கடன் - அ முத்துலிங்கம்

.


என் வாழ்க்கையில் நான் பட்ட கடன்களை வரிசைப் படுத்தும்போது பல கடன்களை நான் தீர்க்கவில்லை என்பது இப்போது தெரிகிறது. சிறுவயதில் பக்கத்து மேசை நண்பனிடம் பென்சில் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்கவில்லை. கோயிலுக்கு நேர்ந்து கடவுளுக்கு இது செய்வதாக, அது செய்வதாகச் சொல்லி செய்யாமல் விட்டது. புத்தகங்கள் கடன் வாங்கிப் படித்தால் தவறாமல் திருப்பிவிடுவது என் வழக்கம். ஒரு முறை என் புத்தகத் தட்டை ஆராய்ந்தபோது யாரோ ஒருவரிடம் கடன் வாங்கிய புத்தகம் ஒன்று இன்னும் திருப்பிக் கொடுக்காமலே இருப்பது தெரிந்தது. ஆனால் யாரிடம் புத்தகத்தை இரவல் வாங்கினேன் என்பது மறந்துவிட்டது. 
உரிய நேரத்தில் கடனை அடைக்காவிட்டால் அதை திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பே சமயத்தில் நழுவி விடக்கூடும். சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுகதை படித்தேன். காதலித்து கல்யாணம் செய்துகொண்ட தம்பதிகள் மத்தியில் சிறு விரிசல் விழுகிறது. ஆற்றிலே தண்ணீர் வற்றுவதுபோல அவளுக்கு கணவனிடத்தில் காரணமில்லாமல் அன்பு குறைந்துகொண்டே வருகிறது. திடீரென்று ஒருநாள் அவன் நெஞ்சு வலியில் அவதிப்படுகிறான். அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும்போது அதுவரை பாதி படித்த நாவலையும்  தன்னுடன் எடுத்துப் போகிறான். அவசர சிகிச்சையளித்தும் அவன் இறந்துவிடுகிறான். ஒருநாள், பல வருடங்கள் கழித்து புத்தகத்தட்டில் அவன் படித்த நாவலை மனைவி தற்செயலாக காண்கிறாள். அவன் கடைசியாகப் படித்த பக்கத்தை மடித்துவிட்டிருக்கிறான். தான் அவனிடம் உதாசீனமாக நடந்துகொண்டதை நினைத்து வருந்துகிறாள்.  அவளுக்கு அவன் மீது கனிவு மேலிட்டு அவனுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. அவன்  முடிக்காமல் விட்ட பக்கங்களை அவனுக்காக படித்து முடிக்கிறாள். 

நான் யாழ்ப்பாணத்தில் 175 வருட பாரம்பரியம் கொண்ட அமெரிக்க மிஷன் பள்ளிக்கூடத்தில் படித்தேன். இங்கேதான் சி..வை. தாமோதரம்பிள்ளையும் ஒருகாலத்தில் படித்தவர். இது பெயர்பெற்ற பாடசாலை என்றபடியால் மலேயா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து படித்தார்கள். கொழும்பில் இருந்துகூட மாணவர்கள் படிக்க வருவதுண்டு. இது ஒரு கலவன் பாடசாலையானபடியால் ஆண்களும் பெண்களும் வித்தியாசமில்லாமல் பழகினார்கள். வழக்கமாக பள்ளிக்கூடத்து மாணவர்கள் ஒரு வகுப்பில் உட்கார்ந்து படிப்பார்கள். ஆசிரியர்கள் மாறிமாறி வருவார்கள். இங்கே அப்படியில்லை. ஒரு வகுப்பு முடிந்ததும் நாங்கள் நடந்து இன்னொரு வகுப்புக்கு செல்வோம். அங்கே ஆசிரியர் இருப்பார். அது முடிந்ததும் இன்னொரு வகுப்புக்கு செல்வோம். அங்கு இன்னொரு ஆசிரியர் வருவார்.  இப்படி எடுக்கும் பாடத்துக்கு தக்கமாதிரி வகுப்பர்களும், ஆசிரியர்களும், வகுப்பறைகளும் மாறிக்கொண்டே இருக்கும்.
முதலாம் தவணை முடிந்து இரண்டாவது தவணை தொடங்கியபோது ஒருமுறை கொழும்பில் இருந்து  புதிய மாணவி ஒருத்தி வந்து சேர்ந்தாள். அவளுடைய பிரதானமான பாடம் உயிரியல் என்பதால் அவள் எங்களுடன் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களுக்கு மட்டுமே வந்து சேர்ந்துகொண்டாள். இந்தப் பெண்ணின் பெயர் அங்கயற்கண்ணி. சில நாட்களிலேயே அவளுடன் படித்த மாணவிகள் அவளை 'அங்கி' என்று அழைக்கத் துவங்கிவிட்டனர். இந்தப் பெண் சேர்ந்த அன்றே முழுப்பள்ளிக்கூடமும் மாறிவிட்டதுபோல ஒரு தோற்றம் உண்டானது. நெற்றியிலே கறுப்பு பொட்டு வைத்திருப்பாள். அது அநேகமாக கண்ணுக்கு தெரியாது ஏனென்றால் அந்தப் பொட்டைப் போலவே அந்தப் பெண்ணும் கறுப்பாக இருந்தாள். கொடிபோன்ற உயரம். வசீகரமான முகம். பெரிய கண்கள். ஒரு பல்லின் நுனி கொஞ்சம் தள்ளிக்கொண்டு இருந்ததால் எப்பவும் சிரிப்பதுபோன்ற தோற்றம். 
அவள் வகுப்பிலே சேர்ந்த அடுத்த நாளே சிலர் பொத்துபொத்தென்று இயற்பியல், கணிதம் போன்ற  பாடங்களை போட்டுவிட்டு உயிரியல் வகுப்பில் சேர்ந்துகொண்டார்கள். இந்தப் பெண் நடக்கும்போது மற்றப் பெண்களைப்போல கால் பெருவிரலைப் பார்த்து நடக்கவில்லை. தடிபோல நிமிர்ந்துகொண்டு நேராகப் பார்த்து நடந்தாள். தண்ணீர் பூச்சிபோல சட்சட்டென்று திரும்பினாள். புத்தகங்களை அள்ளி மடித்த வலது கையில் அடுக்கி மார்புகளை மறைத்தபடி வகுப்புக்குள் நுழைவதில்லை. வலது தோள்மூட்டில் ஒரு துணிப்பையை மாட்டி அதற்குள் புத்தகங்களை நிரப்பி கைகளை கவர்ச்சியாக ஆட்டிக்கொண்டு வந்தாள். யாராவது மாணவன் பார்த்து சிரித்தால் அவளும் திருப்பி சிரித்தாள். பேசினாலும் பேசுவதற்கு தயாராக இருந்தாள். ஆனால் மாணவர்கள்தான் கிலிபிடித்து தூர ஓடினார்கள். 
வகுப்பில் ஆசிரியர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் முதலில் கையை தூக்துவது அந்தப் பெண்தான். படிப்பில் மட்டும்தான் முதலிடம் என்றில்லை. நூறு யார் ஓட்டப்பந்தயத்திலும் அவள்தான் முதலாவதாக வந்தாள். நீளப்பாய்ச்சலிலும் அவள்தான் முதல். கூடைப் பந்து குழுவில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவள் காப்டனாகத் தெரிவுசெய்யப்பட்டாள். பந்து கையிலே கிடைத்ததும் நுனிச் சப்பாத்தில் நின்று சுழன்று லாவகமாக கூடைக்குள் பந்தை எறிந்து வெற்றியீட்டிவிடுவாள். 
ராஜகுமாரன் என்று ஒரு மாணவன் இன்னொரு வகுப்பில் படித்தான். அவனுக்கு தான் ராஜவம்சம் என்றுதான் நினைப்பு. கொழுத்த பணக்காரன். ஒவ்வொருநாளும் காரில் வருபவன் ஒரு நாள் பார்த்தால் வெள்ளைக் குதிரை ஒன்றில் ஆரோகணித்து வந்து இறங்கினான். பள்ளிக்கூடத்தில் குதிரை கட்ட இடம் இல்லை என்பதால் பின்னாலே தலைதெறிக்க ஓடிவந்த குதிரைக்காரன் குதிரையை பிடித்து திரும்பவும் வீட்டுக்கு கொண்டுபோனான். இதுவெல்லாம் அவன் செய்தது அங்கி என்ற அங்கயற்கண்ணிக்காகத்தான். ஒரு நண்பனிடம் எப்படி அவளுடன் பேசலாம் என்று கேட்டிருக்கிறான். அதற்கு அவன் 'கொய்யாப் பழத்தில் முதல் கடிதான் கஷ்டம். அதற்குப் பிறகு இலகுவாக உண்டுவிடலாம்' என்று கூறியிருக்கிறான். அவன் திடுக்கிட்டு 'என்னைக் கடிக்கச் சொல்கிறாயா?' என்று கேட்க அவன் 'இல்லை இல்லை, பேசச்சொல்கிறேன்' என்றான். அடுத்த நாள் நடு மைதானத்தில் நின்று ராஜகுமாரன் அவளுடன் தனியப் பேசினான். கதை முடிந்தது என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் மறுநாள் அங்கி அதே மைதானத்தில் புல்லு வெட்டும் அந்தோனியுடன் பத்து நிமிட நேரம் சிரித்தபடி பேசினாள். அவள் மட்டில் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அவளுக்கு இருவரும் ஒன்றுதான். பள்ளிக்கூடம் மறுபடியும் சீராக மூச்சு விடத் தொடங்கியது. 
ராஜகுமாரனைத் தொடர்ந்து இன்னும் சில மாணவர்கள் அவளுடன் துணிச்சலாகப் பேசினார்கள். அவள் பதில் சொல்லும்போது பிரார்த்தனை செய்வதுபோல தலையை குனிந்து கேட்டார்கள். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.  இந்தப் பெண்ணுடன் நான் இரண்டு வருடங்கள் ஒரே வகுப்பில் ஒரே ஆசிரியரிடம் படித்தேன். ஒரே புத்தகத்தை படித்தேன். ஒரே காற்றை சுவாசித்தேன். மற்ற மாணவர்களைப்போல எனக்கும் இந்தப் பெண்ணிடம் இரண்டு வார்த்தை பேசவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது உண்மைதான். ஆனால் என் இரண்டு முழங்கால்களும் அடிக்கும் சத்தம் அவளுக்கு கேட்டுவிடுமோ என்ற பயத்தில் அது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
பல்கலைக்கழகத்துக்கு நாங்கள் எல்லோரும் ஒன்றாகவே எடுபட்டோம். அங்கயற்கண்ணி மருத்துவக் குழுவிலும், நாங்கள் எங்கள் பாடங்களுக்கு தக்கமாதிரி வெவ்வேறு குழுக்களிலும் இருந்தோம். அதன் பிறகு அவளைப் பார்ப்பது அரிதாகி விட்டது. ஒரு கட்டத்தில் மறந்தும் போனேன்.
இருபது வருடங்களுக்கு பிறகு நான் கனடாவுக்கு ஒரு வேலையாக மொன்றியல் நகரத்துக்கு போனபோது உச்சமான பனிக்காலம். ஒரு நண்பர் பகலில் பிரதானமான காட்சிகளை காட்டிவிட்டு இரவு வேறு ஒன்றுக்கு கூட்டிச் சென்றார். பனிப்புயல் அடித்த இரவு என்றபடியால் குளிர் என் சருமத்தை தாண்டி, தசையை தாண்டி எலும்பை தொட்டது. மொன்றியலின் பழைய பகுதியிலும் எலும்பை தொடுகிறமாதிரி ஒரு கதை இருந்தது. 250 வருடங்களுக்கு முன்னர் மேரி ஜோசெப் என்ற கறுப்பு அடிமை இருந்தாள். காதலனிடம் போவதற்காக வீட்டுக்கு தீ வைத்துவிட்டு அவள் தப்பி ஓடியபோது அவளை வெள்ளை எசமானர்கள் பிடித்துவிட்டார்கள். சிறையில் அவளை சித்திரவதை செய்து தூக்கிலிட்டு எரித்து சாம்பலை தெரு வீதிகளில் எறிந்தார்கள். அவளுடைய ஆவி இப்பவும் அதே வீதிகளில் உலாவுவதாக நண்பன் சொன்னான். நான் பார்த்தபோது பனி தூவிய இடங்களிலெல்லாம் அந்த அடிமையின் ஆவியும் மிதந்ததுபோலவே எனக்கு தோன்றியது.
அடுத்த நாள் காலை  மொன்றியலில் விமானம் ஏறியபோது எனக்கு மெல்லிய காய்ச்சல் காய்ந்தது.  மொன்றியலின் குளிரோ அடிமையின் ஆவியோ என்னைப் பிடித்துவிட்டது. ஆப்பிரிக்காவின் லைபீரியா தேசத்தில் விமானம் இறங்கியபோது எனக்கு காய்ச்சல் 103 - 104 டிகிரியை தாண்டியிருக்கும். அங்கே ஏற்கனவே பதிவு செய்த ஒரு ஹொட்டல் வரவேற்பறையில் என் லைபீரிய நண்பருடைய தொலைபேசி எண்ணை கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. அறைக்கு வந்து படுத்ததும் தூங்கிப்போனேன். நடுச்சாமம் போல குளிர் என்னைத் தூக்கி தூக்கி அடித்தது. அங்கே இருந்த அத்தனை போர்வைகளை போர்த்தியும் போதவில்லை. அப்போது பார்த்தால் ஏசி முழுவேகத்தில் வேலைசெய்து கொண்டிருந்தது. கட்டிலில் இருந்து இறங்கி மெல்ல மெல்லத் தவழ்ந்து நகர்ந்து ஏசி சுவிட்சை நிறுத்தியது கடைசியாக  நினைவிருக்கிறது. நான் மயக்கம்போட்டு விழுந்தேன். 
காலையில் நான் கண் விழித்தபோது முற்றிலும் பரிச்சயமில்லாத ஒரு வீட்டு அறையில் படுத்திருந்தேன். சுவரில் மாட்டியிருந்த படங்கள் யாருடையவை என்பது தெரியவில்லை. கணவர், மனைவி குழந்தை படம் ஒன்றும் தொங்கியது. புத்தகத் தட்டில் நான் முன்பின் பார்த்திராத பெரிய பெரிய மருத்துவ புத்தகங்கள். பிரம்பில் செய்த கூடைபோன்ற கதிரை ஒன்று கூரையிலிருந்து கயிற்றில் தொங்கியது. ஆங்கிலப் படங்களில் வருவதுபோல அந்தக் கூடையில் உட்கார்ந்து ஊஞ்சல்போல ஆடுவார்கள் போலும். மூலையில் இருந்த நிலைக்கண்ணாடியில் சற்று தாடி வளர்த்த மெல்லிய முகம் ஒன்றைக் கண்டு நான் திடுக்கிட்டேன். அது நான்தான். இன்னும்  நான் எங்கேயிருக்கிறேன் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பியிருந்த நிலையில் ஒரு பெண் வந்தார். சிரித்த முகம். மருந்து தந்தார், குடித்தேன். குடிப்பதற்கு கஞ்சி தந்தார், ஒரு கதை பேசாமல் அதையும் குடித்தேன். மறுபடியும் தூங்கிவிட்டேன்.
முதல் நாள் இரவு என்னுடைய லைபீரிய நண்பர் என் நிலைமையை பார்த்துவிட்டு என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லவே நினைத்தார். ஆனால் அந்த ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக வேலை பார்த்தவர் ஓர் இலங்கைப் பெண், பெயர் அங்கயற்கண்ணி. அவர் தான் என்னை தன் வீட்டிற்கு கொண்டுவரச் சொல்லியிருக்கிறார். வீட்டிலே தன்னால் இன்னும் கவனமாகப் பார்க்கமுடியும் என்று அவர் நினைத்ததுதான் காரணம். 
அந்தப் பெண்ணைப் பார்த்தபோது அமெரிக்க கவி எமிலி டிக்கின்ஸன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. 'ஒவ்வொரு புது நாளும் உன் வயதைக் கூட்டுவதில்லை; மாறாக உன்னைப் புதுப்பிக்கிறது.' இருபது வருடமாகியும் அங்கயற்கண்ணி வயது முதிர்ந்து தோற்றமளிக்கவில்லை. புதிப்பிக்கப்பட்டிருந்தார். ஒரு பல் சற்று வெளியே தள்ள சிரித்தபடி என்னை கவனித்தார். காலை உணவை அவரே சமைத்து எடுத்துக் கொண்டுவந்து தந்தார். மருந்தையும் கையிலே கொடுத்து  நான் அதை சாப்பிடும் வரைக்கும் பொறுமையோடு காத்திருந்தார். மத்தியான வேளை ஆஸ்பத்திரியிலிருந்து இதற்காகவே வந்து என்னைக் கவனித்தார். மாலையிலும் அப்படியே.  முதல் நாள் அவர் ஆஸ்பத்திரிக்கு போகவில்லை என்பதை பின்னால் அறிந்தேன். வேலைக்கு போவதற்காக வெளிக்கிட்டு பின்னர் என் நிலைமையை யோசித்து மனதை மாற்றி நின்றுவிட்டார் என்று சொன்னார்கள். சங்கப்பாடலில் 'செலவழுங்குதல்' என்று சொல்வார்கள். அப்படி இருந்தது அவர் செய்கை.
அந்த வீட்டில் என்னைக் கவனித்தது அங்கயற்கண்ணி மட்டுமே. வேலைக்காரர்கள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் என் அறைக்குள் வரக்கூடாது என்ற கட்டளை இருந்திருக்கலாம். பத்திரிகைகளில் 'பல் திருத்துவதற்கு முன்' 'பல் திருத்தத்திற்கு பின்' என்று இரண்டு படங்கள் வரும். அதில் 'பல் திருத்துவதற்கு முன்' என்ற படத்தில் வருவதுபோல முகத் தோற்றம் கொண்ட ஒரு வேலைக்காரனுக்கு நான் அங்கே தங்கியது புதிராக இருக்கவேண்டும். எப்பொழுது பார்த்தாலும் ஓடிய நாய் இளைப்பதுபோல இளைத்துக்கொண்டே இருந்தான். காலையிலும் மாலையிலும் சாப்பாட்டு மேசையில் பிளேட்டுகளை முறையாக வைப்பது அவன் பொறுப்பு. இரண்டு கைகளிலும் கோப்பைகளை அடுக்கி கிளாசை வாயிலே கவ்விப் பிடித்து கொண்டுவந்து வைப்பான். விளம்பர இடைவேளைபோல சரியாக பதினைந்து நிமிடத்துக்கு ஒருதடவை அறை வாசலில் வந்து தலையை மட்டும் நீட்டி என்னை எட்டிப் பார்ப்பான். நான் இன்னும் இருக்கிறேனா என்று கண்காணித்தான் என்று நினைக்கிறேன். 
பேசுவதற்கு தெம்பு வந்ததும் ஒருநாள் மாலை அங்கயற்கண்ணி வழக்கம்போல மருந்து தந்தபோது 'நான் உங்களுடன் படித்திருக்கிறேன், ஞாபகமிருக்கிறதா?' என்றேன். அவர் 'அப்படியா?' என்றார். 'கூடைப்பந்து விளையாடும்போது சப்பாத்து நுனியில் நின்று சுழன்று பந்தை கையில் எடுத்தால் நிச்சயம் அதை கூடைக்குள் போட்டுவிடுவீர்கள்' என்றேன். 'அப்படியா?' 'தோளிலே துணிப்பையை மாட்டி புத்தகம் காவிவரும் பழக்கத்தை பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்ததே நீங்கள்தான்' என்றேன். அவர் அதற்கும் 'அப்படியா?' என்றார். முன்பல் கொஞ்சம் தெரிய அவர் தேன் வடிவதுபோல மெள்ள மெள்ள இதழ் விரித்தது  அழகாக இருந்தது. 
இரண்டு வருடம் இவருடன் ஒரே வகுப்பில் படித்த என்னை இவருக்கு அடையாளம் தெரியவில்லையே என்று நினைத்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அந்த வகுப்பில் அப்பொழுதெல்லாம் என்னுடைய இருப்பு ஓர் இலையானுக்கும் கீழானதுதான் என்று கண்டபோது சிறிது வருத்தமாகவும் இருந்தது. என்னை இவ்வளவு கரிசனையாகப் பார்த்தாரே என்பது நினைவுக்கு வந்து யோசித்தபோது நடுத்தெருவில் ஒரு வழிப்போக்கர் விழுந்து கிடந்திருந்தால் அவரையும் இப்படியே கவனித்திருப்பார் என்று தோன்றியது. அவர் இயல்பு அப்படி. 
ஒருநாள் காலை நண்பரும் அங்கயற்கண்ணியும்  என்னை விமான நிலையத்துக்கு கூட்டிச் சென்றார்கள். லைபீரியாவில் சமிக்ஞை விளக்குகள் வீதியில் ஒரு அழகுக்காகத்தான். நண்பர் ஒரு சிவப்பு விளக்கிலும் நிற்காமல் காரை ஓட்டினார். விமான நிலையத்தில் அங்கயற்கண்ணியிடம் அவருடைய தொலைபேசி நம்பரைக் கேட்டேன். அவர் பரிசு விழுந்த பரிசு சீட்டு இலக்கத்தை சொல்வதுபோல நிதானமாக ஒவ்வொரு எண்ணாகச் சொல்ல நான் குறித்துக்கொண்டேன். அன்று நான் எப்படியோ விமானத்தை பிடித்து வீடுபோய்ச் சேர்ந்தேன். வீட்டிலே மேலும் இரண்டுநாள் ஓய்வெடுத்து என்னைத் தேற்றிக்கொண்டேன். எங்கேயோ இருக்கும் ஆப்பிரிக்க கண்டத்தில் இந்தப் பெண் மருத்துவராகப் பணியாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் என்று யோசித்தபோது துணுக்கென்றது.    
முதலில் ஒரு நன்றி மடல் வாங்கி அனுப்பலாம் என்று நினைத்தேன். அனுப்பவில்லை. தொலைபேசியில் அவரை அழைத்து நன்றி கூறுவோம் என்று நினைத்தேன், ஆனால் கூறவில்லை. நீண்ட கடிதம் ஒன்று  எழுதுவோம் என்று நினைத்தேன். எழுதவில்லை. புதுவருடம் வருகிறது அப்பொழுது ஒரு வாழ்த்து அட்டை வாங்கி அதில் 'நன்றி' என்று ஒரு வார்த்தையை கூட்டி எழுதி அனுப்புவோம் என்று திட்டமிட்டேன். அதுவும் நடக்கவில்லை. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி பல வருடங்கள் ஓடிவிட்டன.
சமீபத்தில் அங்கயற்கண்ணி என்ற அங்கி இறந்து போய்விட்டதாக செய்தி கிடைத்தது. கொடிய ஒரு வியாதியால் பீடிக்கப்பட்டு பலநாள்  வேதனை அனுபவித்து  இறந்தார் என்று அறிந்தேன். 'அப்படியா, அப்படியா' என்று நான் சொன்னதற்கெல்லாம் அவர் பதிலாக சொன்னது நினைவுக்கு வந்தது. என் மனம் நோகும் என்றோ என்னவோ நேரடியாக என்னைத் தெரியவில்லை என்று அவர் கூறவே இல்லை. இனிமேல் நான் அவருக்கு என் நன்றியை சொல்லமுடியாது. என்றென்றைக்குமாக. 
நன்றி :http://amuttu.net/

1 comment:

Anonymous said...

Well written.. I enjoyed it. Thank you.
Meganathan