எப்படி வாழ்த்த வேண்டும்?‏ - தினகரன்

.
சற்குரு என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட குருவானவர் சதுரகிரி மலை அடிவாரத்தில்  ஆசிரமம் அமைத்து தன் சீடர்களுடன் தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார்.

தினமும் மாலை வேளைகளில் குருவைக் காண பல ஊர்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.அவரும் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு அருளுரை, வாழ்த்து, நல்வாக்கு  வழங்கி ஞான மார்க்கத்தைப்  புகட்டி வந்தார். சில சமயம் சீடர்களுக்கும் குருவின் வாழ்த்தும், வாக்கும், போதனையும்  வியப்பை அளிக்கும்.எப்படியோ, குருவின் நல்வாக்கும் வாழ்த்தும் முறையும் அவருக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்தன.
ஒரு நாள் செல்வந்தர் ஒருவர் தன் குடும்ப சகிதம் குருவைக் காண வந்திருந்தார்.
தன்னை நாடி வரும் அன்பர்களை குரு சந்திக்கும் மாலை வேளை வந்தது.குருவும் பர்ணசாலையில்  வந்து அமர்ந்தார். ஒவ்வொருவராக குருவை சந்தித்து அருளாசியுடன் விடை பெற்று சென்றுகொண்டிருந்தார்கள்.அப்போது குருவைக் காணவந்த தற்பெருமை பேசும் ஒரு அன்பர் தனக்கு உபதேசம்  வழங்க வேண்டிக்கொண்டார்.
சற்குரு  உபதேசத்தை ஆரம்பித்தார் :

"தகப்பன் சரியில்லை சொத்து போச்சு..
தாய் சரியில்லை பாசம் போச்சு..
சகோதரர்கள் சரியில்லை நேசம் போச்சு..
நண்பன் சரியில்லை உண்மை போச்சு..
பிள்ளகைகள் சரியில்லை மரியாதை  போச்சு..
மனைவி சரியில்லை எல்லாமே போச்சு.."



"பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள் !."

"உறங்கிப் பார் கஷ்டம் வரும்;
 உழைத்துப் பார் அதிர்ஷ்டம் வரும்! "

"நம் சாதனைகளுக்கு நாமே செய்யும் சவப்பெட்டி! -தற்பெருமை" என்றார்.

உங்கள் உபதேசத்திற்கு நன்றி  குருவே என விடைபெற்றுக்கொண்டார் அந்த நபர்.

எல்லோரும் சென்றபின் செல்வந்தரின் முறை வந்தது. செல்வந்தரிடம்   தன்னைக்  காண வந்த நோக்கம் என்ன என்று வினவினார் குரு.செல்வந்தர் கூறினார், குருவே எனது குடும்பம் சகிதம் தங்களைக்  காண வந்துள்ளேன், எங்கள் அனைவரையும் வாழ்த்தி, ஆசிர்வதித்து, நல்வாக்கு வழங்குங்கள் என்றார். வழக்கமான
புன்சிரிப்புடன் குரு “அப்பன் இறக்கிறான். மகன் இறக்கிறான்.. மகனுக்கு மகன் இறக்கிறான்”  இதுவே நாம்  அளிக்கும்  வாழ்த்தும், நல்வாக்கும்  என்றார்.
“என்ன குருவே!... இதுவா வாழ்த்து? ... இதுவா  நல்வாக்கு?” அச்சத்துடன் செல்வந்தர் கேட்டார்.
குரு சொன்னார்,
“யோசித்துப் பார். இந்த வரிசையில் எல்லாம் நடந்தால் எத்தனை நிம்மதி!  வரிசை தப்பி அப்பா இருக்கும்போதே மகனோ, மகன் இருக்கும்போதே அவன் பிள்ளையோ இறந்தால் எத்தனை துக்கம்?”

குழம்பிபோன செல்வந்தர், ஏதேனும் ஒரு நல்வாக்கு கிட்டுமா குருவே  என்றார்?

பகைமை வைத்துக் கொண்டு வாழ்த்த முடியாது !
வாழ்த்தும் போது பகைமை நிற்காது ! என்று சொல்லி முடித்தார் சற்குரு.

செல்வந்தருக்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது.

ஆமாம், நாம் ஏன் மற்றவர்களை வாழ்த்த வேண்டும்? பெரியவர்கள் ஏன் நம்மை ஆசிர்வாதிக்க வேண்டும்?
உண்மையில் மனதார மற்றவர்களை வாழ்த்துகிறோமா என நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
"Good Morning,Good Evening,Happy Birthday,Happy Anniversary,Happy Married Life"  இவை எல்லாமே உதட்டளவில்தான் உள்ளது. எத்துனை பேர் உண்மையில் "Good Morning " சொல்லும்போது இன்றைய காலைப் பொழுது இவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்?.கடமைக்காக சொல்வதைப்  போல்  பழகிக்கொண்டோம். அப்படியில்லாமல் மனம் உணர்ந்து உள்ளன்போடு வாழ்த்தப்  பழக வேண்டும்.கடமையே என்றில்லாமல் அடிமனதிலிருந்து வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.
வேதாத்திரி மகரிஷி வாழ்த்தும் பயனும் பற்றி குறிப்பிடும்போது,
"ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம்.
வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில் இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்து விடலாம். நமக்குத் தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டும் என்றால், "அவர் அறியாமையினாலே தான் அவ்வாறு செய்தார், நம்முடைய கர்மச் சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது, எனவே அவர் செய்தார், அவருக்கு உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பதும் எல்லாம்வல்ல முழுமுதற் பொருளே.
எனவே, அவரை மனதார வாழ்த்தி எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்" என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து இயல்பாகி விட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்" என்று கூறுகிறார்.


No comments: