தமிழனை எவரும் அடிக்கலாம்!


தமிழனை சிங்கள இனவெறியர்கள் தான் என்றில்லை தமிழர்களும் அடிக்கிறார்கள்.இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமில்லை.சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் ஒரு மனிதனுக்கு இன்னொருவன் அடித்தல் என்பது அதிகார திமிர் சம்பந்தப்பட்டது. 'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக  அவர்களுக்கு  அடிக்கிறார்கள்' இது உலகெங்கும் நடக்கும் விடயம் தான்.
ஆனால் பசிக்கு உணவுக்காக கையேந்தி நிற்கும் ஒருவனை அடித்து உதைத்து வீதியில் எறிவது நான் அறிந்த வரை தமிழ் சமூகத்திலும் குறிப்பாக  இந்தியச் சமூகத்தில் தான் நடந்திருக்கிறது.


எமது தாயகத்தில் தீண்டாமைப் பேய் தாண்டவமாடிய 1970 க்கு முற்பட்ட காலகட்கட்டத்தில் இவ்வான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.1964ம் ஆண்டு துன்னாலை பகுதியைச் சேர்ந்த சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் அடை மழைக்காக வல்லிபுரப்பகுதியில் இருந்த ஓரு பிள்ளையார் கோவில் வாசலில் ஒதுங்கிய போது அவளுடன் வந்த 4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க அவளது மகன் கோவிலுக்குள் சென்று ஒரு வாழைப்பழத்தை எடுத்துவிட்டான்.அதிகார மமதை கொண்டவர்களின் பார்வையில் சொல்வதானால் திருடி விட்டான்.இன்னும் கொஞ்சம் வெறித்தனமான பார்வையில் சொல்வதானோல் சாதி குறைந்த சிறுவன் கோவிலுக்குள் வந்து வாழைப்பழத்தை திருவிட்டான்.ஒரு வாழைப்பழம் தானே அதை எடுத்தது ஒரு சிறுவன் தானே என்ற மனதாபிமான பார்வையை அதிகார திமிர் அழித்துவிட்டது.அந்த அதிகார வெறியர்கள் அந்த சிறுவனை அடித்து உதைத்து வெளியில் இழுத்தெறிய அவர்களிடம் இருந்து தனது மகனை காப்பாற்ற முயன்ற அந்த கர்ப்பணித் தாயையும் அவர்கள் வெறிபிடித்து தள்ளிவிட்டனர். கற்பூரம் எரிக்கும் கல்லுக்கு மேல் பலமாக விழுந்ததில் அவளது கர்ப்;பம் கலைந்தது.
வலியால் கதறி துடித்த அவளுக்கு உதவி செய்வதற்கு பதிலாக அவளை  கோவிலுக்கு 50 மீட்டர் தொலைவில் இருந்த மரத்தடியில் கொட்டும் மழைக்கு மத்தியில் கதறக் கதற இழுத்துச் சென்று போட்டனர்.இத்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நானும் எனது நண்பர்களும் ஊருக்குள் ஓடிச் சென்று பெரியவர்களை கூட்டிக் கொண்டு வந்த போது அந்தப் பெண் வறிற்றில் இருந்து வெளியே வந்த குழந்தையுடன் உயிரிழந்து கிடந்தாள்.அவளது மகன் தாய் இறந்து தெரியாமல் அவளருகில் மழையில் நனைந்தவாறு அழுதுகொண்டிருந்தான்.
இந்தச் சம்பவத்துக்கு காரணமான நபர்கள் அந்தப் பெண்னும் அவள் குழந்தையும் இறந்துவிட்டது தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமல் அதற்கு காரணமானவர்கள் தாங்கள் தான் என்ற குற்ற உணர்வே இல்லாமல் பிள்ளையாருக்கு தீட்டாகி விட்டது என்று பரிகார பூசை செய்து கொண்டிருந்தனர்.
பின்னர் காவல்துறையினர்  வந்து விசாரித்த போது அந்தப் பெண் மழை வெள்ளத்தில் வழுக்கி விழுந்ததால் குறைப்பிரசவமாகி இறந்துவிட்டள் என்று அவளது அத்தியாயம் முடித்து வைக்கப்பட்டது.அதை தீர விசாரிக்கவும் நடந்த உண்மைக்கு சாட்சியான எங்களிடம் வாக்கு மூலம் பெறவும் யாரும் முயலவில்லை.இன்றைக்கும் அந்தக் கோவிலுக்குஅருகாக செல்லும் போது அந்தப் பெண் அன்றைக்கு எழுப்பிய அவலக்குரலும் தாய் இறந்தது கூடத் தெரியாமல் அழுது கொண்டிருந்த அவளது மகனின்   நிலையும் என் நினைவுக்கு வரும்.
கடந்த வாரம் இலண்டனில் உள்ள ஒரு பிரபலமான சைவக் கோவிலில் உணவு கேட்டுச் சென்ற தமிழ் இளைஞன் ஒருவன் கோவிலில் இருந்தவர்களால் அடித்து உதைத்து வீதியில் தூக்கி எறிப்பட்டுள்ளார்.இரத்தம் ஒழுக வீதியல் மயங்கிக் கிடந்த அவரை பிரித்தானிய பெண் ஒருவர் கொடுத்த தகவலால்  காவல்துறையினர் வந்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவர் கோமா நிலையில் இருப்பதை  ஊடகங்கள் வாயிலாகவும் நண்பர்கள் மூலமும் தெரிந்து கொண்ட போது இந்தச் சம்பவமே எனக்கு நினைவுக்கு வந்தது.
பசிக்கு உணவுகேட்ட  ஒரு மனிதனை அடித்து உதைப்பது என்பது எவ்வளவு அயோக்கியத் தனமானது?.அவன் குடிகாரனாக இருக்கலாம்,தகாத வார்த்தையில் பேசி இருக்கலாம்.அதற்காக அவனை அடித்து உதைப்பதும் வீதியில் தூக்கி வீசுவதும் அதிகாரத் திமிர் அன்றி வேறு எதுவும் இல்லை.கோவிலில் ஒருவர் தகராறு செய்கிறார் என்றால் காவல்துறையினரை உதவிக்கு அழைத்திருப்பதுதானே முறை? காயம்பட்டு  இரத்தம் ஒழுக மயங்கிக் கிடந்த ஒருவனை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற மனிதாபிமானம் இல்லாமல் போனதற்கு அதிகாரத் திமிர் இல்லாமல் வேறென்ன காரணம் இருக்க முடியும்.அகங்காரத்தை ஒழிக்கும் இடம் தான் கோவில் என்று போதனை செய்யும் நபர்களே அகங்காரத்தை மொத்த குத்தகைககு எடுத்தவர்களாக இருப்பது தானே காலகாலமாக தொடர்கிறது.
இந்த ஆலயம் கடந்த காலத்தில் தாயகத்தில் ஏதிலிகளாக இருக்கும் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறது என்பது உண்மைதான்;.அதற்கெல்லாம் கரும்புள்ளி வைப்பது போல் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியது ஏன்?
இந்த ஆலயம் மக்களால் தெரிவு செய்ப்பட்ட நிர்வாகத்தினாலே நிர்வகிக்கப்படுகிறது.கடந்த முறை இந்த நிர்வாகத் தேர்தல் நடந்த போது  தமிழக  தேர்தல் தோற்றுப் போகும் அளவுக்கு உள்ளக அரசியல் சித்துவிளையாட்டக்கள் அரங்கேறியதாக ஒரு சாரார் அப்போதே குற்றம் சாட்டியிருந்தனர்.
இன்று இந்த சம்பவத்தை அந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது அது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி.
பசித்த ஒருவனுக்கு உணவளிக்க மறுத்த (அவனில் ஆயிரம் பிழைகள் இருந்தாலும் )அவனை அடித்து உதைத்து வீதியில் தூக்கி எறிந்த நபர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று தற்போதைய ஆலய நிர்வாகிகளை உடனடியாக பதவி விலகுமாறு லண்டன் தமிழ் மக்கள் கோரவேண்டும்.
ஆலயங்கள் அகங்காரமும் அதிகாரத் திமிர் பிடித்தவர்களின் கூடாரங்களாக மாறுவதை எத்தனை நாளைக்குத்தான் நாம் அனுமதிக்கப் போகிறோம்?
நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே!
நன்றி தேனீ   
 'அழுவதும் தொழுவதும் அடங்கிக் கிடப்பதும் எமது தலைவிதியல்ல-
எழுவதும் எதிர்த்துநிற்பதும் தடைகளை தகர்த்து முன்னேறுவதும்
காலம் எமக்கிட்ட கட்டளை'
http://sivasinnapodi.wordpress.com/

1 comment:

Unknown said...

இதை பிரசுரம் செய்ய தமிழ்முரசுக்கு தகுதியிருக்கா என்பதை ஆசிரியர் குழு சிந்திக்க வேண்டும் .கருத்து எழுதமுடியாமல் தடை செய்துள்ள தமிழ்முரசு சமுக சீர்கேடு பற்றி கவ‌லைப்படுகிறது....கலிகாலம்....