மாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 5


.
(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்பேணில் மேடையேற்றப்பட்டது)

(பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)

(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்
கற்பனையாக எழுதப்பட்டுள்ளன)

காட்சி 6

களம்:- எல்லாளன் அரசவை

பங்குகொள்வோர்:- எல்லாளன்
அமைச்சர்
தளபதி
அரசவையினர்

(இரண்டு நர்த்தகிகள் நடனமாடுகின்றனர்)

(நடனம் முடிய, அனைவரும் கைதட்டிப் பாராட்டகிறார்கள்).

எல்லாளன்:- செந்தமிழின் புகழ்பாடும் சிறப்பு மிகு புலவர்களே! சீரிளமைத் தமிழ்
மொழியின் ஆர்வலரே. ஈழத்தமிழ் நாட்டின் எழில்பூத்த ஓவியங்களே! காவியம் படைக்கவந்த கன்னிமலர்களே! பாடும் பாவத்தில், போடும் தாளத்தில், ஆடும் வேகத்தில், அழகிய கோலத்தில் ஞாலத்தின் கலைக்கெல்லாம் சாலச்சிறந்தது நம்கலைதான் என்று சூழுரைத்துச் சொல்ல வைத்துவிட்டீர்கள். வாழ்க உங்கள் கலை. வளர்க உங்கள் தலைமுறை. அமைச்சரே!

அமைச்சர்:- (பரிசுப்பொருளை நீட்டி) இதோ மன்னா.எல்லாளன்:- வாருங்கள் நடன மணிகளே! வண்ணத் தமிழை எண்ணத்தில்
குழைத்தெடுத்து உண்ணத் தருகின்ற உங்கள் கலைப்பணிக்கு என்ன நான் தந்தாலும் ஈடாகாது மக்களே! இதோ, மன்னவன் மனங்குளிர்ந்து தரும் சின்னஞ்சிறு பரிசு. ஏற்றுக்கொள்ளுங்கள்.

(பரிசு வாங்கி அவர்கள் செல்லல்)

அமைச்சரே! இந்தக் கலை அரசிகள் இருவரும் தொழிலால் கலைஞர்களா அல்லது..

அமைச்சர்:- இல்லை மன்னா, இல்லத்தரசிகள். பொழுதுபோக்காக் கலைபயின்று
பொக்கிசமாய்ப் போற்றிவருபவர்கள். இவர்களைப்போன்ற எண்ணற்ற கலைஞர்கள் இந்த ஈழமணித்திருநாட்டில், தங்கள் ஆளுகைக்குள் வாழ்கிறார்கள்.

எல்லாளன்:- வாழ்கிறார்கள்...சரி. வசதிகள் எப்படி? இன்பத்தமிழ்க் கலையை இனிதே
வளர்ப்பவர்கள் துன்பமுறக்கூடாது. இல்லையா அமைச்சரே?

அமைச்சர்:- உண்மை அரசே. கலைஞர்களுக்கு தங்கள் ஆட்சியில் க~டம் எதுவுமே
இல்லை அரசே. கலைபயிலும் மாணவர்க்கும், பயிற்றும் ஆசிரியர்க்கும் நிலையான உதவிகளைத் தாங்கள் நிறைவாக செய்கிறீர்கள் பெருமானே!

எல்லாளன்:- நல்லது. மேலும் வரையாது வழங்கி, வசதிகள் குறையாது
பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் தலையாய பணிகளில் ஒன்று.

அமைச்சர்:- அப்படியே அரசே.
(ஒற்றர் படைத்தலைவன் விரைந்துவருகிறார்)

ஒற். தலை:- மாமன்னர் பெருமானுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

எல்லாளன்:- யார்? ஒற்றர் படைத் தலைவரா? முன்னறிவிப்பு ஏதுமின்றி என்னைத்
தேடிவர என்ன காரணம்?

ஒற் தலை:- காரணம் உண்டு அரசே. கைமுனு படையுடன் வருகிறான்.
யானைப்படையுடன் போர்ச்சங்கு ஊதிச் சேனை திரட்டிவருகிறான்.

எல்லாளன்:- என்ன? கப்பம் தா என்றோம், களத்திற்கு வருகிறானா?

தளபதி:- மன்னவா தூரத்தே வைத்து அந்தத் து~;டனின் படையை துரத்திவிடவா?
அல்லது எல்லையிலேயே அவனைப் பிடித்து இழுத்து வரவா? சொல்லுங்கள் மன்னா.

அமைச்சர்:- நாட்டு மக்களின் நன்மையை நினைத்து, வீணான யுத்தத்தைக் தவிர்த்து
தாங்கள் ஆள்வதை அவன் தவறாக விளங்கிக் கொண்டான்.

எல்லாளன்:- கப்பம் தரவில்லை ஏனென்றால் கருவூலத்தில் பொருளில்லை என்று
சொல்லியிருந்தால்... மன்னித்திருக்கலாம். கப்பம் தரமாட்டேன், களத்திற்கும்
வரமாட்டேன் என்று சொல்லியிருந்தால் சிந்தித்திருக்கலாம். அமைச்சரே!

அமைச்சர்:- மன்னா?

எல்லாளன்:- என்னவென்று சொன்னான்? யானைப்படையுடன் சேனைதிரட்டிவருகிறானாமா
அந்தப் பூனைப்பயல். ஹா..ஹ..ஹ..ஹா.. புலி. இது புலி! இந்தப் புலியோடு போர் தொடுத்து இதுவரை யாரும் வென்றதில்லை. இனிமேலும் யாரும் வெல்லப் போவதுமில்லை!  தளபதி!

தளபதி:- மன்னா?

எல்லாளன்:- சிந்திக்க நேரமில்லை. சேனை திரளட்டும், யானை வெருளட்டும். அடுத்த
நிமிடத்தில் அனைத்துப் படைகளும் எல்லையை நோக்கி அணிவகுத்து
நகரட்டும்.

தளபதி:- இப்போதே விரைகிறேன் மன்னா. துட்டகைமுனுவை கட்டி இழுத்து
வருகிறேன். அல்லது அவன்தலையை வெட்டி விழுத்தி வருகிறேன்.

(போக முற்படுகிறான்)

எல்லாளன்:- தள..பதி! அது உன்னால் முடியும் என்பது எனக்குத்தெரியும். ஆனால்,
சின்னவன் என்றாலும் கைமுனு மன்னவன். போர்க் களத்திற்கு நான் போவதே போர்முறை. தமிழன் யுத்த தர்மம் தவறினான் என்று, நாளை சரித்திரம் நம்மை இகழக் கூடாது. களத்திற்குச் செல்லுங்கள். கணப்பொழுதில் நான் வருவேன் முன்னால். களத்திலே நீங்கள் எனக்குப் பின்னால்!

---திரை---

- காட்சி ஏழுக்கு முன்னுரை -

போர்.. போர்..எல்லாளனின் படைகளுக்கும், துட்டகைமுனுவின் படைகளுக்கும் இடையில்
போர் நடைபெறுகிறது.
எல்லாளனும் துட்டகைமுனுவும்
யானைகளில் அமர்ந்திருந்தவாறு பொருதுகின்றனர்.
போர் நடந்துகொண்டிருக்கும்போது
எல்லாளனின் யானை மயங்கி விழுகிறது.
யானையோடு சரிந்து கொண்டிருந்த எல்லாளன்மீது துட்டகைமுனுவும், அவனது படையினரும்
நடத்தும் கோரத்தாக்குதல்களினால்
எல்லாளன் வதைபட்டு, யானையால் மிதிபட்டு
களத்திலே உயிர் விட்டு
வீழ்ந்து கிடக்கின்றான்.

துட்டகைமுனு தனது வீரர்கள் புடைசூழ வந்து
இறந்துக்கிடக்கும் எல்லாளனை
உற்றுப் பார்த்துக்கொண்டு நிற்கிறான்.
அப்போது, எல்லாளனின் தளபதி கைதுசெய்யப்பட்டு
அவ்விடத்திற்குக் கொண்டுவரப்படுகின்றான்.

காட்சி 7

களம்:- போர்க்களம்
பங்குகொள்வோர்:- எல்லாளன்
தளபதி
கைமுனு

(எல்லாளன் போர்க் களத்தில் இறந்து கிடத்தல். கைமுனு அருகே வந்து நின்று)

கைமுனு:- பேராற்றல் படைத்த பெருவீரன். இத்தனை வயதிலும் மெத்தவலிபடைத்த
சுத்த வீரன். மக்களின் மனங்கவர்ந்த மன்னனாக நாற்பத்தி நான்கு ஆண்டுகள் இந்தநாட்டை ஒருகுடையின்கீழ் ஆட்சிசெய்த மறவன். எல்லாளரே! உமது வீரத்திற்கு நான் தலைவணங்குகிறேன். எனக்கு இது வெற்றியல்ல. இந்த வெற்றியால் எனக்கு மகிழ்ச்சியில்லை. நிம்மதியில்லை. எல்லையில்லாக் கீர்த்தியுடன் மக்களின் இதயங்களில் வீற்றிருக்கும் உயரியபேறு உம்மைப்போல வேறு எந்த மன்னனுக்குமே கிட்டாது. நீர்;தான் சுத்த வீரர். நேர்மையான சுத்த வீரர்.

மாவீரன் எல்லாளரே! உம்மை வென்றமைக்காக நான் பெருமைப்படலாம்.
ஆனால் உம்மைக் கொன்றமைக்காக வருத்தப்படுகின்றேன். வீரர்களே! மன்னரின் உடலை சகல இராஜமரியாதைகளோடும் அடக்கம் செய்யவேண்டும். அதற்கான ஆயத்தங்களை உடனே செய்யுமாறு அமைச்சரிடம் கூறுங்கள். அத்தோடு அவரை அடக்கம் செய்த இடத்திலே அவரின் வீரவாழ்வின் சின்னமாக மண்டபம் ஒன்று அமைக்க வேண்டும் என்றும், அதன் பக்கத்தில் செல்பவர்கள், அரசர், மந்திரி, பிரதானிகள் உட்பட யாவரும் கொட்டு மேளங்களை நிறுத்தவேண்டும் என்றும், வாகனங்களில் இருந்து இறங்கி நடந்து மரியாதை செலுத்தவேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளையும் உடனே செய்யுமாறு நான் ஆணையிட்டதாக அமைச்சரிடம் கூறுங்கள்.

(எல்லாளனின் தளபதி கைது செய்யப்பட்டு காவலுடன் அவ்விடம் வரல்)

தளபதி:- ஆ.. .. மன்னவா! என்னுயிர் மன்னவா! இந்த நிலையில் நான் உங்களைக்
காண்பதற்கு என்ன பாவம் செய்தேன். வீரத்தின் விளைநிலமே! பண்பின் உறைவிடமே! பாசத்தின் இருப்பிடமே! இந்தக் கோரத்தைக் காணவா நான் போரிலே இறக்காமல் இருந்தேன்? ஐயோ!

(திரும்பிப் பார்த்து, துட்டகைமுனுவைக் காண்கிறான்)

தளபதி:- ஓ! கைமுனவா? அரக்கனே!

கைமுனு:- ம்;.. மரியாதையாகப் பேசு, நான் மன்னன்.

தளபதி:- தூ.. மன்னன் இலங்கை முழுவதற்கும் மாமன்னனாய் இருந்த எல்லாளனின்
மதிப்பிற்குரிய தளபதி நான். மாயாரட்டைக்கும் உறுகுணைக்கும் காவல்காரன்
நீ!

கைமுனு:- உன் மன்னனே மாண்டுவிட்டான். இன்று முதல் மாமன்னன் நான். நீ என்
கைதி.

தளபதி:- கைதி?..நான் கைதி?? ஹ.. ஹ.ஹ.. ஹ.ஹ..ஹ.ஹ மாமன்னன் எல்லாளன்
எப்படி மாண்டான்? படையோடு படையைப் பொருதவிட்டாயா? உடைவாளை வீசிச் சமர் புரிந்தாயா? நேருக்கு நேர்நின்று போராடவந்த பார்போற்றும் உத்தமனை யானைக்குப் பலியாக்கித் தந்திரமாய்க் கொன்றாயே.. இதுவா உன் வலிமை? இதுவா உன் திறமை? இதில் என்ன பெருமை?

கைமுனு:- நிறுத்தடா பேச்சை! இன்னும் சிலநிமிடத்தில் உயிரைவிடப்போகும் உனக்கு
என்ன வீண்பேச்சு? காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு வாழும் வழியைப்பார்.

தளபதி:- மன்னிப்பா? நான் கேட்பதா? உன்னிடமா? தூ..! தள்ளாத  வயதிலும் போர்த்
தர்மம் காத்துச் சமர்புரிந்த எல்லாள மன்னனின்   தளபதி நான்! உனக்குத் திறம் இருந்தால், உன் உடலில் வலு  இருந்தால் என் கட்டை அவிழ்த்துவிடு உன்கையில் வாளை எடு.

கைமுனு:- (வாளை இழுத்துப் பின்) வாளை எடுக்க வேண்டிய தேவை எனக்கில்லை.
நாளை உனக்குத் தூக்குத் தண்டனை.

தளபதி:- நாளையென்ன, இன்றே நான் தயார். வாளை எடுஎன்றேன். நாளை தூக்கு
என்கிறாய், கோழை. போர்க்களத்திலேயே தீர்ப்புக் கூறும் புதுமையை இங்குதான் காண்கிறேன்.

கைமுனு:- சீ.. இழுத்துச்சென்று இருட்டறையில் அடையுங்கள் இவனை.

தளபதி:- கைமுனு! இன்று இருட்டறையில் என்னை அடைக்கலாம். நாளை
விடிந்ததும் தூக்கிலிடலாம். ஆனால் உனக்கு ஒன்றுமட்டும் கூறுகிறேன் கேள்! இது எங்கள் நாடு!  எங்கள் தாயகம்! காலம் காலமாக செந்தமிழ் மக்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வரும் பிரதேசம். எங்களை நாங்களே ஆண்டு வந்தோம். இனியும் நாங்களே ஆளவேண்டும். இடையிலே இந்த நாட்டுக்கு வந்துசேர்ந்த நீங்கள் எங்களை ஆளமுடியாது. எல்லாளன் இன்று மாளலாம். அரசியல் சூழ்ச்சியினால் ஆட்சியைப் பிடித்த நீ அடக்கு முறையால் தமிழனை ஆளலாம். ஒரு நாள் வரும். அன்று ஆயிரம் ஆயிரம் எல்லாளர்கள் தோன்றுவார்கள். அவர்கள் பொங்கி எழுவார்கள்.. உங்களை எதிர்ப்பார்கள்.. செங்களம் ஆடுவார்கள்.. புலிக்கொடியின்கீழ் ஆளுவார்கள்.. நீங்கள் ஓடுவீர்கள்.. இது நிச்சயம்! நிச்சயம்!! நிச்சயம்!!!

---திரை---


(மாமன்னன் எல்லாளன் நாடகம் நிறைவுபெற்றது)

No comments: