இலங்கைச் செய்திகள்


யாழில் காணாமல் போன உறவுகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ். சுன்னாகம், திருநெல்வேலி பகுதியில் ஐ. தே. க. பிரசார நடவடிக்கை

காணாமல்போனோர் விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் : நவநீதம்பிள்ளை

தமிழ் மக்கள் சிங்கள மக்கள் அனைவரையும் பகையாகப் பார்க்குமாறு பயிற்றப்பட்டுள்ளார்கள்.

போர்க் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை: நவி எச்சரிக்கை

---------------------------------------------------------------------------------------------------------


யாழில் காணாமல் போன உறவுகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
27/08/2013

யுத்த காலத்தின் போது காணாமல் போன தமது உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு கோரி காணாமல் போன உறவுகளால் இன்று காலை, யாழ்ப்பாணம் நூலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

யாழிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இன்று காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை நூலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில் நூலகத்துக்கு முன்பாக கூடிய காணாமல் போன தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் உறவுகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட நடத்தப்பட்டது.

இதன்போது அப்பகுதியில் நூற்று கணக்கான பொலிஸார மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணீர் மல்க வீதிகளில் புரண்டு கதறி அழுது தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
    நன்றி வீரகேசரி

யாழ். சுன்னாகம், திருநெல்வேலி பகுதியில் ஐ. தே. க. பிரசார நடவடிக்கை

27/08/2013  வட மாகாண சபை தேர்தலை முன்னிட்டு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் மக்கள் சந்திப்புகளையும் முன்னெடுத்தது.
இப் பிரசார நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டி.எம். சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, ஐ.தே.க. வின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் துவாரகேஷ்வரன் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.நன்றி வீரகேசரிகாணாமல்போனோர் விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் : நவநீதம்பிள்ளை

(எம்.நியூட்டன்)
27/08/2013   யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் போனோர் விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன். என்மீது நம்பிக்கை வையுங்கள் என்று ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
வடபகுதியைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனோரைக் கண்டறியும் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே நவநீதம்பிள்ளை இந்த உறுதிமொழியினை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று முற்பகல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகள் காரியாலயத்தில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனோரை தேடியறியும் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட 15 பேர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்த பிரதிநிதிகள் ஏழு மகஜர்களை நவநீதம்பிள்ளையிடம் கையளித்துள்ளனர்.   நன்றி வீரகேசரிதமிழ் மக்கள் சிங்கள மக்கள் அனைவரையும் பகையாகப் பார்க்குமாறு பயிற்றப்பட்டுள்ளார்கள்.

Navaneethampillai-127/08/2013  நல்ல காலம் வருகுது! நல்ல காலம் வருகுது! நவநீதம் பிள்ளை வருகிறார்! சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளி’ என்று உடுக்கடித்துப் பாடாத குறையாக நவநீதம் பிள்ளையின் வருகையைத் தமிழ் மக்களின் விடிவுகள் தொடர்புபடுத்திப் பலவும் பேசவும் எழுதவும்படுகின்றன. பகற்கனவுகளையே ஆகாரமாக்கி எங்கள் அரசியல் உயிர்பிழைக்கிறது. நவநீதம் பிள்ளையின் வருகை, போர்க்குற்ற விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களையும் பற்றிய ஒரு நேரடி விசாரணை என்ற அளவிற்கூட, அவர் இங்கு தங்கியிருக்கக் கூடிய சில நாட்களுள் எதைச் சாதிக்க இயலும் என்ற கேள்வி எழுகிறது.

நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி என்றும் கூற இயலாது. எனினும் ஐ.நா.மனிதஉரிமைக் கழகத்திற்கு இலங்கையைப் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்றவும் அதன் மூலம் சில நெருக்குவாரங்களை ஏற்படுத்தவும் இயலும். ஆனால், சென்ற முறையும் அதற்கு முந்திய முறையும் எத்தகைய சமரசங்களின் மூலம் ஒரு தீர்மானத்தை வரைய முடிந்தது என்று நமக்கு நினைவிருக்க வேண்டும்.

நவநீதம் பிள்ளையை இலங்கைக்கு வரவிடமாட்டோம் என்று சவால்விட்டவர்கள், ஒருங்கிப் போயுள்ளமையும் அவருடன் உரையாடப் பாதுகாப்புச் செயலாளர் விருப்பந் தெரிவித்துள்ளமையும் நிச்சயமாக மேற்குலக அழுத்தங்களின் தாக்கங்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால், ஒரு புறம் பேரினவாதத்திற்குத் தீனி போட்டுக் கொண்டு மறுபுறம் கற்ற பாடங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆயத்தப்படுத்துவதாக நாடகமாட நம் ஆட்சியாளர்கட்கு நன்கு தெரியும். எனவே, நவநீதம் பிள்ளையின் வருகை ஒரு சிறு மாற்றத்தின் அறிகுறியும் விளைவும் என்பதற்கப்பால், அதுவே புதிதாக எந்த மாற்றத்தையும் கொண்டு வருமென எதிர்பார்க்க நியாயமில்லை.

“சர்வதேச சமூகமோ’ ஐ.நா.சபையோ நமது தேசிய இனப்பிரச்சினை பற்றிய அக்கறையுடையதல்ல. போர்க்குற்றங்களும் மனிதஉரிமை மீறல்களும் பற்றிய விசாரணைக்கான அழுத்தங்களின் நோக்கம் எவரையும் தண்டிப்பதும் அல்ல என்பது என்னுடைய மதிப்பீடு. அண்மைய வரலாறு கூறுவது என்னவென்று யோசித்தால், சர்வதேச சமூகம் எவரையாவது தண்டிக்க நினைத்தால் தண்டிக்கப்படவுள்ளவர் குற்றம் எதையும் செய்திருக்கத் தேவையில்லை. தண்டித்த பிறகு கூடக் குற்றங்களைக் கண்டுபிடித்துப் பட்டியலிடலாம். அல்லது ஈராக்கிற் செய்தது போல, பொய்க் குற்றம் சுமத்தித் தண்டனையையும் வழங்கிவிட்டுப் பின்னர் குற்றத்தைப் பற்றிப் பேசாமலே விடவும் இயலும்.

எனவே, இதுவரை நாம் நம்பிய எல்லா ரட்சகர்களையும் போல நவநீதம் பிள்ளையையும் நம்பி நாம் ஏமாறுவதற்கே நமது தலைவர்களும் தமிழ் ஊடக  நிறுவனங்களும் வகை செய்கின்றன. நவநீதம் பிள்ளைக்குத் தமிழரை ஏய்க்கிற நோக்கம் இல்லை. அவர் பிறப்பாற் தமிழர் என்பதால் தமிழருக்காக எதையும் செய்யப் போவதும் இல்லை. அவர் தம் நிறுவனம் தனக்கு இட்ட பணியைச் செய்கிறார். அதன் பலன்கள் அவருடைய கட்டுப்பாட்டினுள் இல்லை.

மாகாண சபைத் தேர்தல் பற்றிய சலசலப்பு இப்போது வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் எதிர்காலத்தையே முற்றாக மாற்றியமைக்கும் என்று சிலர் சொல்லுகிற அளவுக்குப் பேரலையாகியுள்ளது. எந்த மாகாணத்திலேனும் அரசாங்கக் கட்சியை முறியடிக்க முடியுமாயின், அதற்கு ஒரு அரசியற் பெறுமதியுள்ளது. எனினும், வடமாகாணத்தைவிட மற்ற மாகாணங்களில் அதற்கான வாய்ப்புக் குறைவு.

எனவே, அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் அரசாங்க நோக்கங்களை நிறைவேற்றவும் போட்டியிடுகிறவர்களை மக்கள் நிராகரிப்பது ஒரு நல்ல காரியமாகலாம், முக்கியமாக வட மாகாணத்தில் மக்கள் எவ்வாறு வாக்களிக்கலாம் என்று சில பேரினவாதிகள் ஆணையிட முற்படுகிறபோது மக்கள் அச்சவாலை ஏற்பது நல்லதுதான். ஆனால், போட்டியிடுகிற எந்த அணியிடமும் தமிழ் மக்களை விடுவிப்பதற்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிவானும் த.தே.கூ.பிரதான வேட்பாளருமான விக்னேஸ்வரன் தமிழர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்திப், பின் ஆயுதப் போராட்டம் நடத்தி, இனிச் சனநாயகப் போராட்டம் நடத்தப் போவதாகப் பேசியுள்ளதாக வாசித்தேன். அவர் சொன்னது சரியாகப் பதிவாகியிருந்தால், அது அரசியல் அனுபவமற்ற ஒருவரின் கூற்றெனவே எனக்குத் தெரிகிறது. சத்தியாக்கிரகப் போராட்டம் முற்றிலும் சனநாயக மானது என்பது என் கருத்து.

காந்தியின் சில உண்ணாவிரதங்கள் சனநாயக விரோதமானவை என்பது வேறு விடயம். தமிழரசுக்கட்சி 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடத்த முன்னர், தமிழ் மக்கள் என்ன அரசியலை நடத்தினர்? அதற்கு முன்பு, சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும், பொன்னம்பலம் ராமநாதன் முதல் செல்வநாயகம் வரை என்ன செய்தார்கள்! அப்படியானால் மீண்டுமொருமுறை தேர்தல் சனநாயக அரசியலை நம்பித் தமிழர்கள் ஏமாறப் போகிறார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாமா?

விக்னேஸ்வரனைத் தமிழினத்தின் இறுதி ரட்சகர் என்று சொல்லாத குறையாகச் சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். அவர் தன்னை அவ்வாறு கருதமாட்டார் என்பது என்னுடைய நம்பிக்கை. அதிகம் பெறுமதியற்ற ஒரு மாகாணசபைக்குத் த.தே.கூட்டமைப்புக்குள் நடந்த அடிதடிச் சண்டைக்கு ஒரு தீர்வாகக் கொண்டுவரப்பட்ட ஒருவரைத் தமிழினத்தின் மேய்ப்பராக்குகிற முயற்சியால் அவருக்கும் நன்மையில்லை; தமிழ்ச் சமூகத்திற்கும் நன்மையில்லை.

நடக்காத காரியங்களைப் பற்றிப் பேசிப்பேசியே தமிழ்ச் சமூகத்தின் தலைமைகள் பல தசாப்தங்களைக் கழித்துள்ளன. நடக்க வேண்டியதையும் நடக்கக்கூடியதையும் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

தமிழ் மக்கள் தனித்து நின்று போராடி எதையும் வெல்ல இயலாது என்பது எல்லாருக்கும் விளங்குகிறது. ஆனால், தமிழ்த் தலைவர்கள் தவறான இடங்களிலேயே தமிழருக்கான துணையை நாடியுள்ளனர். இந்தியாவையும் பிரித்தானியாவையும் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் நம்பி ஏமாந்தும், இன்னமும் சீனப் பூச்சாண்டி காட்டி இந்தியாவையும் அமெரிக்காவையும் வளைத்துப் போடலாம் என்று தமிழர்கட்குக் கனவு காட்டுகிற ஒரு கூட்டம் இன்னமும் கடுமையாக உழைக்கிறது.

ஆனால், சீனாவை தனிமைப்படுத்தவும் சீனாவின் வலிமையைக் குறைக்கவும் இந்தியாவுக்கோ, அமெரிக்காவுக்கோ, வேறெந்த மேற்குலக நாட்டுக்கோ இலங்கைத் தமிழர்களைத் தேடும் தேவையில்லை. எந்த வல்லரசுக்கும் வால் பிடிக்கும் அரசியல் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தை ஒரு பூரணமான செல்லாக் காசாக்கும் என்பதுதான் நமது அனுபவங்கள் கூறும் உண்மை.

தமிழ் மக்கள் யாரைத்தான் நம்புவதென்ற கேள்வியில் நியாயம் உண்டு. அவர்கள் முதலில் தங்களைத் தாங்கள் நம்ப வேண்டும். தங்கள் போராட்ட வலிமையை நம்ப வேண்டும். தங்களுடைய தலைவிதியை எந்தவொரு கட்சியிடமோ தனிமனிதரிடமோ அந்நிய ஆதிக்கக்காரரிடமோ ஒப்படைக்கும் முயற்சிகளைத் துணிந்து எதிர்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் கடந்த அரை நூற்றாண்டினுள் தங்களை முஸ்லிம்களிலிட மிருந்தும் மலையகத் தமிழரிடமிருந்தும் விலக்குகிற அரசியலுக்கு இரையாகியுள்ளனர். சிங்கள மக்கள் அனைவரையும் பகையாகப் பார்க்குமாறு பயிற்றப்பட்டுள்ளார்கள்.

எனவேதான், தங்களை ஒடுக்குகிற ஒரு கூட்டம் சிங்களவரையும் முஸ்லிம்களையும் மலையகத் தமிழரையும் ஒடுக்குகிறது என்பது பலருக்கு விளங்குவதில்லை. இந்த மனநிலையிலிருந்து தமிழர் விடுதலைபெற்றால் தமிழரை விடுவிக்க எவருக்காகவும் எதற்காகவும் தவமிருக்கும் தேவை இராது.

நன்றி: தினக்குரல்
மறுபக்கம். கோகர்ணன்போர்க் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை: நவி எச்சரிக்கை

31/08/2013 இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் அரசாங்கமானது நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்காவிடின் சர்வதேச மட்டத்திலான விசாரணைகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்நாட்டு விசாரணைக்கு  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் ஒத்துழைப்பு வழங்கும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தின் இறுதி அங்கமாக கொழும்பில் இன்று நடத்திய விசேட பத்திரிகையாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்.
மேலும் தனது இந்திய தமிழ் பாரம்பரியைத்தை வைத்து தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளின் கருவியென இலங்கையிலுள்ள அமைச்சர்கள், ஊடகங்கள், வலைப்பதிவாளர்கள் மற்றும் கொள்கைப்பரப்பாளர்கள் நீண்டகாலமாக தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி

No comments: