சொல்லமறந்த கதைகள் -14, -- 15

.
கண்ணுக்குள் ஒரு சகோதரி
முருகபூபதி – அவுஸ்திரேலியா
 இலங்கையில் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி சிங்கள இளைஞர்களினால் 1971 ஆம் ஆண்டு நடந்தது. அந்தக்கிளர்ச்சி, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொண்டதுடன் அந்த கிளர்ச்சியின் சூத்திரதாரிகளான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்கா, லொக்கு அத்துல, பொடி அத்துல, தர்மசேகர, மகிந்தவிஜேசேகர போன்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கைதாகியதுடன் முடிவுக்கு வந்தது பற்றி ஏற்கனவே இந்தத்தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
 கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற இயக்கத்தின் பணிமனையாக செயற்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு மலேவீதியில் அமைந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தில்தான் இயக்கத்தின் சுவரொட்டிகள் எழுதும் வேலைகளும் நடந்துகொண்டிருந்தன.
 கொழும்பிலும் அதன் சுற்றுப்பிரதேசங்களிலும் நடந்த பிரசாரக்கூட்டங்களுக்காக தமிழில் சுவரொட்டிகளை எழுதும் பணியிலும் ஈடுபட்டேன். கூடுதலாக சிவப்பு மையே சுவரொட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.  ஒருநாள் சுவரொட்டிகளை எழுதிக்கொண்டிருக்கும்போது மைத்துளி ஒரு கண்ணில் விழுந்துவிட்டது.  கண்களை கழுவி சுத்தப்படுத்தினாலும் கண்ணெரிவு குறையவில்லை. கண்கள் சிவந்ததுதான் மிச்சம்.



 எனது துன்பத்தை அவதானித்துக்கொண்டிருந்த அந்த அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு சிங்கள சகோதரி, மதிய உணவு வேளையின்போது என்னருகே வந்து, “சகோதரரே (சிங்களத்தில் சகோதரயா என்றால் தோழர் என்றும் அர்த்தப்படும்) உங்களுக்கு வீட்டிலிருந்து கண்ணுக்கு ஒரு மருந்து கொண்டுவருகிறேன்.” எனச்சொல்லிவிட்டு புறப்பட்டார்.
 நான் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் நீர்கொழும்பிலிருந்து தினமும் வேலைக்கு வருவதனால் மதிய உணவையும் கொண்டுவந்துவிடுவேன். ஏனைய தொழிற்சங்க ஊழியர்கள் மதிய உணவுக்காக வெளியே சென்றுவிட்டார்கள். நான் உணவருந்திவிட்டு உறுத்திக்கொண்டிருந்த கண்களை மூடியவாறு ஆசனத்தில் சாய்ந்துகொண்டேன். அப்படியே உறங்கிப்போனேன். வெளியே சென்றவர்களும் திரும்புவதற்கு குறைந்தது ஒரு மணிநேரமாகும்.
 சொற்பவேளையில் தனது வீட்டுக்குச்சென்ற அந்த சகோதரி அலுவலகம் திரும்பியிருந்தார். நான் கண்களை மூடி உறங்குவதைப்பார்த்துவிட்டு, என்னைத்தட்டி எழுப்பினார். கண்களைத்திறக்காமலேயே, “வந்துவிட்டீர்களா?”- என்றேன்.
 “ ஆம், உங்கள் சிவந்த கண்ணுக்கு மருந்தும் கொண்டுவந்துள்ளேன். எழுந்து வாருங்கள்” என் கரம்பற்றி அழைத்தார். நான் கண்களை திறக்க சிரமப்பட்டேன். அந்த அலுவலகத்தின் பின்புற அறைக்கு அழைத்துச்சென்றார்.
 சுவரொட்டிகளுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த காகிதங்களை தரையில் விரித்து என்னை அதில் படுக்கச்செய்தார்.
 தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, “ சகோதரயா கண்களை திறவுங்கள். மருந்தை விடவேண்டும்” என்றார்.
 “என்ன மருந்து?”- தயக்கத்துடன் கேட்டேன்.
 “ முதலில் கண்களை திறவுங்கள். பிறகு சொல்கிறேன்.”
நானும் மெதுவாகத் திறந்தேன். ஒவ்வொரு கண்ணையும் தனது விரல்களினல் இமைகளை விரிக்கச்செய்து ஒரு திரவத்தை விட்டார். கண்கள் குளிர்ந்தன.
 “சகோதரயா அப்படியே சிறிதுநேரம் கண்களை மூடியவாறு படுத்திருங்கள். சங்கத்தின் ஊழியர்கள் வந்தால் சொல்லி;க்கொள்கிறேன்.” – என்றார்
 “நன்றி”
அவர் எழுந்து தனது கடமைகளை கவனிக்கச்சென்றுவிட்டார். உண்ட களை தொண்டருக்கும் உண்டு என்பதுபோன்று, நான் அந்த குளிர்மையான திரவத்தை கண்களினூடே உள்வாங்கிக்கொண்டு மீண்டும் உறங்கிவிட்டேன்.
 வெளியே மதிய உணவுக்குச்சென்றவர்கள் அலுவலகம் திரும்பிய அரவம் கேட்டது. நானும் துயில் களைந்து எழுந்தேன். கண்ணெரிச்சல் சற்று குறைந்திருக்கும் உணர்வு.
 அந்தச்சகோதரி அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருகே சென்று “ மிக்க நன்றி சகோதரி. அது என்ன திரவம்?”- எனக்கேட்டேன்.
 அவர் வெட்கம் கலந்த சிரிப்புடன், “ அது வந்து… தாய்ப்பால்” என்றார்.
அவரது மனிதாபிமானம் என்னை சிலிர்க்கவைத்தது.
 “இதோ தாய்ப்பால் கொண்டுவந்த சிறிய குப்பி.”- அவர் அதனை எனக்கு காண்பித்தார். “இன்னும் இரண்டு நாட்களுக்கு விட்டால் கண் சுகமாகிவிடும். நாளைக்கும் வேலைக்கு வாருங்கள். மதியம் தாய்ப்பால் விடுகிறேன்.” என்றார்.
 “ அது சரி. எங்கே பெற்றீர்கள்? ”- எனக்கேட்டேன்.
 “ எனது அக்காவுக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது.  பாதிக்கப்பட்டு சிவக்கும் கண்களுக்கு தாய்ப்பால் உகந்தது. சில நாட்களுக்கு நீங்கள் சுவரொட்டிகளை எழுதவேண்டாம். நீங்கள் எழுதியிருப்பதைப்பார்த்து நானே எழுதிக்கொடுக்கின்றேன்.”
 “ உங்களுக்கு தமிழில் எழுத முடியுமா.?”
 “ எழுத முடியாதுதான், ஆனால் பார்த்து எழுதலாம்தானே. அத்துடன் உங்களிடம் தமிழும் கற்றுக்கொள்ளலாம்.”
 அந்தச்சகோதரியை மனதுக்குள் வாழ்த்தினேன்.
 வீட்டுக்குத்திரும்பியதும் அம்மாவிடம் நடந்த சம்பவத்தை விபரித்தேன்.
“ சரிதான்…பால்…படிப்பு என்று போய் வேறு எங்கும் போய்விடாதே” என்றார் அம்மா. எச்சரிக்கை உணர்வுடன்.  அம்மா அம்மாதான்,
 அந்த சிங்கள சகோதரி சகோதரிதான்.
காலம் ஓடிவிட்டது. முப்பத்தியைந்து ஆண்டுகளும் கடந்துவிட்டன. அம்மாவும் மேலே போய்விட்டார்கள். எனக்கும் திருமணமாகி எனது குழந்தைகளும் வளர்ந்து திருமணமாகி தனிக்குடித்தனம் போய்விட்டார்கள்.
 ஆனால் அந்த சிங்கள சகோதரி இப்போது எங்கேயிருப்பார்?
அன்று அவரால் பாதுகாக்கப்பட்ட கண்களின் உதவியால் இன்று இதனை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
 இந்தக்குறிப்புகளை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகிக்கொண்டிருந்த யுகமாயினி இதழில் முன்பொருசமயம் எழுதியிருந்தேன்.
 அப்பொழுது தமிழ்நாடு கலைஞர் தொலைக்காட்சியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எனது குறிப்பிட்ட சிங்களச்சகோதரியின் செயலை விதந்து பாராட்டி, இப்படி அனைத்து சிங்கள மக்களுமே மனிதாபிமானிகளாக இருந்திருந்தால் இலங்கையில் இனப்பிரச்சினை இவ்வளவுதூரம் வளர்ந்திருக்காது என்று உரையாற்றியதாக யுகமாயினி ஆசிரியர் நண்பர் சித்தன் எனக்கு தொலைபேசி ஊடாகச்சொன்னார்.
 இந்தச்சம்பவத்தை வாசகர்களுக்கு இங்கே பதிவுசெய்கின்றேன்.
கண்ணுக்கு மொழி ஏது? கருணைக்கு இனம் ஏது?
 சுமார் ஆறுமாதகாலமாக எனது தலையின் இடதுபுறம் நெற்றிக்குமேலே வலி. எனது குடும்ப டொக்டர் என்னை ஒரு கண்டொக்டரிடம் (ஸ்பெஷலிஸ்ட்) அனுப்பினார். இடது கண்ணுக்கு விசேட சிகிச்சை தேவைப்படுகிறதுபோலும் என்று சொல்லி என்னை மெல்பனிலிருக்கும் அரச கண் மருத்துவமனைக்கு அவர் அனுப்பினார். அங்கே இரத்தம் பரிசோதித்த பின்னர் குறிப்பிட வலி வரும் தலைப்பகுதியில் பயப்ஸி டெஸ்ட் (சிறிய சத்திர சிகிச்சை) எடுப்பதற்காக தலையை விறைக்கவைக்கும் ஊசிமருந்தேற்றி கீறி ஏதோ எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு என்னை வீடு சென்று இரண்டுநாட்களுக்கு ஓய்வெடுக்கச்சொன்னார்கள்.
 வீடுதிரும்பியதும் படுக்கையில் கண்ணயர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தேன்.
ஒரு தொலைபேசி அழைப்பு என்னை துயிலெழுப்பியது. மறுமுனையில் தமிழ்நாடு யுகமாயினி ஆசிரியர் சித்தன்.
 “ வணக்கம். முருகபூபதி. ஒரு நல்ல செய்தி.”- என்றார்.
  கண்களைத் திறக்காமலேயே “சொல்லுங்க”-என்றேன்.
“ நீங்கள்  எழுதியிருந்த ‘கண்ணுக்குள் சகோதரி’ என்ற ஆக்கத்தை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கலைஞர் தொலைக்காட்சியில் வாசித்தார். வாசித்துவிட்டு தமது கருத்தையும் சொன்னார். என்னைப்பொறுத்தவரையில் இது ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்துள்ள வெற்றி.” என்றார்.
 “ அப்படியா? தகவலுக்கு நன்றி. அவர் சொன்ன கருத்து என்ன?”- என்று கேட்டேன்.
தமிழரான உங்களது கண்களுக்கு தாய்ப்பால் செலுத்தி சிகிச்சை அளித்த அந்த சிங்கள சகோதரியைப்போன்று தாயுள்ளத்துடன் சிங்கள மக்கள் அனைவரும் இருந்திருப்பின் இலங்கையில் பேரவலம் வந்திருக்காதே என்பதுதான் அவரது ஆதங்கமான கருத்து.
 சித்தன் எனது சுகத்தை கேட்டுவிட்டு தொடர்பை துண்டித்தார்.
கண்களை மூடியவாறே யோசித்தேன்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் மூலவேர் எது? தமிழின விடுதலைப்போராட்டம் தொடங்கியதன் பின்னணி என்ன?
 சிங்கள மக்கள் அனைவருமே தமிழ் மக்களின் விரோதிகளா? அல்லது தமிழ் மக்கள் அனைவருமே சிங்கள மக்களை வெறுப்பவர்களா?
 வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் தமிழ் ஈழக்கோரிக்கையையும் முன்வைத்த தந்தை செல்வநாயகம் (கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் கார்டின்) வீட்டில் வேலைக்காரராக இருந்த ஒரு சிங்களவரை 1981 ஆம் ஆண்டு தந்தையின் புதல்வர் சந்திரஹாசனைப்பார்க்கச்சென்றபோது கண்டு கதைத்திருக்கின்றேன்.
 யாரைப்பார்க்க வந்திருக்கிறீர்கள் என சிங்களத்தில் கேட்டுவிட்டு, எனக்காக வாயிலைத்திறந்து உள்ளே அழைத்துச்சென்ற அந்த சிங்களவரின் பெயர் எனக்குத்தெரியாது.
 ஆனால் அவர் நீண்டகாலம் அங்கே வேலையாளாக இருந்தார் என்பது மட்டும் தெரியும்.
தமிழர்களுக்கு சிங்களவர்மீது கோபம் வந்தால் முதலில் என்ன சொல்லி திட்டுவார்கள் என்பதும் சிங்களவர்களுக்கு தமிழர்மீது ஆத்திரம் வந்தால் எப்படி அழைப்பார்கள் என்பதும் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.
தமிழ்நாடு கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் தாம் படித்தவற்றில் தம்மைக்கவர்ந்த பகுதியை நேயர்களுக்கு வாசித்துக்காட்டும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தமிழ்த்தேசியவாதி. முன்பு நந்தன் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். ஈழத்தமிழ்மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். புலிகளை ஆதரித்த குற்றத்திற்காக பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையிலும் தண்டனை அனுபவித்தவர். வன்னி பெருநிலப்பரப்பில் யுத்தம் உக்கிரமடைந்தவேளையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக பல போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். புலிகளையும் அவர்களின் கனவான தனித்தமிழ் ஈழத்தையும் அளவுகடந்துநேசித்தவர்.
 ஒரு சிங்கள சகோதரியின் தாய்மையுணர்வு அவரையும் சிலிர்க்கச்செய்தமையால் குறிப்பிட்ட ஆக்கத்தின் மீது அவருக்கு ஈர்ப்பிருந்துள்ளது. அதனால் கலைஞர் தொலைக்காட்சியில் தமது உணர்வுகளை பகிர்ந்துகொண்டிருப்பதுடன் தமது உள்ளார்ந்த ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கவனிப்புமிகுந்த வாசிப்புக்கும் தகவல் தந்த யுகமாயினி ஆசிரியர் சித்தனுக்கும் நான் நன்றி கூறக்கடமைப்பட்டவன்.
மனிதாபிமானத்தையும் இனவுணர்வையும் பகுத்துப்பார்க்கவேண்டியிருக்கிறது.
வீரகேசரியில் நான் பணியாற்றும் காலத்தில் ஒரு சுவாரஸ்யமான செய்தி வந்தது. கரவெட்டிப்பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் வேட்டைக்காகவோ ரோந்து நடவடிக்கைக்காகவோ ட்ரக்வண்டியில் சென்றுகொண்டிருந்தபோது யாரோ ராணி ராணி என்று கூக்குரலிட்டுள்ளார். ட்ரக்கில் சென்ற இராணுவத்தினருக்கு அந்த ஒலி ஆமி, ஆமி என்று கேட்டிருக்கிறது. ட்ரக்வண்டி நிறுத்தப்பட்டு இராணுவத்தினர் உஷாரடைந்து துப்பாக்கிகளை ஏந்தியவாறு அந்தப்பிரதேசத்தை சுற்றிவளைத்தனர். ஒரு பெண்ணின் ராணி, ராணி என்ற அவலக்குரல் தொடர்ந்து கேட்கவும் அவ்விடத்துக்கு வந்து பெண்ணை விசாரித்தனர்.
 ராணி என்ற ஒரு பெண்குழந்தை கிணற்றில் தவறிவிழுந்துவிட்டதை அறிந்துகொண்ட இராணுவ வீரர்களில் இருவர் உடனே குறிப்பிட்ட கிணற்றில் குதித்து அந்தக்குழந்தையை காப்பாற்றினர்கள்.
 தேடுதல் வேட்டையில் பல அப்பாவி உயிர்களுக்கு உலைவைக்கும் அவர்களுக்கு அந்தக்கணம் வந்தது மனிதாபிமானம்.
 1986 ஆம் ஆண்டு ஒரு செய்திக்காக யாழ்ப்பாணம் சென்று ஆனையிறவு வழியாக தனியார் பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்தேன். ஆனையிறவில் பஸ் இராணுவத்தினரின் சோதனைக்காக நிறுத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தவிர்ந்த அனைவரும் இறக்கப்பட்டோம். இராணுவ வீரர்கள் பஸ்ஸில் ஏறி சோதனையை முடித்தனர். வெளியே நின்ற இதர பயணிகளின் அடையாள அட்டைகள் உடைமைகள் சோதனையிடப்பட்டன. யாவும் சுமுகமாக முடிந்ததும் பஸ் புறப்படுவதற்கு அனுமதி தரப்பட்டது.
 சாரதி பஸ்ஸை மீண்டும் ஸ்டார்ட் செய்தபோது, ஒரு இராணுவ வீரர் முகாமிலிருந்து வேகமாக ஓடிவந்தார். அவரது முதுகில் துப்பாக்கி. பஸ்ஸை நிறுத்துமாறு சத்தமி;ட்டுக்கொண்டே வந்தார். நாம் திகைத்துப்போனோம்.
 வந்தவரின் கையில் ஒரு சிறிய திராட்சைக்குலை காணப்பட்டது.
அந்த பஸ்ஸிற்கு வெளியே நின்றுகொண்டே யன்னலூடாக ஒரு குழந்தைக்கு அதனைக்கொடுத்தார். தமிழ்க்குழந்தை பயத்தினால் வாங்க மறுத்தது. பின்னர் குழந்தையின் தாய் வாங்கிக்கொள்ளுமாறு சொன்னதும் குழந்தை திராட்சையை பெற்றுக்கொண்டது.
 அந்த இராணுவ வீரரின் கண்களைப்பார்த்தேன். கனிவுநிறைந்த அந்தக்கண்கள் ஒருகணம் மின்னியது.  பஸ் புறப்பட்டது.
குழந்தை தாயிடம் கேட்கிறது: “ அம்மா அந்த ஆமிக்காரர் எனக்கு ஏன் இதைத்தந்தார்?” 
 தாய் சொல்கிறாள்: “ அந்த ஆமிக்காரனுக்கு ஊரில் உன்னைப்போல் ஒரு குழந்தை இருக்கலாம்.”
 இந்த உண்மைச்சம்பவத்தை பத்திரிகையிலும் எழுதினேன். பல வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியா வானொலி ஒன்றிலும் தெரிவித்திருக்கின்றேன்.
மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் எம்மை நெகிழச்செய்யலாம்.
 அதற்காக, அந்த ஆமிக்காரர்களைப்போன்று எல்லா ஆமிக்காரர்களும் இருந்திருப்பின் தமிழினப்பேரழிவு ஏற்பட்டிருக்குமா? என்று ஆதங்கப்படலாம். ஆனால்  விவாதிக்க முடியுமா?
 மனிதாபிமானம் எப்படி உளவியல் சார்ந்ததோ அப்படியே கருணை, பயம், வெறுப்பு, கோபம், பழிவாங்கல் உட்பட பல வேண்டத்தாக குணங்களும் உளவியல் சாரந்ததே.
சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் நான் வசிக்கும் மாநிலத்தில் எமது ஊருக்கு சமீபமாக அமைந்துள்ள இலங்கையிலிருந்து புலம்பெயரந்த பௌத்த சிங்கள மக்களினால் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரையில் கொழும்பில் புற்று நோய்சிகிச்சைக்கு உதவும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது. என்னையும் அதில் கலந்துகொண்டு உரையாற்றுமாறு அழைத்திருந்தார்கள். அச்சமயம். அவுஸ்திரேலியாவில் இலங்கை-ஆஸி கிரிக்கட் போட்டி நடந்துகொண்டிருந்தது. இலங்கையிலிருந்து மகில ஜயவர்த்தன( தற்போது இவர் இலங்கை அணியின் தலைவர்)  உட்பட மேலும் சில கிரிக்கட் ஆட்டக்காரர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து உரையாற்றி நிதி சேகரிப்புக்கு உதவினார்கள்.
 அவுஸ்திரேலியா உதயம் ஆசிரியரும் எனது நண்பருமான டொக்டர் நடேசனுடன் இந்நிகழ்வுக்குச்சென்றேன்.
 நான் உரையாற்றும்போது, “ புற்றுநோய் எவருக்கும் வரலாம். அது சாதி, மதம், இனம், மொழி, நாடு  பார்த்து வருவதில்லை. அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எவராகவும் இருக்கலாம். எனவே புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்காக எவரும் உதவலாம். உதவவேண்டும்.” என்றேன்.
 தமிழ்நாடு யுகமாயினி ஆசிரியர் சித்தன் என்னுடன் உரையாடியபோது, “ உங்கள் எழுத்து பற்றி கலைஞர் தொலைக்காட்சியில் பேசப்பட்டது படைப்பாளிக்கு கிடைத்த வெற்றி என்றும் சொல்லலாம்” என்றார்.
நான் அப்படி கருதவில்லை.
 படைப்பாளி வாசகரின் சிந்தனையில் ஊடுறுவும் விதமாக எழுதினால் பயன் கிட்டும் என்று மாத்திரம் கருதுகின்றேன்.
 கண்ணுக்குள் சகோதரி என்ற எனது ஆக்கம் கண் சிகிச்சை சம்பந்தப்பட்டதுதான்.  அந்த ஆக்கம் தொடர்பாக தொலைபேசி உரையாடல் நடந்தபோதும் கண்ணுக்கான சிகிச்சையுடன்தான் படுத்திருந்தேன்.
 என்ன ஒற்றுமை?
 அவுஸ்திரேலியாவில் எனது கண்களுக்காக சிகிச்சை அளித்த மருத்துவர் என்னுடன் ஆங்கிலத்தில்தான் உரையாடினார். அவர் வெள்ளை இனத்தவர். ஆனால் அவர் ஆசியரா? ஐரோப்பியரா, அமெரிக்கரா? அவுஸ்திரேலியரா? என்பது தெரியாது.
 இலங்கையில் எனது கண்களை தாய்ப்பால் இட்டு சுகப்படுத்தியவர் ஒரு சிங்களப்பெண்.
 கவிஞர் கண்ணதாஸன் கர்ணன் திரைப்படத்திற்காக எழுதியிருந்த பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.
 கண்ணுக்கு குலம் ஏது? கருணைக்கு இனம் ஏது?
 



சொல்லமறந்த கதைகள் -- 15     

ஏரிக்கரைச் சிறைச்சாலை   முருகபூபதி – அவுஸ்திரேலியா  


இலங்கையில் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் என்றவுடன், எவருக்கும் நினைவுக்கு வருவது கொழும்பு கோட்டையில் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள லேக்ஹவுஸ் கட்டிடம்தான். இலங்கையில் போர்த்துக்கீஸரின் வருகைக்குப்பின்னர் பல பிரதேசங்களில் கோட்டை கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. இன்றும் அவை கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கற்பிட்டி, திருகோணமலையில் மட்டுமன்றி நீர்கொழும்பிலும் அவற்றை எம்மால் பார்க்கமுடியும்.
நீர்கொழும்பு- புத்தளம் பாதையில் மகா ஓயா நதி ஓடுகிறது. அதிலிருந்து ஒரு கால்வாயை டச்சுக்காரர்கள் அமைத்து நீர்கொழும்பு கடலுடன் இணைத்தனர். அந்த இடத்திற்கு கலப்பு என்று பெயர். தமிழ்ப்;பேசும் கடற்றொழிலாளர்கள் செறிந்து வாழும் பிரதேசம்.
டச்சுக்காரர்கள் தங்களின் ஏற்றுமதி வர்த்தகத்திற்காக குறிப்பிட்ட புத்தளவெட்டு வாய்க்காலை பயன்படுத்தினார்கள். மகாஓயா நதி கிளை நதியாகி தொடங்கும் இடத்திற்கு வாய்க்கால் என்றும் கடலுடன் சங்கமிக்கும் இடத்திற்கு கலப்பு என்றும் சுத்தத்தமிழ்ப்பெயர் இன்றும் அங்கு வழங்கிவருகிறது. நீர்கொழும்பையும் அதனைச்; சூழவுள்ள பகுதிகளிலும்  முன்னக்கரை, குட்டித்தீவு, காமாட்சி ஓடை, நஞ்சுண்டான் கரை, ஏத்துக்கால், பெரியமுல்லை, மாங்குழி. மணல்சேனை, பள்ளஞ்சேனை, பலகத்துறை, கம்மல்துறை, தோப்பு, கொச்சிக்கடை நயினாமடம், ஆண்டி அம்பலம், முதலான பல தமிழ்ப்பெயர்களைக்கொண்ட பிரதேசங்கள் இருக்கின்றன.


மகா ஓயா கிளை நதியும் கடலும் சங்கமிக்கும் கலப்பு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும். அங்கிருக்கும் டச்சுக்கோட்டைதான் பின்னாளில் நீர்கொழும்பு சிறைச்சாலையாக மாறியது. அதன் அருகே, இடதுபுறம் டச்சுக்காரர்கள் அமைத்த ஒரு கிறீஸ்தவ தேவாலயம் மேட்டுப்பகுதியில் இன்றும் காட்சிதருகிறது.  வலது புறமுள்ள மேட்டுப்பகுதியில் நீர்கொழும்பு நீதிமன்றம் இயங்குகின்றது. அருகிலிருந்த மீபுர தியேட்டரில்தான் முன்பொருகாலத்தில் ஏராளமான தமிழ், சிங்கள, ஆங்கில, ஹிந்தி படங்களை நீர்கொழும்பு மக்கள் பார்த்து ரசித்தார்கள். தற்போது அந்தத் தியேட்டர் இருந்தமைக்கான சுவடே இல்லை. அந்த இடத்தில் மீனவர்கள்  கருவாடு காயப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நேர்வகிடெத்து ஏத்துக்கால் நோக்கி செல்லும் வீதிக்குப்பெயர் கடற்கரைத்தெரு. எங்கள் தாத்தா, பாட்டி காலத்தில் அதற்கு கன்னாரத்தெரு என்று பெயர் இருந்ததாம். பல தமிழ்வணிகர்கள் அந்தப்பிரதேசத்தில் செக்குகள் வைத்து நல்லெண்ணை வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். சில காணிகளில் வீடுகள் கட்டப்பட்டபோது செக்குகளையும் பார்த்;திருக்கின்றேன்.
அந்தக்கடற்கரைவீதியில் முத்துமாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில், காளி அம்மன் கோயில் என்பன அடுத்தடுத்து எழுந்தருளியுள்ளன. கடற்கரை வீதியின் மத்தியில் பிள்ளையார் கோயிலும் இன்று கம்பஹா மாவட்டத்திலேயே ஒரே ஒரு இந்துதமிழ்ப்பாடசாலையாக விளங்கும் விஜயரத்தினம் இந்துக்கல்லூரியும் ஒன்றையொன்று பார்த்தவண்ணம் இருக்கின்றன.
பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக நீண்டகாலம் வாழ்ந்த அரசமரத்தை வீதி அகலமாக்கும்போது பெயர்த்து எடுத்துவிட்டார்கள். அதனால் அந்த அரசமரநிழலில் அருள்பாலித்த நாகதம்பிரான் சிலையும் எங்கள் மக்களைப்போன்று இடம்பெயர்ந்து கோயிலுக்குள் தஞ்சமடைந்துவிட்டார். அந்த அரசமரம் பற்றியும் ஒரு சிறுகதையை ஏற்கனவே எழுதியுள்ளேன்.
எங்களுக்கெல்லாம் ஏடு துவக்கி அரிச்சுவடி கற்பித்த 80 ஆண்டு கால இந்து வாலிபர் சங்கமும் கோயிலுக்கு முன்புறமிருந்து இடம்பெயர்ந்து கோயிலுக்கு அருகில் இந்து இளைஞர் கலாசார மண்டபமாக மாறிவிட்டது.
இந்த அமைப்பில் 1970 களில் உறுப்பினராகவும் செயலாளராகவும், நிதிச்செயலாளராகவும் பணியாற்றியிருக்கின்றேன். 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்பு அந்த அமைப்பின் அயுள் அங்கத்தவராகிவிட்டேன்.
இந்து இளைஞர் மன்றம் நீர்கொழும்பு பிரதேசத்தில் சைவத்தையும் தமிழையும் மட்டும் வளர்க்கவில்லை. அதற்கு அப்பாலும் நகர்ந்து, கலை, இலக்கிய சமூகப்பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது.
1965 இல் யூ.என்.பி. பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி டட்லிசேனாநாயக்கா பிரதமரானதும் தமிழ் காங்கிரஸ_ம் தமிழரசுக்கட்சியும் அந்த அரசுக்கு ஆதரவு அளித்தன. அதனால் திருச்செல்வம் நியமன அங்கத்தவராகி உள்ளுராட்சி அமைச்சரானார். நீர்கொழும்பிலும் யூ. என். பி. அமோக வெற்றியீட்டியது. இதனைக்கொண்டாடுமுகமாக இந்து இளைஞர் மன்றம் தமிழ் எம். பிக்களுக்கும்  அமைச்சர் திருசெல்வத்திற்கும் ஊர்வலத்துடன் பெரிய வரவேற்பையே வழங்கியது. அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பிலிருந்தேன். அன்றுதான் முதல் தடவையாக தந்தை செல்வநாயகம், நாகநாதன், தருமலிங்கம், மு.சிவசிதம்பரம், திருச்செல்வம் உட்பட பல தமிழ்த்தலைவர்களை நேரில் பார்த்தேன்.
அக்காலப்பகுதியில் மன்றத்தின் செயற்குழுவில் தெரிவாகின்றவர்கள் பெரும்பாலும் இந்தத் தமிழ்க்கட்சிகளினதும் யூ.என்.பி.யினதும் தீவிர ஆதரவாளர்களாகத்தான் இருந்தார்கள். எனினும் இந்து இளைஞர் மன்றத்தில் ஈழத்தின் பல முன்னணி எழுத்தாளர்கள் இலக்கிய பேராசிரியர்கள் மட்டுமன்றி தமிழக அறிஞர்கள் எழுத்தாளர்களும் வந்து உரையாற்றியிருக்கிறார்கள். அவர்களின் பெயர்ப்பட்டியல் நீளமானது. ஏராளமான இலக்கிய விழாக்கள், மாநாடுகள், கண்காட்சிகள், அரங்கேற்றங்கள், அத்துடன் மருத்துவ முகாம்களும் நடைபெற்றுள்ளன. நீர்கொழும்பு வர்த்தக உதவியாளர்களின் அனுசரணையுடன் அகில இலங்கை ரீதியில் பேச்சுப்போட்டிகளையும் நடத்தியிருக்கின்றோம். இந்த மன்றம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் அதாவது சுமார் எண்பது ஆண்டுகளுக்கு  முன்பு இந்த ஊரில் சாமிசாஸ்திரிகள் என்பவர் இங்குள்ள சிறார்களுக்கு தேவாரம் திருவாசகம் சொல்லிக்கொடுத்து இந்து சமய வகுப்புகளை நடத்தியிருக்கிறார். அத்துடன் நீர்கொழும்பு டச்சுக்கோட்டைக்குள் அமைந்திருக்கும் சிறைச்சாலைக்கும் சென்று அங்கிருந்த கைதிகளுக்கும் சமயம்போதித்தார். அக்காலப்பகுதியில் அந்த சிறைச்சாலையில் கைதிகளினால் அமைக்கப்பட்ட கிருஷ்ணன் கோயில் இன்றும் அங்கே இருக்கிறது.
தமிழர் திருநாட்களான தைப்பொங்கல், சித்திரைப்புதுவருடம், மற்றும் தீபாவளி தினங்களில் எமது இந்து இளைஞர் மன்றம் இந்த சிறைச்சாலையிலும் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யும். அங்குள்ள கைதிகளுக்காக மன்ற மண்டபத்தில் பொங்கல்வைத்து பிரசாதம், வடை, மோதகம் முதலான பலகாரபட்சணங்களுடன் பிள்ளையார் கோயில் ஐயரையும் அழைத்துக்கொண்டு  சிறைச்சாலைக்குச் செல்வோம்.
சிறை அதிகாரிகள் குறிப்பிட்ட பண்டிகை நாட்கள் வருவதற்கு ஒருவாரகலத்திற்கு முன்பே வந்து நினைவுபடுத்திவிட்டுச்செல்வார்கள். அப்படி வரும்பொழுது அங்கு எத்தனை இந்து தமிழ் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரத்தையும் தெரிவிப்பார்கள். அதற்கு ஏற்ப நாம் பலகார பட்சணங்களை தயாரிப்போம்.
நீர்கொழும்பு- சிலாபம் வீதியில் தலுப்பொத்தை என்ற இடத்தில் இருக்கும் திறந்தவெளிசிறைச்சாலைக்கும் செல்வோம். அங்கு குறைந்த தண்டனை பெற்றவர்களும் விடுதலைக்கு தயாராகியிருப்பவர்களும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். முதலில் நீர்கொழும்பு பிரதான சிறைச்சாலைக்கு அதாவது ஏரிக்கரை டச்சுக்கோட்டைக்கு செல்வோம்.
1970-1973 காலப்பகுதியில் இங்கு தமிழ் அரசியல் கைதிகளும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் அந்நியசெலாவணி மோசடியில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தில் கைதாகி தண்டனை அனுபவித்த பிரபல வர்த்தக பெரும்புள்ளி பகவன்தாஸ் ஹைதராமணியும் இருந்தார். பல குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட பிரபல கேடி இரும்புமனிதன் (யக்கடயா) என்று அழைக்கப்பட்ட ஒரு சிங்களவரும் இருந்தார். அவர் தன்னை எங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது தன்னை யக்கடயா என்றே சொல்லிக்கொண்டார். ஆள் ஒன்றும் திடகாத்திரமான பேர்வழி அல்ல. ஊதிவிட்டால் விழுந்துவிடும் தோற்றம். ஆனால் பொலிசாருக்கு அடிக்கடி தண்ணிகாட்டிக்கொண்டு இருந்தவர். இவரைப்பற்றி ஒரு சிங்களத்திரைப்படமும் வந்துள்ளது.
இந்த சிறைச்சாலை சில சிங்களப்படங்களிலும் இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலைகள் என்றாலே அங்கே ஏராளமான கதைகள் இருக்கும். அந்தமான்கைதிகள் பற்றிய தமிழில் சிறைச்சாலை என்ற பெயரிலேயே ஒரு படம் வந்திருக்கிறது. மோகன்லால், பிரபு, தபு நடித்து கவிஞர் அறிவுமதியின் வசனத்தில் வெளியான நல்லதொரு படம் சிறைச்சாலை.
ஜெயகாந்தனின் கல்கியில் வெளியான குறுநாவல் கைவிலங்கு பின்னர் ராணிமுத்து பிரசுரமாகி மலிவுப்பதிப்பில் வந்திருக்கிறது. கைவிலங்கு, காவல்தெய்வம் என்றபெயரிலேயே எஸ்.வி. சுப்பையாவின் தயாரிப்பில் திரைப்படமாகியது. சிவாஜி அதில் சாமுண்டி என்ற கள்ளிறக்கும் தொழிலாளியின் பாத்திரத்தில் திறம்பட நடித்திருக்கிறார்.
அந்த நாவலை எழுதுவதற்காகவே சிறைக்குச்செல்ல விரும்பியவர் ஜெயகாந்தன். அவரது நண்பர் சி.ஏ. பாலனின் தூக்குமரநிழலில் நாவலும் பிரபலமானது. பாலனை 1990 இல் ஜெயகாந்தனை சந்திக்கச்சென்றபோது பார்த்துப்பேசியிருக்கின்றேன். அவர் மரணதண்டனை கைதியாக பல ஆண்டுகள் சிறையில் வாடி, கருணை மனுவின் அடிப்படையில் விடுதலைபெற்றவர். பின்னாட்களில் சிறைச்சாலை அனுபவங்களை வைத்தே அவர் எடுத்த திரைப்படம்தான், இன்று நீ நாளை நான். சிவகுமார், லட்சுமி நடித்த அந்தப்படமும் குறிப்பிடத்தகுந்தது.
இலங்கையில் 1983 இல் வெலிக்கடை படுகொலையின் பின்னணியுடன் மட்டக்களப்பு சிறை உடைப்பை சித்திரிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கு மட்டக்களப்பை பூர்வீகமாகக்கொண்ட பாலுமகேந்திரா முயற்சித்தார் என்றும் ஆனால் அதுகைகூடவில்லை என்றும் ஒரு தகவல் இருக்கிறது.
சிறைக்குச்சென்ற பலரின் படைப்புகள் நூல்கள் தமிழிலும் ஏனையமொழிகளிலும் பிரசித்தமானவை.  ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்தபோது மகள் இந்திராவுக்கு தொடர்ச்சியாக எழுதிய கடிதங்களே உலகச்சரித்திரம் என்ற சர்வதேச புகழ்பெற்ற நூல் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி. சிறைக்குச்சென்று மீளும் செம்மல்களின் கதைகள் ஏராளம்.
நீர்கொழும்பு சிறையில் எமது தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டபொழுது அவர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்குவதற்காக மாத்திரம் நான் அங்கு செல்லவில்லை. மாவைசோனதிராஜா, முத்துக்குமாரசாமி, மகேந்திரன் உட்பட பலர் அன்றைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் அரசியல்கைதிகளாக சிறைவைக்கப்பட்டிருந்தனர். சிலரது பெயர்கள் தற்பொழுது ஞாபகத்தில் இல்லை.
அவுஸ்திரேலியாவிலிருக்கும் எனது நண்பர் இராஜரட்ணம் சிவநாதனின் தந்தையாரும் அக்காலப்பகுதியில் நீர்கொழும்பில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் எமது மன்றத்தின் துணைத்தலைவர். மன்ற மண்டபத்தில் பொங்குவோம். சிறை அதிகாரிகள் வாசலில் வாகனத்துடன் நிற்பார்கள்.
ஒரு பொங்கல் தினத்தன்று நாம் பொங்கிக்கொண்டிருக்கும்பொழுது, துணைத்தலைவர் இராஜரட்ணம் ஐயா, “ தம்பி... கஜூ நட்ஸ்களை நெய்யில் பொறித்து, பயறும் கலந்து பொங்கினால் பொங்கல் நல்லசுவையாக இருக்கும்.” என்று சொன்னார். உடனே தலைவர் சண்முகநாதன், ( இவர் தமிழர் விடுதலைக்கூட்டணி செயல் அதிபர் அமிர்தலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்) அப்படி பொங்கிக்கொடுத்தால் சிறையிலிருப்பவர்கள் வெளியே வரவிரும்பமாட்டார்கள்.” என்றார்.
அந்தச்சம்பவத்தை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.
சிறைச்சாலை வாகனத்தில் பெரிய பாத்திரங்களில் பொங்கல், பலகார பட்சணங்கள் எடுத்துச்செல்வோம். அங்கே தமிழ் அரசியல்கைதிகளும் இதர கைதிகளும் அந்த நாளுக்காக காத்திருந்து எங்களை வரவேற்பார்கள்.
சுற்றிலும் சிறைக்காவலர்கள் கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். ஐயர் கிருஷ்ணர் சிலைக்கு பூசை செய்வார். மன்றத்தின் உறுப்பினர்கள் தேவாரம் பாடுவார்கள். நானும் பயபக்தியுடன் கையெடுத்துக்கும்பிடாமல் கைகளை மார்போடு அணைத்து கைகட்டியவாறு பின்புறம் நிற்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரல்;களை அசைப்பேன்.
எனது கைகளுக்குள் அவர்களின் சிறிய கடிதங்கள் வந்துசேரும். மிகபக்குவமாக பொக்கட்டுக்குள் திணித்துக்கொள்வேன். அக்கடிதங்கள் அவர்களின் பெற்றோருக்கு எழுதப்பட்டவையாக இருக்கும். வெளியே வந்து அவற்றை உரியவாறு தபாலில் சேர்ப்பிப்பேன்.
நான் அந்த ஏரிக்கரை சிறைச்சாலைக்கு செல்ல விரும்பியதே இந்தத்தொண்டுக்காகத்தான்.
“தைப்பொங்கல், சித்திரைப்புதுவருடம், தீபாவளி பண்டிகை நாட்களில் மட்டுமல்ல நவராத்திரி, சிவராத்திரி தினங்களின்போதும் அங்கே செல்வோமே...”என்று மன்ற நிருவாகத்திடம் கோரிக்கை விடுத்துப்பார்த்தேன்.
“ நீ என்ன பெரிய பக்திமானா?” என்று கேட்டார்கள்.
“ இல்லை... பிரசாதம் வழங்கும் சாக்கில் அரசியல் கைதிகளையும் பார்க்கலாம்... அதுதான்” என்றேன்.
“ உன்னை எப்படி நம்புவது, அரசியல் வகுப்பும் நடத்தப்பார்ப்பாய். தண்ணீருக்கு அடியில் தீப்பந்தம் எடுத்துச்செல்லக்கூடியவன்” என்று எனது கோரிக்கை தட்டிக்கழிக்கப்பட்டது. வருடத்தில் இந்து தமிழ் கைதிகளுக்கு அந்த மூன்று சந்தர்ப்பங்கள்தான் கிடைத்தன. பௌத்த சிங்கள கைதிகளுக்கு வெசாக், பொசன், மற்றும் சிங்களப்புதுவருடம். கத்தோலிக்கர்களுக்கு கிறிஸ்மஸ், பெரியவெள்ளி. அதுபோன்று முஸ்லிம்களுக்கு நோன்புபெருநாள்.
 சிறிமாவின் காலத்தில் சிறிதுகாலம் அந்த ஏரிக்கரை சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளுக்கு தபால் சேவகனாக தொண்டாற்றியிருக்கிறேன்.
 2011 ஜனவரியில் நாம் கொழும்பில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் இறுதிநாளன்று இராமகிருஷ்ண மண்டபத்தில் நடந்த நிறைவு நிகழ்வில் கலந்துகொண்ட தற்போதைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜாவிடம் அந்தச் சம்பவங்களை நினைவுகூர்ந்தபொழுது, சிரித்துக்கொண்டு, “ மீண்டும் பொங்கல் சாப்பிடுவோம்.” என்றார்.

அன்றும் அதற்குப்பின்னரும் சிறையில் வாடிய அரசியல்கைதிகளும், சிறைகளை உடைத்து தப்பியவர்களும் இன்று பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அதேசமயம் மேலும் பலர் சிறைகளில் வாடிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெளியே வந்து எப்பொழுது தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் சாப்பிடுவார்கள்....?
அந்த சூரியபகவானுக்கே வெளிச்சம்.

No comments: