இலங்கைச் செய்திகள்

.
தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலின் பின்னர்....

இலங்கையில் 50 குழந்தைகள் எச்.ஐ.வி. வைரஸுடன் பிறந்துள்ளன; 3000 நோயாளிகளும் உள்ளனர்

அவசரமாகத் தேவைப்படும் மதச்சார்பற்ற சிந்தனைகள்

மீண்டும் 13+ கதை

யுத்த விதவைகளுக்கு சுய வலுவூட்டும் முன்முயற்சி

ஹக்கீமின் மத்தியஸ்தம்...?

யுத்தம்; பொதுமக்களை பாதுகாக்கவா? அழிக்கவா?

தொடரும் அட்டூழியம்: காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயத்துக்கு தீவைப்பு

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட விவகாரம்: அம்பாறையில் ஹர்த்தால்

தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலின் பின்னர்.... _

23/4/2012

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் பிக்குகள் தலைமையிலான பெரும்பான்மை இனத்தவர்களால் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் உடைத்து சேதமாக்கப்பட்டது.

அதன் பின்னர் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அதன் சுருக்கம் வருமாறு,

எமக்கு நீதியையும் பாதுகாப்பையும் பெற்றுத்தாருங்கள் - தம்புள்ளை பகுதி தமிழ்பேசும் மக்கள்


பள்ளிவாசல் வேறிடத்தில் அமைக்கப்படுமானால் அதற்கான முதற்கட்ட அன்பளிப்புப் பணத்தை ரங்கிரி தம்புள்ளை அபிவிருத்தி நிதியத்தினூடாக நாமே வழங்குவோம் - ஸ்ரீ சுமங்கள தேரர் (தம்புள்ளை ரஜமகா விகாரை)

பள்ளிவாசல் புனித பூமியிலிருந்து உடன் அகற்றுவதற்கு நடவடிக்கை - பிரதரமர் தி.மு.ஜயரத்ன

பள்ளிவாசலை அகற்றுவதற்கு எவ்வகையிலும் சம்மதிக்க முடியாது - அமைச்சர் பௌசி

நாட்டில் இன ஒற்றுமைக்கு விழுந்த பாரிய அடி - அமைச்சர் ரவூப் ஹக்கீம்

ஏனைய மதத்தவர்களை அழிக்கும் போதனையை புத்தர் வழங்கவில்லை - யோகேஸ்வரன் எம்.பி.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.

புனித பிரதேசம், புனித தலங்கள் என்பது ஒரு மதத்தினருக்கு மட்டும் உரியதா? - கிழ.மாகாண சபை உறுப்பினர் முபீன்

அனுராதபுர புனித பூமியில் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான மதுபானசாலை இருக்க முடியுமென்றால் தம்புள்ளை புனித பூமியில் ஏன் பள்ளிவாசல் இருக்கக் கூடாது? - கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அஸாத் சாலி

இந்தச் சம்பவத்தினால் பாரிய அவமானம் ஏற்பட்டுள்ளது - ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன்

அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெள்ளைத் தொப்பியுடன் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதற்குப் பரிசாகவே அரசாங்கத்தினால் இந்தப் பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது - புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன

இந்தப் பிரச்சினையை சமாதானமாகவே தீர்க்க முயற்சிக்கிறோம் - இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்
நன்றி வீரகேசரி இலங்கையில் 50 குழந்தைகள் எச்.ஐ.வி. வைரஸுடன் பிறந்துள்ளன; 3000 நோயாளிகளும் உள்ளனர்

Tuesday, 24 April 2012

aids_1இலங்கையில் 3000 க்கும் அதிகமானோர் எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் எச்.ஐ.வி. நோயாளர்கள் பட்டியலில் தினமும் ஒரு நோயாளி புதிதாக இணைவதாக வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபரங்கள் தொடர்பிலான அவதானிப்புகள் எயிட்ஸ் தடுப்பு பிரிவுத் தலைவர் வைத்தியர் நிமல் எதிரி சிங்கவால் இனங்காணப்பட்டதுடன், அண்மையில் எயிட்ஸ் தொடர்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் இத் தகவல் வெளியிடப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

கடந்த வருடம் இலங்கையில் 150 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் 50 குழந்தைகள் எச்.ஐ.வி. வைரஸுடன் பிறந்துள்ளன. இனங்காணப்பட்ட எச்.ஐ.வி. நோயாளிகளில் 61 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாக இவ் அறிக்கை தெரிவித்திருக்கிறது. தவறான உடலுறவு மற்றும் தவறான குருதிப்பரிமாற்றம் எச்.ஐ.வி. நோயினை பரவச் செய்கிறது.

கருத்தரித்த தாய்மார்களுக்கு இந் நோய் ஏற்படுமாயின் அது குழந்தைக்கும் பரவும் என அவர் தெரிவித்தார்.

இது குறித்து ராகம வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஜயதாதரி ரணதுங்க கருத்து தெரிவிக்கையில் ;

கடந்த வருடத்தில் ராகம வைத்தியசாலையில் எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்ட 8 பேர் இனங்காணப்பட்டதுடன், இவ் வருடத்தின் இரு மாதங்களுக்குள் 5 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றுடன் 79 சிபிலிசு நோயாளிகளும் 156 ஹேர்ப்ஸ் நோயாளிகளும் ராகம வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
நன்றி தினக்குரல்
அவசரமாகத் தேவைப்படும் மதச்சார்பற்ற சிந்தனைகள்

Sunday, 22 April 2012

வடமத்திய நகரான தம்புள்ளயில் பௌத்த புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட இடத்தில் முஸ்லிம் மக்களின் வணக்கத்தலமான பள்ளிவாசல் அமைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருப்பதுடன் புத்தபிக்குகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பள்ளிவாசலுக்குள் பிரவேசித்து வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. பள்ளிவாசல் அமைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும் நாளை திங்கட்கிழமை தொடக்கம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டவற்றை அகற்றும் வேலைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அந்தப் பள்ளிவாசல் தசாப்த காலங்களாக இருந்து வருவதாகவும் அந்தப் பள்ளிவாசல் சட்டபூர்வமானதெனவும் அங்கு பிரார்த்தனையில் ஈடுபடும் முஸ்லிம் மக்களும் மத அமைப்புகளும் கூறுகின்றன. தம்புள்ள புனிதப் பிரதேசத்திற்குள் இருக்கின்ற நிலத்தை பௌத்த மதத்தை சாராத விடயங்களுக்காக அதிகாரிகள் விற்பனை செய்துவிட்டனர் என்று கடுமையான குற்றச்சாட்டு அப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னணிப் பிக்குவிடமிருந்து எழுந்திருக்கிறது.

மதவழிபாட்டுத் தலங்கள் தொடர்பான இத்தகைய முரண்பாடுகள், மோதல்கள், சர்ச்சைகளுக்கு நல்லிணக்கத்துடனேயே தீர்வு காணப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மதங்களைச் சார்ந்த தலைவர்கள் ஒன்று கூடி ஆராய்ந்து சுமுகமான தீர்வினைக் காண முயற்சிப்பதே மதரீதியான நல்லிணக்கத்துக்கு உதவுவதாக அமையும். வெவ்வேறு மதங்களைச் சார்ந்தோரின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்குமான சகிப்புத்தன்மை பூச்சியமாக இருப்பதே இத்தகைய சர்ச்சைகளும் மோதல்களும் தோற்றம் பெறுவதற்கும் ஊதிவெடிப்பதற்கும் காரணமாக அமைகின்றன. "வாழு, வாழவிடு' என்ற தன்மையை பல்வேறு சமூகங்கள், மதக்குழுக்கள் வாழுகின்ற நாட்டில் கட்டியெழுப்புவதே இங்கும் உடனடியாகத் தேவைப்படும் விடயமாகக் காணப்படுகிறது. பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வாழுகின்ற நாட்டில் மதசமத்துவம் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பது மிக அவசியமானதாகும். அண்டைய நாடான இந்தியாவானது பல மதங்களைச் சார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அதேசமயம் மதச்சார்பற்ற தேசமென அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதத்தை அந்த நாட்டில் வாழும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் குழுமங்களுக்கு வழங்கியிருக்கிறது.

"மதச்சார்பற்ற தன்மை கொண்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடானது' குறித்ததொரு மதம் சார்ந்த சமூகத்தின் மத்தியில் மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதுடன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லையென்றும் மாறாக பல்மத சமூகத்தில் மதச்சார்பற்ற அரசை உருவாக்கும் அளவுக்கு விரிவடைந்திருக்கிறது எனவும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிதர் ஜவஹர்லால் நேரு, 1958 நவம்பர் 29 இல் புதுடில்லியில் வைத்து பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள்ஸ் டி கௌலியின் விசேட தூதுவர் அன்ட்ரீ மால் ரோக்ஸிடம் பெருமையாகக் கூறியிருந்தார். மதங்களுக்கிடையேயான நல்லிணக்கம், சகிப்புணர்வு, புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் வகிபாகம் பாரிய அளவுக்கு தேவைப்படுகிறது. சமத்துவம், ஜனநாயகம், சமூகநீதி என்பன ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த விடயங்களாகும். இவற்றைப் பேணிக் கடைப்பிடிக்காத சமூகத்தைக் கட்டியெழுப்பாதவரை குறித்ததொரு எந்தவொரு சமுதாயமும் பெறுமானங்கள், விழுமியங்களைக் கொண்டதென உரிமை கோரவும் முடியாது, உரிமை பேசுவதற்கும் பாத்தியதையைக் கொண்டதல்ல, தத்தமது நம்பிக்கைகள் மற்றும் புராதன காலம் தொடக்கம் எழுதிவைக்கப்பட்டவைகள் என்பனவற்றில் சகல மதங்களுமே நெகிழ்வுத் தன்மையைக் கொண்டவையாக இல்லை.

இந்நிலையில் உலகம் மாற்றமடைந்து வரும் போது இயல்பாகவே இவை முரண்பாடுகளை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்படுகின்றது. அறிவியல், கலாசார இயக்கங்கள் முன்னெடுத்த விழிப்புணர்வினால் ஐரோப்பா மறுமலர்ச்சியடைந்திருந்த அதேசமயம், அங்கு மதச்சார்பின்மையென்பது இவற்றுடன் ஒழுங்கிணைக்கப்பட்டிருந்ததே மேற்குலகு பாரிய வளர்ச்சியடைவதற்குக் காரணமென்பது வரலாறு எமக்கு கற்றுத்தந்த பாடமாகும். அங்கு தோன்றிய மறுமலர்ச்சி இயக்கங்களின் மத்தியில் பிரதானமாக செல்வாக்கு செலுத்தியிருந்த விடயம் மனிதத்துவமாகும். மனிதர்களுக்கும் அவர்களின் பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற எண்ணப்பாட்டை உறுதியாக பற்றிப் பிடிப்போமானால் இன, மத, மொழி ரீதியான சச்சரவுகளோ, பூசல்களோ தீர்வு காணப்பட முடியாத விடயங்களாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை.

தம்புள்ளயில் இடம்பெற்றதைப் போன்று பல்வேறு சம்பவங்கள் சிறுபான்மைத் தமிழ் பேசும் சமூகங்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அடிக்கடி இடம்பெறுகின்றன. இவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவதற்கு உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் சட்ட ரீதியான பொறுப்பு மட்டுமன்றி தார்மீகக் கடமையுமாகும். மதங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதற்கு உதவுகின்றனவே தவிர முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவும் மோதல்களைத் தூண்டுவதற்கும் போதிக்கவில்லையென்பதையும் சகலதரப்பினரும் மனதில் கொள்வதுடன் "வாழு, வாழவிடு' என்பதே சகல மதங்களினதும் அடிப்படைப் போதனை என்பதை யாவரும் குறிப்பாக மதங்களின் தலைவர்களும் சிந்தையில் கொண்டு செயற்பட வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுகோளாகும்.
நன்றி தினக்குரல்மீண்டும் 13+ கதை

Sunday, 22 April 2012

அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் (13 +) என்ற கதை மீண்டும் வந்திருக்கிறது. இலங்கை வந்திருந்த இந்திய பாராளுமன்றக் குழுவினர் கடந்த சனிக்கிழமை காலை நாடு திரும்புவதற்கு முன்னதாக கொழும்பில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவி திருமதி சுஷ்மா சுவராஜ் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதற்கப்பால் செல்வதற்கும் தயாராக இருப்பதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். கடந்த ஜனவரியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடமும் இத்தகைய உறுதிமொழியொன்றை ஜனாதிபதி ராஜபக்ஷ அளித்திருந்த போதிலும் அவர் அவ்வாறு எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லையென்று அமைச்சர்கள் பின்னர் மறுத்திருந்தனர் என்பதை செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டியபோது அமைச்சர்கள் எதையும் கூறுவதோ அல்லது எதையும் நிராகரிப்பதோ இங்கு பிரச்சினை அல்ல. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பாலும் செல்லப்போவதாக ஜனாதிபதியே தன்னிடம் கூறியிருப்பதே முக்கியமானது என்று திருமதி சுவராஜ் பதிலளித்திருந்தார்.


ஜனாதிபதி ராஜபக்ஷ ஜனவரி 17 ஆம் திகதி அளித்த காலை விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு அவருடன் பேச்சு நடத்தியிருந்த கிருஷ்ணா பின்னர் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போது ஜனாதிபதி தன்னிடம் பதின்மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் செல்வது என்ற உறுதிமொழியை அளித்ததாகக் கூறினார். ஆனால், இரு வாரங்கள் கழித்து இலங்கையில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை அலரிமாளிகைக்கு அழைத்து காலை விருந்தளித்து நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடிய வேளை ஜனாதிபதி ராஜபக்ஷ தான் எந்தவித உறுதிமொழியையும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு அளிக்கவில்லையென்று மறுதலித்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை செய்தியாளர் மாநாட்டின் ஆரம்பத்தில் தனது தலைமையிலான தூதுக்குழுவின் சார்பில் அறிக்கையொன்றை வாசித்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி உள்நாட்டின் போரின் முடிவிற்குப் பிறகு தேசிய நல்லிணக்கத்தை நோக்கியும் அரசியல் தீர்வை நோக்கியும் நகருவதற்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருந்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போரின் விளைவாக ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்கும் நிலையான சமாதானத்தை நோக்கி பயணஞ் செய்வதற்கும் பயனுடைய பல ஆக்கபூர்வமான விதப்புரைகளைச் செய்திருக்கிறது. இந்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் துரிதம் காட்டப்பட வேண்டும். எமது விஜயத்தின் போது இலங்கை நண்பர்களுக்கு நாம் தெரிவித்த செய்தி அதுதான் என்றும் திருமதி சுவராஜ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.விரைவில் அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட நெருக்கடியில் பங்கும் ஈடுபாடும் கொண்ட சகல தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் இறங்கவேண்டும் என்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான சூழ்நிலைகளைத் தோற்றுவிப்பதற்காக ஆலோசனைகள் நடத்தப்படவேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதாக ஏற்கெனவே இந்தியத் தரப்புக்கு இலங்கையினால் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டிருந்ததையும் தனது அறிக்கையில் இந்திய எதிர்க்கட்சித் தலைவி குறிப்பிடத் தவறவில்லை.

தங்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அளித்ததாக திருமதி சுவராஜ் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த விடயம் குறித்து இன்றுவரை இலங்கை அரசாங்கத் தரப்பிடமிருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. இந்தியாவிலிருந்து வருகின்ற எந்தவொரு அமைச்சரிடமோ, இராஜதந்திரியிடமோ அல்லது அரசியல்வாதியிடமோ புதுடில்லிக்கு திருப்தி தரக்கூடிய ஒரு பதிலை தயார் செய்து தெரிவிப்பதே கொழும்புக்கு வழக்கமாகிப் போய்விட்டது. இந்தியாவின் சிலுசிலுப்பைத் தணிப்பதற்கு 13 என்று சொன்னாலே போதும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. இந்தப் 13 ஐ கடந்த கால் நூற்றாண்டு காலமாக இலங்கையில் பதவியில் இருந்திருக்கக்கூடிய அரசாங்கத்தின் சகல தலைவர்களுமே புதுடில்லிக்கு கூறிவந்திருக்கிறார்கள். ஆனால், அந்தத் திருத்தம் ஒருபோதுமே உருப்படியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது இந்தியாவின் தலைவர்களுக்குத் தெரியாததும் அல்ல. ஆனால், அவர்களோ இலங்கைத் தலைவர்களினால் இத்தகைய 13+ உறுதிமொழிகள் கூறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தங்களது கருத்துக்களுக்கு கொழும்பு மதிப்பளிக்க வேண்டுமென்று நினைக்கிறது என்ற ஒரு மெத்தனமான எண்ணத்துடன் காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். இனிமேலும் கூட 13 ஐப் பயன்படுத்தி இந்தியாவின் பரபரப்புகளைத் தணித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை இலங்கைத் தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தியத் தலைவர்களுக்கு கொழும்பு அளிக்கின்ற எந்த உறுதிமொழியையும் அவர்கள் பொருட்டாக நோக்குவதில்லை. கடந்த கால் நூற்றாண்டு கால அனுபவம் இதற்கு சான்று பகருகிறது. இந்திய எதிர்க்கட்சித் தலைவியிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ 13+ பற்றி எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை என்ற அறிவிப்பை அரசாங்கத் தரப்பினர் விடுப்பதற்கு நீண்ட நாள் காத்திருக்கத் தேவையில்லை என்பதே எமது அபிப்பிராயமாகும்.
நன்றி தினக்குரல்யுத்த விதவைகளுக்கு சுய வலுவூட்டும் முன்முயற்சி

Tuesday, 24 April 2012

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது 45 ஆயிரம் யுத்த விதவைகள் இருப்பதாகவும் அவர்களில் 23 ஆயிரம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் காணப்படுவதாகவும் அதிலும் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்கு குறைந்தவர்கள் என்றும் அவர்களுடன் கதைத்த போது தான் கண்ணீர் விட்டு அழுததாகவும் இலங்கைக்கு வருகை தந்து திரும்பிச் சென்றுள்ள இந்திய பாராளுமன்றக் குழுவைச் சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம். பி. ரி.கே. ரங்கராஜன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். தான் மட்டுமன்றி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய எம். பி. க்கள் யாவருமே விதவைப் பெண்களின் நிலைமையைப் பார்த்து துயரடைந்திருப்பதாக கூறியுள்ளதுடன் அவர்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் முயற்சிகளை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாக காணப்படுகிறது.


இந்த விதவைகளில் முதற்கட்டமாக 800 பேரைத் தெரிவு செய்து அவர்களுக்கு கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம் மாநிலங்களில் பல்வேறு தொழில் துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கணினிப் பயிற்சி, உணவு பதனிடுதல், தையல் உட்பட பல்வேறு தொழில்துறை பயிற்சிகள் வழங்கப்பட்டு சுயவலுவூட்டப்படும் நடவடிக்கைகள் இடம்பெறுவதை தான் பார்த்துள்ளதாக ரங்கராஜன் கூறியுள்ளார். அதேவேளை சுய உதவிக்குழுக்களை அமைத்து இந்தியாவின் உதவியுடன் விதவைகளின் ஜீவாதாரத்தை மேம்படுத்துவதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள செய்தி சிறிது ஆறுதலளிக்கக் கூடியதாகும்.

விதவைகளின் அவலநிலையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு தாங்கள் கொண்டு சென்ற போது, யுத்தத்தில் பலியான படைவீரர்களின் 30 ஆயிரம் விதவைகள் இருப்பதாக ஜனாதிபதி கூறியதாகவும் இந்தியக் குழுவினர் தெரிவித்துள்ளனர். சுயதொழில் வாய்ப்புப் பெற்ற பெண்கள் சங்கத்தை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வலுவூட்டுவதற்காக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்று கொழும்பு டில்லிக்கு இடையே கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த முன் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டியது உடனடித் தேவையாகக் காணப்படுகிறது.

"பார்வைக்குத் தென்படாத மறக்கப்பட்ட, துன்பப்படுவோர்' என்ற நூலொன்று அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் உலகளாவிய ரீதியில் 24 கோடி 50 இலட்சம் விதவைகள் இருப்பதாகவும் அவர்களில் 11 கோடி 50 இலட்சம் விதவைகள் வறுமைக் கோட்டின் கீழ் சமூக ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவர்களாக பொருளாதார உதவிகள் கிடைக்காதவர்களாக அவல வாழ்வை முன்னெடுப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பெண்களின் அவலத்தை உலகம் கவனத்தில் ஈர்த்துக் கொள்வதற்காக ஜூன் 23 ஆம் திகதியை சர்வதேச விதவைகள் தினமாக ஐ.நா. பொதுச்சபை பிரகடனப்படுத்தியிருந்தது. யுத்தம் மற்றும் கடல்கோள் போன்ற இயற்கை அனர்த்தங்களால் விதவைகளானோரே இலங்கையில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அரசாங்கத்தின் புள்ளி விபரத்தின் பிரகாரம் வடக்கில் 40 ஆயிரம் யுத்த விதவைகளும் கிழக்கில் 45 ஆயிரம் விதவைகளும் இருக்கின்றனர். இவர்களில் வயது குறைந்த இளம் பெண்கள் மட்டுமன்றி முதிர்ந்தவர்கள், அங்கவீனர்கள் மட்டுமன்றி கணவர்மார் எங்கே இருக்கின்றார்கள் என்பது பற்றி அறியாதவர்களும் பெருந்தொகையினராக உள்ளனர். அத்துடன் சாதாரணமாக இரு பிள்ளைகள் கொண்ட குடும்பமொன்று அன்றாட வாழ்வை முன்னெடுக்க குறைந்தது ஆயிரம் ரூபாவாவது தினசரி தேவைப்படும் நிலையில் குடும்பத் தலைவன் இல்லாத இந்த விதவைப் பெண்கள் எவ்வாறு சீவிப்பது என்பது எம்முன்னால் உள்ள கேள்வியாகும். அதேவேளை "பாதுகாப்பு' என்பது வடக்கு, கிழக்கை சேர்ந்த விதவைப் பெண்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது.

அத்துடன் தந்தையாகவும் தாயாகவும் செயற்படவேண்டிய நிலையில் இந்த விதவைகள் இருப்பதால் தமது பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் அநாதை இல்லங்களுக்கு அவர்களை அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

அரசாங்கம் மட்டுமன்றி அரசசார்பற்ற நிறுவனங்களும் விதவைப் பெண்களுக்கு சுய வலுவூட்டுவதற்காக தையல் இயந்திரங்கள் மற்றும் கைவேலைகள் போன்றவற்றுக்கான உபகரணங்களையும் உதவிகளையும் வழங்கி வருகின்ற போதிலும் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தி வருமானத்தை ஈட்டுவதற்கான வழிவகைகள் அவர்களுக்கு குறைவானதாகவே இருக்கின்றன.

இந்த விதவைப் பெண்களின் துன்பத்தைப் போக்குவதற்கான திட்டங்களை அறிவித்தால் மட்டுமோ அல்லது உதவிகளை வழங்கினால் மட்டுமோ போதாது. விதவைப் பெண்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டும் திட்டங்கள் செவ்வனே அமுல்படுத்தப்படுகின்றதா ? அவற்றின் பயன்கள் அவர்களைச் சென்றடைகிறதா? என்பதைக் கண்காணிக்கும் பொறிமுறையை அரசாங்கம் சிறப்பான முறையில் ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையின் யுத்த விதவைகளை வலுப்படுத்த இந்தியா ஆரம்பித்துள்ள முன் முயற்சிகள் வரவேற்கப்படத்தக்கவையாகும். ஆனால் அவை செம்மையான முறையில் அமுல்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்.

அதேசமயம் வட, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த யுத்த விதவைகளின் மற்றொரு முக்கியமான பிரச்சினை "பாதுகாப்பு' என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
நன்றி தினக்குரல்

ஹக்கீமின் மத்தியஸ்தம்...?

Wednesday, 25 April 2012

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முட்டுக்கட்டை நிலையை நீக்குவதற்கு அனுசரணையாளரோ அல்லது மத்தியஸ்தரோ தேவையென்று இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்கெனவே சர்வதேச மத்தியஸ்தம் தேவையென்று கூறியிருந்தார். அவரது கருத்தை கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் எந்தளவுக்கு ஏற்றுக்கொண்டார்களோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால், அவர்களினால் வேறு மாற்று யோசனை எதையும் முன்வைக்க முடியவில்லை என்பது மாத்திரம் உண்மை. பிரேமச்சந்திரனும் கூட சர்வதேச மத்தியஸ்தம் தேவையென்று கூறுகிறாரே தவிர அந்த மத்தியஸ்த பணியைச் செய்யக்கூடியவர்கள் யார் என்பதை விசேடப்படுத்திக் கூறுவதற்கு அவர் முன்வருவதாக இல்லை.

கடந்த வருடம் முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன. அந்தப் பேச்சுவார்த்தைகளின் எந்தவொரு கட்டத்திலும் கூட்டமைப்பின் தலைவர்கள் நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்தியதில்லை. எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையிலும் வேறு மார்க்கமின்றி அவர்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தனர். தங்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது காணப்படக்கூடிய இணக்கப்பாட்டை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்வைப்பதாக அரசாங்கம் உறுதியளித்ததாக கூட்டமைப்புத் தலைவர்கள் கூறினார்கள். அவ்வாறு எந்தவொரு உறுதிமொழியையும் அளிக்கவில்லையென்று அரசாங்கத்தலைவர்களும் திட்டவட்டமாக மறுக்கவில்லை. இந்த நிலையில், இன நெருக்கடிக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்தது.

பாராளுமன்றத் தெரிவுக்குழு அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்கும்பட்சத்திலும் கூட கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் சமாந்தரமாகத் தொடருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிவந்த அரசாங்கம் திடீரென்று தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கான பெயர்களை கூட்டமைப்பு தரும் பட்சத்திலேயே தொடர்ந்தும் அதனுடன் பேச முடியுமென்ற நிபந்தனையை அரசாங்கத்தரப்பினர் முன்வைத்தனர். ஆனால், அரசாங்கம் உறுதியளித்ததன் பிரகாரம் தங்களுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து அதில் காணப்படக்கூடிய இணக்கப்பாட்டை தெரிவுக்குழுவில் முன்வைக்கும் கட்டத்தில் அதன் செயற்பாடுகளில் இணைந்துகொள்ளத் தயாராயிருப்பதாகக் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்தார்கள். அந்தக் கட்டத்திலிருந்தே முட்டுக்கட்டை நிலை தொடருகிறது.

அதற்குப் பிறகு இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் பிளேக் உட்பட பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினார்கள். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்வதற்கு முன்வரவில்லை. தெரிவுக்குழுவுக்கு பெயர்களை தந்தால் மாத்திரமே கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்ற நிலைப்பாட்டையே தொடர்ந்தும் அரசாங்கம் வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் இலங்கை வந்திருந்த இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான லோக்சபா எதிர்க்கட்சித் தலைவி திருமதி சுஸ்மா சுவராஜும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பின் போதும் விஜயத்தின் இறுதியில் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதும் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இருதரப்பினருக்கும் இடையேயான முட்டுக்கட்டை நிலையை அகற்றுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கருத்தை அவரைச் சந்தித்த போது சுஸ்மா சுவராஜ் முன்வைத்திருந்தார். அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்றைய தினம் பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருந்தார். முஸ்லிம் காங்கிரஸுக்கும் கூட்டமைப்புக்கும் இடையே சுமூகமான உறவு நிலவுவதன் காரணத்தினால் அமைச்சர் ஹக்கீமின் கருத்துக்களை செவிமடுக்க கூட்டமைப்பு தயாராக இருக்கிறது என்று தெரிவித்த பிரேமச்சந்திரன் எந்தவிதமான நெகிழ்வுப் போக்கையும் காண்பிக்காமல் தனது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருக்கும் அரசாங்கத்தின் போக்கை ஹக்கீமினால் மாற்றமுடியுமென்பதில் தங்களுக்கு சந்தேகமிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், சுஸ்மா சுவராஜுடன் பேசிய சந்தர்ப்பத்திலோ அல்லது பிரேமச்சந்திரன் கருத்து வெளியிட்ட பின்னரோ இது விடயத்தில் தனது அபிப்பிராயம் என்ன என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வெளியிடவில்லை. இந்தியாவினால், அமெரிக்காவினால், ஐரோப்பிய ஒன்றியத்தினால் இயலாத காரியத்தை ரவூப் ஹக்கீமினால் சாதிக்க முடியுமென்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும். ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடத்தியவேளையில் அவரினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளைக் கேட்ட இந்திய எதிர்க்கட்சித் தலைவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவருக்கு நல்லுறவு இருப்பதை உணர்ந்துகொண்டதனால்தான் போலும் அவரிடம் அத்தகைய மத்தியஸ்த பணி தொடர்பாக கருத்தை முன்வைத்திருப்பார். ஆனால், அவரது அந்தக் கருத்து இலங்கையில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகளை முழுமையாக விளங்கிக்கொண்டதன் வெளிப்பாடாக இருக்கவில்லை என்பதே எமது அபிப்பிராயமாகும். ஹக்கீமின் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருப்பதாக தெரிவித்ததன் மூலம் பிரேமச்சந்திரனும் தாங்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடியின் பாரதூரத்தன்மையை முழுமையாக விளங்கிக் கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அத்தகைய ஒரு விளையாட்டுத்தனமான யோசனைகளைக் கேட்டு பரவசப்படக்கூடியளவுக்கு அரசியல் பக்குவம் இல்லாதவர் அல்ல என்பது எமது உறுதியான அபிப்பிராயம்!
நன்றி தினக்குரல்


யுத்தம்; பொதுமக்களை பாதுகாக்கவா? அழிக்கவா?

Thursday, 26 April 2012

பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக பாரிய அளவில் படை பல ஆயத்தங்களுடன் போர்கள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் மோதலில் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்படுவோர் பொதுமக்களாகவே இருக்கின்றனர் என்பதையும் உலகளாவிய ரீதியில் கடந்த இரு தசாப்தங்களாக இந்தப் போக்கு அதிகரித்துக் காணப்படுவதையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் அண்மையில் கவலையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

மரணம், துன்பம், நோய், ஆழமான மனப்பாதிப்புகளில் பொதுமக்கள் வகைதொகையின்றிப் பாதிக்கப்பட்டிருப்பதையும் தற்போதைய அரசியல், குற்றவன்முறைகளினால் இராணுவத்திலும் பார்க்க பொதுமக்களே மோசமாக தாக்குதல்களுக்கு உள்ளாவதுடன் யுத்தத்தின் சுமைகளை சுமப்பவர்களாகவும் அவர்கள் துன்பப்படுகிறார்கள் என்ற யதார்த்தத்தை ஆர்பர் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.நா.வில் நான்கு வருடங்கள் சேவையாற்றிவர் லூயிஸ் ஆர்பர். அதற்கு முன்னர் கனடாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் முன்னாள் யூகோஸ்லாவிய, ருவாண்டா ஆகியவற்றுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயங்களுக்கான தலைமை விசாரணையாளராகவும் பணிபுரிந்து மனித உரிமைகள் விவகாரங்களில் பழுத்த அனுபவம் மிக்கவராகும்.

யுத்தமானது போர் வீரர்களுக்கிடையிலான விவகாரமாகும். ஆனால், பொதுமக்களே யுத்தத்தில் அதிகளவில் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்பதற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சிரிய ஆட்சியாளர் மேற்கொண்டுவரும் அடக்குமுறையையும் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீதான தலிபான்களின் தாக்குதலையும் 2009 இல் இலங்கையின் கடற்கரையில் (முள்ளிவாய்க்கால்) பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரிழப்புகளையும் ஆர்பர் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நான்காவது ஜெனீவா சாசனம் சட்டமூலமாக உருவாக்கப்பட்டது. ஆயினும் உலகின் பல பாகங்களிலும் யுத்தத்தில் பொதுமக்களே கண்மூடித்தனமாக இலக்கு வைக்கப்படுகின்றனர். 2003 மார்ச் தொடக்கம் 2012 ஏப்ரல் வரை ஈராக்கில் 106,342 க்கும் 116,710 க்கும் இடைப்பட்ட தொகையினரான பொதுமக்கள் இறந்திருப்பதாக ஈராக்கில் இறந்தவர்கள் தொகையை கணக்கிடும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ள இணையத்தளமொன்று தெரிவித்திருந்தது. நவீன தொழில்நுட்பத்தை இராணுவங்கள் பயன்படுத்துவது அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கே இதனால் அதிகளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. படை வீரர்களுக்கு ஆபத்தின்றி பகைவரைத் தாக்குவதற்கான ஆற்றலானது அதிகளவுக்கு கவரக்கூடியதாக இருந்தாலும் ஆரவாரமின்றி படுகொலையை மேற்கொள்வதற்கு பயன்படுத்துவது அரசியல், தந்திரோபாய ரீதியாக பிரமாதமானதாகத் தென்படுகின்ற போதிலும் இவை சட்ட ரீதியான சவால்களுக்கு உட்பட்ட விவகாரம் என்று தான் நம்புவதாக ஆர்பர் கூறியுள்ளார். இந்த மாதிரியான யுத்த நடவடிக்கைகள் தொடர்பான இரகசியமானது தன்னை கவலையடையச் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த விதிமுறைகளுக்கு அமைய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை இந்த நடவடிக்கைகள் மூலம் தீர்மானிப்பது சாத்தியமற்றது என்ற கருத்தும் ஆர்பரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

யுத்தத்தின் கோரத்தை வட, கிழக்கு தமிழ் மக்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர். வடக்கில் போரினால் உயிர் உடைமைகளை இழந்தோர் பெரும் தொகையினராக இருப்பது ஒருபுறமிருக்க தப்பிப்பிழைத்தோர் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத அவல வாழ்வையே தொடர்கின்றனர். அல்லற்பட்டு அழுதாற்றாது இருக்கும் அந்த மக்கள் லூயிஸ் ஆர்பர் குறிப்பிட்டுக் கூறியுள்ள மக்கள் தொகையினரில் ஒரு சாராராகும். லூயிஸ் ஆர்பர் போன்ற மனிதத்துவத்தை நேசிக்கும் சமூக ஆர்வலர்கள் சிந்திக்க வைக்கக்கூடிய கருத்துகளை முன்வைக்கின்ற போதிலும் அரசியல், பொருளாதார, மேலாதிக்க வேட்கை கோலோச்சும் வரை பொதுமக்கள் இழப்புகளோ, அவலங்களோ நீதியான முறையில் கவனத்திற்கு எடுக்கப்படாது என்ற நம்பிக்கையற்ற நிலைமையே தொடர்கிறது.
நன்றி தினக்குரல்


தொடரும் அட்டூழியம்: காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயத்துக்கு தீவைப்பு


26 /4/2012 

மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைமைக் காரியாலயத்திற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சம்மேளன காரியாலயத்தின் பிரதான கதவுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதுடன் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

வீதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காகச் சென்ற இராணுவத்தினரே தீயை அணைத்துள்ளதாக காத்தான்குடி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காகவும், தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பிலும் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி லால் பெரேராவின் தலைமையில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைமைக் காரியாலயத்தில் நேற்று கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இது தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.ஜ.சுபைரிடம் கேட்டபோது, இந்தச் சம்பவம் நேற்றைய சம்மேளனக் கூட்டத்தைத் தழுவியே இடம்பெற்றுள்ளது எனவும் நேற்றைய கூட்டத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுளோளின் படி அனைவரும் நோன்பிருந்து பிரார்த்தனையில் ஈடுபட வேண்டுமெனவும் இஸ்லாம் அனுமதிக்காத விடயங்களில் ஈடுபடக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதனை விரும்பாத தீய சக்தியினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட விவகாரம்: அம்பாறையில் ஹர்த்தால்


26 /4/2012

தம்புள்ளை நகரிலுள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்மாப் பள்ளிவாசலை பேரினவாத கடும்போக்குவாதிகள் தாக்கியதைக் கண்டித்தும் அவ்விடத்திலிருந்து பள்ளியை அகற்றி வேறு இடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு. - திருகோணமலை வீதியிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பஸார் வீதி போன்ற இடங்களிலுமுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பஸார் வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இதேவேளை, காத்தான்குடிப் பிரதேசத்திலும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. அத்துடன் பாடசாலை மாணவர்களின் வருகையிலும் வீழ்ச்சி காணப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் இயங்காமலிருப்பதோடு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு மக்கள் தமது எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர்
நன்றி வீரகேசரி

No comments: