இலங்கைச் செய்திகள்

நியாயங்களுக்கு அர்த்தம் கொடுக்கின்றதா மனித உரிமைகள் தினம்

ஜே.வி.பியினர் கொழும்பில் நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

எமது பிரச்சினைகளை சர்வதேச பொலிஸிடம் ஒப்படைக்க முடியாது

தமிழ்க் கூட்டமைப்பின் எண்ணம் நிறைவேறாது



திருக்கோணேஸ்வரத்தில் 33 அடி உயர சிவன் சிலை திறந்து வைப்பு (பட இணைப்பு)


நியாயங்களுக்கு அர்த்தம் கொடுக்கின்றதா மனித உரிமைகள் தினம் 10/12/2011







உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை.

ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைகளின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநிறுத்தல் என்பவற்றுக்கு மனித உரிமை என்பது அத்தியாவசியம் மிக்க ஒன்றாக இருக்கின்றது. ஆனால், ஜனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பெரும்பாலும் மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன என்பதை ஊடகங்கள் வழியாக நாம் அறிகின்றோம்.

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 30 உறுப்புரைகளைக் கொண்டது. அதாவது சகல இன மக்களும் தத்தமது சாதனை இலக்கின் பொது நியமமாக கொள்ளத்தக்கதாக இந்த அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் அமைந்துள்ளது.

சமூகத்தின் ஒவ்வொரு மனிதனும் இப்பிரகடனத்தைக் கற்றறிந்து கொள்வதோடு அந்த உரிமைகளை மனதிலிருத்தி சுதந்திரங்களுக்கான மதிப்பினை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாக உள்ளது.

உறுப்புரை - 01 இல் 'மனிதப் பிறவியினர் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவரோடொருவர் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் உறுப்புரையே மனித உரிமைக்கு பூரண அர்த்தத்தைக் கொடுக்கின்றதல்லவா?

ஒரு நாட்டின் அரசினால் இந்த உரிமை பாதுகாக்கப்படுமாயின் ஏனைய உரிமைகள் தாமாகவே அந்நாட்டு மக்களுக்குக் கிடைத்து விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஒருவரோடொருவர் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நியதி ஒரு நாட்டில் இருக்குமானால் அந்நாட்டில் சகலரது உரிமைகளும் பாதுகாக்கப்படுவதோடு அனைவரும் உரிமைகளை அனுபவிக்கும் நிலையும் நிச்சயமாகத் தோன்றக் கூடும்.

இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில், ஆரம்ப கால அந்நியர் ஆட்சி முதல் இன்றைய ஜனநாயக ஆட்சி வரை மனித உரிமைகளுக்கு பூரண முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததா என்பது கேள்விக்குறியே.

இலங்கையில் பெரும்பான்மை ஆட்சியே அந்நாள் முதற்கொண்டு நடைபெற்று வருவதால், அந்நியர் ஆட்சியிலிருந்து இன்று வரை சிறுபான்மையினர் உரிமைகளை அனுப்பவிப்பதென்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்பது முழு உலகமுமே அறிந்த உண்மை.

அதாவது, 'சிறுபான்மையினருக்கு உரிமைகள்" என்பது ஆவண ரீதியில் காணப்பட்ட போதும் அவை நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருப்பதையும் காணக் கூடியதாகவே உள்ளது. இவர்களுக்கு மனித உரிமை என்பது ஏதோ ஒரு கட்டுபாட்டுக்குட்பட்டதாகவே அன்றும் இன்றும் காணப்படுகின்றது. 1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பின் போது பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் அடக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து தமிழ்த் தலைவர்களால் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து அக்காலப்பகுதியில் சிறுபான்மையினருக்கென பல விசேட ஷரத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவை ஏதோ ஓர் அதிகாரத்துக்கு உட்பட்டதாக காணப்பட்டதால் அதன் பூரண பயன்பாட்டை சிறுபான்மையினர் அனுபவிக்கவில்லை. இது போன்றே இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினர் எனும் போதும் தமிழ், முஸ்லிம், பறங்கியர் அடங்குகின்றனர். இவர்களின் உரிமைகள் பெயரளவில் மாத்திரமே உள்ளன.

30 வருட கால போர்ச்சூழல் மறைந்து, நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கூட, கொழும்பில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்றால் நம் நாட்டு மனித உரிமையை என்னென்பது?

இதே நிலையில் தான் நம் நாட்டில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் உறுப்புரை 13இல் கூறப்பட்டுள்ளது போன்று ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள் சுதந்திரமாக பிரயாணஞ் செய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

ஆனால், நம் நாட்டில் நடப்பதென்ன?

அண்மைக் காலமாக நாட்டில் மீண்டும் உருவெடுத்துள்ள வெள்ளை வேன் கடத்தல், மர்ம மனிதத் தாக்குதல், மனித உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுதல், சித்திரவதைப்படுத்தல் போன்ற சம்பவங்கள் மேற்கூறப்பட்ட மனித உரிமைப் பிரகடனத்தையே கேலிக்குரியதாக்குகின்றனவே?

உரிமைகள் ஏட்டளவில் தான். நடைமுறையில் எதையும் காணோம். 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது" என்பதையே இத்தகைய சம்பவங்கள் தெளிவுபடுத்துவதாக உள்ளன.

இடத்துக்கிடம் சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து, சிவிலுடை தரித்த பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பு என அதிஉயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் கொழும்பு மாநகரில் கூட இத்தகைய வெள்ளை வேன் ஆயுததாரிகளால் பல கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதைத் தடுக்க முடியாதிருக்கிறது.

இதன் மூலம் ஒரு பிரஜை நாட்டின் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட முடியாதபடி அவனது உரிமை மீறப்படுகின்றது என்பதுதானே அர்த்தமாகின்றது?

மனிதப் படுகொலைகள், பாலியல் பலாத்காரம், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்டது. மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட மனித உரிமைகள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நமது உரிமைகளைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நிறைவாக, மனித உரிமைகள் மீறப்படும் போது இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் இனிமேலாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மனித உரிமைக்காக செயற்படுவார்களா? ___

நன்றி வீரகேசரி
ஜே.வி.பியினர் கொழும்பில் நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி


14/12/2011


ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்தும் சரத் பொன்சேகா உள்ளிட்ட அரசியல் கைதிகளின் விடுதலை, ஊடக சுதந்திரம், வேலையில்லாப் பிரச்சினையை தீர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் தற்போது பாரிய பேரணியொன்றை நடத்துகின்றனர்.

கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்துக்கு அருகிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கோட்டையை நோக்கி பேரணியாகச் செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

நன்றி வீரகேசரி


எமது பிரச்சினைகளை சர்வதேச பொலிஸிடம் ஒப்படைக்க முடியாது

தமிழ்க் கூட்டமைப்பின் எண்ணம் நிறைவேறாது

மர்லின் மரிக்கார், லோரன்ஸ் செல்வநாயகம்

மது பிரச்சினைகளை நாமே தீர்க்க முடியும். அதனை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்க ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்கப் போவதில்லையென வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேசிய ரீதியிலான ஆணைக்குழுவை நிராகரித்து சர்வதேச ஆணைக்குழுவை எதிர்பார்க்கும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் எண்ணம் ஈடேறாது எனத் தெரிவித்த அமைச்சர் சம்பந்தன் போன்றோர் நல்லெண்ணத்தை வளர்க்கும் விதத்தில் கூற்றுக்களை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. 54 நாடுகள் எமக்கு ஆதரவாகவே உள்ளன. சகல சவால்களையும் வெற்றி கொள்ள அரசாங்கத்திற்கு முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெளி விவகார அமைச்சின் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர்; தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்; தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம். பி.க்கள் சம்பந்தன், ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோர் எமது வெளிநாட்டுக் கொள்கை பற்றிப் பேசுகின்றனர். அது தவறானதென்றும் நிராகரிக்கப்பட்டதென்றும் கூறுகின்றனர்.

எமது வெளிநாட்டுக் கொள்கை எமது நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதாக வும் எமது மக்களின் தேவைகளைப் பெற் றுக் கொடுக்கக் கூடியதாகவுமே இருக்க வேண்டுமென்பதை நான் அவர்களுக்குக் கூறவிரும்புகிறேன். சம்பந்தன் எம்.பி. அறிவுபூர்வமாக அன்றி உணர்வுபூர்வமாகப் பேசுகிறார். பிரச்சினைக்குத் தீர்வு காண அறிவு பூர்வமாகப் பேச்சு நடத்தித் தீர்வுகளைப் பெறலாம் என்பதை நான் கூற விரும்புகிறேன்.

கடந்த முறை ஐ. நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராகப் பெரும் நெருக்கடிகள் கிளப்பப்படும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். ஒரே ஒரு நாடு மட்டுமே எமக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்தது.

அச்சமயம் எம் ஜனாதிபதி அவர்களுடன் நான் நியூயோர்க்கில் இருந்தேன். அங்கிருந்து கொண்டு சுமார் 15 நாடுகளின் அமைச்சர்களுடன் எம்மால் கலந்துரையாட முடிந்தது.

இதன் பிரதிபலனைவிட எதிராக அறிக்கை சமர்ப்பித்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரே தமது அறிக்கையை வாபஸ் வாங்கிக் கொண்டார். இது செப்டம்பரில் நடந்தது. பின்னர் ஒக்டோபரில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது அந்நாட்டின் ஊடகங்கள் இலங்கையை விமர்சித்து பாரிய பிரசாரங்களை மேற்கொண்டன.

பொது நலவாய நாடுகளின் மாநாட்டை 2013ல் இலங்கைக்கு வழங்கப் போவதில்லை எனவும் இலங்கைக்கெதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் பத்திரிகைகள் பிரசுரித்தன.

இதன்போது நாம் பல நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் எம் பிரயத்தனத்தை வெற்றியடையச் செய்தன. பெரும்பாலான நாடுகளின் ஆதரவு, எமக்குக் கிடைத்த போதும் ஒரே ஒரு நாடு எமக்கெதிராக செயற்பட்டது. அதற்கெதிராக நாம் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். இதன் போதும் மேலும் பதினைந்து நாடுகள் எமது நியாயத்தை, ஏற்றுக்கொண்டு எமக்கு ஆதரவளிக்க முன்வந்தன. ஏகமனதாக அந்த நாடுகள் ஏற்றுக்கொண்டன. அந்த மாநாட்டின் முடிவில் 2013ம் ஆண்டு மாநாடு எமது நாட்டுக்கு வழங்கப்பட்டது. இது எமது பிரயத்தனத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.

எமது வெளிநாட்டுக் கொள்கை தவறானதோ அல்லது நிராகரிப்புக்குள்ளானதோ அல்ல என்பதை எடுத்துக் காட்ட இதனை சிறந்த ஆதாரமாகக் கொள்ள முடியும். எதிர்க்கட்சிகள் என்றவகையில் விமர்சனங்கள் பல இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு இறைமை விடயத்தில் அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். யுத்த கால சம்பவங்களை ஆராய தேசிய ரீதியிலான விசாரணைகளை நிராகரித்துவிட்டு சர்வதேச விசாரணைகளைக் கோருக்கிறார் சம்பந்தன் எம். பி. இதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது.

லூயிஸ் ஹாபரின் கருத்துக்களை ஆதரிக்கும் அவர் ஆர். பி. கு. விடயத்தையும் ஆதரிக்கிறார். இது எமது நாட்டிற்குள் எந்த சர்வதேச சங்கமும் பிரவேசிக்கலாம் என்பதையே கொண்டுள்ளது. சர்வதேச தலையீட்டை அரசாங்கம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. அதற்கு இடமளிக்கவும் போவதில்லை என்பதை நான் அவருக்குக் கூற விரும்புகிறேன்.

தருஸ்மன் அறிக்கையானது யாரிடம் காட்சிகளைப் பெற்று தயாரிக்கப்பட்டது என்பது எவருக்குமே தெரியாது. அந்த நிலையில் அதன் உண்மைத் தன்மை என்னவாக இருக்க முடியும்? அது சில அரசியல் இலாபங்களுக்காக மேற் மேற்கொள்ளப்பட்ட விடயம் என்பதை நாம் உலகிற்கு எடுத்துக் கூறி வருகின்றோம்.

பொது நலவாய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரை நியமிப்பது தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச பொலிசிடம் எமது பிரச்சினைகளை பாரம்கொடுக்க நாம் தயாரில்லை.

சில கொள்கைகள் எமது நாட்டுக்குப் பொருத்தமானதல்ல என்பதை ரணில் விக்கிரமசிங்க உணர வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நன்றி  தினகரன்

திருக்கோணேஸ்வரத்தில் 33 அடி உயர சிவன் சிலை திறந்து வைப்பு (பட இணைப்பு)


ஜீவா சதாசிவம் 15/12/2011

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக்களின் புனிதத்தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 33 அடி உயரமான சிவனின் சிலை இன்று காலை 10.35 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச்சிறப்புடைய இந்த ஆலயத்தில் இராவணன்வெட்டுக்கு அருகில் புதியதொரு தியான மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெரிய லிங்கமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழா நிகழ்வில் பெரியார்களான காந்தி ஐயா, கணபதிப்பிள்ளை உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.








நன்றி வீரகேசரி



















No comments: