காதல் – எதிர் வீட்டு நிலவு - சுப. சம்பந்தம்

.



நிலவு
உன்னைப் பார்க்காதவர்கள்
சொன்னார்கள்இ
அமாவாசை அன்று
நிலவு வராது என்று!!

நாணம்

உன் பெண்மை பேசும்
முதல் வார்த்தை.


அன்று வழக்கத்திற்கு மாறாக வேலையிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்து கதவை தட்டுவதற்காக கையை உயர்த்தினேன். கதவு தானாக திறந்தது. எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய். உன்னை பார்த்த அந்த நொடியில் தனக்கான தேவதையை கண்டுப்பிடித்து விட்டதாக எண்ணி என் இதயம் சந்தோசத்தில் தாறுமாறாக இயங்க ஆரம்பித்து விட்டது. உள்ளிருந்து கதவை திறந்த நீயும் வெளியில் நான் நிற்பதை பார்த்து ஒரு நொடி பேச்சு மூச்சின்றி நின்று விட்டாய். பிறகு சுதாரித்து என் கண்களைப் பார்த்து “நீங்க!” என்று இழுத்தாய். பேசும் சக்தியை இழந்து விட்ட நான் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் இருந்து பதில் வராததால் நீயே பின்பக்கம் திரும்பி அத்தே! யாரோ வந்திருக்கிறார்கள் என்று கூறினாய். என் அம்மாவும் உள்ளிருந்தபடியே என்னைப் பார்த்து அது வேறு யாரும் இல்லை என் மகன் தான் என்று கூறினார்கள். நீயும் என்னை நன்றாக பார்த்து ஒரு புன்னகையை எனக்கு அளித்துவிட்டு நான் போயிட்டு வரேன் அத்தை என்று கூறிக்கொண்டு என்னை தாண்டி கொண்டு வேகமாக ஓடினாய்.



 நானோ என் மனதுக்குள் உன் வாய் சிரித்ததா இல்லை உன் கண்கள் சிரித்ததா என்று ஒரு பட்டிமன்றத்தை நடத்திக் கொண்டு வீட்டிற்குள் சென்றேன். என் அம்மாவோ என்னடா! இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட உடம்பு முடியவில்லையா என்று கேட்டார்கள். நான் அதற்கு பதில் கூறாமல் ஏம்மா! உன் அண்ணனுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா என்ன?. என்கிட்ட சொல்லவே இல்ல! என்றேன். என் அம்மாவும் ஒன்றும் புரியாமல் என்னடா சொல்ற என்று கேட்டார்கள். அதான் இப்ப போன பொண்ணு உன்னைய அத்தைன்னு இல்ல சொல்லிட்டு போகுது என்றேன். டேய் உன் குறும்புக்கு ஒரு அளவே இல்லையா அந்த பொண்ணு நம்ம எதிர் வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கிறவங்களோட பொண்ணு என்று கூறினார்கள்.



சரி என்ன முடியலையா இவ்வளவு சீக்கிரம் வேலையிலிருந்து வந்துட்ட என்று மீண்டும் கேட்டார்கள். ஆமாம்மா ஒரே தலைவலி அதான் வந்துட்டேன். காப்பி கொஞ்சம் கொடு குடிச்சுட்டு தூங்கி எழுந்தால் சரியா போய்விடும் என்று கூறிக்கொண்டு என் அறைக்குள் சென்று ஜன்னலைத் திறந்தேன். எதிர் வீட்டில் நீயும் உன் அறையின் ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு என் அறையையே பார்த்துக்கொண்டிருந்தாய். நான் உன்னைப் பார்த்ததும் மீண்டும் ஒரு வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு உள்ளுக்குள் சென்று மறைந்து விட்டாய். அப்பொழுது காபியை எடுத்துக்கொண்டு வந்த என் அம்மா இன்னைக்கு அமாவாசை நான் கோயிலுக்கு போகணும். நீ காபியை குடிச்சுட்டு தூங்கு நான் வீட்டை பூட்டிக்கிட்டு போய் வருகிறேன் என்று சொன்னார்கள். நானோ இன்னைக்கு பௌர்ணமி தானே என்றேன். என்ன உளர்ற இன்னைக்கு அமாவாசை என்றார்கள். நானும் உடனே எதிர் வீட்டைப் பார்த்தபடி ஆமாம் ஆமாம் பௌர்ணமி தான் மறைஞ்சிடுச்சே அப்ப அமாவாசை தான் என்று சொன்னேன். என் அம்மாவும் என்னையும் உன் வீட்டையும் மாறி மாறி பார்த்துவிட்டு இன்னைக்கு வந்ததிலிருந்து நீ ஒழுங்காவே இல்லை. காபியை குடிச்சுட்டு நல்லா தூங்கு என்று கூறிவிட்டு சென்றார்கள். நானும் பகல் கனவில் உன்னோடு என்ன பேசலாம் என்று எண்ணிக்கொண்டே காபியை குடிக்க ஆரம்பித்தேன்.

No comments: