.
நன்றி:uyirmmai.com
அவன் தன்னுடைய பெயரையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். உன்மத்த ஆத்மார்த்தத்துடன் மந்திரங்களை ஜபித்து பிரார்த்திக்கும் பக்தனைப் போல் குரலை ஏற்றியும் இறக்கியும் அவன் தனது பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தான்.அவனை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் அவனைப் போன்றோரை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.நடை வீதிகளில் தங்களை நிர்வாணமாக்கி சாலையில் போவோரையும் வருவோரையும் பார்த்துக் காறி உமிழ்கையில்,பழைய செய்தித்தாள்களையெல்லாம் சேர்த்து வைத்து பின்னர் அவற்றோடு சேர்த்து தம்மையும் எரித்துக் கொள்கையில், ரயில்வே பாதைகளில் உங்களை ஒருகணம் அழச் செய்து யாசிக்கும் கண்களில்,சில சமயம் உங்கள் படுக்கை அறைக் கண்ணாடிகளில் என எப்பொழுதேனும் நிச்சயம் அவனைப் போன்றவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அன்றைய தினத்திற்கு முன் வரை அவன் இப்படி இருந்தவனில்லை. மிகவும் சாதாரணமாக காலையில் எழுந்து, சாதாரணமாகச் சாப்பிட்டு, சாதாரணமாக வேலைக்குச் சென்று,சாதாரணமாக டி.வி. பார்த்து, சாதாரணமாக தூங்கி,மீண்டும் மிகவும் சாதாரணமாக காலையில் எழும் நம்மில் ஒருவனாகவே அவனும் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான்-வெள்ளையும் நீலமும் கலந்த மங்கிய இருள் நீங்கா முன் காலைப் பொழுதில் யட்சி அவன் கனவில் தோன்றும்வரை.அவன் இதுவரை யட்சியை நேரில் கண்டதில்லை.கதைகளில் கேட்டதோடு சரி.யட்சி பேரழகானவள் என்பது மட்டுமே அவன் அதுவரையில் அறிந்திருந்த சேதி.
கனவினில் கூட அவன் யட்சியின் உருவத்தைப் பார்க்கவில்லை. யட்சி அன்று அவன் கனவில் உருவில்லாத வெறும் குரலாகத்தான் வந்தாள்.அப்படியொரு குரலை இதுவரை யாருமே கேட்டிருக்க முடியாது.அவ்வளவு மிருதுவான மென்குரல். யட்சி தான் நினைத்ததைவிடவும் இன்னும் பல மடங்கு அழகு உடையவளாக இருப்பாள் என அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். மிகவும் மெல்லிய திசையின் வழியே பரவும் ஒளிக் கீற்றின் பிரகாசம் தன் கண்களில் பரவுவதை அவன் உணர்ந்தான். "முழுச்சிக் கோடே இவ யட்சியில்ல……சாத்தானாக்கும்…."மனம் பதைபதைத்தது.தான் கனவில் இருக்கிறோமா இல்லை, சுய நினைவோடு எதனையோ பொய்யாகக் கற்பித்துக் கொண்டிருக்கிறோமா என்பது அவனுக்குப் பிடிபடவில்லை.மனம் தனது சாரத்தை மெல்ல இழந்து வருகிறது என்பது மட்டுமே அவனுக்குப் புரிந்தது.
யட்சியின் குரல் பனி மறைத்த மேகத்தினில் இருந்து வெளிப்படும் கனத்த மழைச் சாரலைப் போல் அவனது செவிகளுக்குள் நுழைந்தது. "உன்னுடைய பெயர் உன்னிலிருந்து நீக்கப்படலாம்." காற்றின் வெளியில் யட்சியின் குரல் மெல்ல கரைய., தன் உடலில் வெப்பம் ஒரு மண்புழுவினைப் போல் ஊர்வதை அவனால் உணரமுடிந்தது. அயர்ந்த கண்களை சிரமத்துடன் திறந்தான்.விட்டத்தில் மின் விசிறியின் காம்புகள் அபசுவரத்தில் முணங்கிக் கொண்டிருந்தன.
அவனுள்ளே யட்சியின் வார்த்தைகள் ஒரு திரவமென நீந்தின.வியர்வையின் புழுக்கம் தாளாமல் குளியலறையை நோக்கி நடந்தான்.ஷவரிலிருந்து நீர் மலைச் சாரலென அவன் சருமத்தின் மீது விழுந்தது. நீரின் சப்தத்தின் ஊடே யட்சியின் குரலை அவனால் தெளிவாகக் கேட்க முடிந்தது."உன்னுடைய பெயர் உன்னிலிருந்து நீக்கப்படலாம்".தன் உடல் ரோமத்தை நனைக்கும் ஒவ்வொரு நீர்த்துளியின் உள்ளும் யட்சி ஒளிந்திருப்பதாகவும் யட்சியின் வார்த்தைகள் அட்டைப்பூச்சியென தன் மேல் படிந்து இரத்தத்தை உறிந்து கொண்டிருப்பதாகவும் அவனுக்குப் பட்டது.
கண்கள் தானாக கலங்கத் துவங்கின. தண்ணீருடன் இணைந்த கண்ணீர் நீரின் எடையைக் கூட்டியிருக்க வேண்டும். தனது உடல் நீரின் கனத்தைத் தாங்கவியலாது கீழே விழுவதை அவன் கண்டான்.
நாசியில் நுழைந்த ஹாஸ்பிடல் மருந்து வாசம் திகட்டலை உண்டாக்க,இருமியபடியே கண் விழித்த அவன் தன் முன் எங்கிலும் யட்சியின் குரல் காற்றினைக் கிழித்தபடியே எதிரொலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டான்.
தன்னுடைய பெயர் தன்னிலிருந்து பறிக்கப்பட்டுவிடுமோ எனும் பீதி அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. யட்சியின் குரலில் முன்னிருந்த மென்மை இப்பொழுதில்லை. பரிகாசத்துடன் யட்சி உரக்க சிரித்தபடியே "உன்னுடைய பெயர் உன்னிலிருந்து நீக்கப்படலாம்" என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.யட்சி பேரழகி அல்ல, அவள் பைசாசம் என அவன் உருவகித்துக் கொண்டான்.
உயிரின் அணுக்களைப் பிளந்துக்கொண்டு பாயும் நரக ஒலியென யட்சியின் குரல் அவனைத் தொல்லைப் படுத்தியது. தன்னுடைய பெயரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த்த்தை அவன் அறிய ஆரம்பித்த மறுகணம் முதல். திரும்பத் திரும்ப தன்னுடைய பெயரையே வாய்விட்டுச் சொல்லலானான். இவ்வாறு செய்வதன் மூலம் இந்தப் பெயர் என்னுடையது,இதை யாராலும் என்னிடம் இருந்து பிடுங்கிக் கொள்ள முடியாது என்பதை யட்சியிக்கு விளக்க முடியும் என்றும் அதே சமயம் யட்சியின் குரலைத் தன் குரலால் அழித்துவிட முடியும் என்றும் அவன் நம்பினான்.அவன் நினைத்தது போலவே அதற்குப் பிறகு யட்சியிடம் இருந்து எந்த அரவமும் இல்லை.
அவன் மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்தபோதும் முழுமையாக சமாதானம் கொள்ள மறுத்தது.எந்த நொடியில் வேண்டுமானாலும் யட்சி திரும்பவும் குரல் கொடுக்கலாம் என்ற அச்சத்தில் அவன் நிறுத்தாது தனது பெயரையே மீண்டும் மீண்டும் கொல்லிக் கொண்டிருந்தான்.
"ஏமுல மக்கா! என்னடே திரும்பத் திரும்ப ஒன்னத்தையே சொல்லிக்கிட்டு கிடக்கே. என்னமுல ஆச்சி என் மவராசனுக்கு. என் குலசாமி, "ஆத்தா!மனசார எந்தக் குத்தமும் நாங்க நெனைக்கலியே மாரி!அப்புறமும் ஏவே எங்களுக்கே எல்லா எழவையும் தந்து தொலைக்கே."
அவனது அம்மை அங்கு கிடந்து புலம்பிக்கொண்டிருந்தாள்.ஆனால் அவன் கண்களுக்கு யாருமே தெரியவில்லை. யட்சியின் குரலுக்காகவே அவன் காத்துக் கிடந்த்தான். அவனது அய்யா அம்மையை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவ்னிடம் தனியாக வந்து நீர் கோர்த்த கண்களுடன் "என்ன தாமுல ஆச்சு....அய்யா கேக்குதம்ல சொல்லுதே?" அவனிடம் எந்த சலனமும் இல்லை.மீண்டும் மீண்டும் தன்னுடைய பெயரைச் சொல்லிபடியே இருந்தான்.மருத்துவர் வந்து பேசியபோதும்கூட அவன் அப்படியேதான் இருந்தானே ஒழிய, வேறெதையும் சொல்லவில்லை.
