உலகச் செய்திகள்

இங்கிலாந்தில் புயல்

ஒடிஷாவில் வெள்ளம்: 47 பேர் பலி

புலிகளுக்கு உதவிய கனேடியருக்கு சிறை

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்


========================================================================
இங்கிலாந்தில் புயல்

28/10/2013   ஐக்கிய இராச்சியத்தை தாக்கிய புயலால் அங்கு பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் சேதமேற்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி காற்றுடன் கூடிய மழையினால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.






மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியமையால் தென் இங்கிலாந்தின் கரையோரப் பகுதி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தென் இங்கிலாந்தின் கடற்கரையோரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவருவன் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதுமட்டுமன்றி ஹீத்ரோ விமானநிலையத்தில் சுமார் 130 விமானங்களின் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோர்ன் வோல், டோர்செட், ஹெம்ஷெயர், மற்றும் சசெக்ஸ் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ரயில் பயணங்களும் தடைப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளில் இருக்குமாறும் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படுவதால் மக்கள் அங்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ் அனர்த்தத்தினால் பல கோடி ரூபாய் நஷ்டமேற்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 









ஒடிஷாவில் வெள்ளம்: 47 பேர் பலி

25/10/2013    இந்தியாவின் ஒடிஷாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 1.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாய்லின் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷா மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்துள்ளது.
இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 2 நாட்கள் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மழை மற்றும் வெள்ளத்தால் கஜபதி, கந்தமால், குர்தா, பூரி, கட்டாக், ஜகத்சிங்பூர், பத்ரக், பலசூர், மயூர்பஞ்ச் மற்றும் நயாகர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாய்லின் புயலால் பாதிக்கப்பட்ட கஞ்சம் மாவட்டத்தின் 129 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி







புலிகளுக்கு உதவிய கனேடியருக்கு சிறை

30/10/2013  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவி கனேடிய பிரஜைக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது குற்றத்தை ஒப்புக்கொண்டவருக்கே இரண்டுவருட சிறை தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை விதித்துள்ளது. சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா எனப்படும் இவர் 2006 ஆம் ஆண்டில் பிரதீபன் நடராஜா என்பருடன் கனடாவில் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர் இவர் 2012 இல் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். கனடாவிலிருந்தபோது ஸ்ரீஸ்கந்தராசா விடுதலைப்புலிகளுக்கு விமானப்பாகங்கள், நீர் மூழ்கிக்கப்பல் மற்றும் யுத்தக்கப்பல் வடிவமைப்புக்கான மென்பொருட்கள், தொலைத்தொடர்புபாடல் கருவிகள் என்பவற்றை பெற்றுக்கொள்ள உதவினர். இவரோடு கைது செய்யப்பட்ட நடராஜா, விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வேற்று நாட்டு பயங்கரவாத இயக்கம் ஒன்றுக்கு பெற்றுக்கொடுக்க முயன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இவருக்கான தீர்ப்பு 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. நன்றி தேனீ





சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்


01/11/2013  சிரியாவின் கரையோர நகரான லடாகியா மீது இஸ்ரேல் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிகாரியொருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இத் தாக்குதலானது லடாகியாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரஸ்ய தயாரிப்பு ஏவுகணைகளை இலக்குவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹெஸ்புல்லா இயக்கத்தினரை இலக்கு வைத்தே மேற்படி ஏவுகணைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

லடாகியா நகரானது சிரிய ஜனாதிபதி பஷார் அல்- அசாத்தின் பலம் பொருந்திய நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இங்கு அசாத்தின் அலாவைட் சமூகத்தினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வருடத்தில் இதுவரை சிரியா மீது இஸ்ரேல் இதுவரை 3 வான் வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

எனினும் இத்தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலோ , சிரியாவோ எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.

நன்றி வீரகேசரி

No comments: