தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில் -கானா பிரபா

.


இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஈறாகவும், ஐக்கிய இராச்சியம் போன்ற புலம்பெயர் நாடுகளிலும், சென்னையிலே லயோலா கல்லூரியிலும் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு நினைவுச் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.  கடந்த நூற்றாண்டிலிருந்து அதிகப்படியான புலப்பெயர்வைச் சந்தித்த ஈழத்தமிழினத்தின் பெரும்பான்மை மக்கள் வாழும் கனடா நாட்டிலும் இன்று ஆகஸ்ட் 31 ஆம் திகதி தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டுப்பெருவிழா பெரும் எடுப்பில் நிகழவிருக்கின்றது. இந்த நிகழ்வில் சிறப்பு இசைவட்டு ஒன்றும், எழுநூறு பக்கங்கள் அடங்கிய தனிநாயகம் அடிகளார் சிறப்பு மலரும் வெளியிடப்படவிருக்கின்றது.   இந்த நிகழ்வு  குறித்த மேலதிக விபரங்களை இங்கே http://www.thaninayakaadikal.org/காணலாம்.

தனிநாயகம் அடிகளாரது வாழ்க்கை என்பது அவர் சார்ந்த சமயப்பணியாகக் குறுகிய வட்டத்தோடு நின்றுவிடாது, தான் சார்ந்த தமிழ்மொழி சார்ந்த சமூகப் பணி கடந்து விரவியிருந்ததை அவரது வாழ்நாளில் எமக்களித்துவிட்டுப் போன சான்றுகள் மூலம் ஆதாரம் பகிர்கின்றன. தமிழாராய்ச்சி மாநாட்டை உலகளாவிய ரீதியிலே நடத்துவதற்கு முன்னோடியாக அமைந்து அதைச் செயற்படுத்தியவர். மேலைத்தேய, கீழைத் தேய நாடுகளுக்கெல்லாம் சென்று, தேடித் தேடி கடந்த நூற்றாண்டுகளில்  பதிந்த தமிழரது சுவடுகளை வெளிக்கொணர்ந்தார். ஆனால் முப்பது வருஷங்களுக்கு முன்பு வரை வாழ்ந்த அந்தப் பெருந்தகை யார் என்று தெரியாத நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, நம் தாயகத்திலும் இருப்பதை எண்ணும் போது வேதனையும் வெட்கமும் பிறக்கின்றது. நமது கண்ணுக்கு முன்னால் தமிழ்ச்சமுதாயத்துக்காக உழைத்தவரை மறந்த நிலையில் இருக்கின்றோம்.


இந்த நிலையில், நான் சார்ந்த அவுஸ்திரேலித் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வழியாக தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது வாழ்வும் பணியும் சார்ந்த ஒலிப்பெட்டக நிகழ்ச்சி ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டபோது பெரிதும் உறுதுணையாக இருந்தவர் கனடாவில் வாழும் முருகேசு பாக்கியநாதன் அவர்கள். கனடாவில் நிகழ்த்தும் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு விழாக்குழு உறுப்பினரும் கூட. அவரோடு இந்தப் பெட்டக நிகழ்ச்சியில் கரம் கொடுத்த, ஈழத்தில் வாழும் பேராசிரியர் சி.மெளனகுரு, பேராசிரியர் பொன்.பாலசுந்தரம், யாழ்ப்பாணத்தில் சமயப்பணி ஆற்றும் அருட்தந்தை அ.ஜெயசேகரம் அடிகளார்(தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு விழா யாழ்ப்பாண நிகழ்வின் செயலாளர்), மன்னார் அமுதன் வழியாக மன்னாரில் சமயப்பணி ஆற்றிவரும் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார், கனடாவில் வாழும் பேராசிரியர்.ஏ.ஜே சந்திரகாந்தன், தனிநாயகம் அடிகளாரது உறவினரும் அவரின் இறுதிக்காலத்தில் அருகே இருந்து கவனித்துக் கொண்டவருமான அன்ரன் பிலிப் அவர்கள்,  கடல் பிரித்தாலும் தமிழ் பிரிக்காது என்ற சிந்தையோடு வாழும் அன்புக்குரிய நண்பன் கண்ணபிரான் ரவிசங்கர் (இவர் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு நினைவில் சிறப்புக் கட்டுரை ஒன்றையும் தகுந்த வேளையில் பகிர்ந்தவர், அந்தத் தொடுப்பு இங்கே)  என்று இந்த வானொலி வழி "தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்" ஒலிப்பெட்டக நிகழ்ச்சிக்குக் கரம் கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.  கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களைக் கடக்கும் வகையில் என்ற ஒலிப்பெட்டகத்தைத் தயாரித்துள்ளேன். தனிநாயகம் அடிகளாரது உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் அமையப்பெற்ற காலத்தில் இருந்து அவரோடு பணியாற்றிய தமிழகத்தில் இருக்கும் அருட்தந்தை அமுதன் அடிகளார் அவர்களின் பகிர்வு தகுந்த நேரத்தில் செய்யமுடியாமல் போய்விட்டது. அவர் இப்போது கனடாவில் நடக்கும் நிகழ்வுக்குச் சென்றிருக்கின்றார். கண்டிப்பாக அவரின் பகிர்வையும் எடுத்துப் பகிரவேண்டும் என்று தருணம் வாய்க்கக் காத்திருக்கின்றேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தாயகத்தில் இருந்து சமீபத்தில் தான் வந்திருந்த ஒரு இளைஞனிடம் தனிநாயக அடிகள் குறித்துப் பேசியபோது "அண்ணை ஊரில ஆயிரம் பேர் உப்பிடி இருந்திருக்கினம் எனக்கு இவரைச் சரியாத் தெரியேல்லை " என்று என் நெற்றில் பொட்டில் அறைந்த மாதிரிச் சொன்ன அவன் போல இன்னும் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.

