மண்டேலாவின் நாட்கள் --எஸ். ராமகிருஷ்ணன்


.

நெல்சன் மண்டேலா ராபின் தீவுச் சிறைச்சாலையில் இருந்த போது அவருக்கும் சிறையின் தணிக்கை அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் கிரிகோரி என்ற வெள்ளைகாரருக்குமான நட்பை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட Goodbye Bafana என்ற படத்தைப் பார்த்தேன்,
வழக்கமான ஹாலிவுட் படங்களில் ஒன்று தான் இதுவும் என்பது  போலத் துவங்கி மெல்லப் படம் என்னை முழுமையாக உள் இழுத்துக் கொண்டது
நெல்சன் மண்டேலா பற்றி இரண்டு படங்களை முன்பாக பார்த்திருக்கிறேன்  ஒன்று மண்டேலா என்ற டாகுமெண்டரி, மற்றொன்று மார்கன் ப்ரீமென் நடித்தInvictus, கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கியது, ரக்பி விளையாட்டு போட்டியை பற்றிய இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நெல்சன் மண்டேலா இடம்பெற்றிருந்தார்,
மேலும் Long Walk to Freedom என்ற மண்டேலாவின் சுயசரிதையை வாசித்திருந்த காரணத்தால் இப்படத்தில் இடம்பெறும் நிகழ்வுகள், அதன்பின்புல அரசியல், நிறவெறிக் கொடுமை போன்றவற்றை  எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது,

படம் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி  ஆட்சி பற்றி உரத்துப் பேசிய போதும், அடிநாதமாக இரண்டு மனிதர்களுக்கு இடையே ஆன நட்பையே விவரிக்கிறது,
நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகாலச் சிறை வாழ்க்கையில் மூன்று ஜெயில் வார்டர்களுடன் மிகுந்த நட்பாக பழகியிருக்கிறார், ஜேம்ஸ் கிரிகோரி,  கிறிஸ்டோ பிரான்ட், ஜேக் ஸ்வார்ட் ஆகிய அந்த மூன்று ஜெயில் அதிகாரிகளும் வேறு வேறுகாலகட்டங்களில் மண்டேலாவிற்கு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்,
இதில் ஜேம்ஸ் கிரிகோரி  தனது சிறைச்சாலை அனுபவங்களை Goodbye Bafana: Nelson Mandela, My Prisoner, My Friend என தனிநூலாக எழுதியிருக்கிறார், இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்தே படம் உருவாக்கபட்டிருக்கிறது
கிரிகோரி விவரிக்கும் அனுபவங்கள் யாவும் நிஜமானவையில்லை,  அவர் நிறைய கற்பனையாகச் சொல்கிறார் என்று மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆன்டனி சாம்சன் மறுக்கிறார், ஆனால் மண்டேலா தனது நூலில் ஜேம்ஸ் கிரிகோரி பற்றி மிகுந்த வாஞ்சையுடன் தான் நினைவு கொண்டிருக்கிறார்
படம்  தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு அருகில் உள்ள ராபின்தீவு சிறைச்சாலைக்கு கிரிகோரி பணிமாற்றமாகிச் செல்வதில் துவங்குகிறது, ஒரு இளம் அதிகாரி தனது மனைவி பிள்ளைகளுடன் சிறைச்சாலை பணிக்காக கப்பலில் பயணம் மேற்கொள்ளும் அந்தக் காட்சி ரம்மியமாக உள்ளது,
சிறை அதிகாரிகளுக்கு சிறைச்சாலை என்பது ஒரு பணியிடம், கைதிகள் அவர்கள் அடக்கி ஒடுக்கி வேலை வாங்க வேண்டிய மிருகங்கள், யாரோடும் நெருக்கமாக பழகக்கூடாது, கைதிகளுக்கு எவ்விதமான சலுகைகளும் காட்டக்கூடாது என்பதில் சிறைத்துறை கடுமையாக இருக்கிறது
இந்த நிலையில் ஜேம்ஸ் சிறையின் தணிக்கைப் பிரிவு அதிகாரியாக பொறுப்பு  ஏற்றுக் கொள்கிறான், அவனது வேலை சிறைக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் படித்துத் தேவையற்ற தகவல்களை, அரசியல் செய்திகளை தணிக்கை செய்வது,
இந்த சிறைச்சாலையில்ஒரு பகுதியில் மண்டேலா அடைக்கப் பட்டிருக்கிறார், அவருக்கு எவ்விதமான சலுகைகளும் காட்டப்படக்கூடாது என்பதில் தனிக்கவனம் மேற்கொள்ளபடுகிறது,
அதே  நேரம் மண்டேலாவின் Xhosa இன மொழியை ஜேம்ஸ் அறிந்துள்ள காரணத்தால் அவருடன் பழகி அவரது எண்ணங்கள், செயல்களை, உளவு வேலை செய்யும்படியாக உயரதிகாரிகளால் கட்டாயப்படுத்தபடுகிறான். அவனுக்குள் இனவெறி இயல்பாக காணப்படுகிறது, ஆனால் மண்டேலாவின் நட்பு அவனை மெல்ல மாற்றத் துவங்குகிறது,
ஒரு காட்சியில் தணிக்கை செய்யப்பட்ட கடிதம் ஒன்றில் முகவரி தவிர அத்தனை செய்திகளும் வெட்டப்பட்ட கடிதம் ஒன்றை கைதி ஒருவன் பெறுவது நகைச்சுவையான ஒன்று.
சிறைச்சாலையினுள் ஜேம்ஸ் சைக்கிளில் செல்வது,  எதிர்த்து பேசும் கைதி கொட்டும் மழையில் அடிபட்டு கிடப்பது, சிறையில் தனது கணவனுக்கு உயர்பதவி கிடைக்க வேண்டும் என்பதற்கு ஜேம்ஸின் மனைவி மிகுந்த கனவோடு மேற்கொள்ளும் முயற்சிகள், கைதிகளை ஒரக்கண்ணால் கூட பார்க்க கூடாது என்று மறைத்து வளர்க்கபடும் ஜேம்ஸின் மகன், ஜென்னியின் வருகை, மறைத்து எடுத்துவரப்படும தகவல்கள், சிறை அதிகாரிகளின் கொடூர நடவடிக்கைகள், என்று படம் மெல்ல தீவிரம் கொள்ளத் துவங்கியது
படத்தில் என்னை நெகிழ வைத்த காட்சிகள் ஏராளம், குறிப்பாக கேப்டவுனில் நடைபெறும் வெள்ளை ஒடுக்குமுறை, கைக்குழந்தை வைத்துள்ள ஒரு கறுப்பினப் பெண்ணை முறையான அனுமதிசீட்டு இல்லை என்று அடித்து உதைத்து வண்டியில் ஏற்றும் அந்த காட்சியும் இந்த நிகழ்வின் பாதிப்பில் ஜேம்ஸின் மகள் துடித்துப்போய் கவலை கொள்வதும் மனதை விட்டு அகலமறுக்கிறது
இது போலவே நீண்ட காலமாக சிறைக்கதவுகளுக்குப் பின்பாக நின்றபடியே தனது மனைவியுடன் தொலைபேசியில் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்ட மண்டேலா முதன்முறையாக மனைவியின் அருகில் சென்று பேச அனுமதிக்கபட்டவுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் என் மனைவியைத் தொடுகிறேன் என்று ஆசையுடன் கட்டி அணைக்கும் காட்சி, அவரது குடும்பத்துடன் செலவிடும் சில நிமிஷங்கள், அப்போது கண்களில் பீறிடும் சந்தோஷம், நம்மை உணர்ச்சிமயமாக்கின்றன
இது போலவே மண்டேலாவின் மகன் இறந்து போகையில் அவருடன் ஜேம்ஸ் மேற்கொள்ளும் உரையாடலும், ஜேம்ஸின் மகன் எதிர்பாராத விபத்தில் இறந்து போகையில்  மண்டேலா கூறும் ஆறுதலும் அபாரமான ஒன்று
இளம் அதிகாரியாக சிறையில் பணியாற்ற துவங்கிய ஜேம்ஸ் கால மாற்றத்தால் வயதாவதும், அவனது நடை, உடை, பேச்சு யாவும் மாறிப்போய்விடுவதும், அவனது குடும்பம் ஒரு இடத்தில் தங்கி மிச்சமிருக்கும் காலத்தை ஒட்டிவிட ஆசைப்படுவதும், அம்முயற்சிக்கு வரும் தடைகளும் ஒரு நாவலை வாசிப்ப்தைப் போன்ற நிறைவைத் தருகிறது
இரண்டு எதிரெதிர் துருவமாக உள்ள மனிதர்கள் நட்பின் வழியே எப்படி தங்கள் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதை படம் வலிமையாகச் சொல்கிறது.
படத்தில் ஜேம்ஸை விடவும் அவன் மனைவியின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, அவள் எனக்குத் தெரிந்த பலரை நினைவுபடுத்துகிறாள், மேலும் குடும்பத்தின் பொருட்டு ஒரு பெண் எவ்விதமான சிரமங்களை எல்லாம் மௌனமாக எதிர்கொள்கிறாள் என்பது படம் முழுவதும் அழகாக சித்தரிக்கபட்டிருக்கிறது, குறிப்பாக வீடு மாறும் போது அவர் கொள்ளும் இடர்பாடுகள், தனது ஆசைகள் நிறைவேறாமல் போகையில் ஏற்படும் ஆத்திரம் என கதாபாத்திரம் மிகச்சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது
மண்டேலாவும் ஜேம்ஸ் கம்புச்சண்டை போடுவது சற்று செயற்கையாக இருந்தாலும் ரசிக்கும்படியாகவே உள்ளது. ஹாலிவுட்டில் சிறைச்சாலை வாழ்க்கையை பற்றி எத்தனையோ படங்கள் வெளியாகி உள்ளன, அதில் தனித்துவமான படம் Goodbye Bafana
அதீதமான வன்முறை, அதிவேகப் படத்தொகுப்பு, பாலியல் கிளர்ச்சிகள் என்று வழக்கமாக வெளியாகும் ஹாலிவுட் சினிமாவைப் பார்த்து பழகியவர்களுக்கு இப்படம் மிக மெதுவாக, நீரோட்டம் போல இயல்பாகச் செல்வது போரடிக்கவே செய்யும்
ஆனால் முழுமையாகப் படத்தை பார்க்க வேண்டும், படம் முடிந்து சில நாட்களுக்கு அது உங்கள் மனதில் அப்படியே ஈரம் மாறாமல் தங்கியிருப்பதையும், அந்த உரையாடல்கள், இசை, காட்சிகள் மண்டைக்குள் ததும்பிக் கொண்டேயிருப்பதையும் உணர முடியும், அந்த வகையில் இது முக்கியமான படமே.
•••
Nantri:sramakrishnan.com

No comments: