சிறுவர் உலகில் நாடக இலக்கியம் படைக்கும் மாவை நித்தியானந்தன் - முருகபூபதி




.
                             
“தமிழ்க்குழந்தைகளை மகிழவைக்கக்கூடியதான காட்சி ஊடகத்தின் வளர்ச்சி தமிழர் புலம்பெயர்ந்த சூழலில் மட்டுமல்ல, தாயகச்சூழலிலும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தேவையை நிறைவுசெய்வது எப்படி என்பதைப்பற்றி எமது சமூகம் சிந்தித்தல் அவசியம்.”

இவ்வாறு சிறுவருக்கு மகிழ்வூட்டும் கலை என்ற தலைப்பில் மாவை நித்தியானந்தன் எழுதியிருந்த கட்டுரையின் இறுதியில் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பிட்ட ஆக்கம் இலங்கையில் 2011 ஜனவரியில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலரில் வெளியாகியுள்ளது. தனது ஆதங்கத்தை ஒரு உபதேசியாக மாத்திரம் வெளிப்படுத்திவிட்டுப்போகாமல் தனது ஆற்றலுக்கும் சக்திக்கும் அப்பாற்;பட்டவழியில் நடைமுறைப்படுதியிருக்கிறார் நித்தி.



அண்மையில் அவர் வெளியிட்டுள்ள நான்கு நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பாக சிறுவர் இலக்கியவரிசையில் மிகுந்த கவனிப்புக்குரியவை.

சின்னச்சின்ன நாடகங்கள், நாய்க்குட்டி ஊர்வலம், சட்டியும் குட்டியும், சின்னச்சின்ன கதைகள்.

இந்நான்கு நூல்களில் சின்னச்சின்ன கதைகள் நூல் தவிர்ந்த ஏனைய மூன்றும் சிறுவர் நாடகங்கள்.

சின்னச்சின்ன கதைகள் சிறுவர் இலக்கிய வரிசையில் ஏற்கனவே நாம் தெரிந்துவைத்திருக்கும் கதைகள்தான். காகமும் தண்ணீரும், கொக்கும் நரியும், நரியும் பழமும், ஓநாயும் நிழலும், பொன்முட்டை வாத்து, முயலும் ஆமையும், மாடும் சுண்டெலியும், காற்றும் சூரியனும், கறுப்பும் வெள்ளையும், சிறுவனும் ஓநாயும், நியாயம், எறும்பும் புறாவும், குழந்தையும் ஓநாயும், கழுதையும் மனிதர்களும், நாயும் எலும்புத்துண்டும் ஆகிய சின்னச்சின்ன கதைகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு செய்தியை தருகின்றது. சிறுவர் புரிந்துகொள்ளும்விதமாக எளிய தமிழில் செல்லப்பட்டிருப்பதனால் அவர்களின் சிந்தனையிலும் ஊடுருவிக்கொள்ளும்.



தாயக வாழ்வில் பாட்டிமாரினால் அல்லது முன்னோர்களினால் எமக்குச்சொல்லப்பட்ட அல்லது தாயகத்தில் சிறுபராய வகுப்பில் ஆசிரியர்களினால் சொல்லித்தரப்பட்ட இக்கதைகள் புகலிடத்தில் வளரும் தமிழ்க்குழந்தைகளுக்கும் பொதுவானவைதான்.

தமிழகத்தில் புகழ்பெற்ற ஓவியர் மருதுவின் வண்ணப்படங்கள் கதைசெல்லும் மாவை. நித்தியானந்தனின் சிறுவர் இலக்கியம் குறித்த உணர்வுக்கு உயிரூட்டுகின்றன.

மொத்தம் 16 சின்னச்சின்ன நாடகங்களின் தொகுப்பு 5 முதல் 10 வயதினர் நடிக்கவும் ரசிக்கவும் ஏற்றது எனச்சொல்கிறார் மாவை. நித்தியானந்தன்.

இச்சந்தர்ப்பத்தில் தமிழ் அறிஞர் மு.வரதராசன் எழுதியிருந்த நூல் ஒன்றில் குறிப்பிட்டிருந்த கருத்து நினைவுக்கு வருகிறது.

நடிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள். படிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள். நடிப்பதற்கும் படிப்பதற்கும் எழுதப்படும் நாடகங்கள். என்ற தலைப்பில் மு.வ. விரிவாக நாடக இலக்கியம்குறித்து அந்த நூலில் ஆராய்ந்திருந்தார்.

மாவை. நித்தி நடிப்பதற்காகவும் படிப்பதற்காகவும் எழுதியிருக்கும் சின்னச்சின்ன நாடகங்கள், அவுஸ்திரேலியாவில் சில மாநிலங்களிலும் இங்கிலாந்திலும் மேடையேற்றப்பட்டவை. இந்நூலின் இறுதியில் தயாரிப்புக்குறிப்புகள் பதிவுசெய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து முக்கியமானது.

அவர் சொல்கிறார்:- ஒரு நாடகத்தின் ஒவ்வொரு மேடையேற்றமும் தனித்துவமானது என்பர். ஒவ்வொரு இயக்குநனர் கையிலும் நாடகம் வௌ;வேறு பொலிவினைப்பெறும்.

• இந்நூலிலுள்ள நாடகங்களில் ‘குழுவினர்’ அல்லது ‘கதை சொல்வோர்’ வருகின்றனர். இவர்கள், அல்லது இவர்களிற் சிலர், நாடகப்பாத்திரங்களும் ஆகலாம்.

• பல நாடகங்களில், பங்குபற்றுவோரின் எண்ணிக்கையை இலகுவில் கூட்டவும் குறைக்கவும் முடியும். உதாரணமாக, ‘கரடி’ நாடகத்தில் ஒரு கரடியும் இரு நண்பர்களும், இரு கரடிகளும் நான்கு நண்பர்களும் ஆகலாம். சில நாடகங்களில் பொருத்தப்பாட்டுக்கேற்ப மேலதிகமான மிருகங்களையோ மனிதர்களையோ சேர்க்கலாம்.


இவ்வாறு ஏழு யோசனைகளை இந்நாடகங்களை தயாரித்து இயக்கவிரும்புபவர்களுக்கு தெரிவிக்கின்றார் மாவை. நித்தி.

பொதுவாகவே நாடகப்பிரதிகள் எழுதும் நாடகாசிரியர்கள் தமது நாடக நூலில் குறிப்பிடும் வாசகம் ஒன்றிருக்கிறது. ‘இந்நாடகங்களை மேடையேற்ற விரும்புவோர் முன் அனுமதி பெறவேண்டும்’

இந்தப்பொதுவான விதிமுறையை மாவை நித்தி தமது நாடக நூல்களில் பிரகடனப்படுத்தவில்லை.
சட்டியும் குட்டியும் 9 நாடகங்களின் தொகுப்பு. இந்நாடகங்கள் 8 முதல் 13 வயதினர் நடிக்கவும் ரசிக்கவும் ஏற்றவை என்று சொல்கிறார் மாவை. நித்தியானந்தன்.

நாய்க்குட்டி ஊர்வலம் 5 நாடகங்களின் தொகுப்பு.

இதில் இடம்பெற்றுள்ள நாடகங்கள் 13 வயதிற்கு மேற்பட்டோர் நடிக்கவும் ரசிக்கவும் ஏற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து சிறுவர் நாடக இலக்கியப்பிரக்ஞையுள்ள ஒரு கலைஞரின் தெளிவான சிந்தனை வெளிப்படுகிறது.

இந்நாடகங்களை நடிப்பவர்கள் சிறுவர், சிறுமியர். அதனைப்பார்த்து ரசிக்கவிருப்பவர்களும் சிறுவர், சிறுமியரே. அவர்களை அழைத்துவரும் பெற்றோர்கள் மூத்ததலைமுறையினராக இருந்தபோதிலும் அவர்களும் ரசிக்கத்தக்க நாடகங்களாக அவை விளங்குகின்றன. அதனால் நித்தியானந்தனின் உழைப்பு வீண்போகவில்லை.

தமிழ்ச்சூழலில் நாடகப்பிரதிகளுக்கு பற்றாக்குறை நீடிக்கிறது. மாவை நித்தியானந்தன் தன்னால் இயன்றவரையில் மட்டுமல்லாமல் தனது சக்திக்கு அப்பாற்பட்ட முறையிலும் இந்தத்துறையில் கடினமாக உழைத்திருக்கிறார். அடுத்தடுத்து மூன்று பாகங்களில் வெளியாகி தற்போது ஒரு குறுந்தகட்டில் பதிவாகியுள்ள ‘பாப்பா பாரதி’ உட்பட இந்நாடக நூல்கள் மாவை நித்தியானந்தன் தமிழ்ச்சிறார்களுக்கு வழங்கியுள்ள வரப்பிரசாதம்.

தமிழ்ப்பெற்றோர் இவற்றை தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்வதன் ஊடாக சிறுவர் நாடக உலகையும் சிறுவர் இலக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.

பிரதிகளுக்கு:

info@bharathiacademy.com.au





No comments: