அரங்காடல் என் பார்வையில் - கலா ஜீவகுமார்


.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில வருடங்களாக சில ஒன்று கூடல் நிகழ்வுகளை நடாத்தி அதன்மூலம் கிடைக்கும் நிதியினை தம்மை வளப் படுத்திய யாழ் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பும் ஒரு நல்ல சேவையை செய்து வருகிறார்கள். அந்த வழியில் இந்த வருடம் சென்ற ஞாயிற்றுக்கிழமை அரங்காடல் நிகழ்வு  Paramatta River  Side Thiater  ல்  இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. இவ்வருடம் இந்நிகழ்வு  Dr . Sithamparakumar தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது என்பதில் எந்தவிதமான ஜயமும் இல்லை.
நிகழ்வினது முதல்க்கட்டமாக இடம் பெற்றது செ.பாஸ்கரனின் நெறியாள்கையில் துயரத்தின் சிரிப்பு என்னும் நாடகம் அதிகம் சிரிக்கவைக்கவில்லை ஆனால் சிந்திக்கவைத்தது.மக்களின் மூடநம்பிக்கைகளையும் தனி மனிதர்களின் சுயநலன்களையும் வெளிக்கொணர்ந்திருந்தது. அருமையான ஒரு கருவை அழகாக வெளிக்கொணர்ந்திருந்தார் தயாரிப்பாளர். நடிகர்கள் ஒருவருக்கொருவர் தாம் சளைத்தவரல்ல என தம் நடிப்புத்திறமையை வெளிக்கொணர்ந்திருந்தார்கள். பல அரங்குகளைக்கண்ட மதுரா மகாதேவ் இந்நாடகம்மூலம் பலர் மனதில் இடம் பிடித்துக்கொண்டார். நிட்சயமாக இன்நாடகத்தில் அவரது நடிப்புத்திறமைக்கு ஒரு சபாஸ்போட்டே ஆக வேண்டும். நாடகத்தில் சாமியாராக வந்த ரமேசின் நடை பேசிய விதம் நிஜத்தில் ஏமாற்றும் சாமியாரை பார்த்ததுபோல் இருந்தது. அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அருமையாக நடித்திருந்தார். வைத்தியராக வந்த ரவிசங்கர் ராசையா ஆங்காங்கே மக்களை சிரிக்கவைத்து நகைச்சுவையாக கதையை நகர்த்திச் சென்றார். பல நகைச்சுவைகளை இந்த இருவரும் நயமாகத்தந்தபோதும் கதையின் கனம் துயரத்தை நோக்கியே பயணித்ததால் மக்களால் மனம்திறந்து சிரிக்கமுடியவில்லை.
இளம் தாயாக நடித்த அனுசாவின் நடிப்புத்திறமை இயல்பாகவும் வியப்பாகவும் அமைந்திருந்தது. ஒரு பேதைத் தாயாக அருமையாக நடித்திருந்தார். தந்தையாக வந்த செ.பாஸ்கரனின் நடிப்பு பிரமாதமாக அமைந்திருந்தது. ஒரு கட்டத்தில் மக்களின் கண்களில் கண்ணீரையும் வரவழைத்த நடிப்பு அவரின் நடிப்பாக இருந்தது. இளம் தந்தையாகவும் பின்பு வயதுமுதிர்ந்தவராகவும் மாற்றி மாற்றி நன்றாக நடித்திருந்தார். ஆனாலும் இரண்டுபாத்திரத்திற்கும் ஏற்ப உருவமாற்றத்தோடு குரலையும் நடிப்பின் பாங்கையும் மாற்றியிருக்க வேண்டும் அப்படி மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என்பார்வை.  இங்கு குறை என்பது அடுத்த நிகழ்வு நிறைவாக அமைவதற்கே கூறப்படுகிறது. அவ்வாறே இளம்தாயார் அனுசா பைத்தியமாக மாறும் காட்சியை இன்னும் சில நிமிடங்கள் கொடுத்து ஒருவர் திரையில் இருந்து மறைய மற்றவர் அதே நடிப்புடன் வந்திருந்தால் அந்தப்பாத்திரம் இன்னும் நன்றாக மக்களை சென்றடைந்திருக்கும் எனநினைக்கிறேன்.நோயாளரின் கட்டிலை சற்று முன்புறமாக நகர்த்தி நடிகர்கள் பரவி நின்றிருந்தால் மேடை சமன் செய்யப்பட்டிருக்கும் நெறியாளர் பாஸ்கரன் இதை கவனத்தில் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நல்ல பொருத்தமான இசைத்தெரிவும் சரியான நேரத்தில் வந்துசென்றதும் நன்றான இருந்தது. ரொணிக்கு பாராட்டுக்கள்.அதேபோல் ஒளியமைப்பாளர் கரிசும் பொருத்தமாக செய்திருந்தார். புறொபிசர் ரவியைப்பார்த்தபோது யாழ் பல்கலைக்கழக ஞாபகமே வந்தது. அந்த உருவம் பலருக்கும் நினைவிற்கு வந்திருக்கும் என நம்புகிறேன். நான் வந்திற்றன் என்று சொல்லியபடி மேடைக்கு வந்ததே அருமையாக இருந்தது. பப்பு ஜெயச்சந்திரா காருண்ணியா என பாத்திரங்களாக வந்தவர்களும் தங்கள் பாத்திரங்களை மிக அழகாக நகர்தியிருந்தார்கள். நாலுவருடங்களுக்கு முன்பாக கேட்ட அந்த குரல் இன்னும் என்காதுக்குள்ள ஒலிக்குது என்ற ஒரு வசனமே நாடகத்தின் தரத்தை எங்கோ எடுத்துச் சென்றிருந்தது. உண்மையிலேயே துயரத்தின் சிரிப்பாகவே இருந்தது.
அடுத்து “தனு” என்னும் நாட்டுக்கூத்து மகாபாரதக் கதையின் ஒரு துளி கூத்தாக மேடைக்கு வந்தது. இளையபத்மநாதனின் தயாரிப்பில் அமர்க்களமாக மேடையேறியது. கூத்து அதன்பாணி மேடையேறிய விதம் கதைகூறியவிதம் மேடை அமைப்பு திரை அசைந்த விதம் அன்றைய அதேபாணியில் எம் நாட்டில் அந்தக்காலத்தில் பார்த்த கூத்தை கண்முன் கொண்டுவந்தது என்றால் மிகையாகாது. இந்தவயதிலும் கம்பீரமாக தாளலயத்தோடு நடித்திருந்தார் இளையபத்மநாதன். அந்தக்காலத்திற்கும் இந்தக்காலத்திற்கும் உடையமைப்பில் ஓர்முடிச்சு வீழ்ந்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. இளையபத்மநாதனின் வாயிலிருந்து சொற்பிரயோகங்கள் மிகவும் அழகாகவும் அறுத்துறுத்தும் மக்களுக்கு விளங்கும் வகையில் அருமையாக வெளிவந்தது. கதைசொன்ன ஸ்ரீபாலன் கருணாகரன் ஆகியோரின் நடிப்பும் திரைஅமைப்பும் அழகாக அமைந்தபோதும் இருவரின் குரல்களும் சேர்ந்தொலிக்க மறுத்ததால் கருப்பொருள் மக்களை வந்தடையவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. இருவரும் மாறிமாறி உரைத்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது. கண்ணா ஸ்ரீபைரவி ஆகியோரின் கூத்துத் திறன் பாராட்டுக்குரியது. நம் நாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள்கூட இவ்வளவு அழகாக தமிழில் இத்தனை பாடல்களை மனனம் செய்து அழகுதமிழில் கூறுவார்களா என்ற எண்ணமும் எழுந்தது. அழகுப் பதுமையாக அந்தப்பெண்வந்து பின்பு அவதாரம் மாறுவதை ஒருதிரையின் இருபுறமும் விட்டு காட்ச்சிப்படுத்திய இளையபத்மநாதனின் நெறியாள்கை அருமையானது. புக்கவாத்தியங்கள் மிகவும் அழகாக கூத்திற்கு மெருகூட்டியிருந்தன. அதன் சத்தத்தை சற்று குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நம் கலாசாரத்தில் வந்த கூத்து ஒஸ்ரேலியாவரை நடைபெற்றுக்கொண்டிருப்பது பாராட்டுக்குரியதே.இறுதியாக எங்கட சனங்கள் என்ற நாடகம்  Newcastle  வாழ்மக்களால் அரங்கேற்றப்பட்டதாக கூறப்பட்டது. சாதாரணமாக எமது அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் விடயங்களை நகைச்சுவையாக தந்திருந்தார்கள். மக்கள் தமது நன்மைக்காக எப்பாடுபட்டும் அதிகம் நன்மையைப் பெற்றுக்கொள்ள பேராசைப்பட்டு அலைவதை நாசூக்காக காட்டியிருந்தது அந்த நாடகம். பெண்வேடத்தில் ஒரு ஆண் அருமையாக நடித்திருந்தார் அதுவும் தியாகேசன் தான் அது என்று தெரிந்தபோது அவரின் நடிப்பை பாராட்டாமல் இருக்கமுடியாது. குரல் மட்டுமல்ல நளினமும் இருந்தது. ஆனால் ஏன் ஆண் பெண்வேடம் போட்டார் ஒரு பெண் கிடைக்கவில்லையா? என்ற எண்ணமும் வந்து சென்றது. கணவன் மனைவியாக நடித்தவர்கள் நன்றாகவே நடித்திருந்தார்கள். இவர்கள் வாயில் அகப்பட்ட வைத்தியரும்  Tax  Agent  ரும் பட்ட பாடு நிஜவாழ்க்கையில் பலர் அனுபவித்திருப்பார்கள். எமது பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தமது ஆற்றாமையை திணிப்பதை Selective School  Exam  கரு காட்டிநின்றது. எல்லோரும் வாய்விட்டு சிரித்தாலும் இதுதான் நடைமுறையில் உள்ளது என்பது உண்மையே.
இந்நாடகம் கொஞ்சம் நீண்டுவிட்டதுபோல் எனக்கு தோன்றியது. அத்துடன் சில நகைச்சுவைகளை நீட்டிமுழக்காமல் நாசூக்காக கூறியிருக்கலாம் எனவும் என்மனதில் பட்டது. மொத்தத்தில் சிரிக்ககூடியதாக இருந்தது.இந்நிகழ்வில் இடையிடையே திருமதி மிருணாளினி ஜெயமோகனின் நடனங்கள் இடம் பெற்றது. இவர் பல நடன நிகழ்வுகளை மேடையேற்றுமு; ஓர் ஆசிரியர். சிரித்தமுகத்துடன் சளைக்காமல் எம்மவர் கேட்கும்பொழுதெல்லாம் தமது மாணவர்களை பயிற்றுவித்து மேடையேற்றுவார். இம்முறை இவரது மாணவர்கள் மிகவும் நன்றாக ஆடியிருந்தார்கள். நடனத்தை மிகவும் அருமையாக நெறியாள்கை செய்திருந்தார்.

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்திய அந்த நிகழ்வு ஒருதரமான நிகழ்வாக இருந்தது. அதற்காக அவர்களை பாராட்டத்தான்வேண்டும். இனிமேலும் தரமான நாடங்களை மேடையேற்றும் முயற்சியில் உழகை;கவேண்டும் என்ற அவாவோடு நிறைவு செய்கிறேன்.

No comments: