கருத்தரங்குகள்: எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்


.
                                                                                                          முருகபூபதி

இலக்கிய உலகில் பிரவேசித்த காலம் முதல் பல இலக்கிய விழாக்கள், மாநாடுகள், கருத்தரங்குகளில் பங்குபற்றிவருகின்றேன். இலங்கையில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மட்டுமன்றி தென்னிலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் கொரஸ என்ற சிங்களக்கிராமத்திலும் நடத்திய கருத்தரங்குகளிலும் யாழ். பல்கலைக்கழகத்தின் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிலும் கலந்துகொண்டு நிகழ்வுகளை ரசித்திருக்கின்றேன்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் நண்பர் மாவை நித்தியானந்தனின் ஊக்கத்தினால் உருவாக்கப்பட்ட மெல்பன் கலை வட்டம் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் நடத்திய முழுநாள் கருத்தரங்கு, இங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெற்றோர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்குமிடையிலான தலைமுறை இடைவெளி மற்றும் உறவுகள் சார்ந்த பிரச்சினைகளை விவாதிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதன்பின்னர் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் இங்கு நாம் வருடந்தோறும் நடத்திவரும் எழுத்தாளர் விழா கருத்தரங்குகளில் பங்குபற்றி வருகின்றேன்.
இதற்கிடையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான்கு நாட்கள் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு முழுநாள் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டிருக்கின்றேன்.



இவற்றிலிருந்து அவற்றை நடத்துபவர்களும் நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் இருந்தபோதிலும் அடுத்துவரும் கருத்தரங்குகளில் கற்றுக்கொண்டவற்றை அமுல்படுத்துவதற்கு முடியாமலே போய்விடுவதுதான் துர்ப்பாக்கியம்.
2001 ஆம் ஆண்டு முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை மெல்பனில் நடத்தியபோது காலை முதல் மாலை வரையில் நடைபெற்ற முதல்நாள் நிகழ்ச்சி கருத்தரங்கில் சுமார் 28 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த விழாவின் அமைப்பாளராக இருந்து நிகழ்ச்சிகளை வடிவமைத்தபோது ‘பெண்களும் போர்க்காலமும்’ என்ற தலைப்பில் பேசுவதற்கு ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருந்தேன். கணினி அறிவு இல்லாதிருந்த அக்காலப்பகுதியில் ஒரு அன்பரின் தயவுடன் கணினி ஊடாக சிலரின் ( போரில் பாதிக்கப்பட்ட பெண்கள், மற்றும் பெண்ணிலைவாதிகளின் ) படங்களை திரையில் காண்பித்து கருத்தரங்கு கட்டுரையை சமர்ப்பிப்பது எனது நோக்கமாகவிருந்தது.
குறிப்பிட்ட எழுத்தாளர் விழா கருத்தரங்கிற்கு மெல்பன், கன்பரா, சிட்னி முதலான நகரங்களிலிருந்து பலரும்  இலங்கையிலிருந்து ஒரு சிலரும் கலந்துகொண்டு உரையாற்ற விருந்தமையால் எனது பேச்சை இறுதியாக வைத்திருந்தேன்.
நேரம் போய்க்கொண்டிருந்தது. இரவு நிகழ்ச்சிக்கு மக்கள் வரத்தொடங்கிவிட்டனர். ஆனால் கருத்தரங்கை உரிய நேரத்தில் முடிக்க இயலாமல் திணறிக்கொண்டிருந்தோம்.
நான் எனது உரையை தவிர்த்துவிடுவதே நல்லது எனத்தீர்மானித்துவிட்டேன். ஆனால் எனக்காக பல நாள் இரவு கண்விழித்திருந்து படங்களை கணினியில் பதிவுசெய்திருந்த அன்பரின் முகத்தைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. குறைந்தது 4 நிமிடங்களிலாவது கட்டுரையை சமர்ப்பித்துவிடுங்கள் என்று அந்த அன்பரும்  நண்பர்களும் கூறியதையடுத்து மிகமிக இரத்தினச்சுருக்கமாக எனது உரையை காட்சிப்படுத்தலுடன் முடித்தேன்.
காலை முதல் மாலை வரையில் அந்த மண்டபத்திலிருந்து கருத்தரங்குகளை அவதானித்த சில பெண்கள், இரவு நிகழ்ச்சிக்கு வருவதற்காக தமது உடை மாற்றுவதற்கு தத்தம் வீடுகளுக்குப்புறப்பட்டுவிட்டனர்.
வெளியூரிலிருந்து வந்த ஒரு சகோதரி சொன்னார், “ பூபதி நீங்கள் பெண்களுக்காக இந்தக்கட்டுரையை பலநாட்கள் யோசித்து எழுதி கணினி உட்பட பெரிய தயாரிப்புகளுடன் வந்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பேச்சைக்கேட்க மண்டபத்தில் பெண்களின் எண்ணிக்கைதான் குறைவு.” என்றார்.
“அவர்கள் எங்கே? “ எனக்கேட்டேன்.
“ உங்கள் கருத்தை விட அவர்களின் சாரிதான் அவர்களுக்கு முக்கியம்” என்றார்.
இப்படி பல வேடிக்கைகளை கருத்தரங்குகளில் பார்த்திருக்கிறோம்.
கருத்தரங்குகளுக்கு பலநாட்கள் உழைத்து ஆதாரங்கள், தகவல்கள் திரட்டி உசாத்துணை நூல்களையெல்லாம் புரட்டி எடுத்து வந்திருப்பார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏதும் காரணங்களின் நிமித்தம் உரியநேரத்தில் தொடங்காமல் தாமதித்திருப்பார்கள். தாமதமான நேரத்தை கணக்கிட்டு அதனை பேசவிருப்பவர்களின் நேரத்தில் பறிப்பதற்கு கங்கணம் கட்டுவர்கள். இறுதியில் பேச வந்தவருக்கும் திருப்தியில்லை. மாற்றுக்கருத்துச்சொல்வதற்கு சபையிலிருந்தவர்களுக்கும் சந்தர்ப்பம் இல்லை. மொத்தத்தில் கருத்தரங்கு முழுமையற்றதாகிவிடும்.
அடுத்த தடவை சரியாகச்செய்வோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செயற்குழு கூடி பேசுவார்கள். ஆனால் மீண்டும் ‘பழைய குருடி கதவைத்திறவடி’ கதைதான்.
கருத்தரங்குகளுக்கு உரை நிகழ்த்துவதற்கு எண்ணிக்கையில் அதிகம் பேரைச்சேர்த்துக்கொள்வதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறும் காரணமும் விவாதத்திற்கும் விமர்சனத்துக்குமுரியது.
பேசுவதற்கு அழைத்தால்தான் வருவார்கள். இல்லையேல் அந்தப்பக்கமும் எட்டியும் பார்க்காமல், “தங்களுக்கு அழைப்பு வரவில்லை. அதனால் போகவில்லை” என்று சொல்வதற்கு ஒரு சாக்குப்போக்கு நிச்சயம் இருக்கும்.
இந்த அனுபவம் இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தொடருகிறது.
கருத்தரங்கிற்கு சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் தொடர்பாக ஆராயும் போது அவை அந்தத்தலைப்பில் பேசுவதற்கு தகுதியானவர்களிடம் தரப்படுகிறதா? என்ற கேள்விக்கு சரியான விடை கண்டுபிடித்த பின்பே கருத்தரங்கு பேச்சாளர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும்.
கருத்தரங்கு நடைபெறுவதற்கு சுமார் ஒருமாத காலத்தின் முன்பே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கட்டுரைகள் வந்துவிடவேண்டும். அவை தொகுக்கப்படவேண்டும்.
கட்டுரையை எழுதியவரே வந்து சமர்ப்பிக்கும்போது முதல் வரியிலிருந்து இறுதி வரி வரையில் வாசித்து ஒப்புவித்துவிட்டுப்போனால் கேட்பவர்களுக்கு சலிப்புத்தான் வரும். ஏற்கனவே சபையிலிருப்பவர்களிடம் குறிப்பிட்ட கட்டுரையின் பிரதி இருக்கும் பட்சத்தில் அதனையே மேடையில் ஒப்புவிப்பதானது,  நாவன்மைப்போட்டியை  ஒத்ததாகத்தான் இருக்கும். அந்த வேலையை பாடசாலை மாணவர்களிடம் விட்டுவிடுங்கள்.
கருத்தரங்கு கட்டுரைகள் சபையிலிருக்கும் பட்சத்தில் அதனைப்பேசுபவர் தனது உரையின் சாராம்சத்தை சுவாரஸ்யமாக பேசும்போது கேட்டுக்கொண்டிருப்போர் அதில் கருத்தூண்றுவர்.
இல்லையேல் “ அவரது பேச்சுத்தான் இங்கே எழுத்திலிருக்கிறதே...  பிறகு படித்துக்கொள்வோம். வாரும் வெளியே போய் சிகரட் பிடிப்போம் அல்லது பேசிவிட்டு வருவோம்” என்று அருகிலிருப்பவரையும் அழைத்துக்கொண்டு போய்விடுவார் சபையிலிருப்பவர்..
ஒரு கருத்தரங்கில் அளவுக்கு அதிகமானவர்களை பேச விடுவதன்மூலம் பார்வையாளர்களுக்கு சலிப்புவரும் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முழுநாள் கருத்தரங்கு நடைபெற்றால் குறைந்தது இரண்டு அமர்வுகளில் நான்கு கட்டுரைகளுக்கு மாத்திரம் சமர்ப்பிக்க நேரம் ஒதுக்கிவிட்டு எஞ்சிய நேரத்தை பார்வையாளருக்கு ஓதுக்கவேண்டும்.
கற்பதும் கற்றுக்கொள்வதும்தான் ஒரு கருத்தரங்கின் தலையாய பணி.
நாம் கலை, இலக்கியம் தொடர்பாகத்தான் இதிலே பேசுகின்றோம். மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், வர்த்தகம், பொருளாதாரம்  போன்ற இதர துறைகளில் நடைபெறும் கருத்தரங்குகளை நடத்துபவர்கள் அதன் தரத்திலும் கனதியிலும் நேரக்கட்டுப்பாடுகளிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். காரணம் குறிப்பிட்ட கருத்தரங்கு அமர்வுகள் தேசிய மற்றும் சர்வதேசிய கண்ணோட்டம் கொண்டவை.
ஆனால் தமிழ் சூழலில் கலை, இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகள் என வரும்போது மாத்திரம் எம்மவருக்கு கருத்தைவிட “ஈகோ” மனப்பான்மை முன்னிறுத்தப்பட்டுவிடும்.
 “ அவர் பேசினால், நான் வரமாட்டேன். இவர் வந்தால் அவர் வரமாட்டார்” இப்படியான சிந்தனைகள்.
 கருத்தரங்குகளில் முதல் பேச்சாளர்களாக பேராசிரியர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று அழுங்குப்பிடி பிடிக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் எம்மத்தியிலிருக்கிறார்கள். “ஏனென்றால் அவர்கள் சிறந்த வழிகாட்டிகள். மற்றவர்கள் அவர்களை பின்பற்றவேண்டும்”
எம்மவர்கள் நடத்தும் பல கருத்தரங்கு மேடைகளிலிருக்கும் மேசையில் இரண்டு விடயங்கள் நிச்சயம் இடம்பெறும். ஓன்று நேரத்தை கட்டுப்படுத்தும் சமிக்ஞை மணி. மற்றது. “ பேச்சை சுருக்கவும்” என எழுதப்பட்ட காகிதங்கள்.
ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தை கொடுத்துவிட்டு அவர் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த இரண்டு துரும்புகளையும் கருத்தரங்குத் தலைவர் பிரயோகிப்பதானது பேச்சாளரை அவமதிப்பதாகவே கருதப்படும். இது தவிர்க்கமுடியாதது.
ஒரு சமயம் மெல்பனில் நடந்த ஒரு மாநாட்டில் உரையாற்றுவதற்கு சிட்னியிலிருந்து கவிஞர் அம்பி அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் பேசிக்கொண்டிருந்தபோது அவரிடம் ஒரு சிறு காகிதத்துண்டு நீட்டப்பட்டது. அதில் “நேரம் போகிறது” என்று எழுதப்பட்டிருந்தது.
உடனே அதனைப்பார்த்த அம்பி, “ நேரம் போகும்தானே!” என்றார். சபையில் சிரிப்பு அடங்க சில கணங்கள் சென்றன.
 சில கருத்தரங்குகள் பொன்னாடை, சால்வை போர்த்தும் சடங்குகளாக மாறிவிடுவதும் சமகாலத்தில் நடக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் இராமகிருஸ்ண மண்டபத்தில் நடந்த கம்பன் விழாவுக்குச்சென்றிருந்தேன். அங்கே மங்கள விளக்கேற்றுபவருக்கும் பொன்னாடை கௌரவம் கிடைத்தது. அவர் கம்பன் பற்றி பேசத்தேவையில்லை. விழாவுக்கு வந்து விளக்கேற்றினால் போதும் பொன்னாடை கிடைத்துவிடும்.
 இப்படியெல்லாம் சங்கடங்கள் நேரும் என்பதற்காகவே எமது முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பொன்னாடைகள், பூமாலைகள், வெற்றுப்புகழாரங்கள், அரசியல் வாதிகளை முற்றாகத்தவிர்த்தோம்.
 தமிழ் நாட்டில் கூட அவ்வாறு பொன்னாடை, பூமாலை இல்லாத மாநாடு நடைபெற்றிருக்க மாட்டாது.
 தமிழ்ச்சூழல் கலை, இலக்கியம் சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகளை எதிர்காலத்தில் வடிவமைக்கும்போது ஏற்கனவோ கற்றுக்கொண்ட பாடங்கள், படிப்பினைகளை கவனத்தில் கொள்ளும்போதுதான் தரமான ஆரோக்கியமான சிந்தனைகளை வருங்காலத்தலைமுறையிடம் முன்னெடுத்துச்செல்ல முடியும்.
 மீண்டும் மீண்டும் முன்னரே சொன்னதுபோன்று பழைய குருடி கதவைத்திறவடி கதைதான் தொடருமானால், வருங்காலத்தில் கருத்தரங்குகள் தனிநபர் புகழ்பாடும் சடங்காக மாறிவிடும்.  இலக்கியச்சங்கங்கள் மறைந்து பொன்னாடை, சால்வை போர்த்துவோர் சங்கங்கள் தான் உருவாகும்.

                             
                                ----0----






1 comment:

Unknown said...

[quote]வருங்காலத்தில் கருத்தரங்குகள் தனிநபர் புகழ்பாடும் சடங்காக மாறிவிடும். இலக்கியச்சங்கங்கள் மறைந்து பொன்னாடை, சால்வை போர்த்துவோர் சங்கங்கள் தான் உருவாகும்.[quote]


மேலதிகமாக மேளக் கச்சேரியுடன் பொன்னாடை, சால்வை போர்த்துவோர் சங்கங்கள் தான் உருவாகும். இதுகள் இப்பவே நட‌க்குது.