கதை சொல்லிகள் இருக்கிறார்களா - எஸ் ராமகிருஸ்னன்

.
சமீபத்தில் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன், ஒரு மாணவன் எழுந்து தமிழ்நாட்டில் கதைசொல்லி என யாராவது இருக்கிறார்களா எனக்கேட்டான்,
எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள் தனது பேச்சின் ஊடே கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன்,
ஆங்கிலத்தில் கதைகள் சொல்லும் கதை சொல்லிகள் பலர் கோடை முகாம்களை நடத்துவதை அறிவேன், ஆனால் தமிழில் கதை சொல்வதை முழுநேர வேலையாகக் கொண்ட ஒருவரை இதுவரை நான் கண்டதேயில்லை என்று சொன்னேன்,
என் பதிலைக் கேட்டு அந்தச் சிறுவன் அமர்ந்துவிட்டான், ஆனால்  ஏன் அப்படி ஒருவர் இங்கே உருவாகவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன்,
பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர், இசை ஆசிரியர், யோகா கற்றுதருபவர் போல ஏன் ஒரு கதை சொல்லி இதுவரை நியமிக்கபடவேயில்லை
கதை சொல்வதை ஒரு கலையாக எங்காவது கற்றுத்தருகிறார்களா, ஏன் அது போன்ற முயற்சியை எந்த ஒரு கல்விநிறுவனமும் இன்றுவரை முன்னெடுக்கவில்லை, ஆசிரியர் பயிற்சி நிறுவனமே இது போன்ற ஒரு பட்டயப்படிப்பை உருவாக்கலாம் தானே,


கதைகளின் தாய்நிலம் என்று கொண்டாடப்படும் இந்தியாவில் கதைகள் சொல்வதும், கதைகள் கேட்பதும் மறைந்து வருவது வேதனைக்குரிய ஒன்றில்லையா,
கதை என்பதை வெறும் கற்பனை என்று நினைத்திருக்கிறோம், அது தவறு, கதை என்பது நமது ஞாபகங்களின் சேமிப்புக்கூடம், மரபின் தொடர்ச்சி, கதைகள் நம் சமூகத்தின் மனசாட்சி, எல்லா கதைகளும் கேட்பவரை களிப்பூட்டுவதுடன் படிப்பினை ஒன்றையும் கற்றுதருகின்றன,
கதைகள் தான் எளியமனிதர்களின் கலைவடிவம், கதை சொல்வதற்காக மட்டுமே வாழ்கிறேன் என்று சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்குவெஸ்
இந்த உலகில் எவ்வளவு மனிதர்கள் வாழ்கிறார்களோ, அவ்வளவு கதைகள் இருக்கின்றன, கடற்கரை மணல்துகள்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகம் என்பார்கள், மனிதன் குகையில் வாழ்ந்த காலத்திலே கதை சொல்லத் துவங்கிவிட்டான்,
ஒரு நல்ல கதை, ஒருவேளை உணவை விட மேலானது என்பார்கள், உலகின் ஆதிக்கலைகளில் ஒன்றான கதை சொல்லுதல் நம் காலத்தில் அழியும் கலையாக மாறியிருக்கிறது,
எது தமிழின் முதல் கதை, எது இந்தியாவின் முதல்கதை, எவராலும் கண்டுபிடித்து சொல்லமுடியாது. அவ்வளவு நீண்ட பராம்பரியம் கதைகளுக்கு இருக்கிறது
சென்ற தலைமுறையினர் தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்டார்கள்,  கோடை விடுமுறை என்றாலே ஊருக்குப் போவது, நாள் முழுவதும் விளையாட்டு, இரவெல்லாம் கதை கேட்பதும் எனக் கழியும்,
இன்று கோடை விடுமுறையில் புதிதாக என்ன படிக்க வைக்கலாம் என்று பிள்ளைகளை ஏதாவது ஒரு கோடைகாலப் பயிற்சி முகாமில் சேர்த்து விட்டுவிடுகிறார்கள், இன்னொரு பக்கம் பெரும்பான்மை தாத்தா பாட்டிகள் பேச்சுத்துணைக்கு ஆள் இன்றி பரிதவிக்கிறார்கள்
பள்ளிக்கூடம் மாணவர்களின் அறிவாற்றலை மட்டும் தான் வளர்க்கிறது, கதைகளும் இலக்கியமும் தான் அவர்களின் ஆளுமையை உருவாக்குகிறது, ஆளுமை இல்லாத மனிதன் அரைமனிதனே,
ஈசாப் கதைகள், முல்லா கதைகள், தெனாலி ராமன் கதைகள், போன்றவை பலநூறு வருஷப்பழமையான கதைகள், ஈசாப் போல, முல்லா போல ஏன் நம் காலத்தில் ஒரு கதை சொல்லி உருவாகவேயில்லை, எழுத்துமரபை மட்டுமே பிரதானமாக கவனம் கொண்டு, கதை சொல்லும் மரபை நாம் கைவிட்டுவிட்டோமோ,
குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும் போது அம்மா கதைகளையும் சேர்த்து ஊட்டுவார், குழந்தை இன்னொரு வாய் அதிகம் சாப்பிட வேண்டும் என்றால் அரக்கனின் உயிர் அடுத்த கடல் தாண்டிக் கிளியாகப் பறந்து போய்விடும், இன்று சாப்பாடு ஊட்டும் போது டிவியை போட்டுவிடுகிறார்கள், காரணம் பெரும்பான்மைப் பெற்றோர்களுக்கு கதை தெரியாது. அவர்கள் கதைகள் கேட்பதும் இல்லை, சொல்வதுமில்லை,
நம் காலத்தின் மிகப்பெரிய துயரம் நமது பிள்ளைகளை முழுமையாக டிவியிடம் ஒப்படைத்துவிட்டோம் என்பதே, நமக்குத் தெரிந்த ஒரே கதை சொல்லி டெலிவிஷன் தான்,
ஒரு குழந்தை சராசரியாக நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணிநேரம் டிவி பார்க்கிறது, அல்லது வீடியோ கேம் விளையாடுகிறது, அதன் தனிமையைப் போக்கிக் கொள்ள வீட்டில் உறுதுணையில்லை,
எல்லாக் குழந்தைகளும் கற்பனை செய்யவும், கதை கேட்கவும் , கதை சொல்லவும் ஆசைப்படுகின்றன, ஆனால் அதற்கான வழிகள் பள்ளியிலும் கிடையாது, வீட்டிலும் கிடையாது,
ஆகவே டிவியில் வரும் கதாபாத்திரங்களுடன் பேசத்துவங்கிவிடுகிறார்கள், கார்டூன்களின் கதைஉலகில் தானும் சுற்றி அலைவதாகக் கற்பனை செய்கிறார்கள்
டிவியில் வெளியாகும் பெரும்பான்மை கார்டூன் படங்கள் வெளிநாட்டில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டவை, அந்தத் தமிழை ஒருவாரம் கேட்டால் தமிழ் சுத்தமாக மறந்து போய்விடும்,
மிதமிஞ்சிய வன்முறை, வசைச் சொற்கள், தந்திரங்கள், குரூர செய்கைகள் என நீளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகளின் மனதைச் சிதைக்கின்றன, இந்த ஆளுமைச் சிதைவில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற கதை சொல்வதே சிறந்த வழி, அதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் முன்வர வேண்டும்.
கதை சொல்வது எளிதானதில்லை, அதற்கு ஞாபக சக்தி முதன்மையானது, கதை கேட்கும், சொல்லும் குழந்தைகள் நிறைய ஞாபகசக்தி கொண்டவர்களாக இருப்பார்கள், கற்பனை திறன் கொண்டவர்களால் மட்டுமே எதையும் புதிதாக செய்ய முடியும், கதை சொல்வதன் காரணமாக படிப்பு கெட்டு போய்விடும் என்பது அபத்தம்,
கதை சொல்வதில் முக்கிய இடம் பரிகாசத்திற்கே இருக்கிறது. வேடிக்கையாக கதை சொல்லத் தெரிந்தால் மட்டுமே சிறுவர்கள் ரசித்து கேட்பார்கள். கதை சொல்பவர் அடிக்கடி தன்னை கேலி செய்து கொள்ள வேண்டும். அது தான் சிறுவர்களுக்கு ரொம்ப பிடித்த விஷயம்.
உலகெங்கும் தொழில்முறை கதை சொல்லிகள் இருக்கிறார்கள். அவர்கள் கதை சொல்வதை பொதுநிகழ்வாகவே நடத்துகிறார்கள். இன்றும் வங்காளத்தில் பாவுல் எனும் கதை சொல்லிகள் ஊர் ஊராகப்போய் இசையோடு கதை சொல்லி வருகிறார்கள்,
ஜப்பானின் புகழ்பெற்ற கதை சொல்லும் கலையான ரகூகோ நிகழ்ச்சி ஒன்றினை ஒரு முறை டெல்லியில் பார்த்தேன். ரகூகோ என்றால் உதிரும் வார்த்தைகள் என்று பொருள்.
மேடையில் ஒரேயொரு கதை சொல்லி உட்கார்ந்திருக்கிறார். அவரது கையில் ஒரு காகித விசிறி உள்ளது. அவரது பின்னால் அழகிய திரைச்சீலை காணப்படுகிறது. உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளாமலே அவர் வேடிக்கையான கதை ஒன்றினை சொல்லி சபையை வாய் ஒயவிடாமல் சிரிக்க வைக்கிறார்.
தேர்ந்த நடிகரை போன்ற முகபாவத்துடன், குரலை ஏற்றி இறக்கி மூன்று பேர் பேசுவது போன்று மாறிமாறி உரையாடி, கதை சொல்லிக் கொண்டே செல்கிறார், கதை கேட்க வந்த அத்தனை பேரும் இரண்டு மணிநேரம் சிரித்து மகிழ்ந்து போனார்கள், தமிழில் ஏன் இப்படி ஒரு கதை சொல்லும் நிகழ்வு சாத்தியமாகவில்லை.
அமெரிக்காவில் கதை சொல்லிகளுக்கான பயிலரங்குகள், முகாம்கள், நடைபெறுகின்றன, கதை சொல்லிகளுக்காக பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன, தன்னை ஒரு தொழில்முறை கதை சொல்லியாக அறிவித்துக் கொண்ட பலர் பள்ளி, கல்லூரிகளில் சென்று சித்திர சுருள்களையோ, பொம்மைகளையோ, அல்லது சிறுசிறு உருவ அட்டைகளை கொண்டோ கதை சொல்கிறார்கள், சிறார்களுக்காக கதை சொல்லும் முகாம்களை நடத்துகிறார்கள். பொது இடங்களில் மக்கள் ரசிக்க கதை சொல்கிறார்கள், கதை சொல்வதை ஒரு கலையாக கையாளுகிறார்கள்.
இந்தியாவின் பெருநகரங்களில் இது போன்ற ஒன்றிரண்டு நிறுவனங்கள் செயல்பட்ட போதும் கதை சொல்வது இன்னமும் ஒரு கலையாக வளர்ச்சிபெறவில்லை
பாடப்புத்தகங்களை மாற்றி எழுதுவதால் மட்டும் கல்வியில் மாற்றம் வந்துவிடாது. கற்றுதரும் முறைகளில் மாற்றம் தேவை. அதற்கு எளிய வழி. கதை சொல்வதை முதன்படுத்திய கற்கும் முறை உருவாக வேண்டும் என்பதே.

நன்றி:sramakrishnan.com

No comments: