தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியது : தனது இறுதிப் போட்டியில் பொண்டிங் ஏமாற்றினார்

.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.



ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதலிரு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தன.



இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டு ப்ளஸி ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அவுஸ்திரேலிய அணி சார்பாக லயோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதேவேளை, பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவின் துல்லியமான பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது 163 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலிய அணி சார்பாக வடே 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். தென்னாபிரிக்க அணி சார்பாக ஸ்ரெய்ன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 62 ஓட்டங்களால் பின்நிலை வகிக்க இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்னாபிரிக்க அணி அம்லா 196 ,ஏ பி டி வில்லியர்ஸ் 169 ஆகியோர் கைகொடுக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 569 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய அணி சார்பாக ஸ்ராக் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில், 62 ஓட்டங்கள் பின்நிலை வகிக்க தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 322 ஓட்டங்களைப்பெற்று 309 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.


இப் போட்டியில் ஆட்டநாயகனானக அம்லாவும் தொடராட்டநாயகனாக கிளார்க்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தனது இறுதிப் போட்டியில் விளையாடிய பொண்டிங் 8 ஓட்டங்களைப்பெற்று ஏமாற்றினார். இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியதுடன் ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் 'நம்பர்-1: இடத்தையும் தக்கவைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
 

No comments: