மெல்பேண் நகரில் செல்வி சுதா சண்முகசுந்தரத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்


.  
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


மெல்பேணில் உள்ள பிரபல்யமான நாட்டியக் கல்லூரிகளில் ஒன்றான நிருத்தா இந்தியன் நுண்கலைக் கல்லூரியின் இயக்குனரான திருமதி. நிருத்தசொரூபி தர்மகுலேந்திரனின் மாணவியான செல்வி சுதா கண்ணன் சண்முகசுந்தரத்தின்  பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 2011 நொவெம்பர் 17 ஆம் திகதி, றிங்வூட் நகரத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான ஜோர்ஜ் வூட் நிறைவேற்றுக் கலைக்கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நடன ஆசிரியை திருமதி நிருத்தசொரூபி தர்மகுலேந்திரனிடம் பரத நாட்டியத்தைப் பயின்று நாட்டிய நுணுக்கங்களைக் முறையாகக் கற்றுத் தேர்ந்து சிறப்பான முறையில் அபிநயம், அரங்கசுத்தம், தாளம், வேகம் இவை எவற்றிலுமே எவ்வித குறையுமின்றி தனது ஆடற்கலையை நிறைவாக அரங்கேற்றினார் செல்வி செல்வி சுதா கண்ணன் சண்முகசுந்தரம்.




ஆடல் நிகழ்வுகளில் கணபதி தோத்திரமாக ஒளவையாரின் விநாயகர் அகவல், தோடய மங்களம், ஜதிஸ்வரம், வர்ணம், சின்னமனூர்வாழும் சிவகாமி தலபுராணம், மருவூர் அன்னை கீர்த்தனம், பதம், பஞ்ச ஈஸ்வர ஸ்துதி,தில்லானா, கந்தசஸ்டி கவச மங்களம் என்பன இடம்பெற்றன. ஓவ்வொரு நடனத்திலும் செதுக்கிவைத்த சிற்பமொன்று அசைவதைப்போன்று நாட்டியத்திற்கேற்ற வாளிப்பான உடற்கட்டு வாய்க்கப்பெற்ற செல்வி சுதா தனது அபிநயம், முகபாவம், தாளம் என்பவற்றில் மிகச்சிறப்பாக விளங்கினார்.



அரங்கேற்றத்தில் ஆரம்ப நடனம் பொதுவாகக் கணபதி தோத்திரமாக அமைவது மரபு. அதில் ஒளவை மூதாட்டியின் அழகுதமிழில் அமைந்த விநாயகர் அகவலைப் பயன்படுத்தியமை எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதற்கான நடனம் விறுவிறுப்பாகவும், சிறப்பான அபிநயங்களுடனும் மிகவும் அழகாக அமைந்திருந்தது. தொடர்ந்து திருமதி. நிருத்தசொரூபி தர்மகுலேங்திரனின் குருவான பத்மஸ்ரீ அடையாறு கே.லக்~;மன் அவர்களின் நாட்டிய உருப்படியான தோடைய மங்களம், ராகமாலிகாவிலும், தாள மாலிகாவிலும் அமைந்து, ஆபத்பாந்தவனான மாஹா வி~;னுவின் அவதாரச் சிறப்பை உணர்த்தும் விதமாக இடம்பெற்றது. அடுத்து இடம்பெற்ற ஜதீஸ்வரத்தைத் தொடர்ந்து
ஆடைமாற்றுவதற்கான இசை இடைவேளையின்போது. வயலினும், புல்லாங்குழலும் வழங்கிய “அலைபாயுதே கண்ணா” என்ற பாடலுக்கான வாத்திய இசை அருவி மண்டபத்தில் நிறைந்திருந்த அத்தனைபோரையும் மெய்ம்மறக்கச் செய்தது.

அடுத்து இடம்பெற்ற, மூல உருப்படியான வர்ணம். இவ்வழகிய வர்ணம் மெல்பேணில் குடிகொண்டிருக்கும் சக்திமிக்க குன்றத்துக் குமரனின் சிறப்பைக் கூறும் பாடலுக்கு இராகம் இராகமாலிகாவிலும், தாளம் தாளமாலிகாவிலும் அமைக்கப்பட்டிருந்தது. திருமதி நிரத்தசொரூபியின் தாயார் பண்டிதை திருமதி. லக்~;மி சிவபாதம் அவர்களால் பல்லவி, அனுபல்லவிகளும் திருமதி. நிருத்தசொரூபியினால் சரணங்களும் எழுதப்பட்ட அந்தப்பாடலுக்கு சங்கீத வித்துவான் திரு.அகிலன் சிவானந்தனால் இசையமைக்கப்பட்டு, நிரத்தசொரூபியினால் மிகவும் சிறப்பாக நடன அமைப்புச் செய்யப்பட்டிருந்தது. செல்வி சுதாவின் நடனம் பார்வையாளர்களைப் பக்திரசத்தில் ஆழ்த்தும் வகையில் அற்புதமாக இருந்தது. “குன்றுதோறாடி கோலமயில் ஏறி குவலயம் சுற்றிவந்தாய் முருகா….அமரரெல்லாம் அதிசயிக்கும் அழகிய மெல்பேண் நகரில்…….கரிமுகன் தனது பொற்பாதங்களை ஆங்கே தடம்பதித்து காவல் புரியும் அந்த அற்புத மரவடிவே…” என்பன போன்ற வரிகள் குன்றத்துக் குமரன் அலயத்தின் சிறப்பை எடுத்துக் கூறுவதாயிருந்தன. நிருத்தம் எனப்படும் தூய நடனமும், நிருத்தியம் எனப்படும் உணர்ச்சிவெளிப்பாடும், நாட்டியம் எனப்படும் நாடகஅம்சமும் கலந்த கூட்டுச் சேர்க்கையாக அமைந்த இந்த வர்ணத்தில் கிழவனாக வந்த முருகனுக்கு உதவுவதற்காக வந்த யானையைக்கண்டு வள்ளி அச்சமுற்று நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சியும், முருகப்பெரமான் கிழ வேடத்தைக் கலைத்து, தன் அழகிய சுயரூபத்தில் தோன்றும் காட்சியும், அதனைக் கண்டவுடன் பயம் மறைந்து, வள்ளி உள்ளம் மலர்ந்து, உருகிநிற்கும் காட்சியும் பார்வையாளர்களின் கண்களில் பக்திகலந்த ஆனந்தக் கண்ணீரைப் பனிக்கவைத்தன. அந்த அளவுக்கு சுதாவின் அபிநயத்தில் மாறுபட்ட உணர்ச்சி பாவங்கள் மிகச்சிறப்பாக வெளிப்பட்டு விளங்கின.


“அடுத்து இடம்பெற்ற சின்னமருதூர் வாழும்” என்ற கீர்த்தனை சிவலிங்கமாக வீற்றிருக்கும் பூலா நந்தீஸ்வரரையும், சிவகாமி அம்மையையும் பற்றியது. இதற்கான விறுவிறுப்பான நடனஅமைப்பில் நவரசங்களையும் வெளிப்படுத்தி செல்வி சுதா அற்புதமாக ஆடினார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடமும், அருட்டிரு பங்காரு அடிகளாரிடமும் பக்தி கொண்டவர் செல்விசுதா என்பதனால் திருமதி நிருத்தசொரூபியினால் மேல்மருவத்தூர் அன்னையைப் பற்றி எழுதப்பட்டு. திரு அகிலன் சிவானந்தனால் இசையமைக்கப்பட்ட பாடலுக்கான நடனம் அடுத்ததாக இடம்பெற்றது. சக்திமீத பக்திகொண்ட பக்தையொருவரின் உணர்ச்சிபாவங்களைக் காட்டும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்த நடன அமைப்பை மிக உணர்வுபூர்வமாக உள்வாங்கியிருந்தமை செல்வி சுதாவின் நாட்டியத்தில் நன்கு வெளிப்பட்டது.

தொடர்ந்து இடம்பெற்றது பதம். “சின்னவயதினிலே நீ செய்த குறும்பு” என்ற பாடலுக்கு அமைக்கப்பட்டிருந்தது. பிரணவ மந்திரத்தின் பொருள்தெரியாத பிரம்மாவைச் சிறையில் அடைத்த முருகப்பெருமான், சிவவெருமானுக்கு குருவாக அமர்ந்து பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்கும் கதையைச் சொல்லும் இந்தப் பாடலுக்கான நடன அமைப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. நடனமணியும் திறமையோடு நிறைவேற்றினார்.

அடுத்ததாக இலங்கையில் உள்ள பஞ்சஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து சிவத்தலங்களைத் துதித்துப் போற்றும் பாடலுக்கான நாட்டியம் இடம்பெற்றது. விறுவிறுப்பான செற்பதங்களோடு அமைந்த பாடலும், வேகமான ஜதி அமைப்பும் செல்வி சுதாவின் திறமைக்கு நல்லதொரு சவாலாக அமைந்திருந்தது. சவாலை அவர் மிகவும் இலாவகமாக வெற்றிகொண்டார் என்றே சொல்லவேண்டும்.
அடுத்து தில்லானாவும், தில்லானாவைத் தொடர்ந்து மங்களமும் இடம்பெற்றன. கந்தச~;டி கவசம் மங்களமாக அமைந்தது. அகிலன் சிவானந்தனின் கம்பீரமான குரலில் கந்தச~;டிகவசம் ஒலித்தது. அதற்கு மிகப்பொருத்தமாக திருமதி நிருத்தசொரூபியின் நாட்டிய அமைப்புக்கு சுதாவின் அபிநயம் அழகாக இருந்தது.

அழகிய தமிழில் அமைந்த விநாயகர் அகவலில் ஆரம்பித்து, பக்தியைச்சுரக்கவைக்கும் கந்தச~;டி கவச மங்களத்துடன் நிறைவுபெற்றமை இந்த அரங்கேற்றத்தில் ஒரு புதுமையான அம்சமாகும். அத்துடன், இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் தமிழ்பாடல்களாக இருந்தமையும் பொருளுணர்ந்து, மனமொன்றிப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும், முழுமையாக இரசிப்பதற்கும் மட்டுமன்றி, அரங்கேற்ற நாயகியின் திறமையைத் தெளிவாக மதிப்பிட்டுணர்தற்கும் பார்வையாளர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது.

செல்வி சுதா அரங்கேற்றத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை எவ்வித களைப்பும், தோன்றாமல் மிகவும் உற்சாகமாகவும் அதேவேளை நிதானமாகவும், விடயத் தெளிவோடும் ஆடினார்.

திருமதி நிருத்தசொரூபி தர்மகுலேந்திரனின் கம்பீரமான குரல்வளம் அவரின் திறமையான நட்டுவாங்கத்திற்கு மேலும் மெருகூட்டியது. திறமைமிகு சங்கீத வித்துவான் திரு அகிலன் சிவானந்தன் அவர்களின் வாய்ப்பாட்டுக்கு, மிகப் பிரபலமானவர்கள் பக்கவாத்தியக் கலைஞர்களாக அமைந்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்கள். தனது பல மாணவர்களுக்கு அரங்கேற்றம் நடாத்திய அனுபவம் மிக்க பிரபல மிருதங்க வித்துவான் திரு பாலசிறீ இராசையா மிருதங்கம் வாசித்தார். பிரபல வயலின் வித்துவான் முரளி குமார் அவர்களும்,  பிரபல இந்திய புல்லாங்குழல் வித்துவான் ரமணி தியாகராஜன் அவர்களும் தத்தமது வாத்தியங்களால் இசையின்பத்தை வழங்கினர். மிருதங்க அரங்கேற்றம் கண்ட இளங்கலைஞர் செல்வன் அர்சுனன் புவீந்திரன் தனது குருவான திரு பாலசிறீ இராசையாவுக்கு அனுசரணையாக மிருதங்கம், தப்லா ஆகிய வாத்தியங்களைத் திறமையாக வாசித்தார்.

இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலாமேதைகள், கலை ஆர்வலர்கள், நுண்கலை வித்துவான்கள் முதலியோர் உட்படப் பலதரப்பினருக்கும் முன்னிலையில் எல்லோரும் மகிழ்ந்தும் வியந்தும் பாராட்டும் வகையில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தினைச் செவ்வையாகவும், சிறப்பாகவும் செல்வி. சுதா கண்ணன் சண்முகசுந்தரம் பூர்த்திசெய்தார். அவரது கலைப்பயணம் தொடரவும் அதில் பல உச்சங்களை அடைந்து சிறக்கவும் எமது வாழ்த்துக்கள்.

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


No comments: