்   அங்கே  தமது  வாழ்வு  அனுபவங்களையும்  ஸ்ரீரங்கத்து    தேவதைகள்  என்ற   தொகுப்பில்  சிறுகதைகளாகத்தந்திருக்கிறார்.    அவரது   இளமைக்காலத்தை  நாம்  அக்கதைகளில்  தரிசிக்கலாம்.  அந்தத் தொகுப்பை  படித்த   அருட்டுணர்வினால்தான்   நானும்   எமது  ஊர்  மாந்தர்களை  சித்திரிக்கும்  எனது  இளம்பராயத்து  அனுபவங்களை   நினைவுக்கோலங்கள்  என்ற  கதைத்தொகுப்பாக   வெளியிட்டேன்.   அதில்  அகலப்பாதையில்   என்ற  கதை  தவிர்ந்த  ஏனைய  கதைகள்  எந்தவொரு  இதழிலும்  வெளியாகவில்லை.  நினைவுக்கோலங்கள்   தொகுப்பிற்காகவே   அக்கதைகள்   எழுதப்பட்டன.
ரங்கராஜன்   என்ற   மனிதர்    தமது  மனைவி  சுஜாதாவின்   பெயரிலேயே  படைப்பாளியாக   உலகத்திற்கு   அறிமுகமானார்  -  பிரபலமானார்.    ஆனால்  மனைவி  சுஜாதா   கணவரின்   மறைவுக்குப்பின்னர்  வழங்கிய  நேர்காணலில்  நான்  ஒரு  துருவம்  அவர்  வேறு   ஓரு   துருவம்  என்ற  தலைப்பில்  சொன்ன  கருத்துக்கள்   அதிர்ச்சியானவை.

படைப்பாளிகள்   பத்திரிகையாளர்கள்  மட்டுமல்ல  பொதுவாழ்வில்  ஈடுபடும்  ஒவ்வொருவரும்    தம்மைத்தாமே  சுயவிமர்சனம்  செய்துகொள்வதற்கு  திருமதி சுஜாதா  மனைவி  -  பெண்   என்ற   நிலையிலிருந்து   சொல்லியிருக்கும்   கருத்துக்கள் உதவும்  என  நம்பலாம்.
(பிற்குறிப்பு:  27-02-2008  இல்  சுஜாதா  சென்னை  அப்பல்லோ  மருத்துவமனையில்   மாரடைப்பு   காரணமாக   மறைந்ததையடுத்து   அவர்  பற்றிய   நினைவுகளை  கொழும்பிலிருந்து   வெளியாகும்   ஞானம்  இதழில்   எழுதினேன்.   அதிலிருந்தும்  சில குறிப்புகளை    இந்தப்பதிவிற்காக   சேர்த்துக்கொண்டேன்.) 

No comments: