சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தமைக்கு அவுஸ்திரேலிய அரசுக்கு நன்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

.

 mahindaநீதிமன்ற நடவடிக்கைகள் போன்ற நிலைமைகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தமைக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை யுத்தத்தின் போது 2009 ஆம் ஆண்டில் பொது மக்கள் இலக்குகள் மீது குண்டு வீச்சுக்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றத்தில் ஜெகதீஸ்வரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேர்த் நகரில் நடைபெறும் பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கென அவுஸ்திரேலியா சென்றிருக்கும் நிலைமையிலேய இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

எனினும் அரச தலைவர்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர சிறப்பு விடுபாட்டு உரிமையை மீற முடியாதென்று மேற்கோள் காட்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான இந்த போர்க்குற்ற வழக்கு விசாரணைக்கு அவுஸ்திரேலிய சட்ட மா அதிபர் ரொபேர்ட் மக்கிளீலான்ட் அனுமதி மறுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் "வின்த்ரோப்' மாநாட்டு மண்டபத்தில் அவுஸ்திரேலிய வாழ் இலங்கை மக்களை சந்தித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அங்கு உரையாற்றும் போதே அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு நன்றி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா சென்றால் விகாரைக்கு போக வேண்டாம் என்கிறார்கள். இங்கிலாந்துக்குப் போனால் வழக்குத் தாக்கல் செய்கின்றனர். அவுஸ்திரேலியா சென்றால் வெளியில் இறங்க வேண்டாம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். எனினும் இங்கு அப்படியான நிலைமையொன்று இல்லை. இது தொடர்பாக இச் சந்தர்ப்பத்தில் நான் அவுஸ்திரேலிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதையும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லையென்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அனைவரும் உண்மைகளை அறிந்து கொள்ள முடியுமென்றும் இலங்கையில் இன்னும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டே வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த எனக்கு நாட்டில் நிலவிய பயங்கரவாதம் பாரிய சவாலாக இருந்தது. நாம் எப்போதும் இந்ப்த பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தோமே தவிர எந்தவொரு இன,மத குழுக்களுடனும் எமக்கு எந்த மோதலும் இருந்ததில்லை.

யுத்தத்தை பேச்சுக்கள் மூலம் தீர்க்க நாம் பல தடவைகள் முயற்சித்தோம். எனினும் அவற்றை இடை நிடுவில் கைவிட்டு சுற்றுப் பேச்சுக்களில் இருந்து எழுந்து சென்றனர்.

30 வருடங்களாக மக்களுக்கு செய்யாமல் கைவிடப்பட்ட கடமைகளை இந்த சில வருடங்களுக்குள் நிறைவேற்ற நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது மட்டுமல்லாது உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்திகளையும் ஏற்படுத்தியுள்ளோம். நீங்கள் மீண்டும் உங்களது ஊர்களுக்குச் செல்லும் போது இந்த அபிவிருத்திகளை நீங்கள் காண முடியும். கல்வி, தகவல் தொழில்நுட்பத் துறைகளிலும் கணிசமான முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

இவற்றை மேற்கொள்ளும் அதேநேரம் எமக்கு மலர் மாலைகள் போலவே கல் வீச்சுக்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அமெரிக்கா சென்றால் விகாரைக்கு போக வேண்டாம் என்கிறார்கள். இங்கிலாந்து போனால் வழக்குத் தாக்கல் செய்கின்றனர். அவுஸ்திரேலியா சென்றால் வெளியில் இறங்க வேண்டாம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.எனினும் இங்கு அப்படியான நிலைமையொன்று இல்லை. அது தொடர்பாக இச் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர்கள் கேட்பது தான் என்ன? நாட்டை விடுதலை செய்துள்ளோம். யுத்தத்தினால் உயிரிழந்த பெரும் எண்ணிக்கையிலானோரின் வாழ்க்கையைப் பாதுகாத்து பயங்கரவாதத்தில் இருந்து விடுவித்த ஒரே நாடு என்ற நிலைக்கு கொண்டு வந்தமையினால் தானா இந்த கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பது இன்னும் சர்வதேசத்தில் முற்றுப் பெற்று விடவில்லை. யுத்த அகதிகள் போல் வந்து போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக நெதர்லாந்து நீதிமன்றமொன்று அண்மையில் தெரிவித்திருந்தது. நான் இதை எப்போதும் கூறி வருகிறேன்.

எதையும் மூடி மறைக்க நாம் தயார் இல்லை. 1976 மற்றும் 1986 களில் மனித உரிமைகளைப் பாதுகாக்க நாம் முன்னின்றோம். இன்றும் அப்படிதான். இன்றும் நாம் மனித உரிமைகளைப் பாதுகாக்கிறோம். பொய்களை கூறி உலகத்தை விழ வைக்க முயற்சிப்பவர்கள் இருக்கின்றனர்.

நீங்கள் அனைவரும் நாட்டுக்குச் சார்பாக இருந்தீர்கள்.இனியும் அப்படியே இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை 15 ஆம் திகதியளவில் தருவார்கள். அதை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்த பின்னர் நாட்டு, சர்வதேச மக்களுக்கு உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும். அப்போது தவறு செய்தவர்களுக்கு எதிராக செயற்பட முடியும்.மூடி மறைக்க எமக்கு ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நன்றி தினக்குரல்

No comments: