உயிர்த்தெழுந்த நாட்கள் - ஜெயபாலன்

.
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன்.
ஜெயபாலன்
  
உயிர்த்தெழுந்த நாட்கள்
-வ.ஐ.ச.ஜெயபாலன்

அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம்
துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல.
மீண்டும் காற்றில் மண் வாங்கி
மாரி மழைநீர் உண்டு
பறவைகள் சேர்ந்த செடிகொடி வித்துகள்
பூவேலைப்பாட்டுடன் நெய்த
பச்சைக் கம்பளப் பசுமைகள் போர்த்து
துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல
அமைதியாய்த் தோற்றியது கொழும்பு மாநகரம்.
சித்தன் போக்காய் தென்பாரதத்தில்
திரிதலை விடுத்து மீண்ட என்னை
"ஆய்போவன்" என வணங்கி



ஆங்கிலத்தில் தம் உள்ளக்கிளர்ச்சியை
மொழி பெயர்த்தனர் சிங்கள நண்பர்கள்.
கொதிக்கும் தேநீர் ஆறும் வரைக்கும்
உணவகங்களிலும்
பஸ்தரிப்புகளில் காத்திரு பொழுதிலும்
வழி தெருக்களிலே
கையை அசைக்கும் சிறு சுணக்கடியிலும்
திருமலைதனிலே படுகொலை யுண்ணும்
தமிழருக்காகப் பரிந்துபேசுதலும்
பிரிவினைக் கெதிராய்த் தீர்மானம் மொழிதலும்
இன ஒற்றுமைக்கு
பிரேரணைகளும் ஆமோதிப்பும்
இவையே நயத்தகு நாகரிகமாய்
ஒழுகினர் எனது சிங்கள நண்பர்கள்.

வழக்கம்போல வழக்கம்போல
அமைதியாய் திகழ்ந்தது கொழும்புமாநகரம்.
கொழும்பை நீங்கி
இருபது கி.மீ. அப்பால் அகன்று
கற்கண்டை மொய்த்த எறும்புகள் போன்று
ஆற்றோரத்து மசூதிகள் தம்மை
வீடுகள் மொய்த்த
மல்வானை என்ற சிறுகிராமத்தில்
களனி கங்கைக் கரையில் அமர்ந்து
பிரவாகத்தில் என் வாழ்வின்பொழுதை
கற்கள் கற்கள் கற்களாய் வீசி
ஆற்றோரத்து மூங்கிற் புதரில்
மனக் குரங்குகளை இளைப்பாறவிட்டு
அந்த நாட்களின் அமைதியில் திளைத்தேன்.
தனித் தனியாகத் துயில் நீங்கியவர்
கிராமமாய் எழுந்து
'இந்நாளைத் தொடர்வோம் வருக' என
பகலவனதன்னை எதிர் கொண்டிடுதல்
ஏனோ இன்னும் சுணக்கம் கண்டது.
கருங்கல் மலைகளின் 'டைனமற்' வெடிகள்
பாதாள லோகமும் வேரறுந்தாட
இன்னமும் ஏற்றப் பட்டிடவில்லை
இன்னமும் அந்தக் கடமுடா கடமுடா
'கல்நொருக்கி' யந்திரஓட்டம் தொடங்கிடவில்லை;
பஸ்தரிப்புகளில்
'றம்புட்டான்' பழம் அழகுறக்குவித்த
தென்னோலைக் கூடைகள் குந்திடவில்லை,
நதியினில் மட்டும்
இரவு பகலை இழந்தவர் போலவும்,
இல்லாமையின் கைப் பாவைகள் போலவும்
பழுப்புமணல் குழித்துப் படகில் சேர்க்கும்
யந்திர கதியுடைச் சிலபேர் இருந்தனர்.
எனினும் சூழலில் மனுப்பாதிப்பு
இவர்களால் இல்லை.
தூர மிதக்கும் ஏதோ ஒருதிண்மம்
நினைவைச் சொறியும்.
இரு கரைகளிலும் மக்களைக் கூட்டி
எழுபத்தொன்று ஏப்பிரல் மாதம்
நதியில் ஊர்வலம் சென்றன பிணங்கள்;
இளமைமாறாத சிங்களப் பிணங்கள்.
எழுபத்தேழின் கறுத்த ஆகஸ்டில்
குடும்பம் குடும்பமாய் மிதந்து
புலம் பெயர்ந்தவைகள் செந்தமிழ்ப் பிணங்கள்;
(அதன் பின்னர்கூட இது நிகழ்ந்துள்ளதாம்)
இப்படி இப்படி எத்தனை புதினம்
நேற்று என் முஸ்லீம் நண்பர்கள் கூறினர்.
வாய்மொழி இழந்த பிணங்களில் கூட
தமிழன் சிங்களன் தடயங்கள் உண்டோ!
கும்பி மணலுடன் கரையை நோக்கிப்
படகு ஒன்று தள்ளப்பட்டது.
எதிர்ப்புறமாக மரமேடையிலும் ஆற்றங்கரையிலும்
குளிப்பும் துவைப்புமாய்
முஸ்லீம் பெண்களின் தீந்தமிழ் ஒலித்தது.
பின்புற வீதியில்
வெண்தொப்பி படுதா மாணவமணிகளின்
இனிய மழலைத் தமிழ்கள் கடந்தன.
காலைத் தொழுகை முடிந்தும் முடியாததும்
மசூதியிலிருந்து இறங்கிய மனிதர்கள்
என்னை அழைத்தனர்.
"கலவரம்" என்று கலவரப்பட்டனர்.
இலங்கையில் கலவரம் என்பதன் அர்த்தம்
நிராயுதபாணித் தமிழ்க் குடும்பங்களை
சிங்களக் காடையும் படையும் தாக்குதல்.
சிலசில வேளை முஸ்லீம்களுக்கும்
இது நிகழ்ந்திடலாம்.
தமிழரின் உடைமை எரியும் தீயில்
தமிழரைப் பிளந்து விறகாய் வீசும்
அணுயுகக் காட்டு மிராண்டிகள் செய்யும்
கொடுமைகள் தன்னை எடுத்துச் சொல்லினர்.
பருந்தின் கொடுநிழல் தோய்ந்திடும் கணத்தில்
தாயின் அண்மையைத்
தேடிடும் கோழிக் குஞ்சாய்த் தவித்தேன்.
தமிழ் வழங்குமென் தாய்த் திருப்பூமியின்
'தூர இருப்பே' சுட்டதென் நெஞ்சில்
தப்பிச் செல்லும் தந்திரம் அறியா
மனம் பதைபதைத்தது.
தென் இலங்கை என் மன அரங்கில்
போர் தொடுத்த ஓர் அந்நிய நாடாய்
ஒரு கணப்பொழுதில் சிதைந்து போனது.