"இப்பம் வீட்டுக்குக் கொண்டுட்டு போங்க.... ஒத்தையில மட்டும் விட வேண்டா.. பார்த்துக்கிடுங்க.... ஒரு வாரம் பொறுத்து, பொறவு மறுபடியும் பார்ப்பம்.. ஒன்னு சிரமப்படுத்திக்க வேண்டா.... குணபடுத்திடலாம்."
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் வழி நெடுகிலும் அவன் தன் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லியபடியே வந்தான். அவனது அய்யா குனிந்த தலை நிமிராது தரையை வெறித்துப் பார்த்தபடியே உடன் நடந்துவந்தார். சிறிது நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்றே எல்லோரும் நம்பினார்கள். ஆனால் எதுவுமே மாறவில்லை. எந்நேரமும் அவன் தன் பெயரையே பிதற்றிய படித் திரிந்தான். சொல்லிச் சொல்லி வாய் களைத்த பின்னர் சத்தம் இல்லாமல் வாயை மட்டும் அசைத்துக் கொண்டிருப்பான்.அவன் தூங்கும் பொழுதிலும் தனது பெயரையே முன்ங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அவனது அய்யா உடைந்த குரலில்" இன்னு ஏமுல மாரி இந்த உசிர விட்டு வைக்குத... மசிரு வழிக்கவோ.... கொண்டு போயிடு தாயி.... உன் மன்சார கொண்டு போயிடு தாயி" என கதறினார்.
காலம் நகர நகர அவனிடத்தே விசித்திரப் பழக்கங்கள் கூடிக் கொண்டே போயின. அவனுக்குள்ளாக பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இரண்டு மாதங்கள் கடந்திருக்கும். இப்பொழுதெல்லாம் அவன் வீட்டினில் தங்குவதே கிடையாது. காலையில் இருந்து நள்ளிரவில் நட்சத்திரங்கள் உதிரும் வரை நீர் வறண்ட அந்த ஊர் வாய்க்காலிலேயேதான் அவன் இருக்கிறான்.அவன் அம்மை வந்து காலில் விழுந்து கதறி அழுது பொழுதும் அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்வாள்.விடியும் முன்னர் மீண்டும் அவன் வாய்க்காலிற்கு வந்துவிடுவான்.அவனுடன் *தவமணி நாடாரும் தினமும் அந்த வாய்க்காலிலேயே கிடக்கலானார். அவர்தான் அவனது அய்யாவிடம் ஒரு நாள்" உன் மவன் சாமிடே. நம்ம குலச்சாமி அய்யன்டே என் ராசன்" என்றார்.அவனுடன் சேர்ந்து தவமணிக் கிழமும் பைத்தியமாகிவிட்டது என ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.
தனது பெயரை இழந்துவிடாமலிருக்க அவன் ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தான். தான் காணும் பொருட்கள் எல்லாவற்றிருக்கும் தன் பெயரையே அவன் சூடினான்.வாய்க்கால் பாலத்தூண்களில் படர்ந்திருக்கும் பாசிச் செடிகள், வாய்க்காலில் சிதறிக் கிடக்கும் கூழாங்கற்கள், காய்ந்த கோரப் புற்கள், சுள்ளிச் செடிகள், தனித்திருக்கும் பனைமரம், மேலத்தெரு மேய்ச்சல் ஆடுகள் என அனைத்தையும் தன் பெயரைச் சொல்லியே அவன் அழைத்தான்.ஒரே பெயரை அவன் நாள் முழுவதும் பல குரல்களில் பல தினுசுகளில் மீண்டும் மீண்டும் அவன் சொல்லிக் கொண்டேயிருப்பான்.பசித்தால் அவனே வீட்டிற்கு நுழைந்து சாப்பாட்டு போட்டு சாப்பிட்டுக் கொள்வான். உணவருந்தும் போது அவனது கண்கள் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறுவதைத் தினமும் அவன் அம்மை கவனித்திருக்கிறாள். கண்ணுக்குத் தெரியா சாமியைக் குறைபடுவதைத் தவிர அவளுக்கு வேறெந்த வழியும் தெரியவில்லை. சாப்பிட்டு முடித்தவுடன் மிகவும் வேகமாக அவன தனது பெயரை உரக்க வாய்விட்டுச் சொல்ல ஆரம்பிப்பான். பின் வீட்டிலிருந்து வாய்க்காலிற்குச் செல்லும் வரையில் கத்திக் கொண்டே செல்வான்.
