உலகச் செய்திகள்

மூன்று பெண்களுக்கு நோபல் விருதுகள்

யுனெஸ்கோவில் ஏற்றப்பட்டது பலஸ்தீனக் கொடி: அமெரிக்க, இஸ்ரேல் முகங்களில் கரி

சிரியாவின் வன்முறைகளில் இதுவரை 5000 பேர் பலி

பிலிப்பைன்சில் அகோர புயல்:180 பேர் பலி; 400 பேரைக் காணவில்லை







மூன்று பெண்களுக்கு நோபல் விருதுகள்

11/12/2011

அநீதி, சர்வாதிகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடிய மூன்று பெண்களுக்கு, நேற்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்த விழாவில், இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன.

நோபல் அறக்கட்டளை நிறுவிய அல்பிரட் நோபல், 1896, டிசம்பர் 10ஆம் திகதி இத்தாலியில் காலமானார். ஆண்டுதோறும் அவரது நினைவு நாள் அன்று, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், நோபல் விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.

இந்தாண்டுக்கான நோபல் விருதுகள், சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதன்படி நேற்று, நோபல் விருதுகள், உரியவர்களுக்கு வழங்கப்பட்டன. அறக்கட்டளை விதிகளின்படி முதலில், உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு விருதும், 15 இலட்சம் டொலர் ரொக்க மதிப்புடையவை. லைபீரிய அதிபர் எல்லன் ஜொன்சன் 73, லைபீரிய பெண் உரிமைப் போராளி லீமா போவீ 39 மற்றும் ஏமனின் அதிபர் சலேவுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடி வரும் தவாக்குல் கர்மான் 32, ஆகியோருக்கு, இந்தாண்டுக்கான நோபல் விருதுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் மூலம், நோபல் விருதுகள் என்றாலே அது ஆண்களுக்குத் தான் என்ற வாதம் முறியடிக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று, நோபல் விருது வழங்கும் விழா நடந்தது. அதில், உலக அமைதிக்கான நோபல் விருதுகள், இம்மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஏற்புரையின் போது பேசிய சர்லீப்,'அநீதியை எதிர்ப்பதற்காக யாரும் அஞ்ச வேண்டியதில்லை. நமது எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அமைதியைக் கோரும் நமது கோரிக்கையைக் கைவிட வேண்டியதில்லை" என்றார்.

வெயிலிலும், மழையிலும் வாடும் லைபீரியப் பெண்களுக்கு, தமது விருதை அர்ப்பணிப்பதாக லீமா போவீ தெரிவித்தார். தவாக்குல் கர்மான் பேசும் போது,'ஆண் பெண் முயற்சியால் தான் மனித நாகரிகம் விளைந்தது. அதனால், பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது இந்த மனித சமுதாயம் பாதிக்கப்படும்" என்றார்.

இதைத் தொடர்ந்து நேற்று மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் இலக்கியம், பொருளாதார அறிவியல் ஆகிய துறைகளுக்கான விருதுகள், சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் நடந்த மற்றொரு விழாவில் வழங்கப்பட்டன.
நன்றி வீரகேசரி

யுனெஸ்கோவில் ஏற்றப்பட்டது பலஸ்தீனக் கொடி: அமெரிக்க, இஸ்ரேல் முகங்களில் கரி


கவின் 14/12/2011

பெரிஸ் நகரிலுள்ள யுனெஸ்கோவின் தலைமையகக் கட்டிடத்தில் முதன்முறையாக பலஸ்தீனக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இது பலஸ்தீனத்தின் வெற்றியாக மட்டுமன்றி இஸ்ரேல், அமெரிக்காவிற்கு பாரிய அடியாகவும் கருதப்படுகின்றது.

அவ்விரு நாடுகளின் எதிர்ப்பினையும் மீறியே பலஸ்தீனம் யுனெஸ்கோவின் உறுப்பு நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி இது தமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியென தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையில் முழு உறுப்புரிமையைப் பெறுவதற்கு பாதுகாப்பு சபையில் 15 வாக்குகளில் 9 வாக்குகள் தேவை.

எனினும் இதனைத் தோற்கடிக்க அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தினை உபயோகிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

எனினும் முழு உறுப்புரிமையைப் பெறுவதற்கு கடும் முயற்சி மேற்கொள்வதாக பலஸ்தீனம் தெரிவிக்கின்றது.

கடந்த ஒக்டோபர் மாதமே யுனெஸ்கோவில் பலஸ்தீனம் 195 ஆவது அங்கத்துவ நாடாக இணைந்துகொண்டது.

இதற்குக் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் யுனெஸ்கோவிற்கான தமது நிதியினை நிறுத்தியது.

இதன் படி இவ்வாண்டுக்கான அதன் நிதியில் 66 மில்லியன் அமெரிக்க டொலர்களும், அடுத்த ஆண்டுக்கான நிதியில் 143 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பற்றாக்குறையாகியமை குறிப்பிடத்தக்கது
நன்றி வீரகேசரி
சிரியாவின் வன்முறைகளில் இதுவரை 5000 பேர் பலி
15/12/2011

சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரத்தில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிபர் பஷார் அல்- அஸ்ஸாத் ஆட்சிக்கு எதிராக சிரியாவில் கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவத்தைப் பயன்படுத்தி வருகிறார் அதிபர் அல்-ஆசாத். பொதுமக்களை இராணுவம் கொத்துக் கொத்தாக கொன்று குவித்து வருவதால் அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது.

இந்த நிலையில் இராணுவம் சுட்டதில் இதுவரை 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு தலைவர் நவி பில்லாய் தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் மனிதாபிமானத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இது குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் புகார் தெரிவிக்கப்படும் என்றும் நவி பில்லாய் கூறியுள்ளார்.
நன்றி வீரகேசரி

பிலிப்பைன்சில் அகோர புயல்:180 பேர் பலி; 400 பேரைக் காணவில்லை


18/12/2011

தெற்கு பிலிப்பைன்ஸை 'வாசி' என்ற கொடூர புயல் தாக்கியதன் காரணமாக பாரிய வெள்ளம் ஏற்பட்டு இதன் காரணமாக 180 பேர் இறந்துள்ளதாகவும் 400 பேரைக் காணவில்லையென்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை இடம்பெற்ற அனர்த்தத்தின் காரணமாக மின்டானோ தீவின் வடக்குப் பகுதியில் உள்ள இரண்டு துறைமுகங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 20,000 இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆறுகள் பெருக்கெடுத்து ஒரு இலட்சம் மக்கள் வசிக்கும் இந்நகரில் 25 வீதமான இடங்கள் நீரில் மூழ்கிப் போயிருப்பதாகவும் லிகன் நகர மேயர் லோறன்ஸ் குரூஸ் கூறுகின்றார்.

மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது வெகு விரைவாக வெள்ளம் நகருக்குள் உட்புகுந்ததாகக் கூறப்படுகிறது.

கோயன் என்ற நகரில் 97 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் 1 லட்சம் மக்களைக் கொண்ட இந்நகரில் 125 பேரைக் காணவில்லையென்றும் லீகன் நகரில் 250 பேரைக் காணவில்லையென்றும் இந்நகர இராணுவ அதிகாரி கூறுகிறார்.

சூறாவளிப் பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் இப் புயல் வருவதை முன்பே மக்கள் அறிந்திருந்தும் அவர்கள் இதைப் பெரிதாக கவனத்தில் எடுக்கவில்லை என லிகன் நகர நிறைவேற்றுப் பணிப்பாளர் பெனிற்றோ ராமோஸ் கூறினார். தான் தனது 47 வருட வாழ்வில் கண்டிராத பாரிய வெள்ளம் இது என ஒருவர் விபரிக்கின்றார். லீகன் துறைமுகத்தினூடாக செல்லும் 2 ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. ஒரு வானொலி வர்ணனையாளரும் இப்புயலினால் மரணமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன. இப் புயல் சூலு கடலைத் தாண்டி பலாவன் தீவை மணிக்கு 75 மைல் வேகத்தில் சனிக்கிழமை இரவு தாக்கக்கூடுமென பிலிப்பைன்ஸ் வானிலை அவதான நிலையம் கூறுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் சனத்தொகை கூடிய நகரான லூசானை வருடம் தோறும் 20 புயல்கள் தாக்குகின்றன.
நன்றி வீரகேசரி












No comments: