மெல்பேர்ண் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் - 2012;

.

மெல்பேர்ண் The Basin ஸ்ரீ வக்ரதுண்ட விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நிகழும் 2012ம் ஆண்டு சித்திரை மாதம் 20ம் திகதி வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எதிர்வரும் சித்திரை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகின்றது. இறைவனின் ஐந்தொழில்களைக் குறித்து நடைபெறும் மகோற்சவத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் காலையும், மாலையும் நடைபெறுகின்றது. .
தினமும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மாலையில் கொடித்தம்ப பூசை, வசந்த மண்டபப்பூசை, யாகதரிசனம், விநாயகப் பெருமான் உள்வீதி, வெளிவீதி உலா வருதல் நிகழ்கின்றது.,
சித்திரை 28ம் திகதி சனிக்கிழமை இறைவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சங்காரம் என்ற அழித்தல் தொழிலை உணர்த்தி செய்யப்படும் தேர்த்திருவிழா கோலாகரமாக நடைபெறவுள்ளது. காலை 10மணியிலிருந்து 12மணிவரை பஞ்சமுக விநாயகப் பெருமான் தேரிலேறி நகர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். அன்றைய தினம் மாலை பஞ்சமுக விநாயகப் பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பச்சை சாத்தி ஆராதனைகள் நடைபெறும்.





சித்திரை 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனின் அருளல் தொழிலைக் குறித்து தீர்த்தோற்சவம் நடை பெறவுள்ளது. விநாயகப் பெருமானின் புனித தீர்த்தத்தில் நீராடினால் எமது வினைகள் யாவும் தீர்ந்து நல்லதொரு சுபீட்ச வாழ்வு கிடைக்கும். தீயவினைகளை அறுத்து பக்தர்களுக்கு இறையருள் பெற்றுத்தருவது தீர்த்தத் திருவிழாவாகும்.
கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற நான்காம் நாள் இரவுத் திருவிழாவின் போது ஸ்ரீ விநாயகப் பெருமானின் திருவுருவப் படங்களைப் பார்க்கின்றோம். பக்தி சிரத்தையோடு அனைவரும் வணங்கிச் செல்வதைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. சிவாச்சாரியார்கள் சகல கிரியைகளையும் முறைப்படி நடாத்திக் கொண்டிருப்பதையும் பார்க்கும் போது சகலருடைய மனங்களும் குளிர்ந்தது எனலாம்.; ஸ்ரீ விஙாயகப் பெருமானின்  உற்சவ மூர்த்திகளை அழகாக அலங்கரித்து விஷேசமாக அமைக்கப்பட்ட மேடைகளில் தாங்கிய வண்ணம், பக்தர்கள் தோள்களில் சுமந்த படி, பிள்ளையார் பக்திப் பஜனைப்பாடல்களைப் பாடியவாறு உள்வீதி, வெளிவீதி உலாவந்து அருள்பாலித்தார். பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ.கௌரீஸ்வரக்குருக்கள் நற் சிந்தனை கூறினார். நிறைவாக பக்த கோடிகளுக்குப் பிரசாதங்கள் வழங்கியதுடன், இரவுணவுகளும் பரிமாறப்பட்டன.

No comments: