விமர்சனம்
போராளி
போராளி
திரையுலகின் நண்பர்களாக வலம்வந்துகொண்டிருக்கும் சசிகுமாரும் சமுத்திரக் கனியும் மறுபடியும் இணைந்திருக்கும் படம்தான் போராளி! நாடோடிகளில் ஹிட் அடித்த இந்தக் கூட்டணி இதிலும் இணைந்திருப்பதாலும் படத்தின் தலைப்பினாலும் இந்தப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
சசியும் நரேஷும் நெடுந்தொலைவு பயணப்பட்டு சென்னை வந்து சேர்கிறார்கள்.
நரேஷின் நண்பன் கஞ்சா கருப்பு ரூமில் தங்குகிறார்கள். பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறார்கள். பகுதி நேரமாக பெய்டு சர்வீஸ் தொழில் நடத்துகிறார்கள். இதற்கிடையே கூட வேலை பார்க்கும் பெண் மீது நரேஷுக்கு காதல்... எதிர்வீட்டில் தங்கியிருக்கும் டான்ஸர் ஸ்வாதிக்கு சசிகுமார் மீது மையல்.
பகுதுநேர தொழில் ஹிட் ஆகிவிட கஞ்சா கருப்பு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிறார். அந்த பத்திரிகையைப் பார்த்துவிட்டு ஒரு கும்பல் சசியைத் தேடி சென்னைக்கு வந்து இறங்க... சசி யார் என்ற விஷயம் அதிர்ச்சியைத் கொடுக்கிறது .
அதீத புத்திசாலியாக இருக்கும் சசியை ஐந்தாம் வகுப்பிலேயே மடக்கிப் படிப்பை நிறுத்திவிடுகிறார் அவருடைய சித்தி. பெரியப்பாவின் சொத்துகளுக்காக சித்தியும் அவர் உறவுகளும் சதி திட்டம் போட, சசி ஊருக்குள் உதவாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் அவர்களுடைய நிலத்தில் யுரேனியம் இருப்பதைக் கண்டுபிடித்து கோடிக்கணக்கில் விலை பேசுகிறது ஒரு கூட்டம். அப்போதுதான் பெரியப்பா சொத்துகளை சசி பெயரில் எழுதி வைத்துவிட்டு அனுபவ உரிமையை மட்டும் அந்தக் குடும்பத்துக்கு கொடுத்திருப்பது தெரிய வருகிறது. சசியை மடக்க வருகிறார்கள்.
சசி என்ன செய்தார்... அவர்களுக்கு பணிந்தாரா... சென்னைக்கே தேடி வந்தவர்களை எப்படி சமாளித்தார் என்பதெல்லாம் மீதி கதை!
முதல் பாதி கதையை நகைச்சுவையாக நகர்த்துவது என்று டைரக்டர் முடிவெடுத்து விட்டார் போலும்! அந்த காம்பவுண்டே கதி கலக்குகிறது. இதில் எல்லா கேரக்டர்களுக்குமே அடையாளமாக இருப்பது பஞ்ச் டயலாக் தான்! முடிவை நாந்தான் எடுப்பேன் என்று சொல்லும் ஹவுஸ் ஓனர் ஞானசம்பந்தன், சாந்தி சாந்தி என்று மனைவி மீது உருகும் படவா கோபி, பேச்சைத் தொடங்கிய இரண்டாவது நொடியில் சண்டை வலிக்கும் அவருடைய மனைவி சாண்ட்ரா, சதா போதையில் இருந்தபடி எல்லோரையும் தொட்டு முத்தம் கொடுக்கும் பேச்சுலர் ஆசாமி, சிடுமூஞ்சி சுவாதி என்று எல்லா கதாபாத்திரங்களுமே தனித்து தெரிகிறார்கள். ஆனால், எல்லாமே சொல்லி வைத்தபடி நடப்பது கொஞ்சம் நாடகத்தனமாக இருப்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்த பாலச்சந்தர் பாணி பின்னணியில் கொண்டுபோய் விக்ரமன் ஸ்டைல் வியாபார யுக்தியை கோர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரே பாடலில் பணக்காரர் ஆகும் ஸ்டைல்தான். ஆனால், அதில் உள்ள சிரமங்களையும் சுட்டிக் காட்டியிருப்பதால் ரசிக்க முடிகிறது. இடைவேளை வரையில் இதுவே ஓடிக் கொண்டிருப்பதால் அலுப்பு தட்டாமல் நகருகிறது கதை. இடைவேளையில் உண்மையில் சசி யார் என்ற முடிச்சு அவிழும்போது அதிர்ச்சி ஏற்படுத்துவதில் இயக்குனருக்கு வெற்றிதான்!
இரண்டாம் பாதி கதையில் கிராமத்து சம்பவங்கள் ரொம்பவே இழுவை. சட்டென்று சொல்லி முடித்திருக்கலாம். அவ்வளவு நீட்டி முழக்கியிருந்தாலும் குடும்ப உறவுகளைப் பற்றிய குழப்பங்களை இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தியிருக்கலாம். அதேபோல க்ளைமாக்ஸும் யூகிக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது.
அதைத் தாண்டி வரும் கஞ்சா கருப்பு சீன் டிபிகல் நாடோடிகள் பஞ்ச்! சமுத்திரகனி இயக்கத்தில் இன்னொரு வெற்றி என்று தாராளமாகச் சொல்லலாம்.
நன்றி குசும்பு
ஒஸ்தி விமர்சனம்
காஸ்டிங் டைரக்டர் என்ற ஹாலிவுட் சமாச்சாரத்தை தயவு செய்து இறக்குமதி செய்யுங்கப்பா என்று கோடம்பாக்கத்தில் நின்று கத்தலாம் போலிருக்கிறது. மாஸ் ஹீரோக்களை வைத்து தில், தூள், கில்லி என்று கச்சிதமாக மசாலா அரைத்த தரணி, இம்முறை கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான ஹீரோவை காஸ்ட் செய்ததில் செமத்தியாக கோட்டை விட்டிருகிறார்.
வின்னைத் தாண்டி வருவாயா படத்தில் உதவி இயக்குனர் கார்த்திகேயனாக கச்சிதமாகப் பொருந்திய காரணமே சிம்புவின் வயதும், +2 பையனுக்கான அவரது இளமையும்தான். இன்னும் அதே தோற்றத்தொடு இருக்கும் சிம்புக்கு காக்கி யூனிஃபார்ம் மாட்டினால் என்னாகும்?
ஒரு சின்னப் பையன் பெரிய மனிதர்களோடு திருடன் போலீஸ் விளையாடுகிறமாதிரி இருக்கிறது மொத்த படமும். சிம்புவுக்கு காக்கி யூனிஃப்பார்ம் பேன்சி டிரஸ் காம்பெடிஷன் மாதிரித் தெரிவதால் முக்கால் வாசிப் படம் முழுக்க கலர் காஸ்யூம்களில் சிம்புவை நடமாட விட்டிருகிறார்.
தபாங்கில் சல்மானின் ஆஜானபாகுவான தோற்றமே அவர் ஏற்று நடித்த சல்புல் பாண்டே காமெடி கம் ஆக்ஷன் போலீஸ் கதாபாத்திரத்துக்கு நெத்தியடியாகப் பொருந்தியது. என்னதான் தரணி சிம்புவை சிக்ஸ் பேக் செய்ய வைத்தாலும் சல்புல் பாண்டேயின் கம்பீரம், காமெடி இரண்டையும் ஒஸ்தி வேலனுக்குள் டிராண்ஸ்ஃபாம் பண்ண முடியவில்லை.
போதக்குறைக்கு சிம்புவுக்கு குசும்பு கைவருமே தவிர அவர் தனியாக காமெடி செய்தால் சிரிப்பு வராது. இதனால் சந்தாணம் உள்ளிட்ட மிகப்பெரிய காமெடி போலீஸ் டீமை நம்பியே காமெடி டிபார்ட்மெண்ட் ஒப்படைக்கப்படிருகிறது.
அதனால் கலகலப்புக்கு பஞ்சமில்லை.தபாங் படத்தின் கதையை தமிழுக்கு ஏற்ப தரணி சில மாற்றங்களைச் செய்திருந்தாலும், பரபரப்பாக நகரும் திரைக்கதையில் எப்போதுமே குறியாக இவர், இம்முறை படம் முழுவதும் பர்பெக்ட் மசாலாவை பேக் செய்யும் கவனத்திலேயே,
திரைக்கதையின் வேகத்தில் கோட்டை விட்டுவிட்டார். இடைவேளைக்குப் பிறகு கதை எப்படி டிராவல் செய்யும் என்பதை அழுத்தம் இல்லாத காட்சிகள் உணர்த்தி விடுவதில், அடிக்கடி கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை.
திருநெல்வேலி டவுணுக்கும் போலீஸ் கதைகளுக்கும் அப்படி என்னதான் பந்தமோ, சாமி, சிங்கம் படங்களின் வரிசையில் ஒஸ்திவேலனும், திருநெல்வேலி வட்டாரத்தில் இண்ஸ்பெக்டராக வேலை செய்கிறார். சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவிடும் வேலனுக்கு நாசர்தான் ஸ்டெப் பாதர்.
இரண்டாவது கணவர் மூலம் தனது தாய் வயிற்றில் பிறந்தாலும், அவரது தம்பி ஜித்தன் ரமேஷ்( சிம்புவை விட பல வயது மூத்த ஜித்தன் ரமேஷுக்கு அண்ணனாக நடிக்க ஒப்புகொண்டது சிம்புவின் பெருந்தன்மைதான்) நாசர் இரண்டு பேரோடும் சிறுவயது முதலே ஒத்துப் போகாமல் வீம்பாகத் திரிகிறார் சிம்பு.
இந்த நேரத்தில்தான் சிம்பு வேலை செய்யும் ஊருக்கு தேர்தல் வருவருகிறது. அந்த ஊரில் தாதாவாகிய பாக்ஸர் டேனியலுக்கு அடிதடியும், மணல் கொள்ளையும் போரடித்து விட்டதால், தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஒட்டுக்களை காசுகொடுத்து வாங்க மணல் கொள்ளையில் சம்பாதித்த சுமார் ஒரு கோடி ரூபாயை போலீஸ் கையில் மண்ணைத் தூவிவிட்டு தனது குண்டாஸ் கும்பல் மூலம் கடத்துகிறார். ஆனால் ஒஸ்தி வேலன் தனியாளாக அந்தப் பணத்தை மீட்டு, தனது வீட்டில் வைத்துக்கொண்டு யூனிஃபார்ம் மாட்டிய ராபின் ஹுட் மாதிரி செயல் படுகிறார்.
அந்தப் பணத்தை மீட்டால்தான் தனக்கு தேர்தலில் வெற்றி என்கிற நிலையில், தனது ஒரே தலைவலியான ஒஸ்திவேலனை ஒளித்துக் கட்ட பலவகையிலும் காய் நகர்த்த அதையெல்லாம் முறியடித்துக் கொண்டே வரும் ஒஸ்தி இறுதியில் தனது அம்மாவின் சாவு இயற்கை மரணமல்ல�
அவளைக்கொன்றது டேனியல்தான் என்பதைத் தெரிந்து அவனை வேட்டையாடுகிறார். இந்தக் கதையில் ஹீரோயின் டிராக், குயிக் பிக்ஸ் போட்டு ஒட்ட வைத்தது போல இருப்பது பெரும் சறுக்கல் என்றாலும், இந்தமாதிரி மாஸ் மசாலா படங்களில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதால்,
ரிச்சாவின் திமிரும் இளமை ரசிகர்களுக்கு விருந்தாக படைக்கப் பட்டிருகிறது. கிராமத்து மண்பாண்டத்தொழிலாளியின் மகள் அழகாக இருப்பாள் என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அழகிப் போட்டியில் பங்கு கொள்கின்ற மாதிரி இருப்பாளா மிஸ்டர் தரணி?
சரி போகட்டும்� படத்தின் வில்லன் சோனு சூத்தை ஒரு பாக்ஸராக காட்டியிருப்பது கதைக்கு எந்த வகையில் பயன்பட்டிருகிறது என்பது இயக்குனராக உங்களுக்கு மட்டுமே வெளிச்சம். சில காட்சிகளே வந்து போனாலும் ரேவதியின் நடிப்பில் வயதுக்குரிய முதிர்ச்சி. அதேநேரம் திறமையான கலைஞர்களான தம்பி ராமைய்யா, அழகம்பெருமாள் இரண்டுபேரும் வீனடிக்கப்படிருகிறார்கள்.
இவர்கள் எல்லாரையும் விட சிம்பு அபாரமாக உழைத்திருகிறார், நடித்திருகிறார், நன்றாக நடனமாடி , அசத்தலாக பைட் செய்திருக்கிறார். ஆனால் இது எல்லாமே குருவி தலையில் பெரிய பனங்காயை வைத்த மாதிரி இருக்கிறது.
No comments:
Post a Comment