எத்தனை ஆண்டுகள் கழிந்திருக்குமென தெரியவில்லை. தவமணி நாடார் இறந்து பின் அவனது அய்யா இறந்து அடுத்து அம்மையும் இறந்து இப்பொழுது அவனுக்காக வருத்தப்பட யாருமேயில்லை. சோறு வேண்டுமென்றால் மட்டும் மதினி வீட்டின் முன்னால் போய் நிற்பான்.அவளும் வேண்டா வெறுப்பாய் அரைத் தட்டு கஞ்சி ஊத்துவாள்.வாய்க்காலில் தண்ணி ஓடும்போது ஊர் எல்லை கோவிலுக்குச் சென்றுவிடுவான்.எங்கிருந்தாலும் தன் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்கம் மட்டும் அவனை விட்டு அகலவேயில்லை.
பின் ஒரு நாள் அவன் தன்னுடய பெயரை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்த போது மீண்டும் யட்சியின் குரலை அவன் கேட்டான். கண் முன்னே வெயில் ஒரு கிழட்டு சிங்கம் போல் எதன் மீது, படியாது நகர்ந்து கொண்டிருந்த நண்பகல் வேளையது. தன்னுடைய பெயர் தன்னிடம்தான் இருக்கிறது என்பதை அவளிடம் சொல்லியாக வேண்டும் என மனதுள் ஞாபகப்படுத்திக் கொண்டான். அதே மிருதுவான மென் குரல். ஏளனத் தோரணையில் அவள் கேட்டாள் "நீ உன் பெயரென நினைத்துக் கொண்டிருப்பது நிஜத்தில் உன் பெயர்தானா?"
அடுத்த நாள் காலை அவன் ஊர் ஒற்றைப் புளிய மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கிராமத்தார்கள் கண்டார்கள்.
*தவமணி நாடார்: இவரது குடும்பம் ஊரிலேயே பெரிய குடும்பமாக ஒரு காலத்தில் இருந்த்து என்று சொல்வார்கள். இவரது தாத்தா செல்லப்ப நாடார் சிலோனில் இருந்து இந்த ஊருக்குப் பெயர்ந்து வந்த்ததாகவும் அந்தக் காலத்திலேயே ரேடியோ பெட்டியெல்லாம் இவர்கள் வீட்டில் இருந்ததுண்டு என்றும் பேச்சுண்டு.ஊரில் பாதி இவர்களது சொத்தாகவே இருந்திருக்கிறது.செல்லப்ப நாடாருக்கு தவமணி நாடாரின் அப்பாவையும் சேர்த்து மொத்தம் ஐந்து புதல்வர்கள். ஐவரும் ஊரில் செய்யாத அராஜகங்களே இல்லை என்று கூறலாம். எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார்கள் அதனோடு எதிர்த்து கேள்வி கேட்ட எத்தனையோ நபர்களைப் பண்ணைத் தோட்டத்தில் வைத்துக் கொன்று புதைத்தும் இருக்கிறார்கள்.பூப்பெய்தாத பெண்களைக் கூட ஈவிரக்கமின்றி அவர்கள் தங்களது விரக தாபத்திற்கு இரையாக்கியிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த வெள்ளைக்காரத் துரைதான் இவர்களது கொட்டத்தை அடக்கினானாம்.அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் தன் வசம் ஆக்கிக் கொண்டது. பின்னர் அவமானம் தாங்காது ஐவரும் பூச்சிக்கொல்லி மரூந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். யட்சியின் சாபம்தான் அவர்களது மரணத்திற்கு காரணம் என்பது ஊராரின் நம்பிக்கை. இறுதியில் அந்தக் குடும்பத்தில் மிஞ்சியது தவமணி நாடாரும் அவரது பங்காளிகள் ஆறு பேரும் மட்டுமே. பங்காளிகள் யாவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்றுவிட தவமணி நாடார் மட்டுமே இந்த ஊரிலேயே பிழைப்பு நடத்தினார்.பத்தாண்டுகளுக்கு முன்னர், ஊரே வறட்சிக்குப் பலியானபோது,அவரது மகன்களும் மகள்களும் கூட பட்டணத்திற்குச் சென்றுவிட்டனர்.சென்ற ஆண்டு அவரது மனைவியும் தவறிவிட, இன்று.தவமணி நாடார் மட்டும் இந்தத் தள்ளாத வயதிலும் இங்கேயே தனியாக இருக்கிறார்.
No comments:
Post a Comment