ஒருமைப்பாடு என்பது என்ன
அடிமைப்படுதலா?

இந்தநாடு எங்கள் சார்பாய்
இரண்டுபட்டது என்பதை உணர்ந்தேன்.
நாம் வாழவே பிறந்தோம்.
மரண தேவதை இயற்கையாய் வந்து
வருக என்னும் வரைக்குமிவ் வுலகில்
இஷ்டப்படிக்கு
பெண்டு பிள்ளைகள் தோழர்கள் என்று
தனித்தும் கூடியும் உலகவாழ்வில்
எங்களின் குரலைத் தொனித்து
மூக்கும் முழியுமாய் வாழவே பிறந்தோம்.

எமது இருப்பை
உயர்ந்தபட்சம் உறுதி செய்யும்
சமூக புவியியல் தொகுதியே தேசம்.
எங்கள் இருப்பை உறுதிசெய்திடும்
அடிப்படை அவாவே தேசப்பற்று.
நாடுகள் என்று இணைதலும் பிரிதலும்
சுதந்திரமாக
மானிட இருப்பை உறுதிசெய் திடவே.

இதோ எம் இருப்பு வழமைபோலவே
இன அடிப் படையில்
இந்த வருடமும் நிச்சயமிழந்தது.
நான் நீ என்பது ஒன்றுமே இல்லை.
யார்தான் யாரின் முகங்களைப் பார்த்தார்?
நாவில் தமிழ் வழங்கியதாயின்
தீயில் வீசுவார்.
பிரிவினை கோரிப் போராடும் தமிழர்
ஒருமைப்பாட்டிற்கு உழைக்கும் தமிழர்
இராமன் ஆளினும் இராவணன் ஆளினும்
நமக்கென்ன என்று ஒதுங்கிய தமிழர்
தமிழ்ப் பேரறிஞர், தமிழ்ப்பேதையர்
ஆண் பெண் தமிழர்கள்
முகத்தை யார் பார்த்தார்?
களை பிடுங்குதல் போல
தெரிவு இங்கும் இலகுவாய்ப் போனது.
'சிங்கள பௌத்தர்' அல்லாதவர்கள்
என்பதே இங்கு தெரிவு.
கத்தோலிக்க சிங்களர் தம்மை
கழுத்தறுக்கும் கடைசி நிலைவரை
இணைத்துக் கொள்க;
தற்போதைக்கு முஸ்லீம் மக்களைத்
தவிர்க்க என்பதே அடிப்படைத் தந்திரம்.
மசூதியை விட்டுத் தொழுகையின் நடுவே
இறங்கி வந்த மனிதர்கள் என்னை
எடுத்துச் சென்றனர்;
ஒளித்து வைத்தனர்.
என்ன குற்றம் இழைத்தனன் ஐயா?
தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து
என்ன குற்றம் இழைத்தனன் ஐயா?
தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து
அவர்க்கும் எனக்கும் வேறுபாடேது?

நேற்றுப் பௌர்ணமி.
முட்டை உடைப்பதே பௌர்ணமி நாளில்
அதர்மமென் றுரைக்கும்
பௌத்த சிங்கள மனிதா சொல்க!
முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள்
அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன?

இரத்தம் தெறித்தும் சாம்பர் படிந்தும்
கோலம் கெட்ட காவி அங்கியுள்
ஒழுங்காய் மழித்த தலையுடன் நடக்கும்
இதுவோ தர்மம்?
ஏட்டை அவிழ்க்காதே
இதயத்தைத் திறந்து சொல்,
முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள்
அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன?

வன வாசத்தில்
இல்லாதது போன்ற இருப்பில்
கொதிப்புடன் சில நாட் கழிந்தது.
எங்கே எங்கே எமது தேசம்?
எமது இருப்பைத் தனித்தனியாகவும்
எமது இருப்பை அமைப்புகளாகவும்
உறுதிப்படுத்தும் புவிப் பரப்பேது?
இலங்கை அரச வானொலி சொன்னது
"அகதிகள் முகாம்களில் பாதுகாப்பாக
பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளனர்."
அகதிகள் முகாமே எங்கள் தேசமாய்
அமைதல் கூடுமோ?
இலங்கை அரசின் வானொலி சொன்னது
"அகதிகளான தமிழர்கள் தம்மை
பாதுகாப்புக்காய்
வடக்குக் கிழக்குப் பகுதிகள் நோக்கி
அனுப்பும் முயற்சிகள் ஆரம்ப மென்று."
கப்பல்கள் ரயில்கள் பஸ் வண்டிகளில்
வடக்குக் கிழக்காய்ப் புலம் பெயர்கின்றோம்.
எங்கே எங்கே எம்தாய் நாடு?
எங்கே எங்கே,
நானும்நிமிர்ந்து நிற்கவோர் பிடிமண்?
நாடுகளாக இணைதலும் பிரிதலும்
சுதந்திரமாக நம் சமூக இருப்பை
உயர்ந்தபட்சம் உறுதி செய் திடவே,
இங்கு இப்பொழுதில்,
நான் நீ என்பது ஒன்றுமேயில்லை
பிரிவினை வாதிகள்
ஒருமைப்பாட்டையே உரத்துப் பேசுவோர்
காட்டிக் கொடுப்பவர்
அரசின் ஆட்கள்
கம்யூனிஸ்டுகள் பூர்சுவாக்கள்
யார்தான் முகத்தைப் பார்த்தாரிங்கு,
எமது நிலவுகை இப்படியானதே,
எங்கெம் நாடு எங்கெம் அரசு?
எங்கு எம்மைக் காத்திடப் படைகள்?
உண்டா இவைகள் உண்டெனில் எங்கே?
இல்லையாயின் ஏன் இவை இல்லை?

மசூதிகளாலே இறங்கி வந்து
என்னை எடுத்துச் சென்ற மனிதர்கள்
பொறுத்திரு என்றனர்.
விகாரைப் புறமாய் நடந்துவந்த
காட்டுமிராண்டிகள்
இன்னும் களைத்துப் போகவில்லையால்
அஞ்சி அஞ்சித்
தலைமறைந் திருத்தலே தற்போது சாத்தியம்.
இதுவே தமிழன் வாழ்வாய்ப் போகுமோ?

அப்படியாயின்
இதைவிட அதிகம் வாழ்வுண்டே சாவில்!
நிலவரம் இதுவெனில்
நாங்கள் எங்கள் தாய்நாட்டில் இல்லை;
அல்லதெம் தாய்நாடு எம்மிட மில்லை.
சாத்தியமான வாழ்வை விடவும்
அதிகம் வாழ்வு சாவினில் என்றால்
எங்கள் இளைஞர் எதனைத் தெரிவார்?

முஸ்லீம்போல தொப்பி யணிந்து
விடுதலை வீரனைக் கடத்தி வருதல்போல்
கொழும்புக் கென்னைக் கொண்டு வந்தனர்.
விடுதலை வீரனைப் போல்வதை விடவும்
விடுதலை வீரனாய் வாழ்வதே மேலாம்.

கொழும்பில் தொடர்ந்தஎன் வன வாசம்
கொடிது கொங்கிறீற் வனம் என்பதனால்,
அமெரிக்க நண்பன் ஒருவனின் வீட்டில்
என்னைப் பதுக்கி வைத்தனராயின்
சொல்க யார்தான் இந்த நாட்டில்?
அந்நியன்கூட இல்லை போலும்!
அந்நியனாகவும்,
ஏதுமோர் நாட்டின மாதல் வேண்டுமே!
அமெரிக்க நண்பரும் ஜப்பான் தோழியும்
இஷ்டம் போல அளந்தனர் கொழும்பை
காட்டு மிராண்டிக் கைவரிசைகளின்
பாதகக் கணங்களைப்
புகைப்படச் சுருளில் பதித்துக் கொண்டனர்.
அங்கு என் வாழ்வின் பெரியபகுதி
பூனைகளோடும், பறவைகளோடும்!

*

வானொலி எனக்கு ஆறுதலானது
பாரதத்தின் கண்களாக
தமிழகம் விழித்து
உலகை உசுப்பும் ஓசையைக் கேட்டேன்.
சுரங்கமொன்றுள் மூடுப்பட்டவர்
தலைக்குமேலே நிலம் திறபடும்
துளைப்பு ஓசை செவிமடுத்தது போல்
புத்துயிர் பெற்றேன்.
உலகம் உள்ளது, உலகம் உள்ளது.
உலகின் வலிய மனச் சாட்சியினை
வியட்னாம் போரின் பின்னர் உணர்ந்தேன்.
காட்டு மிராண்டிகள் திடுக்குற
எழுந்தது எங்கும் உலக நாரீகம்
இந்த நாட்டில் எனக்கிடமில்லை;
இந்த உலகில் எனதிடமுள்ளது.
ஆயின்,
எங்கென் நாடு? எங்கென் நாடு?

வானொலிப் பெட்டியை வழமைபோல் திறந்தேன்
வழமை போலவே
ஒப்பாரிவைத்தது தமிழ் அலைவரிசை.
இனவெறிப் பாடலும் குதூகலஇசையும்
சிங்கள அலையில் தறிகெட எழுந்தது.
இதுவே இந்த நாட்டின் யதார்த்தம்
சிறைச் சாலையிலே கைதிகளான
எங்கள் நம்பிக்கை ஞாயிற்றின் விதைகள்
படுகொலைப்பட்ட செய்தி வந்தது
கிளாரினட் இசையின் முத்தாய்ப்போடு.
யாரோ எவரோ அவரோ இவரோ
அவஸ்தையில் இலட்சம் தலைகள் சுழன்ற
அந்தநாட்கள் எதிரிக்கும் வேண்டாம்;
பாண்டியன் வாயிலில் கண்ணகியானது
சன்னதம் கொண்ட எனது ஆத்மா.
மறுநாட் காலை அரசு நடத்தும்
'தினச்செய்தி' என்னும்
காட்டு மிராண்டிகளின் குரலாம் தினசரி
'பயங்கர வாதிகள் கொலை' என எழுதி
எமது புண்ணில் ஈட்டி பாய்ச்சியது.
குற்றம் என்ன செய்தோம் சொல்க!
தமிழைப் பேசினோம்.
இரண்டாம் தடவையும் காட்டும்ராண்டிகள்
சிறையுட் புகுந்தனர் கொலைகள்விளுந்தன;
கிளாரினட் இசையுடன் செய்தியும் வந்தது.

உத்தமனார்,
காட்டுமிராண்டித் தனங்களைத் தொகுத்து
உத்தியோக தோரணையோடு
"சிங்கள மக்களின் எழுச்சி" என்றார்;
தென்னை மரத்தில் புல்லுப் புடுங்கவே
அரசும் படையும் ஏறிய தென்றார்.
உலகம் உண்மையை உணர்ந்து கொண்டது.

துப்பாக்கிச் சன்னமாய் எனது ஆத்மாவை
ஊடுருவியது,
விமலதாசனின் படுகொலைச் செய்தி.
ஒடுக்குதற் கெதிராய் போர்க்களம் தன்னில்
பஞ்சமர்க்காகவும்,
தமிழைப் பேசும் மக்களுக்காகவும்,
உழைப்பவர்களுக்காகவும்
"ஒருநல்ல கிறிஸ்தவனாய் இறப்பேன்" என்பாய்
இப்படி நிறைததுன் தீர்க்க தரிசனம்.
விடுதலைப் போரின் மூலைக்கல்லாய்
உன்னை நடுகையில்,
ஒருபிடி மண்ணை அள்ளிப் போடுமென்
கடமை தவறினேன் நண்ப,
ஆயிரமாய் நீ உயிர்த்தே எழுக!

"அடக்கினேன்
எழுபத்தொன்றில் கிளர்ச்சியை நானும்
பிரிவினைப் போரை வேரறுத்திடுதல்
ஏன் இவ்வரசுக்கு இயலவில்லை?"
சிறிமா அம்மையார் திருவாய் மலர்ந்தார்.
'நரபலியாகத் தமிழ் இளைஞரை
வீடுவீடேறிக் கொன்று குவிப்பீர்'
மறைபொருள் இதுவே-
மீண்டும் இளைஞரின் இரத்தம் குடிக்க
மனம் கொண்டாரோ,
காறி உமிழ்ந்தேன்.

வீட்டினுள் ஜன்னலால் புகுந்த றைபிள்
கலா பரமேஸ்வரனைக் காவு கொண்டதாம்;
'அப்பாவி' என்று
முகத்தில் எழுதி ஒட்டிவைத்திருக்குமே! -
முகத்தை யார் பார்த்தார்.....
இப்படியாக ஐம்பது தமிழர்கள் யாழ்ப்பாணத்தில்-
முத்தமிட்டனர், செம்மண் பூமியை

பஸ்தரிப்புகளில் தேநீர்ச் சாலையில்
வழி தெருக்களில்
ஒருமைப்பாட்டை உரத்துப் பேசிய,
சிங்கள நண்பரை எதிர்பார்த்திருந்தேன்.
முற்போக்கான கோஷங் களோடு
கொழும்பு நகர வீதியை நிறைத்த
சிவப்புச் சட்டைச் சிங்களத் தோழரின்
முகங்களைத் தேடிய படிக்கு,
வீதிப்பக்கமாய் மொட்டை மாடியில்
கால்கடுக்க நெடுநாள் நின்றேன்.
எங்கே மறைந்தன ஆயிரம் செங்கொடி?
எங்கே மறைந்தன ஆயிரம் குரல்கள்?
கொடிகள் மட்டுமே சிவப்பாய் இருததா?
குரலில்மட்டுமே தோழமை இருந்ததா?
நான் உயிர்பிழைத்தது தற்செயலானது! -
முகத்தை யார் பார்த்தார்?

பரிதாபமாக என்முன் நிற்கும்
சிங்களத்தோழர் சிறுகுழுவே கலங்கிடல் வேண்டாம்.
உங்கள் நட்பின் செம்மைச் செழிப்பில்
சந்தேகம் நான் கொண்டிடவில்லை.
தற்போ துமது வல்லமை தன்னில்
நம்பிக்கை கொள்ள ஞாயமும் இல்லை.

சென்று வருக,
எனது உயிர்தப்பும் மார்க்கத்தில்
நின்று கதைக்க ஏதுபொழுது? என்றாலும்,
பின்னொருகால் சந்திப்போம்
தத்துவங்கள் பேச...

தமிழர் உடைமையில்
கொள்ளை போனதும் எரிந்ததும் தவிர்த்து
எஞ்சிய நிலத்தில் எரிந்த சுவரில்
அரசுடமை எனும் அறிக்கை கிடந்தது.

இப்படியாக, உயிர் பிழைத்தவர்கள்
பின்புற மண்ணையும் தட்டியபடிக்கு
எழுந்தோம்.
வெறுங்கைகளோடு -
உடைந்த கப்பலை விட்டு அகன்ற
ரொபின்சன் குரூசோவைப் போல,
குலைந்த கூட்டை விட்டு அகன்ற
காட்டுப் பறவையைப் போல.

நாம் வாழவே எழுந்தோம்.
சாவை உதைத்து.
மண்ணிலெம் காலை ஆழப் பதித்து
மரண தேவதை இயற்கையாய் வந்து
வருக என்னும் இறுதிக் கணம்வரை,
மூக்கும் முழியுமாய்
வாழவெ எழுந்தோம்!

1983

No comments: