குறளில் குறும்பு 40 – உறுதிப் பொருள்.

வானொலிமாமா நா.மகேசன்

ஞானா: அப்பா, கோப்பி குடிச்சு முடிச்சிட்டியள்தானே. இனிச் சொல்லுங்கோ திருக்குறளுக்கு
பாயிரம் எங்கை இருக்கெண்டு.

அப்பா: ஞானா, அம்மாவையுங் கூப்பிடு. பிறகு அவவுக்கு நான் திருப்பிச் சொல்லிக் கொண்டு
இருக்கேலாது.

சுந்தரி: நான் ஒரிடமும் போகேல்லை அப்பா. இஞ்சைதான் நிக்கிறன். போனமுறை
திருக்குறளுக்குப் பாயிரவியல் எண்டு ஒரு இயலே இருக்கு. அதிலை வந்து, முதல்
நாலு அதிகாரங்களும் அடங்கும் எண்டு சொன்னியள்.

அப்பா: சுந்தரி, முதல் நாலு அதிகாரங்களையும் சொல்லும் பாப்பம்.

சுந்தரி: முதலாவது கடவுள் வாழ்த்து, இரண்டாவது வான்சிறப்பு, மூண்டாவது நீத்தார்
பெருமை. நாலாவது அறன்வலியுறுத்தல்.

ஞானா: அப்பா இந்த நாலு அதிகாரங்களும் நூலைப் பற்றிய முழு விரங்களையும் சுருக்கிச்
சொல்லிற பாயிரம் எண்டு சொல்லுறியள். அதாவது இந்தக் காலத்து மொழியிலை
சொன்னால் ஒரு முன்னுரை எண்டு சொல்லுறியள். அப்பிடித்தானே?

அப்பா: ஞானா நான் உதைக் கண்டுபிடிச்சுப் புதிசாய் ஒண்டும் சொல்லேல்லை. பழங்காலத்து
அறிஞர்களே பல இடத்திலை சொல்லியிருக்கினம்.சுந்தரி: எங்கை சொல்லியிருக்கினம் எண்டதைச் சொல்லுங்கோவன் அப்பா. அப்பதானே
இவள் பிள்ளை நம்புவள்.

அப்பா: சுந்தரி, இவள் பிள்ளை வைச்சிருக்கிற திருக்குறள் புத்தகத்திலை பிற்பகுதியிலை
திருவள்ளுவ மாலை எண்டு ஒரு பகுதியிருக்கு. அதைச் சிறப்புப்பாயிரம் எண்டும்
சொல்லிறவை. அதிலை வந்து 50க்கு மேற்பட்ட பழந்தமிழ்ப் புலவர்கள் திருக்குறளைப் பற்றிப் பாடின பாடல்கள் இருக்கு.

ஞானா: அப்பா இந்தத் திருவள்ளுவமாலையிலை திருக்குறளுக்கு முதல் நாலு அதிரங்களும்
பாயிரம் எண்டு சொல்லியிருக்கோ?

அப்பா: நான் சொன்னால் நீ நம்பமாட்டாய் ஞானா, ஆனால் எறிச்சலூர் மாலாடனார் எண்ட
புலவர் பாடின ஒரு வெண்பாவை மட்டும் சொல்லிறன் கேள்.

பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே
தூய துறவறமொன் றூழாக -------- ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துபால் வள்ளுவனார் தேர்ந்து.

ஞானா: நீங்கள் ராகம் இழுத்தால் போலை என்னப்பா? எனக்கு ஒரு அநியாயமும்
விளங்கேல்லை.

அப்பா: விளங்காதுதானே. தமிழைச் சுவைச்சப் படிச்சால் அல்லவோ விளங்கும். நுணிப் புல்
மேஞ்சாப்போலை விளங்கியிடுமே?

சுந்தரி: சும்மா விலை வைக்காமல் கருத்தைச் சொல்லுங்கோவன் அப்பா.

அப்பா: சுந்தரி, இந்த மாலாடனார் எண்ட புலவர் திருக்கறளின்ரை அறத்துபால் எண்ட
பகுதியின்ரை விவரத்தை மட்டுந்தான் இந்தப் பாட்டிலை சொல்லியிருக்கிறார்.
எப்பிடி எண்டதைப் பாருங்கோ.

பாயிரவியலிலை நான்கு அதிகாரம், இல்லறவியல் இருபது அதிகாரம்,
துறவறவியல் பதின்மூனறு அதிகாரம், ஊழியல் ஒரு அதிகாரம் எணடு
அறத்துப்பாலை நாலு வகையாய்ப்பிரித்து நூலின்ரை திறத்தை அறிந்து
வள்ளுவனார் தேர்ந்து எழுதியிருக்கிறார் எண்டதுதான் இந்தப்பாடலின்ரை
கருத்து.-2-

சுந்தரி: அப்பிடி எண்டால் அப்பா திருக்குறளின்ரை முதல் நாலு அதிகாரங்களும்
சேர்ந்ததுதான் பாயிரம் எண்டு இந்தப் புலவர் சொல்லியிருக்கிறார்.

அப்பா இவார் மட்டும் இல்லைச் சுந்தரி, திருவள்ளுவ மாலையிலை பல புலவர்மார்
இதைச் சொல்லியிருக்கினம்.

ஞானா: சரி அப்பா திருக்குறளின்ரை முதல் நாலு அதிகாரங்களும் பாயிரம் என்டு
எடுத்துக் கொள்ளுவம். பாயிரம் எண்டால் முன்னுரை. ஒரு நூலிலை உள்ள கருத்துகளைச் சுருக்கிச் சொல்லிறதுதான் முன்னுரை. இந்த முன்னுரையிலை
திருக்குறளிலை உள்ள கருத்தெல்லாம் சுருக்கிச் சொல்லப்பட்டிருக்கோ?

அப்பா: உந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்லிறத்துக்கு கன நியாயங்களை அலச
வேணும் ஞானா.

ஞானா: கன நியாயம் எண்டு சொல்லி மழுப்பாதையுங்கோ. சொல்;ல முடியாட்டில்
திருக்குறளுக்குப் பாயிரம் எண்டு ஒண்டு திருவள்ளுவர் எழுதேல்லை. பின்னுக்கு
வந்த புலவர்மார் கூட்டிச் சேத்துப் பாயிரவியல் என்டு எழுதிவைச்சிருக்கினம்
எண்டதை ஒப்புக் கொள்ளுங்கோ.

அப்பா: ஞானா, தமிழருடைய வாழ்க்கையிலை உறுதிப் பொருள்கள் எண்டு சொல்லப்படிறது
அறம், பொருள், இன்பம், வீடு எண்டதை நீ ஒப்புக்கொள்ளிறியோ?

ஞானா: ஒப்புக்கொள்ளிறன் அப்பா. ஆனால் நீங்கள் மாட்டுப்பட்டுப் போனியளே.
திருவள்ளுவர் வீட்டுப்பால் எண்டு ஒரு பகுதி எழுதயில்லையே.

அப்பா: உங்கைதான் இந்தப் பாயிரத்தின்ரை சிக்கல் வெளிக்கப் போகுது. முன்னுரையிலை
நூலிலை உள்ள எல்லாச் செய்திகளையும் சுருக்கிச் சொல்லவேணும். இப்ப பார்
ஞானா, உலக உயிர்களின் வாழ்வுக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் ஒருகடவுள்.
அவர்தான் உயிகளைக் காத்து, அனுபவம் ஊட்டி இறுதியிலே தன்னை வந்தடையச்
செய்கிறார் என்பதை விளக்க, முதலாவது அதிகாரம் கடவுள் வாழ்த்தை எழுதினார்.
கடவுளின் சக்தியை உயிர்கள் அறிவேண்டும் என்பதைக் காட்ட இரண்டாவது
அதிகாரம் வான்சிறப்பு அதாவது மழையை உதாரணம் காட்டினார். மக்கள் கடவுளின் அருளையும், அருள் இயக்கத்தையும் அறியாதிருப்பதைத் தடுக்க, அந்த அருள்
விளக்கத்தை உணர்ந்த, மகான்களை நினைவுபடுத்த மூன்டாம் அதிகாரமான
நீத்தார் பெருமையை வைத்தார். நான்காம் அதிகாரமான அறன்வலியுறுத்தலில்
அறவாழ்வு வாழ்ந்து பொருழீட்டி இன்பம் அனுபவித்து வாழ்வாங்கு வாழ்ந்தால,;
தெய்வத்தன்மை அடைந்து என்றும் மாறா வீட்டின்பம் அடையலாம் என்பதைச்
சுட்டிக்காட்டினார்.

சுந்தரி: ஆக, மக்களுக்கு வேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு எண்ட நாலு உறுதிப்
பொருள்களையும் திருக்குறளின் முதல் நான்கு அதிகாரங்களிலையும் சுருக்கிப்
பாயிரவியல் என்ற பகுதியிலை பாடியிருக்கிறார் எண்டு சொல்லுறியள் அப்பா.
அப்பிடித்தானே?

அப்பா: அப்பிடித்தான் அறிஞர்கள் சொல்லுகினம்;. இதுக்கு மேலை என்னாலை சொல்ல
முடியாது ஆளை விடுங்கோ.

(இசை)No comments: