மெல்பேண் கறுப்பு ஜீலை நினைவேந்தல் நாள் நிகழ்வு


.
உலகத்தின் கவனத்தினை ஈர்த்த 1983 ஜூலை தமிழின அழிப்பை நினைவுகூரும் நினைவேந்தல் நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநிலத்தில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை 21-07-2012 அன்று 6. 30 மணிக்கு மெல்பேணிலுள்ள சென் யூட்ஸ் மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றல், பொதுச்சுடர் ஏற்றுதல், அகவணக்கத்துடன் நினைவேந்தல் நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.
விடுதலைக்காக போராடிவரும் குர்திஸ் சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்குகொண்டு, தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட இந்நிகழ்வில் 300 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



ஜூலைப்படுகொலையின் நிகழ்வுகளை இளையோர் செயற்பாட்டாளரான சிறிராம் அவர்கள் காணொளி தொகுப்பு மூலம் காட்சிப்படுத்தி விளக்கினார். தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக்ககழகத்தைச் சேர்ந்த மூத்த செயற்பாட்டாளரான வைத்தியக் கலாநிதி ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்கள், 1983 ஜூலையில் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பானது எவ்வாறு திட்டமிடப்பட்டு தமிழர்களை அழிக்கும் நோக்கோடு செயற்படுத்தப்பட்டது என்பதை தனது தனிப்பட்ட அனுபவத்தின் ஊடாக நினைவுகூர்ந்தார்.

நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றிய அவுஸ்திரேலிய குர்திஸ் சமூகத்தின் பிரதிநிதியான ரொட் மெகே அவர்கள் உரையாற்றுகையில், தமிழ் மக்களுக்கு எவ்வாறு அநீதி இழைக்கப்பட்டதோ அதே வகையில்தான் தமது தேசமும் அநீதிக்கு உள்ளாக்கிப்பட்டுவருவதை நினைவுபடுத்தினார். விடுதலைக்காக போராடிவரும் தேசங்கள் சனநாயகப்பண்புகள் நிறைந்த முன்னேறிய நாடுகளில்கூட, பாரிய சவால்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டினார். தொடரும் காலத்தில் தமிழ் மக்களோடு இணைந்து செயற்படுவதற்கான தமது ஆவலையும் வெளிப்படுத்தினார்.

தமிழ்மக்களுக்காக நீண்டகாலமாக சட்டரீதியான உதவிகளை மேற்கொண்டுவரும் றொபேட் ஸ்ராறி இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டார். அவர் தனதுரையில், அவுஸ்திரேலியாவில் தமிழ் மக்களும் குர்திஸ் மக்களும் தமது தாயகத்திற்கான உதவிகளை மேற்கொள்வதில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை சுட்டிக்காட்டி நீதிக்காக தொடர்ந்தும் உழைக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். ஒரு சட்டவாளராக இலங்கையில் தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையை தாம் ஆதரிப்பதாகவும் தமிழ்மக்களுக்கு அங்கு உரிமைகள் மறுக்கப்பட்டதன் சம்பவங்களையும் எடுத்துக்கூறினார்.

புலம்பெயர்ந்த தமிழ்மக்களை அடக்குவதற்கு சிறிலங்கா அரசு எவ்வாறு வெளிநாடுகளை பயன்படுத்துகின்றது என்பதையும், அவற்றில் எவ்வாறு வெளிநாட்டு அரசுகள் கடந்த காலங்களில் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன என்பதையும் தான் கையாண்ட வழக்கு விசாரணைகளின் அனுபவத்தின் ஊடாக குறிப்பிட்டார்.

ஈழத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உரையாற்றிய முன்னால் தலைவர் சிவகுமார் அவர்கள், சிங்கள சிறிலங்காவின் பேரினவாத அரசினால் வெளிப்படையாகஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்பு 1983 ஜூலை  மாதத்தில் மட்டுமல்ல அதற்கு முன்னர் 1958 இலும் 1977 இலும் நடைபெற்றுவந்தது என்பதையும் சுட்டிக்காட்டி, தற்போது சிறிலங்கா அரசினால் நீதித்துறை எவ்வாறு முடக்கப்பட்டு தமிழின அழிப்பு நடைபெற்றுவருகின்றது என்பதையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
கலைநிகழ்வுகளாக குர்திஸ் சமூகத்தினரின் பாரம்பரிய நடனநிகழ்வும், நடன ஆசிரியை நர்மதா ரவிச்சந்திராவின் நடனப்பள்ளி மாணவிகள் வழங்கிய “பனைமரமே பனைமரமே”என்ற பாடலுக்கான உணர்வுபூர்வமான நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கீதா தேவேந்திரன் பாடிய Destiny Child இன் Stand Up For Love என்ற பாடலும் உணர்வுமிக்க இன்னொரு படைப்பாக அமைந்தது.

தமிழ்மக்களின் வலிமிகுந்த உணர்வுகளை புரிந்துகொண்ட அவுஸ்திரேலிய செயற்பாட்டளர்களில் ஒருவரான பென் சோலோவின் பேச்சும் இந்த நிகழ்வில் இடம்பெற்றது. இவர் உலகெங்கும் இடம்பெறும் மனிதப்படுகொலைகள் குறித்து தனது சித்திரங்களை ஊடாக பல்லின மக்கள் மத்தியில் கருத்துக்களை கொண்டுசெல்லும் இளம் செயற்பாட்டாளர் ஆவார். இவர் தனது பேச்சின்போது சிறிலங்கா அரசு எந்த ஆதாரமும் இன்றி மேற்கொண்ட அப்பட்டமான மனிதப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் மௌனம் காத்தமை குறித்த கவலையையும் கண்டனத்தையும் முன்வைத்து பேசினார்.
இறுதி நிகழ்வாக பழ. நெடுமாறன் ஐயா அவர்களினால் எழுதப்பட்ட “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” என்ற நூல் வெளியீட்டுவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இரவு 8.30 மணிவரை உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வு கொடியிறக்கத்தை தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற உறுதியேற்றலுடன் நிறைவடைந்தது.

No comments: