ஸ்ருதிலயா சங்கீத அக்கடமியின் ராக சங்கமம் 2012


இணுவையூர் - திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்


ஜூலை மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சிட்னி சில்வவோட்டர் (Silver Water) எனும் இடத்தில் அமைந்திருந்த பகாய் (Bahai) சென்ரருக்கு மக்கள் அணி அணியாகத் திரண்டு வந்து கொண்டிருந்தனர். மாலை 5.45 ஐக் காட்டியது கடிகாரம். மண்டபத்தினுள்ளே நுழைந்ததும் இடப்புறம் படிக்கட்டுகளுக்கு அருகிலே நவீன சித்திரத்தில் அமைந்த பிள்ளையார் ஓவியம். அதற்கு முன்னே மெழுகுவர்த்தி விளக்கு. பிள்ளையாரின் பின் புறம் அழகிய துணி விரிப்பால் அலங்கரிக்கப்பட்ட மேசை. அதன் மீது வீணை, தபேலா, மிருதங்கம் ஆகிய இசைக் கருவிகள். அவற்றின் அழகை மேம்படுத்த அவற்றுக்கிடையே மெழுகுவர்த்தி விளக்குகள். படிகளில் ஏறி மேலே சென்றதும் பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி சந்தனம் குங்குமம் மலர்களும் இட்டு அற்புதமான உணர்வுகள் பொங்க “ராக சங்கமம்”; இதழைத் தந்து தமிழும் சைவமும் மணக்க மணக்க வரவேற்றனர் ஸ்ருதிலயாவின் வரவேற்புக் குழுவினர்.





மண்டபத்தினுள்ளே சென்று இருக்கையில் அமர்ந்ததும் மேடையிற் தொங்கிய திரைகளின் பின்னே சுருதியின் இசை, சுருதியுடன் வாத்திய இசைகளும், மாணவர் குரல் இசைகளும் இணைகின்றனவா என்ற ஒத்திகை. மெல்லத் தவழ்ந்து செவிகளிற் புகுந்த அந்த இசை வெள்ளம் திரை விலகாதா என்ற ஆர்வத்தை மேலும் தூண்டிக் கொண்டிருந்தது.. 



ஒரு கணம் அரங்கத்தில் நிசப்தம்! அறிவிப்பு தொடர்கின்றது. திருமதி மாலதி சிவசீலன் அவர்களின் ஸ்ருதிலயா சங்கீத அக்கடமி பெருமையுடன் வழங்கும் 'ராக சங்கமம்” நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் வருக! வருக! என்று அன்புடன் வரவேற்கின்றோம். இது ஸ்ருதிலயா சங்கீத அக்கடமியின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி நிகழும் விசேட இசை நிகழ்வாகும். 
மண்டபம் அதிர்ந்த கரகோ~த்துடன் திரை விலகுகின்றது. கண்ணுக்குக் குளிர்மையான பச்சை வண்ண ஒளி அரங்கத்திற் பரவுகின்றது. மேடையின் பின்னே தொங்கிய திரையில் அந்த வண்ண ஒளித்தெறிப்பில், நிலா ஒளியில் பச்சைப் புற்தரைமேல் இருப்பது போல வீணையைக் கையில் ஏந்திய கலைமகளின் திருவுருவம். அதனிருபுறமும் தொங்கிய திரைகளில் இசைக் கருவிகளின் தோற்றம். அரங்கத்தின் வலது இடது புறங்களில் அணிசெய் கலைஞர்கள். நடுவில் படிமுறையில் அமைந்த மேடையில் மாணவ மாணவிகள்.



“தோடுடைய செவியன் விடை ஏறியோர் தூவெண் மதி சூடி......." மாணவ மாணவிகள் பாடுகின்றார்கள். ஆ! கடவுளே! கண்கள் பனித்தன நெஞ்சம் விம்மியது. மனதில் நன்றி உணர்ச்சி பொங்கியது. இது அல்லவோ சமயப் பற்று. இது அல்லவோ தமிழ் பற்று.

இசை நிகழ்வுகளை, கச்சேரிகளை ஆரம்பிக்கும் இராகங்களில் ஒன்றான நாட்டை இராகத்தில் இசை ஆராதனை நடைபெற்றது. இருபது மாணவிகளும் ஐந்து மாணவர்களும் இக் குழுவில் அடங்கியிருந்தனர்;.



இந்திய சங்கீத சரித்திரத்திலேயே நமக்கு கிடைத்துள்ள ராக, தாள அமைப்புடன் கூடிய உருப்படிகளில் மிகப் பழமையானது தேவாரம் ஆகும். அத்தகைய சிறப்புப் பொருந்திய, தமிழர்களின் பாரம்பரிய இசையான தமிழிசையில், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிய பன்னிரு திருமுறைகளில் முதலாம் திருமுறையில் அமைந்த முதலாவது தேவாரமாகிய பண்-நட்டபாடை, இராகம்-நாட்டையில் அமைந்த 'தோடுடைய செவியன்” என்ற தேவாரத்துடன் அன்றைய “ராக சங்கமம்” நிகழ்ச்சி இனிதே ஆரம்பமாகியது. 



இதையடுத்து 'ஓம்” என்கின்ற பிரணவ மந்திர ஓம்கார இசையோடு தொடங்கி “ஏகதந்தாய வித்மகே வக்ரதுண்டாய தீமகி ...." என்ற ஸ்லோகத்தை விதம் விதமாகப் பாடி, “மகா கணபதிம்” என்ற உருப்படியுடன் கலந்து புதிய கலவையாகத் தந்தார்கள். இதன் பின் "ஜெகதானந்தகா" என்ற பஞ்சரத்தின கீர்த்தனையின் ஸ்வர சாகித்தியங்களை மேலைத்தேய, கீழைத்தேய இசைக்கருவிகளுடன் மாறி மாறிப் பாடிய பாங்கும், கடைசிச் சரணத்தின் சாகித்தியத்தைச் சுலோகம் போன்று சொல்லிப் பின் பாடிய முறையும் மிக்க ரசிக்கும் படியாக அமைந்திருந்தது.



இந்த நிகழ்விற்கு மிருதங்கம், வயலின், கடம், முகர்சிங், கஞ்சிரா, தபேலா வாசித்த இசைக்கலைஞர்கள் தவிர Base Guitar , Acoustic Guitar , Octopad and Sound FX Synthesiser  ஆகிய இசைக் கருவிகளை இசைத்த மாணவ மணிகள் ஸ்ருதிலயாவின்  மாணவமணிகள் என்பது ஆச்சரியமான உண்மை. மேலைத்தேய கீழைத்தேய இசைக்கருவிகளுடன் நடைபெற்ற இந்த இசை ஆராதனையின் சுருதிலய ஒருங்கிணைப்பு, குரல்களின் ஒற்றுமை, அவை ஆற்றுகைப் படுத்தப்பட்ட சிறப்பு, பாடல்களை மூழ்கடிக்காத வண்ணம் வழங்கப்பட்ட வாத்திய இசை, அவற்றின் நெறியாள்கை அனைத்தும் மிக மிக அற்புதம்.





இதன் பின் அரங்கேறிய நிகழ்வுகள் பன்னிரண்டு இராகசக்கரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பன்னிரண்டு மாணவ மாணவிகளின் குழுக்களின் நிகழ்வாக அமைந்திருந்தது. 

அந்தப் பன்னிரண்டு இராகசக்கரங்களின் பெயர்களும் பொருளும்:

இந்து - சந்திரன் - ஒன்று
நேத்திர - கண் - இரண்டு
அக்னி - நெருப்பு - மூன்று
வேத - வேதம் - நான்கு
பான - அம்பு - ஐந்து
ருது - காலம் - ஆறு
ரி~p - முனிவர் - ஏழு 
வசு - அட்டவசுக்கள் - எட்டு
பிரம்மா - பிரம்மன் - ஒன்பது
திசி   - திசை   - பத்து 
ருத்ர - சிவகணங்கள் - பதினொன்று
ஆதித்திய - சூரியன் - பன்னிரண்டு




மாணவர்களின் தரங்களையும், வயதையும் கருத்திற்கொண்டு பாடசாலைகளில் இருப்பது போல முதலாம் தரத்தில் இருந்து பன்னிரண்டாம் தரம்வரை படிப்படியாக முன்னேற்றும் வகையில் இந்தப் பகுப்பை மாலதி அமைத்திருக்கின்றார் என்பது என்னுடைய கணிப்பு. அவர் பாடசாலையில் கற்பித்த அனுபவம் உள்ள ஆசிரியர். இலங்கைப் பாடசாலைகளில் சங்கீதம் ஒரு பாடமாக உள்ளது. தவிர வட இலங்கைச் சங்கீத சபைப் பரீட்சையும் உண்டு. இவற்றிற்கு பாடத்திட்டங்களும் உண்டு. இந்தப் பாடத் திட்டங்களையும் கருத்திற் கொண்டு மாலதி தனது மாணவ மாணவிகளுக்கு சங்கீதத்தைக் கற்பித்து வருகின்றார் என்று எண்ணுகின்றேன். ஸ்ருதிலயா மாணவர்களின் இசை நிகழ்வைப் பார்த்துக் கொண்டு இருந்த போது இலங்கையில் ஒரு தரமான தமிழ்ப் பாடசாலையின் இசை விழாவில் இருப்பது போன்ற உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது. 





ஸ்ருதிலயாவின் மாணவ மாணவிகள் கீதம், வர்ணம், நவராகமாலிகா வர்ணம், பஞ்சரத்தினக் கீர்த்தனை, அப்பையா தீட்சிதர், பட்டணம் சுப்ரமணிய ஐயர், தியாகராஜ ஸ்வாமிகள், முத்துஸ்;வாமி தீட்சிதர், சுவாதித் திருநாள் மகாராஜா போன்றோரின் கர்நாடக சங்கீத உருப்படிகளோடு அழ வள்ளியப்பா சுப்பிரமணிய பாரதியார், ராஜாஜி, கல்கி கிரு~;ணமூர்த்தி, பாபநாசம் சிவன், நாயன்மார், அருணகிரிநாதர் ஆகியோரின் தமிழிசைப் பாடல்களையும் பாடி, தமிழுக்கும் தமிழ் இசைக்கும் பெருமை சேர்த்து உள்ளனர்.

தமிழ்ப் பாடல்களை, எல்லோரையும் கவரும் வண்ணம் மிக அழகாகக் குழந்தைகளால் பாட முடியும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் சாதித்துக் காட்டி இருக்கின்றார் திருமதி மாலதி சிவசீலன்.




பாடல்களைப் பிழையற உச்சரித்துப் பாடுவதற்கும் தமிழ் ஒலிகளை மிகச் சரியாக இசையோடு ஒலிப்பதற்கும் மாணவ மாணவிகள் நன்கு பயிற்றப் பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பஞ்சரத்தினக் கீர்த்தனை உட்பட எல்லாப் பாடல்களையும் அற்புதமாக அவர்கள் மனனம் செய்திருந்தார்கள். புலம் பெயர்ந்த நாடொன்றில் வாழும் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களாக அவர்கள் தோன்றவில்லை. தமிழ்மொழி மூலம் கற்கும் மாணவர்களாகவே தோன்றினார்கள்.

தமிழினம் அழிந்தது, அழிவது போதாது என்று தமிழையும், சைவத்தையும் வளர்க்கின்றோம் என்று கூறிக்கொண்டு தமிழையும் சைவத்தையும் கொலை செய்பவர்களுக்கு மத்தியில் எந்தவித பறைசாற்றலும் இன்றி தமிழையும் சைவத்தையும் சிறப்பித்தது இந்த நிகழ்வு. 

“கரைப்பார் கரைத்தாற் கல்லும் கரையும்" என்றோர் பழ மொழி உண்டு. மாலதி ஒரு சிறந்த இசை கற்பிக்கும் ஆசிரியர் என்பதை ஸ்ருதிலயா சங்கீத அக்கடமியின் ராகசங்கமம் நிகழ்வு உணர்த்தி இருக்கின்றது. “பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்” “கோலாடுவோம்” என்ற பாடல்களையும், “வருவாய் வருவாய்" “ரகுபதி ராகவ ராஜாராம்" என்ற பஜனைகளையும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் தலையாட்டி ரசித்தார்கள். “குறையொன்றும் இல்லை” “காற்றினிலே வரும் கீதம்” 'தீராத விளையாட்டுப் பிள்ளை" “என்னதவம் செய்தனை" போன்ற பாடல்களை அதன் அடிப்படை கெடாமல், மெருகு குன்றாமல், மாணவர்களின் தரத்திற்கு ஏற்ப அவர்களால் பாடக்கூடிய, இலகுவான சங்கதிகளை மட்டும் மிகச் சுத்தமாகப் பாடுவதற்கு பயிற்றுவித்திருந்ததைக் காண முடிந்தது.





இவை எல்லாவற்றிக்கும் மேலாக அவர்கள் அளித்த இசைவிருந்தில் சுருதி சுத்தம், லய சுத்தம், மாணவ மாணவிகளின் ஒருங்கிணைந்த குரல்கள், எத்தனை மாணவ மாணவிகள் குழுவில் இருந்தாலும் அதில் தனி ஒருவரின் குரல் மேலெழும்பவில்லை. சங்கதிகளில் தெளிவு, பாடல்களில் இனிமை, இசைக்கருவிகளின் ஒத்திசைவு, பாடல்களைத் தொடங்கும் அழகு, அவற்றை நிறைவு செய்யும் சிறப்பு எல்லாம் மிகக் கச்சிதமாக அமைந்து இருந்தன.




இந்த நிகழ்வில் இரண்டு குழு மாணவ மாணவிகள் வீணை வாசித்தார்கள். எல்லோருடைய வீணைகளும் மிகக் கவனமாக சுருதி சேர்க்கப்பட்டு இருந்தன. வாசிக்கும் போது எல்லாவீணைகளின் ஒருங்கிணைந்த லயம் வீணைவாசிப்பை ரசிக்க வைத்தது. “லிங்கா~;டகம்” “குறையொன்றும் இல்லை” “சிட்டி பாபுவின் நோட்ஸ்” ஆகியன மிகச் சிறப்பாகவும் கேட்பதற்கு மிக இனிமையாகவும் அமைந்து இருந்தன.


 இந்த நிகழ்விற்கு அணி செய் கலைஞர்களாக விளங்கிய கோபதிதாஸ் - வயலின், ஜனகன் - மிருதங்கம்;, ஜெய்ராம் ஜெகதீசன் - கஞ்சிரா, கடம், முகர்சிங், மதன் - தபேலா ஆகியோர் தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்து இருந்தனர். அனுபவித்து வாசித்தனர். இவர்களுக்கு நாம் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வகையில் நவீன் -  Base Guitar  , நிரோஷன் - Acoustic Guitar,  லக்ன் Octopad &  SoundFX நிக்கோல் - Synthesiser   ஆகியோரின் வாசிப்பும் அமைந்து இருந்தது.



மாணவர்களின் உடை தமிழர்களின் பண்பாட்டுக்கு ஏற்ப பாரம்பரிய முறைகளில் இருந்து வழுவாமல் மிக்க அழகாக தலை வாரிப் பூச்சூடி, நெற்றித் திலகம் வைத்து, நெற்றிச்சுட்டியும் அணிந்து, பட்டு பாவாடை, தாவணி, சேலை உடுத்து, ஒட்டியாணம் பூண்டு வண்ண மயில்கள் எனப் பாவையர்களும், குருத்தா சால்வையுடன் பட்டுவேட்டி அணிந்து இளவல்களும் வண்ணமுறக் காட்சியளித்தனர். மிகச் சிறந்த ஒளி அமைப்பால் கண்ணை உறுத்தாத நிறங்களால் அரங்கத்தில் இருந்தபோது பாவையர்களும், இளவல்களும் சிறந்த கலைஞன் வடித்த சிற்பங்கள் போலத் தோற்றம் அளித்தனர். சிறந்த ஒலி அமைப்பால் மாணவ மாணவிகளின் குரல்களும் வாத்தியக்கருவிகளின் இசைகளும் பிசிறில்லாமற் சமநிலையோடு காணப்பட்டன.

ஸ்ருதிலயா மாணவ மாணவிகள் குருபக்தி மிக்கவர்களாகவும்  காணப்பட்டனர். அரங்கத்தில் இருந்தபடியே பேசிய நயன பாi~களும் மாலதி கண்களால் இடும் கட்டளைகளை மாணவர்கள் சிரமேற்கொண்டு நடந்த அழகும் அதை நன்கு தெளிவு படுத்தியது.


முற்காலத்தில் கல்வியைக் கற்பதற்கு முன்னும், கற்பிப்பதற்கு முன்னும் குருவும் மாணவர்களும் சேர்ந்து 

ஓம் ஸஹ நாபவது ஸஹநௌபுனக்து
ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதிதமஸ்து
மா வித்விஸாவஹை
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!  


இதன் பொருள்

நம் இருவரையும் கடவுள் காப்பதாக 
நம் இருவரையும் நலமாய் வைப்பதாக 
நாம் இருவரும் இணைந்து திறமையாகச் செயல் புரிவோமாக
நம் கல்வி முழுப்; பயனுளதாகுக
நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காது இருக்க
ஓம் அமைதி! ஓம் அமைதி! ஓம் அமைதி!

என்னும் செய்யுளை ஓதி இறை வணக்கம் செய்து வகுப்பை தொடங்குவது வழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றது.



குரு மாணவர்களிடையே நல்லுறவை, நல்லிணக்கத்தை உள்ளத்தில் உறுதியாக வைத்துக் கொள்ளவும், உள நலனைச் சீராக வைத்துக் கொள்ளவும் இச் செய்யுளை அன்றாடம் ஓதுவது உறுதுணையாக, அருமருந்தாக அமைந்து இருந்தது. பெற்றோரையும், குருவையும், கடவுளையும் பக்தியோடு பூஜித்து நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவற்றிற் சிறந்து விளங்குபவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் கிட்டும். அவர்களுக்கே கலைகள் சித்;திக்கும் என்பது எமது முன்னோர்களின் நம்பிக்கை.



ஒருவர் நுண்கலைகளை கற்பதனால் நல்ல பண்பாளராக உருவாகப் பெறுவார். அறிவாற்றல் மேம்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும். மென்மையான இனிய தோற்றம் உருவாகும். தனக்குள் அழகுணர்வு இசையுணர்வு உள்ளவர்களுக்கு இறையுணர்வு இயற்கையாக அமையப் பெற்று இருக்கும். கொடிய எண்ணங்கள் உள்ளத்திற் தோன்றாது. அவர்களால் கொடிய செயல்கள் செய்ய இயலாது. பிறரால் தனக்கு ஏற்படும் கொடுமையையும், துயரையும் தாங்கிக் கொள்ளும் உளப்பாங்கும், வலிமையும் இயற்கையாகவே அமைந்துவிடும்.

ஸ்ருதிலயா சங்கீத அக்கடமி இத்தகைய சிறந்த மனிதர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை உதயமாகி உள்ளது.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்"

இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்




No comments: