தமிழ் சினிமா

ஊ ல ல லா...

ooh_la_la_la_1 'மடை திறந்து... பாயும் நதியலை நான் மனம் திறந்து...' என்றொரு செவிக்கினிய பாடலை நாள்தோறும் வானொலியில் கேட்டு லயித்து போயிருந்த எனக்கு நாலு நாளைக்கு முன்புதான்

அதை டி.வி யில் பார்க்க நேர்ந்தது. என்ன வாழ்க்கைடா இது என்று அரளி விதையை அரைக்கிற அளவுக்கு கொண்டு போய் விட்டது அந்த மூன்று நிமிடங்கள். வேறொன்றுமில்லை, வாகை சந்திரசேகர் தனது வழக்கமான ஜெனரேட்டர் சிரிப்போடு ஆடிக் கொண்டிருந்தார். அவருக்கு இரு புறமும் தலா ஐந்து இளங்குமரிகள் அவரை கட்டியணைத்தபடி இடுப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். (சார் காதல் மன்னனாம், எங்க அண்ணனுங்க காலமெல்லாம் ரொம்ப டெரராத்தான் இருந்திருக்கும் போல)

சந்திரசேகர் ரேஞ்சுக்கு இல்லை என்றாலும், ஜோதி கிருஷ்ணாவை எல்லாபெண்களும் விரட்டி விரட்டி கிஸ் கேட்கிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனாலும் பதினாலு ரீலீலும் நம்மை ஜோக்கில் மூழ்கடிக்க நினைத்த ஜோ.கி யின் ஆசை ஓரளவு பலித்திருப்பது ஆறுதல்.

ஒரு மொக்கை ஃபிகர் கிடைத்தாலும் அதை உலக அழகியாக கற்பனை செய்து கொண்டு அவளை விரட்ட ஆரம்பித்துவிடும் ஜோதி கிருஷ்ணாவுக்கு, கிடைப்பதெல்லாம் தலையணை சைசுக்கு ஏச்சும் பேச்சும்தான். ஒம் மூஞ்சுக்கு இதெல்லாம் தேவையா என்கிற அத்தனை ஃபிகர்களையும் வெறுப்பேற்றுகிற மாதிரி அவருக்கு ஒரு காதலி கிடைக்கிறாள். அவர்தான் கதாநாயகி திவ்யா பண்டாரி.

ooh_la_la_la_2
தனது மூக்கை பதம் பார்த்த ஃபிகர்களுக்கு மத்தியில் அவளை இழுத்துப்போய் அறிமுகப்படுத்தி வைத்து திருப்பி மூக்குடைக்கும் ஜோதி கிருஷ்ணா, ஒரு கட்டத்தில் நிஜமான காதலியை விட்டு விட்டு முழு நேரமும் கோபியர்கள் கொஞ்சும் ரமணாவாக திரிகிறார். இடையில் காதலி திவ்யா பண்டாரியை இவர் கிஸ்ஸடிக்கும் காட்சி ஒன்று கசிந்து நெட்டில் பரவி அவரது வாழ்க்கையையே சின்னா பின்னாமாக்குகிறது. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே கேள்வியாகி விட்டதே என்ற அவமானத்தில் கூனிக்குறுகும் ஜோதி கிருஷ்ணா அதற்கப்புறம் என்ன செய்தார் என்பதுதான் முடிவு.

இன்றைய கால கட்டத்தில் காதல் பட்டென்று முறிந்து விடுகிற முருங்கை மரமாகதான் இருக்கிறது என்பதை நெஞ்சில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கிறார். அந்த ஒரே காரணத்துக்காக ஜோதியை பாராட்டலாம். 'பரங்கிமலை ஜோதி' தியேட்டருக்கு இப்படத்தை அர்ப்பணிக்கிற அளவுக்கு கதையில் 'சதைப் பிடிப்பு' இருந்தும் அப்படியெல்லாம் வேலி தாண்டிய வெள்ளாடாக மாறாமல் இருந்ததற்கும் ஜோதிக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்.

வில்லன் கூட்டத்தில் ஒரு தடி நபரை மட்டும் குறிவைத்து கல்லெறியும் இவரது சாகசம், சிறு குழந்தைகளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதே போல அவ்வப்போது இவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் அந்த பாழடைந்த பஸ்சும் ஒரு கேரக்டரை போல வந்து போவது தனியாக கவனிக்க வைக்கிறது. உடைந்து போன ஒரு மாடிப்படியும் கூட அவ்வப்போது இடம்பெற்று தனி கவனம் பெறுகிறது.

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு நம்மை உள்ளே வர வழைத்த திவ்யா பண்டாரி, எக்ஸ்ரேவுக்கு சட்டை போட்ட மாதிரி இருக்கிறார். நம்ம ஊரு டேஸ்ட்டுக்கு இந்த சைசெல்லாம் ஆகாதும்மா...

கஞ்சா கருப்புவை நடிக்க வைத்தே தீருவதென்று சபதம் போட்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜோதிகிருஷ்ணா.

பட்டிமன்ற ராஜாவுக்கு சிறப்பான ஒரு கேரக்டரை தந்திருக்கிறார்கள். இவருக்கெல்லாம் தியேட்டர்களில் சுண்டல் விற்போர் சங்கத்தினர் தனியாக போராடியாவது ஓய்வு நிதி திரட்டித் தரலாம். நடமாடும் து£க்க மாத்திரையாகவே படம் முழுக்க திரிகிறார் மனுஷன்.

எப்பவும் நெருப்பாக பொறியும் தலைவாசல் விஜய்யும், அவரது பொறுமைக்கார பொண்டாட்டி ராணியும் ஒரு நிஜ குடும்பத்தையே கண்முன் நிறுத்துகிறார்கள். 'இல்லாதப்பதான் அருமை தெரியும்' என்ற டயலாக் பல தம்பதிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடும். வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்க தலைவாசல் விஜய் பிரயத்தனப்படுவதும், அந்த சுண்ணாம்பு டப்பாக்களை அந்த குடும்பமே எது எதற்கோ பயன்படுத்தி அவரை அவமானப்படுத்துவதுமாக பல சீன்களில் நகைச்சுவை கலந்த நுணுக்கம்.

ooh_la_la_la_3
சேகர் சந்திரா என்ற புதியவரின் இசை ரசிக்க வைக்கிறது. பாடல்களோடு குழைந்து பாராட்ட வைக்கிறது கிராபிக்ஸ் தொழில் நுட்பம்.

டைரக்டர் ஜோதிகிருஷ்ணாவும், நடிகர் ஜோதி கிருஷ்ணாவும் மாறி மாறி வந்து தோளை தட்டிவிட்டு போகிறார்கள். மனதை தட்டுவதற்கு இன்னும் சில காலம் பிடிக்குமோ?

நன்றி தினக்குரல்





ஒரு கல் ஒரு கண்ணாடி


உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.

அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை.

ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று பாஸ்ட் பார்வர்டு கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.

குறிப்பாக சந்தானம். மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த ஓகே ஓகே.

ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்.

மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது.

தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார். ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!

முந்தைய மூன்று படங்களை விட இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை. பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.

உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் ஓகே.

ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கி விட்டார்கள். ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது.

குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. இதுபோன்ற படங்களில் குறைதேடிக் கொண்டிருந்தால், படத்தை ரசிக்க முடியாது.

ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக அழகே அழகே, வேணாம் மச்சான். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.

வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா.

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்.

எழுத்து- இயக்கம்: ராஜேஷ் எம்.

தயாரிப்பு: ரெட் ஜெயன்ட்


நன்றி விடுப்பு



No comments: