சதி - எஸ் ராமகிருஸ்னன்

அபர்ணா சென்னின் சதி  திரைப்படம், ஒரு ஊமைப்பெண்ணின் கதை, 1828 ம் ஆண்டு வங்காள கிராமம் ஒன்றில் கதை நடக்கிறது
படத்தின் துவக்கமே வயதான கணவன் இறந்து போனதற்காக ஒரு இளம்பெண்ணை உயிரோடு தீயில் வைத்து எரிக்கும் சதியில் துவங்குகிறது, வங்காளத்தில் சதிக்கொடுமை மிகவும் மோசமாக பரவியிருந்தது,
ராஜாராம் மோகன்ராயின் தொடர் போராட்டங்களே இதனை முடிவிற்குக் கொண்டுவந்தன, கதையின் மையம் கணவனுக்காக ஒரு பெண் தன் வாழ்வை அழித்துக் கொள்ள எப்படி நிர்பந்திக்கப்படுகிறாள் என்பதே.
உமா, கிராமத்து இளம் பெண், ஜாதகதோஷம் உள்ளவள், அவளை யாருக்குத் திருமணம் செய்து வைத்தாலும் கணவன் சில மாதங்களிலே இறந்து போய்விடுவான், விதவையாகவே அவள் வாழ நேரிடும் என்று ஜோசியர் சொல்கிறார்,
ஆச்சாரமான குடும்பம் ஒன்றில் வாழும் உமா, வீட்டுவேலைகள் செய்வது, மாடு மேய்ப்பது, அவளுக்கு விருப்பமான பெரிய மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டு எதையாவது பற்றி கனவு கண்டு கொண்டிருப்பது என நாட்களை ஒட்டிக் கொண்டிருக்கிறாள்,
ஜாதகத்தில் உள்ள தோஷத்தைக் கழிக்க வேண்டும் என்றால் அவளை ஒரு மரத்திற்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்கிறார் ஜோதிடர்,


இதனை அவளது மாமா ஏற்றுக் கொள்ள மறுக்கிறார், ஆனால் ஊர் கூடி இது காலம் காலமாக பின்பற்றப்படும் ஒரு மரபு, மரத்திற்கு இவளைத் திருமணம் செய்து வைத்துவிடுங்கள் என்று வற்புறத்துகிறார்கள்,
வேறுவழியில்லாமல் அவளை ஒரு மரத்திற்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள், மணமகன் போல மரம் அலங்கரிக்கபடுகிறது, மரத்திற்கு மணமாலை சூட்டுகிறாள், மரத்தைக் கட்டி அணைத்துக் கொண்டு உறங்குகிறாள், அவள் கணவனாக உருவாகிறது அம்மரம், காமமும் தாபமும் ஏக்கமுமாக அவள் மரத்தை கட்டிக் கொண்டு அழுகிறாள்,
ஒரு மழைநாளில் உள்ளுர் ஆசிரியர் நனைந்து விடக்கூடாதே என்று குடைபிடித்துக் கொண்டு அவருக்கு துணையாகப் போகிறாள் உமா, மழையில் நனைந்த அவளுக்கு மாற்று உடை தந்த ஆசிரியர், அவளது அழகில் மயங்கி அவளைப் பலவந்தமாக அடைந்து விடுகிறார், ஒருவகையில் அந்த உடலுறவு அவள் ஏங்கிகிடந்த ஒன்று, அவளும் சம்மதிக்கிறாள், ஆசிரியரின் மனைவி ஊருக்குத் திரும்பி வந்தபிறகு உமாவை காண்பது ஆசிரியருக்கு குற்றவுணர்ச்சியை அதிகரிக்கிறது,
உமா கர்ப்பம் அடைகிறாள், அவளது கர்ப்பத்திற்கு யார் காரணம் எனச் சொல்ல மறுக்கிறாள், குடும்பமே அவளைத் திட்டுகிறது, ஒதுக்கி வைக்கிறது. அவள் கர்ப்பத்தினைக் கலைப்பதற்காக மருத்துவச்சியை வரவழைக்கிறார்கள்,
படத்தின் அற்புதமான காட்சியது, அந்த மருத்துவச்சியின் உடல்மொழியும், அவள் சொல்லும் மருத்துவமுறையும், கர்ப்பத்தைக் கலைத்துவிட்டால் தனக்கு சன்மானம் தர வேண்டும் என சொல்லும் போது உதட்டில் துளிர்க்கும் புன்சிரிப்பும் அது இயல்பாக நடக்கும் ஒரு விஷயம் என்பதை அடையாளம் காட்டுகின்றன,
மாட்டுதொழுவத்தில் அடைக்கபட்ட உமாவிற்கு மருத்துவச்சி தந்த நாட்டுமருந்து தரப்படுகிறது, இதனால் உதிரப்போக்கு அடைந்து அவள் கர்ப்பம் கலைந்துவிடும் என வீட்டுப் பெண்கள் காத்திருக்கிறார்கள்,
அன்றிரவு இடி மின்னலுடன் பெருமழை பெய்கிறது, அதில் உமா தனக்கு இழைக்கபட்ட அநீதியைப் புரிந்து கொண்டவளைப் போல மரத்தைத் தேடி ஒடுகிறாள், மரத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாள், பெருமழையில் மரம் முறிந்துவிழுகிறது, ரத்தப்போக்குடன் மரத்தைக் கட்டிக் கொண்டு இறந்துகிடக்கிறாள் உமா,
மறுநாள் முறிந்த மரத்தையும் இறந்துகிடக்கும் உமாவையும் ஊர் மக்கள் வேடிக்கை பார்ப்பதுடன் படம் நிறைவுபெறுகிறது,
ஒரு நாட்டார்கதை போன்ற சாயலுடன் உள்ள இப்படம் அபர்ணா சென்னின் ஆரம்ப காலப்படங்களில் ஒன்று, அசோக் மேத்தாவின் தேர்ந்த ஒளிப்பதிவும், சித்தானந்த தாஸ் குப்தாவின் இசையும் ஷபனா ஆஸ்மியின் நடிப்பும் படத்திற்கு உறுதுணை செய்யும் பலம்,
ஊமைப்பெண்ணாக நடித்துள்ள ஷபனா ஆஸ்மி கண்களாலே பேசுகிறார், ஒரு சிறுமி போல அவள் மரமேறி விளையாடும் ஆரம்ப காட்சிக்கும், இடிமின்னலுடன்  மரத்தை கட்டிக் கொண்டு போராடும் கடைசி காட்சிக்கும் இடையில் ஷபனாவிடம் தான் எத்தனை அற்புதமான மாற்றங்கள், ஷபனாவின் தேர்ந்த நடிப்பிற்கு இது ஒரு உதாரணம்
சதியில் இறந்து போவது மகத்தான தியாகம் என்றே வங்காளப்பெண்கள் நம்பியிருக்கிறார்கள், உமாவின் அத்தை அதைப் படத்தில் பலமுறை சொல்லிக்காட்டுகிறாள், கிராமப்புற பெண்களின் உலகம் மிகவும் சிறியது, அவர்கள் கல்வி அறிவு இல்லாத காரணத்தால் பின்தங்கியிருக்கிறார்கள் என்று  படத்தில் வரும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்
விளையாட்டுதோழனாக நினைத்த மரம் தனது கணவன் என்று மாறியபிறகு அதனுடன் உள்ள உமாவின் உறவு மாறிப்போய்விடுகிறது, கேமிராக் கோணமே மாறுகிறது, இப்போது அந்த மரம் அச்சமூட்டுவது போலிருக்கிறது,
தனது தாயின் சேமிப்பாக பாதுகாத்து வைத்த நகையை மாமா அவளிடம் தரும் காட்சியில் அதை எடுத்துக் கொண்டு மரத்திடம் காட்டவே உமா ஒடுகிறாள், அவள் அந்த நகையை அணிந்து கொண்டு சந்தோஷம் அடையும் காட்சியில் மரமே சாட்சியாக இருக்கிறது
வங்காளத்தில் பெய்யும் மழை எதிர்பாராத விருந்தாளி போல, எப்போது துவங்கும் என்று தெரியாது, படத்தில் இடம்பெற்றுள்ள மழைக்காட்சி கவித்துவமாகப் படமாக்கபட்டுள்ளது, மழையோடு காற்றும் சேர்ந்து கொள்ள தனது வீட்டிற்கு வந்து சேரும் ஆசிரியர் தனது வீட்டுபூட்டினை திறப்பதற்கு தடுமாறுகிறார், அதுவே பின்பு நிகழப்போகும் சம்பவத்திற்கான குறியீடு போல இருக்கிறது, மழை அவளது ரகசியங்களின் சாட்சி போல இருக்கிறது,
இது என்றோ வங்காளத்தில் நடந்த சம்பவம் மட்டுமில்லை, இன்றும் தொடரும் கொடுமை, சமீபத்தில் கூட ஒரு பெண்ணை நாயிற்கு திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சியை புகைப்படத்தில் பார்த்தேன், இன்றும் கூட தோஷம் கழிக்க வேண்டும் என்று வாழை மரத்திற்குப் பெண்ணை திருமணம் செய்து தரும் பழக்கம் இருக்கவே செய்கிறது,
சத்யஜித்ரேயின் பாதிப்பு அபர்ணா சென்னிடம் மிக அதிகமாகக் காணப்படுகிறது, குறிப்பாக சிறுவர்களைக் காட்சிபடுத்தும் முறை, வீட்டு பெண்களின் உடல்மொழி, சீராக காட்சிகளை அடுக்கிச் செல்லும் முறை என ரேயின் இன்னொரு படம் போலவே சதி உருவாக்கபட்டிருக்கிறது,
என்எப்டிசி தயாரிப்பு என்பதால் படம் முழுவதும் ஒரு வீட்டிற்குள்ளும், அதனை ஒட்டிய மரம், வயல்வெளியிலும் படமாக்கபட்டிருக்கிறது,
வங்காளிகள் வாழ்வில் மீன் எவ்வளவு முக்கியமான உணவு என்பதை படம் பார்க்கும் போது நன்றாக உணரமுடிகிறது, வெளியே போய்விட்டு வீடு திரும்பும் ஆண்கள் கையில் எப்போதுமே ஒரு மீன் தொங்கிக் கொண்டிருக்கிறது,
நகரில் இருந்து கிராமத்திற்கு வரும் பெண் நகரத்து இனிப்புகளை அறிமுகம் செய்துவைக்கிறாள், அதை பெரிய விஷயமாக நினைத்து ருசித்து சாப்பிடுகிறார்கள், ராஜாராம் மோகன்ராயின் சதி எதிர்ப்பு குறித்த வாதப்பிரதிவாதங்கள் அன்றைய வங்காளத்தில் எப்படி நடைபெற்றன என்பது நன்றாகக் காட்சிபடுத்தபட்டிருக்கிறது,
இன்று அபர்ணா சென் இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர், அவரது ஆரம்ப காலப்படங்களில் அவருக்கான அழகியலை உருவாக்கிக் கொள்ள எவ்வளவு முனைந்திருக்கிறார் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி :sramakrishnan.com

No comments: