கருத்து உதைக்குது -குட்டி நாடகம் குறளில் குறும்பு

வானொலி மாமா நா. மகேசனின்

ஞானா: (கூப்பிட்டு) அப்பா........அப்பா........ இந்தக் குறளைப் பாருங்கோ அப்பா.....

அப்பா: எந்தக் குறளை ஞானா?

ஞானா: படிக்கிறன் கேளுங்கோ அப்பா.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்


என்னுடைய ரேனும் இலர்.

அப்பா: குறள் சரியாய்த் தானே இருக்கு ஞானா.

ஞானா: குறள் சரியாத்தான் இருக்கு அப்பா. ஆனால் கருத்துத்தானே உதைக்கிது.

சுந்தரி: (வந்து) ஆர், ஆருக்கு உதைக்கப் போறியள் அப்பா?

அப்பா: வாரும் சுந்தரி வாரும்......இவள்பிள்ளை ஞானா திரக்குறளுக்கு உதைக்கப்போறாளாம்.



சுந்தரி: நாங்கள் புத்தகங்களிலை கால் பட்டாலே தொட்டுக் கண்ணிலை ஒத்தி மன்னிப்புக்

கேக்கிறது. இவள் பிள்ளை திருக்குறள் புத்தகத்துக்கு உதைக்கப் போறாளோ?

ஞானா: எல்லாம் உங்கடை விளங்காக் குழப்பம் அம்மா. நான் திருக்குறள் புத்தகத்துக்கு

உதைக்கப் போறன் எண்டு சொல்லேல்லை. திருக்குறள் கருத்துத்தான் உதைக்குது

எண்டு; சொன்னனான்.

அப்பா: சுந்தரி...புத்தகங்களிலை கால்பட்டால் ஏன் தொட்டுக் கும்பிடுறவை எண்டு உமக்குத் தெரியுமே?

சுந்தரி: உதெல்லாம் விளங்கிக் கொண்டே செய்யிறதப்பா. மற்றவை செய்யிறதைப் பாத்துச்

செய்யிறதுதானே. புத்தகம் சரசுவதி. சரசுவதியிலை கால்பட்டால் படிப்பு வராது எணடு பயந்துதான் அப்பிடிச் செய்யிறது.

ஞானா: அம்மா உதெல்லாம் மூடநம்பிக்கையள். அர்த்தம் இல்லாத சம்பிரதாயங்கள். நீங்கள்

என்ன சொல்லிறியள் அப்பா?

அப்பா: நான் என்னத்தைச் சொல்ல ஞானா. சில பழக்க வழக்கங்களிலை அடிப்படையாயன

ஒரு பழங்காலச் செய்தி இருக்கும். அதை விழங்கிக் கொண்டால் அவற்றின் அர்த்தம்

புரியும்.

ஞானா: உதிலை அப்பிடி என்ன அர்த்தம் இருக்குது அப்பா?

அப்பா: பழைய காலத்திலை  நூல்கள் என்னத்திலை எடுதப்பட்டிருந்தது ஞானா?

சுந்தரி: உது தெரியாதே அப்பா. ஓலைச் சுவடியளிலைதான் எழுதப்பட்டது.

அப்பா: சுந்தரி ஓலையிலை எழுதிறது லேசான காரியமே. எல்லாராலும் எழுத முடியுமே.

ஓலை ஏடுகள் ஒரு ஊருக்கு ஒண்டு இரண்டுதான் இருக்கும். அதுகும் எல்லாரும்

பாக்கக் கிடைக்காது. ஆரும் பண்டிதர்மார் மெத்தக் கவனமாக பட்டுத் துணியாலை

சுத்தி வைச்சிருப்பினம். காலாலை உழக்கி, விறுக் கெண்டு இழுத்தால் ஓலை

கிழிஞ்சுபோம். அதனாலை ஏடுகளைப் தெய்வத்தைப் பேணுகிற மாதிரிச் சுவாமிப்

பீடத்திலை வைச்சுப் பாதுகாத்தினம்.

ஞானா: இப்ப எனக்கு விளங்குதப்பா. கஷ்டப்பட்டுக் கிடைக்கிற ஏடுகளைக் கவனாய்

பாதுகாக்க வேணும் என்டதுக்காக அதுக்கு ஒரு தெய்வத் தன்மையை வைச்சு

படிப்பு வராது எண்டு ஒரு பயமுறுத்தலையும் வைச்சுத் தெட்டுக் கும்பிடுகிற ஒரு

வழக்கத்தையும் உண்டுபண்ணியிருக்கினம்......ஆனால் இப்ப........

அப்பா: ஞானா நீ என்ன சொல்லப்போறாய் எண்டு எனக்குத் தெரியிது. இந்தக்காலத்திலை புத்தகங்கள் கடுதாசியிலை அச்சடிக்கப் படுகுது. ஆயிரக்கணக்கிலை பிரதியள் கிடைக்குது அதுபோக internet இலை நு}லுகள் வருகுது. பிறகேன் பழைய வழக்கத்தைப் பிடிச்சுக்கொண்டு நிப்பான் எண்டு கேக்கிறாய்.

சுந்தரி: அப்பா புத்தகங்கள் அறிவுக் களஞ்சியங்கள். அதுகளுக்கு ஒரு மரியாதை

குடுக்கத்தானே வேணும் எண்டு இவள் பிள்ளைக்குச் சொல்லுங்கோவன்.

ஞானா: புத்தகங்களைப் பாதுகாக்கத்தானே Library யள் இருக்குது அம்மா. பிறகேன் பழைய

பல்லவி எண்டு கேக்கிறன்.

சுந்தரி: அப்ப சரஸ்வதி பூசையிலும் புத்தகங்களை வைச்சுக் கும்பிட வேண்டாம் எண்டே

சொல்லிறாய் ஞானா. நீங்கள் என்ன சொல்லிறியள் அப்பா?

அப்பா: சுந்தரி.......நல்லாய் வைச்சுக் கும்பிடுங்கோ ஆனால் ஏன் கும்பிடிறம் எண்ட

நியாயத்தைத் தெரிஞ்சு கொண்டு கும்பிடுங்கோ.

ஞானா: நான் திருக்குறளைப்பற்றிக் கேக்க அப்பா எங்கையோ கொண்டுபோய்

விட்டிருக்கிறார்.

அப்பா: சுந்தரி.... அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்

எண்ட திருக்குறளிலை பொருட் குற்றம் இருக்கெண்டு சொல்லிறாள் உம்மடை

மகள் ஞானா.

ஞானா: பாருங்கோ அம்மா அறிவுடைய ஆக்களிட்டை எல்லாம் இருக்கோ. நல்ல

அறிவாளியள் எத்தினைபேர் வறியவர்களாக இருக்கிறார்கள். அவர்களாலை

ஒண்டும் செய்ய முடியாத நிலையிலை இருக்கினம். எத்தினையோ அறவில்லாத

ஆக்கள் இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கினம்.

சுந்தரி: அதுதானே.அப்பா!......ஞானா சொல்லிறதும் சரிபோலைத் தானே கிடக்குது அப்பா.

அப்பா: என்ன சரியாய் இருக்கெண்டு கேக்கிறன் சுந்தரி? நுணிப்புல்லு மேஞ்சாப்போலை

மேஞ்சால் உண்மைப் பொருள் விளங்குமே? ஞானா சொல்லிற செல்வங்களைத்

தேடத் தேவைப்படுகிறது என்ன? அறிவு...அறிவு இருந்தால்தானே எல்லாச் செல்வங்களையும் தேடலாம். தேடினாப் போலை முடிஞ்சுதே? அதைக் காப்பாத்திச் சரியான முறையிலை பயன்படுத்த வேணுமெல்லே. அதுக்கும் அறிவுதானே வேணும்.

இல்லையே சுந்தரி?

சுந்தரி: அதனாலைதான் சொன்னார் அறிவுடையார் எல்லாம் உடையார் எண்டு.....

அப்பிடித்தானே அப்பா?

அப்பா: வேறை என்ன சுந்தரி. அறிவில்லாத ஆக்களிட்டை எவ்வளவு செல்வங்கள்

இருந்தாலும் அதைச் சரியாய் பாதுகாக்கவும், சரியானபடி பயன்படுத்தவும் வேண்டிய

அறிவு இல்லாவிட்டால் அந்தச் செலவங்களாளை ஒருவித நற்பயனும் இல்லாமல்

அழிஞ்சு போய்விடும்.

ஞானா: அப்பா....அதனாலை தான் அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடை

யரேனும் இலர் எண்டு திருவள்ளுவர் சொன்னார் எண்டு நீங்கள் சொல்லிறியள்.

அப்பா: நான் செல்லேல்லை ஞர்னா. பரிமேலழகரே அப்பிடித்தான் சொல்லியிருக்கிறார். நீ

வைச்சிருக்கிற புத்தகத்திலையும் அப்பிடித்தான் சொல்லியிருக்கு.

சுந்தரி: ஞானா......சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறதிலைதானே திருக்குறளின்ரை

மகிமை தங்கியிருக்கு.

ஞானா: நான் நினைக்கிறன் அம்மா....ஓலைச் சுவடியிலை எழுதிற கஷ்டத்தை குறைக்கிற

துக்காக உப்பிடிச் சுருக்கி எழுதியிருக்கிறார் போலை.

அப்பா: ஞானா உதைப் போய் திருவள்ளுவரிட்டைத்தான் கேக்க வேணும். போக முந்தி

இப்பிடி ஒரு குறளை எழுதிக்கொண்டுபோய்க் கேள்.

எழுத்தைக் குறைக்க எழுதினார்  நூல்


பழுத்த குறள்முனி பார்.


போபிள்ளை போ.....சரியான தெளிந்த அறிவில்லாமல் எல்லாக் குறள்களையும்

விளங்கிவிடலாம் எண்டு நினைக்காதை.

-இசை-  

No comments: