–
சமீபத்தில் ஸ்ரீலங்காவின் வடபகுதியில் மீள்குடியேற்றத்துக்காக
திரும்பியிருக்கும் நிலமற்ற உள்ளக இடம் பெயர்ந்தவர்களின்(ஐ.டி.பி) பரிதாப
நிலை
மரிஸ்ஸா டீ சில்வா மற்றும் நிக்கலோ இம்மானுவல் ஆகியோர் எழுதுவது.
சமீபத்தில் புதுமாத்தளனுக்கு திரும்பி வந்தவர்கள்
“புதுக்குடியிருப்பின்
தூசி நிறைந்த செம்மண் சாலையில் நீங்கள் வேகமாக வாகனத்தை ஓட்டிச்
செல்லும்போது, ஒரு காலத்தில் இங்குள்ள மக்களுக்கு சொந்தமாக இருந்தவைகளான,
ஒன்றின் மேல் ஒன்றாக குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டிருக்கும்
துருப்பிடித்த வாகனங்களைக் கடந்து, தரையில் பரப்பி வைத்திருக்கும், சட்டி
பானைகள், சீலை சட்டைகள், செருப்புகள், மற்றும் தட்டுகள் என்பனவற்றையும்
கடந்து, வீதியின் இரு மருங்கிலும் யுத்தத்தினால் சீரழிக்கப்பட்ட வீடுகளின்
சுவர்களை, துப்பாக்கி ரவைகளும், உலோகக் குண்டுத் துகழ்களும் சிதறித்
துழைத்திருக்கும் காட்சியை காணும்போது, நம்மை சுற்றியுள்ள காற்றில்
கலந்திருக்கும் ஆழமான சோகமும் மற்றும் நம்பிக்கையற்ற தன்மையும் உங்கள்
உள்ளத்தில் ஊடுருவுவதை உங்களால் தவிர்க்க முடியாது”
அரசாங்கத்தை பொறுத்தமட்டில் மெனிக்பாம் மூடப்பட்டு அங்கு இருந்தவர்கள் எல்லோரும் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள்.
வெகுசமீபத்தில்
மீளக்குடியமர்ந்தவர்கள் உள்ள பகுதிகளுக்கு விஜயம் செய்தபோது அவர்களின்
நிலை இதுவாகத்தான் இருந்தது, தவிரவும் உண்மையில் அவர்களில் அநேகரது சொந்த
நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்து உள்ளதால், அவர்கள் மாற்று இடங்களில்
குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதேவேளையில் தங்கள் சொந்த இடங்களுக்குத்
திரும்பிய மற்றவர்கள், தங்குவதற்கு முறையான இல்லிடம், வருமானம், அடிப்படை
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளங்கள் என்பன இல்லாத நிலையில்
விடப்பட்டுள்ளதால் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பெரிதும்
கஷ்டப்படுகின்றனர்.
சமீபத்தில்
மீளக்குடியமர்வதற்காக திரும்பி வந்திருக்கும் ஒருவருடன் பேசியபோது, இந்தக்
குடும்பங்கள், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தங்கள் குடிசைகளுக்குள்
மட்டும் ஒதுங்கியிருக்க முடியவில்லை, அவர்களது சுற்றாடலை வசிப்பதற்கு
தகுதியான நிலைக்கு மாற்றுவதற்காக வெளியே புதரும் பாம்புகளும் நிறைந்துள்ள
தங்களது காணிகளையும் நன்கு துப்பரவாக்க வேண்டியுள்ளது என்பதை
அறியக்கூடியதாக இருந்தது. அந்தப் பிரதேசத்தில் உள்ள குடும்பங்களில் பலர்
வருமானம் தேடுவதற்காக தங்களது உடமைகளை தேடி மறு முனைக்கு மைல் கணக்கான
தூரத்தை நடந்தோ அல்லது மிதி வண்டியிலோ கடந்து சென்று , அல்லது எதையாவது
விற்றோ அல்லது பழுது பார்த்;தோ வாழ்க்கை நடத்தவேண்டி உள்ளது.
.(1
கிலோ உலோகத்தின் தற்போதைய விலை 40 – 50 ரூபா எனச் சொல்லப்படுகிறது). ஒரு
முறை தங்களால் தூக்கிச் செல்வதற்கு இயன்றளவு உலோகத்தை சேகரித்த பிறகு
அவர்கள் தங்களது சிரமமான பயணத்தை திரும்பவும் நடந்தோ அல்லது மிதி வண்டியிலோ
அல்லது பேருந்திலோ தொடரவேண்டும். அநேகமான மக்கள் சாக்குகளை காவியபடி
பேருந்தினை எதிர்பார்த்து வீதியோரங்களில் அமர்ந்திருப்பதை நாம் கண்டோம்.
தங்களது இடப் பெயர்வுக்கு முன்னர் இதே மக்கள்,மற்ற எல்லோரையும் போலவே சகஜ
வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, கௌரவமான தொழில் செய்து பிழைத்து வந்தவர்கள்தான்.
இன்று மீள்குடியேற்றத்துக்காக வன்னிக்கு சமீபத்தில் வந்திருக்கும் இதே
மக்களுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக குப்பை கூளங்களை கிளறி விற்பனை
செய்வதற்காக கழிவுகளை தேடி உயிர் வாழவேண்டிய முற்றிலும் கீழ்த்தரமான ஒரு
நிலமை, அவர்களது சராசரி நாளாந்த வாழ்வின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
அதையும் விட யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும்,
அவர்களது வீடுகள் இன்னமும் யுத்த பூமியை போலவே காட்சியளிக்கின்றது, அங்கு
அவர்கள் தாங்கள் சந்திக்க நேர்ந்த கடந்த கால பயங்கர நினைவுகளை தினசரி
எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக உள்ளனர்.
75 மாதங்களுக்கு மேலான காலத்தை மெனிக் பாமில் கழித்துவிட்டு
தங்கள் சொந்த இடமான புதுமாத்தளனுக்கு திரும்பியிருக்கும் சில
குடும்பங்களுடன் நாங்கள் உரையாடினோம். செப்ரம்பர் 6ந் திகதி முகாமிலிருந்து
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் அவர்கள்
இரணைப்பாலையிலுள்ள ஒரு பாடசாலைக்கு கொண்டு வரப்பட்டார்கள். அங்கு
அவர்களுக்கு உள்ளுர் மீனவர் சங்கத்தின் உபசாரமாக இரண்டு சமைத்த உணவுப்
பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் அடுத்த இரண்டு நாட்களும் அதே சங்கம்
அந்தக் குடும்பங்களுக்கு பாணும் பருப்பு கறியும் வழங்கியது. எனினும் இது
மீள்குடியேற்ற அதிகாரசபையின் தலைவர் பி.எச். பாசப்பெருமாவுக்கு அரசாங்கம்
மீள்குடியேற்றப்பட்ட ஐ.டி.பிக்களுக்கு ஒரு வாரத்துக்கான சமைத்த உணவை
வழங்கியது எனும் பச்சைப் பொய்யான அறிக்கையை விடுவதற்கு பெரிதும் உதவியது.
மேலும்
அதேவேளை அந்தப் பாடசாலையில் வைத்து, ஒவ்வொரு குடும்பமும் குற்றப்
புலனாய்வு பிரிவினர், இராணுவத்தினர்,மற்றும் கிராம சேவகர் ஆகியோரினால்
பதிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு குடும்பத்தவரும், ஒன்றில் சிங்கள
எழுத்துக்களும் மற்றும் இலக்கங்களும், மற்றதில் இலக்கங்கள் மட்டும் உள்ள,
இரண்டு அட்டைகளை வைத்திருக்கும்படி கூறி அப்படியே அவர்களை பகைப்படம்
எடுக்கப்பட்டது. அந்த அட்டைகளில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று அவர்களை
நாங்கள் கேட்டபோது,”அவைகள் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்ததால் அதில் என்ன
எழுதப்பட்டிருந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, மற்றும் அதைப்பற்றி
அந்த அதிகாரிகளிடம் கேட்பதற்கு எங்களுக்கு மிகவும் பயமாக இருந்தது. மேலும்
எங்களில் அநேகர் அங்கிருந்தனர், எங்களை வேகமாக செயற்படுமாறு கூறினார்கள்.
மேலும் எங்களது தனிப்பட்ட விபரங்கள் பற்றியும் அதாவது எங்கள் குடும்பத்தை
சேர்ந்த எவராவது யுத்தத்தின்போது கொல்லப்பட்டு அல்லது காணாமற் போயுள்ளனரா,
எங்கள் குடும்பத்தை சேர்ந்த எவராவது எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்தார்களா, அல்லது
எல்.ரீ.ரீ.ஈ க்காகப் பேராடும்போது கொல்லப்பட்டார்களா போன்ற கேள்விகள்
எங்களிடம்; கேட்கப்பட்டன” என்று சொன்னார் சமீபத்தில்
மீளக்குடியமர்த்தப்பட்ட ரமேஸ் என்பவர். இந்த வருடம் ஜனவரி மாதம் அவர்
முல்லைத்தீவு மருத்துவமனையில் எட்டு நாட்கள் சிகிச்சை பெற்றபோது, ரமேஸின்
நுரையீரலில் கட்டி ஒன்றிருப்பதாக கண்டறியப்பட்டது. இரண்டரை வயத மகனுக்கு
தந்தையான ரமேஸ் இன்னமும் தனது சோர்வு மற்றும் மரத்துப்போதல் போன்ற
தாக்கங்களின் பாதிப்புக்களில் இருந்து விடுபட ஒரு மூச்சிழுப்பு கருவியை
பயன்படுத்துகிறார்.
அடுத்த
நாள் 2012, செப்ரம்பர் 7ந் திகதி, அந்தக் குடும்பங்கள் அனைத்தையும்
புதுமாத்தளன் சந்தியில் இறக்கிவிட்டு அங்கிருந்து அவர்களது வீடுகளுக்கு
நடந்து செல்லும்படி கூறப்பட்டது. அதிக பாரத்தை வைத்திருந்தவர்களும் மற்றும்
சந்திக்கு அருகில் குடியருந்தவர்களும் தங்கள் உடமைகளை தங்களது வீடுகளில்
இறக்கித்தருமாறு உடன் வந்த பார ஊர்திகளிடம் வேண்டுதல்களை விடுத்து ஒருவாறு
சமாளித்தார்கள். அதே நாளில் இராணுவத்தினர்களும் இந்தக் குடும்பங்களிடம்
வருகை தந்து குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவரையும் தனித்தனியாக திரும்பவும்
புகைப்படம் எடுத்தனர். அதன்பின் இன்றுவரை எந்த ஒரு அரசாங்க
உத்தியோகத்தரும் அவர்களின் தேவைகளை சோதித்தறிய அங்கு வருகை தரவில்லை.
அவர்கள்
திரும்பும்போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒன்பது மாதங்களுக்கு
செல்லுபடியாகும் குடியிருப்பு பங்கீட்டு அட்டை உலக உண திட்டம் மூலம்
வழங்கப்பட்டது (ஒவ்வொரு குடும்பமும், அரிசி, மா,பருப்பு வகை,
எண்ணெய்,மற்றும் சீனி என்பனவற்றை அதன்மூலம் பெறமுடியும்). மற்றும்
யு.என்.எச்.சி.ஆர் இனால் உணவு வகை அல்லாத பொதியொன்று, தொழிற்கருவிகள்,
மற்றும் தார்ப்போலின் என்பனவும், வதிவிட உதவி தொகுதி ஒன்று டி.ஆர்.சி
யினாலும் வழங்கப்பட்டன. யு.என்.எச்.சி.ஆர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிதி
உதவியாக ரூபா 20,000 ம் வழங்கியது. ”நாங்கள் வீடு திரும்பிய அன்று மிகப்
பலத்த மழை பெய்ததினால் முகாமில் எங்களிடம் மீதமாக இருந்து நாங்கள்
கொண்டுவந்த அரிசி முற்றாக நனைந்து விட்டது” என்றார் ரமேஸ்.
த ற்சமயம்
18 நபர்களை கொண்ட ஆறு குடும்பங்கள் 3 ஏக்கா நிலப் பரப்பில்
வசிக்கிறார்கள், அதற்குள் கிட்டத்தட்ட 15 – 20 பதுங்கு குழிகள்
அமைக்கப்பட்டிருந்தன. யுத்த இறுதியின்போது சுமார் 50 பேர் வரை
இங்கிருந்தோம், எனவே ஒவ்வொருவருக்கும் போதியளவு பதுங்கு குழிகள்
தேவைப்பட்டன. 2009 ஏப்ரல் 20ல் நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு போகும்வரை,
நடைமுறையில் நாங்கள் இந்தப் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழ்ந்தோம்” என்று
ரமேஸ் மேலும் தெரிவித்தார்.
42
வயதான விஜயலட்சுமி என்பவரது 14 வயதான மகள் எல்.ரீ.ரீ.ஈயினரால் 18,மார்ச்
2009 ல் அவர்களது படையில் சேர்க்கப்பட்டாள், மற்றும் இன்றுவரை அவளை
திரும்பவும் காணமுடியவில்லை. 1977ல் விஜயலட்சுமியை தன்னந்தனியாக
குடும்பத்தை காப்பாற்றும்படி விட்டுவிட்டு அவளது கணவர் சுகவீனம் காரணமாக
இறந்து விட்டார். இந்தக் குடியேற்றத் தொகுதியில் அவள் தனது 15 வயது மகனுடன்
இப்போது வசிக்கிறாள். “இப்போது பருவ மழை ஆரம்பித்து விட்டதால் வாழ்க்கை
குறிப்பாக எங்களுக்கு கடினமாக இருக்கும். சில நாட்களின் முன் எங்கள்
குடிசைக்குள் கணுக்;காலளவுக்கு தண்ணீர் ஏறி விட்டது, எனவே மழை நிற்கும் வரை
தண்ணீரை வாளியால் அள்ளி வெளியே ஊற்றிக் கொண்டேயிருந்தோம். நாங்கள் முதலில்
இங்கு வந்தபோது எந்த ஒரு மரத் தூணும் நாட்டப்பட்டிருக்கவில்லை, நாங்கள்
இந்த தார்ப்போலின் விரிப்புகளின் கீழ் தங்கியிருந்து ஒவ்வொருமுறையும் மழை
பெய்யும்போது அதிலிருந்து தண்ணீரை வெளியே கொட்டிக் கொண்டிருந்தோம்” என்று
புலம்பினாள் அவள்.
இந்தக்
குடியேற்றத் தொகுதியில் 9மாதம் முதல் 17 வயது வரையான வயதுள்ள 7 பிள்ளைகள்
இப்போது உள்ளார்கள். இவர்கள் செப்ரம்பர் 17 முதல் தங்கள் பாடசாலை
வாழ்க்கையை ஆரம்பித்;துள்ளார்கள், சிறிய பிள்ளைகள் அருகிலுள்ள ஆரம்ப
பாடசாலைக்கு செல்லும் அதேவேளை பெரிய பிள்ளைகள் இவர்கள் வீட்டிலிருந்து 2
கி.மீ.தொலைவில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தரம் வரையுள்ள, அம்பலவன் பொக்கணை
கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்துக்கு செல்கிறார்கள். “எங்களுக்கு மின்சாரம்
மற்றும் நீர் வசதி கிடையாது, இந்தப் பகுதியில் உள்ள அநேகமான கிணறுகளில்
குப்பைகள் நிறைந்துள்ளபடியால் அவற்றிலிருந்து எங்களால் நீரை பெற
முடியாமலுள்ளது. ஒரு கிணற்றில் தண்ணீர் இருக்கிறது ஆனால் அதுவும்
சுத்தமாக்கப்படவேண்டி உள்ளது. குடிநீருக்காக 1 கி.மீ.அப்பாலுள்ள
தனியாருக்கு சொந்தமான ஒரு கிணற்றை நோக்கி நடக்க வேண்டியுள்ளது மற்றும்
குளிப்பதற்காக இன்னும் தொலைவில் இராணுவ பரிசோதனை நிலையத்துக்கு அருகில்
உள்ள மற்றொரு தனியார் கிணற்றுக்கு செல்லவேண்டி உள்ளது. அங்கு குளிப்பதற்கு
மறைவிடங்கள் எதுவும் எங்களுக்கு கிடையாது எனவே இருட்டான பிறகே நாங்கள்
அங்கு குளிக்கச் செல்கிறோம். ஏறத்தாழ 200 பேர் வரை இந்த இரண்டு
கிணறுகளையும் பயன்படுத்துகிறோம.; எப்போது எங்களுக்கு முறையான வீடுகள், நீர்
மற்றும் மின்சார வதிகள் கிடைக்கும் என்பதைப்பற்றி எங்களால் எதையுமே எண்ண
முடியவில்லை” என்று விளக்கினார் சுபராஜ் எனப்படும் மற்றொரு
மீளக்குடியமர்வுக்கு வந்திருப்பவர்.
அந்தப்
பகுதியில் உள்ள சிறிய கடையில் மலிவான உபகரணங்கள் போன்றவற்றையும்
சவர்க்காரம் ஷாம்பு போன்றவற்றையும் மக்கள் வாங்கக்கூடியதாக உள்ளது, மற்றும்
சந்திக்கு அருகில் உள்ள மற்றொரு கடையில் சமைத்த உணவுகள் கிடைக்கின்றன.
எனினும் அதற்கு மேலான எதையும்,அதாவது, பாண், அரிசி, காய்கறி, பழங்கள்
போன்றவற்றை வாங்க அவர்கள் 5 – 6 கி.மீ தொலைவில் உள்ள புதுக்குடியிருப்பு
நகரத்துக்குத்தான் போகவேண்டும். இந்த ஆறு குடும்பங்களுக்கும் திருத்தப்பட்ட
ஒரு பழைய மிதி வண்டி மட்டுமே உள்ளது, அதுகூட அவர்களுக்கு பெருஞ் சுமையாகவே
உள்ளது. அந்த சுற்றாடலில் அவர்கள் சேகரித்த பழைய மிதிவண்டியை
திருத்தவேண்டும் என்று முயற்சித்தால்கூட அதற்கான உதிரிபாகங்களை வாங்க
அவர்கள் நகரத்துக்குத்தான் செல்லவேண்டும். மீன்பிடி மற்றும் நாட்கூலி வேலை
என்பன முன்னர் அவர்களது வருமானத்துக்கான முக்கியமான இரண்டு வளங்களாக
இருந்தன. ஆனால் இப்போது அவர்களுக்கு வேலையும் இல்லை அதற்கான உபகரணங்களும்
இல்லை.” நாங்கள் வீட்டுக்கு வந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்
ஆனால் ஒன்றுமில்லாததை தேடி நாங்கள் வந்துள்ளோம், எங்களுக்கு வீடில்லை,
வேலையில்லை, வருமானமில்லை,மற்றும் உண்மையில் எங்களுடைய சொந்தம் என்று
சொல்லிக்கொள்ள எதுவுமில்லை” என்றார் ரமேஸ்.
சமீபத்தில் வலைஞர்மடத்துக்குத் திரும்பியவர்கள்
“எங்கள்
அயற்பகுதியில் உள்ள முந்நூறு முதல் நானூறு வரையான இளம் பையன்கள்; 2009
யுத்தத்தின் கடைசி சில மாதங்களாக எங்களது புனித செபமாலை தேவாலயத்தில்
அடைக்கலம் தேடி இருந்தபோது எல்.ரீ.ரீ.ஈயினரால் கட்டாயமாக அழைத்துச்
செல்லப்பட்டனர். அந்தப் பையன்களை எல்.ரீ.ரீ.ஈ அழைத்துச் செல்வதை
பாதிரியார்கள் தடுக்க முயன்றபோதும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.
அதிகம் காலம் செல்வதற்குள்ளேயே ஒரு பாதிரியார் ஷெல் தாக்குதலில் அகப்பட்டு
அதன்விளைவாக தனது காலை இழந்தார். தாங்கள் புலிகளின் படையில் இணைக்கப்படலாம்
எனப்பயந்து இளம் பையன்கள் கூரைகளுக்குள் ஒளிந்திருந்தார்கள்” என நினைவு
கூர்ந்தார் சமீபத்தில் மீளக்குடியமர்வதற்காக திரும்பிய முல்லைத்தீவு,
வலைஞர்மடம், காரைத்துறைப்பற்று கிராமசேவையாளர் பிரிவை சேர்ந்த ஏழு
பிள்ளைகளின் தந்தையான சிவா என்பவர்.
2009
ஏப்ரல் 18ல் வலைஞர்மடத்தில் உள்ள தனது வீட்டைவிட்டு பலவந்தமாக
வெளியேற்றப்பட்ட சிவா 2012 செப்ரம்பர் தொடக்கத்தில் தனது வீட்டுக்கு
திரும்பியபோது அவர் கண்டது வீட்டின் எலும்புக்கூட்டை மட்டுமே யன்னல்கள்,
யன்னல் நிலைகள், கதவுகள் மற்றும் கூரையிலிருந்த ஓடுகள் மட்டுமன்றி,அறை
நிறைய இருந்த மீன்பிடி வலைகளும் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.” எனது இரண்டு
மீன்பிடி படகுகள் உட்பட 600,000 ரூபாவுக்கு மேல் பெறுமதியான உடமைகளை நான்
இழந்து விட்டேன்” எ னப் புலம்பினார் அவர்.
“2007
ஜனவரியில் புதுவருடத்தின் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ எங்கள் வீடடுக்குவந்து எனது
மகளை படையில் சேர்க்க விரும்பினார்கள். எனது மகன் தனது சகோதரி போவதை
விரும்பவில்லை, அதற்குப்பதிலாக தன்னை அழைத்து செல்லும்படி கூறினான். தான்
சண்டையிடவோ கொலை செய்யவோ விரும்பவில்லை என்றும் அவர்கள் தன்னை செய்யச்
சொல்லும் வேறு எந்த வேலையையும் தான் செய்யத் தயாராக உள்ளதாக அவன் என்னிடம்
சொன்னான். சில மாதங்களின் பின், 12 மார்ச் 2007ல், எல்.ரீ.ரீ.ஈயினருக்காக
பொருட்களை கடத்தி வந்த வேளையில் அவனை இராணுவம் கைது செய்து விட்டதாக
நாங்கள் வானொலி மூலம் கேட்டோம். அவனிடமிருந்தோ அல்லது அவனைப் பற்றியோ
பின்னர் நாங்கள் எதுவுமே கேட்கவில்லை” என்று கண்களில் கண்ணீருடன் அவர்
தொடர்ந்து கூறினார்,அவரது வேதனை இன்னமும் பசுமையாகவே இருந்தது.
2009ல்
நாங்கள் எங்கள வீடுகளை விட்டு வெளியேறிய நாள் இன்னமும் எனக்கு
நினைவிருக்கிறது, நாங்கள் எங்கள் பாடசாலை மைதானத்தை கடக்கும்போது அந்த
மைதானம் இறந்த உடல்களால் குப்பையாகக் கிடந்தது. எல்.ரீ.ரீ.ஈயின் ஊர்திகள்
இறந்த உடல்களை சேகரித்துக் கொண்டுவந்து அவைகளை பாடசாலை மைதானத்தில்
கொட்டுவதையும் நாங்கள் கண்டோம். வெளியேறும்போது துப்பாக்கிச் சூட்டினால்
அல்லது ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்கள்
அவர்களின் பிரியப்பட்டவர்களின் உடல்களை, பாடசாலை மைதானத்தில் போட்டுவிட்டு
போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நான் என்னுடன் தங்கியிருந்த
குடும்பங்கள் அனைத்தையும் எனது இரண்டு படகுகளில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து
புறப்பட்டோம். எல்.ரீ.ரீ.ஈ நாங்கள் செல்வதை விரும்பவில்லை, அவர்கள் எங்களை
தங்களுடன் முள்ளிவாய்க்காலுக்கு பின் தொடர்ந்து வரும்படி கேட்டார்கள்.
யாராவது வெளியேற முயற்சித்தால் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு
நடத்தினார்கள். அதற்கிடையில் இராணுவத்தினர் எங்கள் படகுகளை இடைமறித்து
நிறுத்தி எங்களை புல்மோட்டைக்கு போகும் அவர்களது இழுவை படகுகளுக்கு
மாற்றிவிட்டார்கள். இரு தரப்பினரதும் துப்பாக்கிச் சூட்டுக்கு இடையில்
நாங்கள் அகப்பட்டிருந்தோம், மற்றும் அநேகர் கொல்லப்பட்டு அல்லது படகுகள்
கவிழ்ந்ததினால் நீரில் மூழ்கி இறந்தார்கள். இந்த பயங்கரமான சம்பவங்கள்
அனைத்துக்கும் நாங்கள் சாட்சிகளாக இருந்தோம். நாங்கள் எங்கள் வீட்டை விட்டு
வெளியேறும்போது, எனது பேரப்பிள்ளை பிறந்து மூன்று நாட்கள் மட்டுமே
கழிந்திருந்தது” கனத்த இதயத்தோடு சிவா அவைகளை நினைவுகூர்ந்தார்.
முள்ளிவாய்க்காலுக்கு
திரும்புவதற்காக திம்பிலி; இடைத்தங்கல் முகாமில் குடியமர்த்தப்
பட்டிருப்பவர்கள் தன்னுடைய உடல் முழவதும் திறந்த புண்களை கொண்ட,
சின்னம்மையால் பாதிக்கப் பட்டதற்கான தெளிவான அடையாளங்களை கொண்ட ஒரு சிறிய
பெண், வெறுங்கால்களுடன் நிற்கும் தனது நண்பர்களுடன் சேர்ந்து கைகளில்
தடிகளை ஏந்திக் கொண்டு வெகு மும்முரமாக தங்கள் கொல்லைபுறத்திலிருந்து ஒரு
பாம்பை விரட்டிக் கொண்டிருந்தாள். முல்லைத்தீவு, தம்பிலுவில் ஐ.டி.பி
இடைத்தங்கல் முகாமுக்கு ஒரு சராசரி நாளில்தான் நாங்கள் விஜயம்
செய்திருக்கிறோம் போலத் தெரிந்தது, அங்கு ஏறத்தாழ 250 ஐ.டி.பிக்கள்
இருந்தார்கள், 22 செப்ரம்பர் 2012ன் படி அவர்களில் சிலர்
முள்ளிவாய்க்காலில் இருந்து இங்கு மாற்றப் பட்டவர்கள்,மற்றும் சிலர்
நிலமற்றவர்கள்.
24
ஏப்ரல் 2009ல் முள்ளிவாய்க்கால் கிழக்கிலுள்ள எங்களது வீட்டை விட்டு
வெளியேறியதிலிருந்து நாங்கள் இடம் பெயர்ந்தவர்களாகவே வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். எனது கணவர் காயமடைந்துவிட்டார், முதலில் நாங்கள் அவரை
புல்மோட்டைக்கு கொண்டு சென்றோம்,அதன்பின் எனது முழுக்குடும்பமும் மெனிக்
பாமிற்கு மாற்றப்பட்டது. மெனிக் பாமிலிருந்து, 20 நவம்பர் 2011 ல்
திம்பிலிக்கு கொண்டுவரப்பட்ட முதல் குழுவினரான 70 போகள் நாங்கள்தான், அதைத்
தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட ஐ.டி.பிக்கள் இங்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் இன்னமும் தொடர்ந்து நடைபெறுதால், நாங்கள்
எங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாது என்று எங்களிடம் சொல்லப்பட்டது” என்று
விளக்கினார் வசந்த மாலா.
முள்ளிவாய்க்காலில்
இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு 21 செப்ரம்பர் 2012 ல் டோக்கன்கள்
வழங்கப்பட்டு அவர்களுக்கு சொந்தமான காணிகளை சுத்தமாக்கும்படியும்
அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. எனது கணவர் எங்கள் காணிகளைப் போய் பார்த்து
வந்து தான் கண்டவற்றை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.எல்லா வாகனங்களும்
தங்களது காணிக்கு அருகில் போட்டு எரிக்கப்பட்டு அங்கேயே
குவிக்கப்பட்டிருப்பதாகவும்,மற்றும் எங்கள் வீடு அழிக்கப்பட்டுள்ளதாகவும்
ஆனால் எங்கள் காணி இன்னும் இருப்பதாகவும் சொன்னார். எங்களது காணியை
சுற்றியுள்ள எங்களது உடமைகள் யாவற்றையும் சேகரித்து எங்கள் வளவுக்குள்
வைக்கும்படியும் மற்றும் ;எதையும் அந்தப்பகுதியை விட்டு அகற்றவேண்டாம்
என்று இராணுவமும் எங்களிடம் தெரிவித்தது. நாங்கள் விரைவிலேயே எங்கள்
வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட உள்ளதாக எங்களிடம் கூறப்பட்டது. எனினும்
இங்குள்ள சிலரிடம் காணிகள் இல்லாததால் அவர்கள் இங்கேயே நீடித்திருக்க
விரும்புகிறார்கள். என்றாh வசந்தமாலா.
தற்சமயம்
வருமானம் கிடைக்கும் பிரதான வளமாக உள்ளது நாட்கூலித் தொழில்தான். மற்றும்
அவர்களது இடமாற்றத்தின்போது உலக உணவு திட்டத்தினரால் வழங்கப்பட்ட 9மாத
உலர் உணவு இருப்பையும் அவர்கள் காலி செய்து விட்டார்கள். அவர்கள்
போகும்போது தங்கியிருந்த கொட்டகையை அப்படி விட்டுச் செல்லவேண்டும் என்றும்,
அவர்கள் புறப்பட்டவுடன் மற்றொரு தொகுதி ஐ.டி.பியினர் அங்கு வர இருப்பதாக
அவர்களிடம் சொல்லப்பட்டது. அவர்களுக்கும் யு.என்.எச்.சி.ஆர் இடமிருந்து
25,000 ருபா பணம் மற்றும் தோட்டவேலை உபகரணங்கள் என்பனவும்
வழங்கப்பட்டுள்ளது.
“நாங்கள்
வந்த 5மாதங்களின் பின்னர் இந்தப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலையம்
திறக்கப்பட்டு விட்டது, மற்றும் அநேகமானவர்கள் இப்போது
முள்ளிவாய்க்காலுக்கு திரும்பி விட்டார்கள், அந்தப் பாடசாலையிலுள்ள 5
வகுப்புகளையும் கற்பிப்பதற்கு ஒரு ஆசிரியர் மட்டுமே மீந்திருக்கிறார்,
அதிபர்கூட வெளியேறிவிட்டார்.நாங்கள் முகாமிலிருந்து வீதியை கடந்து அங்குள்ள
கிணற்றில்தான் குளிக்கிறோம், ஆனால் குடிநீருக்காக 1 கி.மீ. தூரத்திலுள்ள
தனியார் கிணற்றுக்கு நடக்க வேண்டும்” என்று தங்கள் நாளாந்த செயற்பாடுகளை
விளக்கினார் லக்சுமி என்பவர்.
“நாங்கள்
முதலில் இங்கு கொண்டுவரப்பட்டபோது, இந்த நிலம் எங்களுக்குத்தான் என்று
சொல்லப்பட்டது, ஆனால் அதற்கான உத்தரவு பத்திரம் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த குடிசைகளை அமைப்பதற்கு நாங்கள் மிகவும் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க
வேண்டியிருந்தது. நாங்கள் பாம்புகள், பூச்சிகள், மற்றும் மழை என்பனவற்றை
சகித்துக்கொண்டு,எங்கள் குடும்பங்களுடன் நாங்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில்
இந்த காட்டு நிலத்தை சுத்தமாக்கியிருக்கிறோம்”;.
திம்பிலியில் உள்ள காணியற்றவர்களின் நிலை
“அவர்கள்
எங்களுக்குக் காணிகள் தருவார்களா?”என்று கேள்வி எழுப்பினார் 2012 பெப்ரவரி
3 ந்திகதி திம்பிலிக்கு இடம்மாற்றப்பட்ட ராணி என்பவர்.” மெனிக் பாமில்
இருக்கும் போது நாங்கள் திருமணம் செய்தோம், மற்றும் நான்
புதுக்குடியிருப்பிலும் எனத கணவர் முள்ளிவாய்க்காலிலுமாக நாங்கள் எங்கள்
சொந்தக் குடும்பத்துடன்தான் வசிக்கிறோம் எங்கள் இருவருக்கும் எதுவித
காணியும் இல்லை.எனவே இங்கு தங்கியிருப்பதையே நாங்கள் பெரிதும்
விரும்புகிறோம். எங்களை இங்கே கொண்டுவந்தபோது நாங்கள் இங்கேயே தங்கலாம்
என்று எங்களிடம் சொல்லப்பட்டது, ஆனால் இது சம்பந்தமாக எந்தவித ஆவணமும்
எங்களுக்கு வழங்கப்படவில்லை. நாங்கள் இங்கு வந்தபோது இது வெறும் காடாகக்
சிடந்தது. நாங்கள் எல்லாவற்றையும் சுத்தமாக்கி ஒரு கிணற்றையும்
வெட்டினோம், ஆனால் அதை சீமெந்தால் கட்டுவதற்கு எங்களிடம் பணமில்லை.
நாங்கள் வருமானத்தை தேடுவதற்காக ஒரு சிறிய கடையும் ஆரம்பித்துள்ளோம், ஆனால்
நாங்கள் இங்கு தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்கப்படுவோமா என்று
நிச்சயமாகத் தெரியவில்லை” என்று,. சமீபத்தில் இறந்து பிறந்த குழந்தையின்
இழப்பினால் ஏற்பட்ட சோகத்திலிருந்து இன்னமும் மீண்டு வராத ராணி
புலம்பினார்.”சமான்களை துர்க்கிக்கொண்டு இடம்விட்டு இடம் அலைந்து நாங்கள்
களைத்துப்போய்விட்டோம்,எங்களுக்கு சொந்தம் என்று சொல்ல ஒரு இடம் வேண்டும்.
அப்படிக் கேட்பது அளவுக்கு அதிகமானதா?”.
(நேர்காணல் செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் நன்றி தேனீ
|
No comments:
Post a Comment