இன்றைக்கு உலகம் பூராகவும் வியாபித்துள்ள தமிழ் மொழியை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே தன் முனைப்பாகக் கொண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற ஒரு அமைப்பை நிறுவி, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த தமிழ்ப் பெரியாரைக் கூட ஞாபகத்தில் வைத்துக் கொள்ள மறந்த சமுதாயத்தின் பிரதிநிதியாக என்னால் முடிந்த ஒரு காணிக்கையாக இந்த ஒலிப்பகிர்வைப் பகிரவுள்ளேன். எதிர்காலத்தில் இணையத்தில் அகழ்வாய்வு செய்யும் அடுத்த தலைமுறைக்கும் இந்த ஒலித்துண்டங்கள் கையில் கிட்டினால் மகிழ்வேன்.


தொடர்ந்து ஒலிப்பெட்டக நிகழ்ச்சியின் பகிர்வைக் கேளுங்கள்

பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் வழங்கும் ஒலிப்பகிர்வு******************************************************************************************************************பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் வழங்கும் ஒலிப்பகிர்வு ****************************************************************************************************************** பேராசிரியர்.ஏ.ஜே சந்திரகாந்தன் அவர்களின் கருத்துரை****************************************************************************************************************** திரு முருகேசு.பாக்கியநாதன் அவர்கள் வழங்கும் கருத்துரை******************************************************************************************************************அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் (மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்)******************************************************************************************************************அருட்தந்தை அ.ஜெயசேகரம் அடிகளார்(தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு விழா யாழ்ப்பாண நிகழ்வின் செயலாளர்)வழங்கும் ஒலிப்பகிர்வு****************************************************************************************************************** திரு அன்ரன்.பிலிப் அவர்களது கருத்துப்பகிர்வு ****************************************************************************************************************** நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் வழங்கும் ஒலிப்பகிர்வு******************************************************************************************************************கலாநிதி எஸ்.சிவநாயகமூர்த்தி அவர்களின் "நெடுந்தீவு பெற்றெடுத்த பேரறிஞர் தவத்திரு தனிநாயகம் அடிகளார்" என்ற ஆக்கத்தை நான் குரல்வடிவம் கொடுத்துப் பகிர்ந்தது ****************************************************************************************************************** தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது வாழ்வும் பணியும் என்று மேலே நான் கொடுத்த பகிர்வுகளைக் கேட்டிருப்பீர்கள். மிகமுக்கியமாக அடிகளாரது பணிகளில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.


உலக அரங்கிலே அடிகளார் வழங்கியிருந்த ஆய்வுப் பகிர்வுகளில்
1. ப்ரெயென்சாவின் தமிழ் - போர்த்துக்கேய அகராதி
2. இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்குமிடையில் காணும் பொதுப்பண்பாட்டுக் கூறுகள்
3. அகவன் மக்களும் கவிதைகளும்
4. இந்தியவியல் ஆராய்ச்சியில் திராவிடப்பண்பாட்டின் இடம்
5. கடாரம் எது?
6. சங்க காலத்தில் தமிழருக்கும் உரோமையோருக்குமிடையில் நிகழ்ந்த வணிகம்
7. குவாடலூப், மார்த்தினீக் நாடுகளில் 1853 - 1883 வரை தமிழர் குடியேற்றம் 
8. தற்காலச் தமிழ்ச் சமுதாயம்  - ஒரு மதிப்பீடு
9 தமிழிலக்கியத்தில் கத்தோலிக்கர்களின் பங்களிப்பு
10. பழந்தமிழ் இலக்கியத்தில் மாதிரி ஆசிரியர்
11. தமிழ் மனிதநேயக் கோட்பாடுகள் & விரிவாகும் ஆளுமையின் குறிக்கோள்
11. திருவள்ளுவர் 
ஆகியவை குறிப்பிடத்தக்கவை

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை நிறுவி முதல் உலகத் தமிழ் மாநாட்டை 1966 ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரிலே எடுக்க முடிந்தது. இதில் இந்தியா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர்,பர்மா, டென்மார்க், பிரான்ஸு, மேற்கு ஜேர்மனி, ஹாலந்து, ஹாங்காங், ஜப்பான், மெளரீஷியஸ், பிலிப்பைன்ஸ், போர்த்துக்கல், தென்கொரியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, வியட்நாம் ஆகிய 21 நாடுகளின் பிரதிநிகள் மொத்தம் 132 பேர் கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்வில் 146 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கப்பட்டிருந்தன.

தனிநாயகம் அடிகளாரது இலக்கியப் பணியில் "தமிழ்த்தூது" என்ற நூலை முதன்முதலில் வெளியிட்டதோடு, பழந்தமிழர் இலக்கியங்கள், பண்பாடு குறித்தும், தாம் வாழ்ந்த காலத்தில் உலகில் பரந்து வாழும் தமிழர்கள் குறித்த ஆராய்ச்சிகளையும் பல்வேறு இதழ்களிலும் எழுதிக் கொடுத்தார். அவை தமிழ், ஆங்கிலம் என்று எழுதப்பட்டிருக்கின்றன. 1952 - 1966 காலப்பகுதியில் Tamil Culture இதழின் முதன்மை ஆசிரியராகவும் 1969 - 1970 ஆண்டுகளில் Journal of Tamil Studies இதழின் முதன்மை ஆசிரியராகவும் இருந்த காலப்பகுதியிலும் இவர் தேடித் தேடி எழுத்தில் கொணர்ந்த செல்வங்கள் காலம் தாண்டியும் பெறுமதி மிக்கவை.

தம்முடைய முதல் உலகப்பயணத்தின் பின்னர் அடிகளார், ஆசியாவிலுள்ள தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்குச் சென்று இந்தியர், குறிப்பாகத் தமிழர் கொண்டிருந்த தொடர்புகளை ஆராய்ந்தார்.

1954 ஆம் ஆண்டு தாய்லாந்து சென்றிருந்த போது அங்கே தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவாசகத்தின் வரிகளும், 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை" என்ற திருவெம்பாவைப் பாடல்களைப் பாடியிருந்ததைக் கண்ணுற்று வியப்புற்றார்.  

வியட்நாமில் போநகர் என்ற குன்றின் மேல் உள்ள கட்டடங்களில் மாமல்லபுரத்துச் சிற்பக் கலைத்தொடர்பினையும், மிஷான் என்னுமிடத்தில் பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்களின் பான்மையையும், வியட்னாமின் கிழக்குப் பகுதியில் சாம்பர் கட்டிய தனிக்கோயில்களில் மாமல்லபுரக் கோபுர மரபையும் கண்டு வியந்தார்.

இந்தோனேசியாவிலுள்ள சுமத்திரா, ஜாவா, களிமந்தான், ஆகிய தீவுகளுக்கு கி.பி முதல் மற்றும்  இரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழர் சிறுகுடியிருப்புகளை நிறுவிருந்ததை மணிமேகலை காப்பியம் வழியாகவும், இந்தோனேசியாவில் காணப்படும் வடமொழி, தமிழ்க்கல்வெட்டுக்களில் இருந்தும் அறியமுடிவதாகப் பதிவு செய்கிறார்.

ஜாவாவின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் தீபெக் பீடபூமியில் பீமா கோயில், அர்ச்சுனன் கோயில் என அழைக்கப்படும் கோயில்களையும், அகத்தியரும் சிவபெருமானும் ஏடுகளுடன் குருக்கள் வடிவில் காட்சியளிக்கும் சிலைகளைகளையும் அடிகளார் கண்ணுற்றார்.  
இந்தோனேசியாவின் ஏனைய தீவுகள் பெரும்பாலும் இஸ்லாத்தைத் தழுவியிருக்க, பாலித்தீவு மக்கள் இந்து சமயத்தைத் தழுவியிருப்பதைக் கண்டு வியந்தார் அடிகளார்.

தமிழ், ஆங்கிலப்புலமையோடு பிரெஞ்சு, இத்தாலிய, ஸ்பானிஷ், போர்த்துக்கேய, ரஷ்ய, இலத்தீன் போன்ற மொழிகளில் புலமையும், எபிரேயம், கிரேக்கம், வடமொழி, மலாய், சிங்களம் ஆகிய மொழிகளை அறிந்தும் வைத்த இவரது பன்மொழிப்புலமை அடிகளாரது மொழியாராய்ச்சிக்குப் பெருமளவில் கைகொடுத்தது.  இலங்கையில் தனிச்சிங்களம் மட்டும் சட்டம் 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது "இலங்கையில் மொழி உரிமைகள்" என்ற கட்டுரையை எழுதி வெளியிட்டது மட்டுமன்றி, காலிமுகத்திடலில் நடந்த அறப்போரிலும் பங்கெடுத்துக் கொண்டார். "மொழிப்பிரச்சனை என்பது அரசியல் எல்லைகளைவிட விரிந்து பரந்தது என்ற நோக்கை முன்வைத்தோடு களப்பணிலும் ஈடுபட்டு சிறுபான்மையினர் உரிமைக்காகக் குரல் கொடுத்தார்.

திருக்குறளை மலாய்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இஸ்மாயில் ஹூசைன்  (Prof Ismail Hussein) மலாய் மொழியிலும், பேராசிரியர் ச்சீங் ஹ்ஸி  (Prof Ch'eeng Hsi) சீன மொழியிலும் மொழியெர்க்க உதவினார்.


பழந்தமிழ் இலக்கியங்களைத் தமிழகம் எங்கும் தேடித்திரிந்து கண்டெடுத்துத் திருத்தி பதிப்புகளுக்கு உதவியவர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள். தனிநாயகம் அடிகளார் பதினாறாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் தமிழகத்தில் சமையப்பணி ஆற்றி வந்த மேனாட்டுக் கிறீஸ்தவ அறிஞர்கள் சிலர் இயற்றிய தமிழ் இலக்கணம், அகராதி, உரை நடை நூல்கள் போன்றவற்றை தேடிக் கண்டுபிடித்தார்.
ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்கள், போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் தேசிய நூலகம், பெலம் நகரிலுள்ள இனவியல் அருங்காட்சியகம் (Musseu Etnologico) , கடல்கடந்த நாடுகளின் வரலாற்றுத் தொல்பொருட் காட்சியகம் (Arquivo Historico do Ultramar) , பாரீஸ் தேசிய நூலகம், சொர்போன் பல்கலைக்கழக நூலம, உரோம் நகரிலுள்ள மறைபரப்புப் பணி பேராய நூலகம் போன்ற பல நூலகங்களிலே இவ்வாறான அறிவுக் களஞ்சியங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார். 

  
தமிழ் மொழி இலக்கணக்கலை (Arte da Grammatica da Lingua Malabar)

முதல்  ஐரோப்பியத் தமிழறிஞர் என்று போற்றப்பட்ட என்ரீக்கோ என்றீக்கஸ் அடிகளார் தாம் சார்ந்த யேசு சபைத் தலைவராகிய புனித இஞ்ஞாசியாருக்கு 6-11.1550 இல் புன்னக்காயல் என்ற இடத்திலிருந்து எழுதிய கடிதத்தில் தாம் 
அ) தமிழ்மொழி இலக்கணக்கலை
ஆ) தமிழ் அகராதி 
ஆகிய நூல்களை எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தார். இவை அச்சேறாத நூல்கள், இவற்றுள்  "தமிழ் மொழி இலக்கணக் கலை" என்ற நூலை தனிநாயகம் அடிகளார் லிஸ்பன் தேசிய நூலகத்தில் கண்டு வெளிக்கொணர்ந்தார். 160 பக்கத்தில் போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்ட நூல் இது.

கார்த்தில்யா (Cartila)

இதுதான் முதன்முதலாக அச்சேறிய தமிழ் நூல். ஆனால் இது தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அச்சிடப்படாமல், தமிழ் எழுத்துக்களை போர்த்துக்கேய மொழியில் மொழிபெயர்த்து எழுதப்பட்டது.  "ஒரு கிறீஸ்தவன் தன் மீட்புக்காக அறிய வேண்டிய அனைத்தையும் வழங்குவதாகக்" கூறுகின்றது இந்த நூல். 1554 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த நூல் குறித்த விபரங்களைத் திரட்டி வெளியிட்டதோடு இதன் ஒளிப்படப்பிரதியைப் பெற முயன்று தோற்றார். பின்னர் பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 

 தமிழ் போர்த்துக்கேய அகராதி 

அந்தாம் தெ ப்ரேயென்சா (Antam De Proenca 1625 - 1666) என்ற யேசுசபைத் துறவி ஆக்கியளித்த தமிழ் போர்த்துக்கேய அகராதியின் கையெழுத்துப் படியை பாரீஸ் தேசிய நூலகம் வாயிலாகக் கண்டெடுத்தார்.


தம்பிரான் வணக்கம்

என்ரீக்கோ என்ரீக்கஸ் பாதிரியாரும் புனித இராயப்பரின் மனுவேல் அடிகளாரும் இணைந்து மொழிபெயர்த்த இந்த நூலின் ஒரேயொரு பிரதிதான் இருக்கின்றது, இந்தியாவில் அச்சேறிய முதல் நூலாக இப்போது கிடைப்பது இதுதான். 1578 இல் கொல்லத்தில் உண்டாக்கிய அச்செழுத்துக்களைப் பயன்படுத்தியிருக்கின்றது.
இந்த நூல் குறித்த விபரங்களை தனது Tamil Culture இதழில் எழுதி உலகுக்கு அறியப்படுத்தினார்.

தவிர கிரிசித்தானி வணக்கம் (1579) , அடியார் வரலாறு (1586) உள்ளிட்ட பல நூல்களைத் தேடிப் பெற்று அவை குறித்த விபரங்களைக் கட்டுரைகளாகப் பகிர்ந்தார்.


 
வெளிநாட்டுக்குத் தமிழர் சென்று குடியேறுவது எப்போது தொடங்கியது என்று உறுதியாகச் சொல்லமுடியாவிட்டாலும் அரசு ஒப்பந்தங்களோடு தமிழர் வேலையாட்களாக இடம்பெயர்ந்த ஆண்டுகளை இவ்வாறு பட்டியலிடுகின்றார்.
பர்மா - 1826
இலங்கை - 1827
மெளரீஷியஸ் - 1836
ரீயூனியோன் - 1836
மலாயா - 1838
ட்ரினிடாட் - 1845
மர்ட்டினீக் - 1853
தென் ஆபிரிக்கா - 1860
ஃபிஜி - 1903

 இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா, வியட்நாம், ஃபிஜி, டஹிட்டி, தென் ஆபிரிக்கா, ரொடீஷியா, மெரிஷீயஸ், ரி யூனியோன், குவாடலூப், மார்த்தினீக், கயோன், சூரிநாம், கயானா, ட்ரினிடாட் ஆகிய பலம் நாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த ஆய்வில் 
அ) இனவழியால் தமிழர்
ஆ) தாய்மொழியால் தமிழர்
இ) பண்பாட்டால் தமிழர்
ஈ) தலைமுறை வழியால் தமிழர் 
என்று முக்கிய பிரிவாகப் பிரித்து இவர் வழங்கியிருந்த "தற்காலத் தமிழ்ச்சமுதாயங்கள் - ஒரு மதிப்பீடு"
மிக முக்கியமானதொரு ஆய்வாகவும் கொள்ளப்படுகின்றது. இதை பாரிசில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் 17-7.1970 அன்று பகிர்ந்து கொண்டார்.
 
 உசாவ உதவிய நூல்கள்

தனிநாயகம் அடிகளார் - அமுதன் அடிகள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
Collected papers of Thani nayagam Adigal - International Institute of Tamil Studies
தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும் - டாக்டர் வே.அந்தனிஜான் அழகரசன்

 http://www.madathuvaasal.com/2013/08/blog-post.html

நன்றி
http://www.thaninayakaadikal.org/

No comments: