கட்டிடக் கலைஞர் அமரர் வி.எஸ் துரைராஜ அவர்களுக்கு அஞ்சலி

அண்மையில் தான் தமிழ் ஆய்வாளர் கலாநிதி ஆ கந்தையா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயருற்றோம். புலம்பெயர் மண்ணில் காத்திரமான பணி செய்த கலாநிதி கந்தையா அவர்களின் மறைவைத் தொடர்ந்து இன்னொரு மறைவுச் செய்தி எம்மையெல்லாம் கலங்கவைத்தது. கட்டிடக் கலைஞர் வி.எஸ் துரைராஜா அவர்கள் 14/12/2011 அன்று தனது பூதவுடலை நீக்கி புகழுடல் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஈழத்தமிழர் கலங்கியிருந்தனர்.

அவரின் பெருமைகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது. 1974ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஒன்பதாம் நாள் யாழ் நகரில் நடைபெற்ற அலங்கார ஊர்தி பவனியை பொறுப்பாக ஒழுங்கமைத்தவர் அவர். அப்போதய அரசு மாநாட்டைக் கொழும்பில் நடத்தவேண்டும் என்றும் இல்லையேல் மாநாட்டை அனுமதிக்க மாட்டோம் என்றும் அடம்பிடித்த வேளையில் உறுதியோடு போராடி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த கடைசி நேரத்தில் அனுமதி பெற்றனர் மாநாட்டுக் குழுவினர். அப்படியிருந்தும் விழாவையும் அலங்கார ஊர்தி பவனியையும் தமிழ் உலகு வியக்கும் வண்ணம் திறம்பட நடாத்தியதில் அமரர் துரைராஜாவின் பங்கு அளப்பரியது.

அவர் வாழும் காலத்தில் ஈட்டிய புகழ் அளவிடமுடியாதது. கடந்த 2008 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் விழாவின் நிறைவு நிகழ்வில் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் அவர்களும் கலைஞர் வி.எஸ் துரைராஜா அவர்களும் அவர் தம் கல்வி மற்றும் இலக்கியப் பணிகளுக்காகவும், கலை மற்றும் சமூகப் பணிகளுக்காகவும் முறையே கௌரவிக்கப்பட்டனர். அப்போது வி.எஸ் துரைராஜா அவர்கள் பற்றி வெளியிடப்பட்ட எழுத்தாளர் விழாக்குழுவின் அறிக்கையைக் கீழே காண்க.

அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

நினைவகலா பதிவுகளுடன்

தி. திருநந்தகுமார்.

கட்டிடக்கலைஞர் திரு வி..எஸ் துரைராஜா

ஈழத்து யாழ்ப்பாண மாவட்டத்தின் நவாலி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு வி.எஸ். துரைராஜா அவர்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தன் பள்ளிப்படிப்பை முடித்தபின் இந்தியாவிலும் பின் இங்கிலாந்திலும் புகழ்பூத்த உயர்கல்வி நிறுவனங்களில் கட்டிடக்கலையில் உரிய பட்டங்கள் பெற்றார். இலங்கையில் துரைராஜா அசோசியேற்ஸ் எனும் நிறுவனத்தை உருவாக்கி, கட்டிடக்கலைத் துறையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக உழைத்துள்ளார். இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உருவாகியுள்ள குடிமனைகள், மருத்துவ மனைகள் உல்லாசவிடுதிகள், பல்கலைக்கழகக் கட்டிடத் தொகுதிகள், நூலகங்கள் மற்றும் ஆலயங்கள் போன்ற பல்வேறு நிர்மாணங்களில் இவரது கைவண்ணம் பதிந்துள்ளது.

1973-1975 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையின் இயக்குநர் சபைத் தலைவராகப் பணியாற்றி பத்திரிகையின் தரத்தை மேம்படுத்துவதிலும் வெற்றிகண்டார்.

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் 1974ஆம் ஆண்டு தைத்திங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய நான்காம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை ஏற்பாடு செய்த மாநாட்டுக் குழுவின் செயலாளராக முழுமூச்சுடன் பாடுபட்ட திரு துரைராஜா அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையில் வண.பிதா தனிநாயகம் அடிகள், பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் நேசையா, பேராசிரியர் பொன் பூலோகசிங்கம், காந்தளகம் சச்சிதானந்தன் போன்றோருடன் இணைந்து பணியாற்றினார்.

1972ஆம் ஆண்டு ஈழத்துத் தமிழ்த் திரைப்பட உலகிலும் கால் பதித்த திரு துரைராஜா அவர்கள் ஈழத்தின் புகழ்பூத்த கலைஞர்கள், கல்விமான்களை ஒன்றிணைத்து குத்துவிளக்கு என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். குத்துவிளக்கு போதிய வருவாயை ஈட்டாத போதிலும் அது ஈழத்துத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே போற்றப்படுகிறது. அந்தக்காலத்து யாழ் பொதுநூலகத்தை வரலாற்றுப் பதிவாக்கியிருக்கும் குத்துவிளக்கு திரைப்படம் போரினால் அழிந்துபோயிருக்கும் ஈழத்தை என்றும் நினைவுபடுத்தும் அற்புதக் கலைப்படைப்பாக விளங்குவதோடு திரு துரைராஜா அவர்களின் பெருமையையும் பறைசாற்றுகிறது.

யாழ் பொது நூலகம் 1981 இல் தீக்கிரையாக்கப்பட்ட பின் யாழ் மாநகரசபையின் அழைப்பின் பேரில் அதன் புனர்நிர்மாணப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட திரு துரைராஜா அவர்கள் நூலகத்தைப் புதுப்பொலிவுடன் விளங்கும் வகை செய்தார். புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ் பொது நூலகம் திரு துரைராஜா அவர்களுக்கு திராவிடக் கட்டிடக்கலையில் இருந்த நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

தற்போது சிட்னியில் வதியும் திரு துரைராஜா அவர்கள் அண்மையில் யாழ் பொது நூலகம் தொடர்பான அற்புதமான வரைபடங்கள், புகைப்படங்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் நூலாக்கியுள்ளார்.

இத்துணை ஆற்றல்களுடன், பழகுதற்கு இனியராக, மென்மையாகப் பேசும் இயல்பினராக விளங்கும் திரு வி.எஸ்.துரைராஜா அவர்களின் சமூக, கலைப் பணிகளைப் பாராட்டி அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் சிட்னியில் நடைபெறும் தமிழ் எழுத்தாளர் விழா 2008 இல் விருது வழங்கிக் கௌரவித்து பெருமை கொள்கிறது.

No comments: