ஏக்கம் - ஹிட்டோமரோ ஜப்பானியக் கவிதை - அதீதத்தில்.


.


உயிரோடு அவள் இருந்த பொழுது
கைகோர்த்து வெளியில் செல்வோம்.
வீட்டின் முன் உயர்ந்து வளர்ந்திருந்த
கரையோர மரங்களைப் பார்த்து நிற்போம்.
அவற்றின் கிளைகள்
பின்னிப் பிணைந்திருக்கும்.
அவற்றின் உச்சிகள்
இளவேனிற்கால இலைகளால் அடர்ந்திருக்கும்
எங்கள் அன்பைப் போல.

அன்பும் நம்பிக்கையும் மட்டுமே
போதுமானதாக இருக்கவில்லை
வாழ்க்கைச் சக்கரத்தைப்
பின்னோக்கிச் செலுத்த.
பாலைவனத்துக் கானல் நீராய்
மங்கி மறைந்து போனாள்.
ஒரு காலைப் பொழுதில்
ஒரு பறவையைப் போலப் பறந்து போனாள்
மரணத்தின் பிடிகளுக்குள்.

அவள் நினைவாக விட்டுச் சென்ற குழந்தை
அவளைக் கேட்டு அழும் வேளையில்
என்னால் முடிந்ததெல்லாம்
அவனைத் தூக்கத் தெரியாமல் தூக்கி
அணைக்கத் தெரியாமல் அணைப்பது மட்டுமே.
அவனுக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை.

எங்கள் அறையில் எங்கள் தலையணைகள்
அருகருகே கிடக்கின்றன எங்களைப் போல.
அமர்ந்திருக்கிறேன் அவற்றருகே
நாட்கணக்காக இருளை வளரவிட்டபடி
இரவு முழுவதும் விழித்தபடி
பொழுது புலரும்வரை பெருமூச்செறிந்தபடி.
எத்தனை வருந்தினாலும்
மீண்டும் அவளைப் பார்க்க முடியாது.


எல்லோரும் சொல்கிறார்கள் அவளது ஆன்மா
பருந்தின் இறக்கைகளைப் பற்றியபடி
இந்த மலையைச் சுற்றிக் கொண்டிருக்குமென.
சிரமத்துடன் பாறைமுனைகளைப் பற்றி
மலையுச்சியை அடைய முனைகிறேன்.
காற்றின் அசைவில் கூட
உணரமுடியாது அவளை என்பதை
நன்கு தெரிந்தே செய்கிறேன்.

என்னுடைய இந்த அன்பு, என்னுடைய இந்த ஏக்கம்
எந்த மாற்றங்களையும் கொண்டுவரப் போவதில்லை.
***

மூலம் : HITOMARO (8th century)
ஆங்கில மொழியாக்கம்: Kenneth Rexroth
[One hundred poems from the Japanese ]

Nantri:tamilamudam.blogspot

No comments: