போன்ஸாய் மரங்கள்இன்று உலகில் பல சிறுவர்கள் ‘சிறுமுது அறிவர்’ அதாவது Child Prodigy என்று போற்றப்படுகின்றனர். இரண்டு வார்த்தைகளுமே புரியாத புதிராகத் தோன்றும். புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், “குழந்தை மேதை” என்று சொல்லலாம். இவர்களை, “சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குண்டான அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர்” என்று விக்கிபீடியா வரையறுக்கிறது. ”அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் சிறுவர்களே சிறுமுது அறிவர்” என்பது இன்னொரு வரையறை. இதில் சிறுவர்கள் என்பதற்கான அதிகபட்ச வயது எல்லை எதுவென்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.
12 வயதுச் சிறுமி அமெரிக்க அல்லது இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள்; 10 வயதுச் சிறுவன் பி.ஹெச்டி முடித்தான்; 8 வயதிலேயே மைக்ரோஸாஃப்ட் தேர்வுகள் எழுதி பட்டயம் பெற்றார் என்றெல்லாம் செய்திகளில் வருவார்களே இவர்கள்தான் இந்தக் குழந்தை மேதைகள்!
ஆனால், கூர்ந்து கவனித்திருந்தீர்களானால், ஒரு விஷயம் புலப்பட்டிருக்கும். செய்திகளில் பரபரப்பாகப் பேசப்படும் இந்தக் குழந்தை மேதைகளில் அநேகர்களும், பெரியவர்களானதும் இதுபோல பேசப்படும்படியான திறமையான செயல்கள் எதுவும் செய்திருப்பதாக அறியப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த வயதில், ஒரு சராசரி மனிதருக்குரிய இயல்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதாவது, “Child prodigy”க்கள் எல்லாருமே பிற்காலத்தில் ஜீனியஸ்களாக ஆவதில்லை.
சிறு வயதில், தன் வயதுக்கு மீறிய திறமையுடன் செயல்பட்டதாகச் சொல்லப்படும் இவர்கள், அதே ஆர்வம் மேலும் தொடர்ந்திருந்தால், பெரியவர்களானதும், எவ்வளவு பெரிய புகழ்பெற்ற திறமைசாலிகளாக வந்திருக்க வேண்டும்? புகழ் பெறவில்லையென்றாலும், தன் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாவது கண்டிருக்க வேண்டுமே! சிறு வயதிலேயே சாதனைகள் செய்ய முடிந்த இவர்களால், பெரியவர்களானதும் அதே போல சாதனைகள் புரிவதற்கு என்ன தடை?


இங்கேதான் இந்த “மேதை”களின் ”மேடைக்குப் பின் நடக்கும்” (behind the screen) நிகழ்வுகளின் சூட்சுமங்கள் இருக்கின்றன.
பிறந்த குழந்தைகள் பொதுவாக 4 மாதத்தில் குப்புற விழும், 6 மாதத்தில் தவழும், 9 மாதத்தில் நிற்கும், 12 மாதத்தில் நடக்கத் தொடங்கும். அரிதாகச் சில குழந்தைகள் இதற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ இச்செயல்களைச் செய்யும். அப்படி ஒரு குழந்தை, 9 மாதத்திலேயே நடக்க ஆரம்பித்துவிட்டால், பெற்றவர்களுக்குப் பெருமையாகவே இருக்கும். ஆனால், 9 மாதத்தில் நடக்க ஆரம்பித்து விட்டது என்பதற்காக, 2 வயதிலேயே அக்குழந்தை மாரத்தான் ஓட வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்த்தால்?? இதுதான் பெரும்பான்மையான “Child prodigy”க்கள் விஷயத்தில் நடக்கிறது.
சிறுவர்களுக்கு இயல்பாகவே புதிய விஷயங்களில் பெரும் ஆர்வம் இருக்கும். அதைச் சரியான முறையில் ஊக்குவித்தால், அவர்களின் திறமை அதில் பெருகும். ஒருசில குழந்தைகள் அந்த ஆர்வத்தைத் தக்கவைத்து, ஊக்குவிப்பைச் சரியான முறையில் கைகொண்டு, தம் வயதுக்கு மீறிய வகையில் சில சிறு சாதனைகள் புரிகின்றனர்.
இதன்பின்னர்தான் அப்பெற்றோருக்கு, தம் குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும் என்ற ஆவல் எழுந்து, அக்குழந்தையை தன் சக்திக்குமீறி உந்திச் செயல்படத் தூண்டத் தொடங்குகின்றனர். அக்குழந்தைக்கு முதலில் தானாக ஆர்வம் ஏற்பட்ட ஒரு விஷயம், வேறொருவரால் வலியத் திணிக்கப்படும்போது, அந்த ஆர்வம் வடிந்து, வேண்டாவெறுப்பாக அதில் ஈடுபடுகின்றனர். பின் ஒரு காலத்தில் முழுமையாக அதில் இருந்து விடுபட்டு விடுகின்றனர்.
இக்குழந்தைகளின் நிலையை போன்ஸாய் மரங்களுடன் ஒப்பிடலாம். ஓங்கி உயர்ந்த மரங்களாக வளர்ந்திருக்க வேண்டியவற்றை, அழகுக்காக, பெருமைக்காக, சிலசமயம் பணத்துக்காகவும், அதன் இயல்பான வளர்ச்சியைக் கத்தரித்து, கத்தரித்து, குறுக்கி, ஒரு தொட்டிச்செடியைவிடச் சிறிதான குறுமரமாக – போன்ஸாயாக ஆக்கிவிடுவர். அதேபோல, இக்குழந்தைகளின் வயதுக்கேயுரிய இயற்கையான ஆர்வங்கள் கத்தரிக்கப்பட்டு, சிறுவயதிலேயே சாதனைகளைச் செய்யத் தூண்டப்படுவதால், முறையான வளர்ச்சி பாதிக்கப்பட்டு போன்ஸாயைப் போல மனசுக்குள் குறுகிவிடுகின்றனர்.
பொதுவாகவே, தற்காலங்களில் “குழந்தை மேதைகள்” என்று புகழப்படுபவர்கள் ஈடுபடும் துறைகள் எவையெவை என்று பார்த்தால், அவை கணிதம், இசை, செஸ், கணினி போன்ற நினைவுத் திறன் அதிகம் தேவைப்படக்கூடிய, “விதிமுறை-சார்ந்த” (rule based) துறைகளே அதிகமாக இருக்கும். அதாவது, ஞாபக சக்தியைத் தகுந்த முறையில் பயன்படுத்தி வெற்றி பெறக்கூடிய துறைகளில்தான் சிறுமுது அறிவர்கள் தற்போது அதிகம் காணப்படுகின்றனர். தனித்திறமை தேவைப்படும் இலக்கியம், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் குழந்தை மேதைகள் மிக அரிதாகவே இரு(ந்திரு)க்கின்றனர்.
இவர்களில் சிலர், பிற்காலத்தில் தாம் சார்ந்த துறையில் கற்றுத் தேர்ந்து, பெரிய நிறுவனங்களில் பெரும் பொறுப்புகளிலும், பதவிகளிலும் அமர்ந்தாலும், தன் அறிவுத் திறமையைக் கொண்டு புதிய ஆய்வுகளோ, கண்டுபிடிப்புகளோ செய்வதில்லை.
சில குழந்தை மேதைகளோ, வளர வளர ஆர்வமிழந்து, வேறு பாதைகளில் திரும்பிவிடுகின்றனர். இதற்குக் காரணம், அவர்களின் இயல்பான ஆர்வம் ஆரம்பத்தில் கொண்டுவந்த புகழ் வெளிச்சத்தின் மகிழ்ச்சியில் திளைத்த அவர்களின் பெற்றோர்கள் அவர்களை “இன்னும், இன்னும்” என்று கட்டாயப்படுத்த முயன்றது ஒரு கட்டத்தில் எதிர்வினை புரிந்திருக்கலாம். அல்லது, அறிவில் சிறந்திருந்தாலும், உள்ளத்தில் அவர்கள் சராசரி சிறுவர்களாகவே இருப்பதால், நண்பர்களைத் தேடும்போது, இவர்களின் அபரிமித அறிவைக் கண்டு பயந்து இவர்களைச் சக வயதினர் ஒதுக்கவோ, பொறாமையால் வெறுக்கவோ செய்யும்போது மனபலம் இழந்து, அதற்குக் காரணமான தன் அறிவை வெறுக்கின்றனர்.
இது கல்வி போன்ற விஷயங்களில் மட்டுமல்ல, இன்று பல தொலைக்காட்சிகளில் நடக்கும் ஜூனியர் சிங்கர்/டான்ஸர், இன்னபிற போட்டிகளுக்கும் பொருந்தும். எத்தனை ஷோக்களில், குழந்தைகள் பாடும்போது, அக்குழந்தையின் பெற்றோர் நகம்கடித்து டென்ஷனுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம்? இப்போதெல்லாம், டிவி ஷோக்களில் பங்குபெறும் குழந்தைகளைப் பார்க்கும்போது, ஆச்சர்யத்தைவிட பரிதாபம்தானே மேலோங்கிறது. ஏன்? இந்த போட்டியில் பங்குபெற இந்தக்குழந்தை தன் வயதுக்குரிய இனிமையான அனுபவங்களில் எதனையெல்லாம் இழந்திருப்பாள்/ன், எவ்வளவு தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்கும் என்ற எண்ணங்கள் மேலோங்குவதால்தானே?
ஒரு சிறுவன், ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் திறமை கொண்டிருந்தான் என்றால், அதற்கான போட்டிகளில் அவன் தன் வயதுக்குரிய பிரிவுகளில் மட்டுமே பங்குபெற முடியும். 10 வயதுச் சிறுவன் 20 வயதானவர்களுக்கான போட்டியில் பங்குபெற முடியாது. ஏன்? உடல்ரீதியாகத் தனக்குச் சமமாக உள்ளோருடன் மட்டுமே அவன் போட்டியிட்டு தன் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தானே?
அவ்வளவு ஏன், பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க ஒரு குறிப்பிட்ட வயதை நிர்ணயித்திருப்பது, பாடங்களைக் கிரகிக்கவும், எழுதவும் உடல் வளர்ச்சியோடு மனவளர்ச்சியும் சரியான அளவுகளில் இருக்கவேண்டியது அத்தியாவசியம் என்பதால்தான். எனில், பெரியவர்களுக்கான பாடங்களை, தேர்வுகளை இளவயதிலேயே இந்தக் குழந்தை மேதைகள் எதிர்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் மனரீதியாக அதற்கென எதிர்கொள்ளும் சவால்களும் மிக அதிகமாகத்தான் இருக்கும். அக்குழந்தைகளைப் பக்குவமாக வழிநடத்துவது பெற்றோரின் கையில்தான் உள்ளது. அவர்களது அறிவுத் திறனையும் வளர்த்து, அதே சமயம் அவர்களது பருவத்துக்கேயான விளையாட்டு, நட்பு மற்றும் பொழுதுபோக்குகளிலும் ஈடுபட அவர்களைத் தடை செய்யாமல் இருந்தால் ஒரு நல்ல அறிஞரை இழக்காதிருக்கலாம். கணித மேதை இராமானுஜம், பீத்தோவன், ப்ளெய்ஸ் பாஸ்கல், சகுந்தலா தேவி, உஸ்தாத் ஜாகிர் ஹுஸேன் ஆகியோர் குழந்தை மேதைகளும்கூட.
அவ்வாறல்லாது, வெறும் புகழ்போதையால் மட்டுமே உந்தப்பட்டோ, அல்லது தம் கனவுகளைத் தம் பிள்ளைகளின் மேல் திணிக்க முயன்றோ, குழந்தைகளைத் தூண்டிக் கொண்டிருந்தால் அது மோசமான பின் விளைவுகளையே தரும். 11 வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் கணிதம் படிக்கச் சேர்ந்த சூஃபியா, கடைசித் தேர்வு முடிந்த அடுத்த நாள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார், பெற்றோரின் வெறித்தனமான தூண்டுதல் தாங்கமுடியாமல். 10 வயதில் சாதனை செய்த அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராண்டன் பெம்மெர், 14வது வயதில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். 9 வயதில் மைரோஸாஃப்ட் பட்டயம் பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஃபா கரீம், 16வது வயதில் மூளை பாதிப்பு வந்து கோமா நிலைக்குச் சென்று மரணித்தார். இப்படி உதா’ரணங்கள்’ பல உள்ளன.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அவ்விளம்பயிரை இனம் கண்டுகொண்டால், அதிக விளைச்சலுக்குப் பேராசைப்பட்டு, அளவுக்கதிகமாக ரசாயன உரங்களைக் கொட்டிக் கருக விட்டுவிடாமல், தேவையான அளவுக்கு மட்டுமே உரமும் தண்ணீரும் விட்டு வளர்ப்போம். ‘இயற்கை’ முறையே எப்பொழுது நல்லது.
0
ஹுஸைனம்

No comments: