ஏழாம் அறிவு - உள்ளூர் தரத்தில் ஒரு தமிழ் சினிமா



.

கொஞ்ச நாளாவே டிவியில எந்த சேனல போட்டாலும், ஒரு அக்காவோ இல்லை அண்ணாவோ மைக்கை புடிச்சிகிட்டு (இல்ல சட்டைல மாட்டிகிட்டு) கேள்வி கேட்பாரு... அதுக்கு நம்ம சூர்யா, முருகதாஸ் மற்றும் உதயநிதி, இந்த மூணு பெரும் பதில் சொல்வாங்க பாரு... என்னமோ ஆறு கோடி மக்கள்'ல இவங்க மூணு பேருக்கு மட்டும் தான் (ஆனால் இருந்ததோ பெயருக்கு மட்டும் தான்) தமிழ் பற்று இருக்குற மாதிரியும் நம்ம எல்லாரும் அதை அடகு வச்சிட்டு சரக்கடிச்சிட்ட மாதிரியும் இருக்கும். 
உலக தரத்தில் தமிழ் சினிமாவை கொண்டு போயிருக்காங்களாம், யாருமே எடுக்காத கதையை எடுத்திருக்காங்களாம், சூர்யா கதைல ரொம்ப ஒன்றிப்போய் போதிதர்மனாவே வாழ்ந்திருக்காராம், நம்ம அக்கா ஸ்ருதி அப்பாவை போல நல்லா நடிசிருக்காம், முருகதாஸ் ஒரு காவியத்தை படைச்சிருக்காராம்.... யப்பா முடியலடா சாமி. சன் டிவியே தேவலாம் போல இருக்கு.

இதெல்லாம் பாத்துட்டு / கேட்டுட்டு  புல்லரிச்சிப் போய், புளகாங்கிதப் பட்டு தீபாவளிக்கு முந்தின நாள் ராத்திரி முறுக்கு கூட சுடாம என்னவோ புதுமை செஞ்சிருக்காங்க'ன்னு "சுற்றம் சூழ" எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துட்டு படத்துல போய் உக்காந்தேன். இதுல தீபாவளிக்கு முந்தின நாளே நாம பாக்கறோமேங்கிற பெருமை வேற. தியேட்டர் உள்ள போகும்போது விதி நம்மளை பாத்து லைட்டா சிரிச்சதை பாக்கவேயில்லை. இதுல அஞ்சு நிமிஷம்கழிச்சி தான் படத்துல உக்காந்தேன்.

போதிதர்மன் அப்போ கிளம்பிகிட்டு இருந்தாரு. மூணு வருஷமா குதிரையில போய்கிட்டே இருக்காரு. லொக்கேஷன் எல்லாம் நல்லா இருந்துது. அவரு சீனா போய் சேர்ந்து அப்புறம் அவரு செய்யுறதேல்லாம் நல்லா பாக்குற மாதிரி இருந்துது. முக்கியமா அந்த குழந்தையை தாயுடன் சேர்க்கும் அந்த காட்சி மிகவும் அருமை. குழந்தையின் நடிப்பு அபாரம். என்ன ஒண்ணு, நம்ம சூர்யாவுக்கு அந்த டோபா முடி தான் செட் ஆகலை.

எல்லாம் நல்லாத்தாங்க போச்சு.அவரு செத்த உடனே புதைக்கயில முருகதாசோட கற்பனையையும் சேர்த்தே புதைசிட்டாங்க போல. அதுக்கப்புறம் என்ன நடக்குதேன்னே தெரியல. போதிதர்மனின் வம்சாவளியான சூர்யாவும், மரபணு விஞ்ஞானி ஸ்ருதிஹாசனும் சந்திக்கிறாங்க. உடனே சூர்யாவுக்கு காதல் வருது. அப்புறம் தன்னை ஒரு காரியமாகத்தான் சந்திச்சாங்கன்னு தெரியும்போது சண்டை வருது. அப்போ, தான் ஒரு விஞ்ஞானி'ன்னும், சூர்யாவுக்கு போதிதர்மனோட மரபணுவும் சூர்யாவோட மரபணுவும் எண்பது சதவிகிதம் ஒத்து போகிறது'ன்னும் சொல்றாங்க. அறிவியல் பூர்வமாக அந்த போதிதர்மனின் திறமைகளை மரபணுவை தூண்டிவிடுவதன் மூலம் வெளிக்கொணரலாம்'ன்னும் சொல்றாங்க. அதுக்கு சூர்யா ஆராய்ச்சிக்கு ஒத்துக்கணும்ன்னு கேக்குறாங்க. சூர்யா மறுக்கிறார்.

அதே நேரத்துல இந்தியாவை தங்களிடம் மண்டியிட வைக்க ஒரு கொடிய நோய் கிருமியை அதைவிட ஒரு கொடிய வில்லன் கிட்ட குடுத்து அனுப்புறாங்க. அவரும் வந்த உடனேயே அந்த கிருமியை ஒரு நாய்க்கு போட்டு விட்டுடுறாரு. (சும்மா சொல்லக்கூடாது, அவரு ரொம்பவே நல்லா இருக்காரு. பேசாம ஹாலிவுட்டை விட்டுட்டு இங்கே வந்துடலாம். ஏய் ஏய் ன்னு தொண்டை கிழிய எல்லா படத்துலேயும் கத்தி கத்தி நல்லா சம்பாதிக்கலாம்). எங்க போதிதர்மனை மறுபடியும் கொண்டு வந்துடுவாளோன்னு கூடுதலா ஸ்ருதிஹாசனையும் கொலை செய்யச் சொல்றாங்க. இந்த விஷயம் இவங்களுக்கு தெரிஞ்சி, அவர் துரத்த இவங்க ஓட, இவங்க ஓட அவரு துரத்த.... யப்பா நமக்கே மூச்சு வாங்குது. இந்த தொரத்தல்ல நம்ம வில்லன், பத்து பதினஞ்சு போலீஸ்காரங்களை போட்டு தள்ளுறார். இது எல்லாத்துக்கும் நடு நடுவுல மானே தேனே பொன்மானே'ன்னு மூணு பாட்டு வேற.

முதலில் ஆராய்ச்சிக்கு ஒத்துக்காத சூர்யா இந்த அநியாயத்தை கண்டு பொங்கி எழுந்து, இலங்கை தமிழர் நலனுக்கு வசனமெல்லாம் பேசி கடைசியா ஒத்துக்குறாரு. (நெஞ்சில் அறைந்த ஒரு வசனம் - "ஏழு நாடுகள் சேர்ந்து ஒரு இனத்தை அழிப்பதுக்கு பேர் வீரம் இல்லை, துரோகம்")  அப்புறம் யாருக்கும் தெரியாமல் ஐ ஐ டீ க்கு உள்ளே இருக்குற ஒரு லேப்'ல ஏழு அடி பீப்பாயில நீல கலர் தண்ணி ஊத்தி சூர்யாவ ஆறு நாள் ஊற வைக்கிறாங்க. கடைசி நாள் வில்லன் அவங்க இருக்குற இடத்தை கண்டு புடிச்சி அங்க வந்து தப்பிச்சி போன அவங்க எல்லாரையும் புடிச்சி அடிக்கிறாரு. நல்லா அடியெல்லாம் வாங்குனப்புறம் சூர்யாவுக்கு போதிதர்மனோட திறமையெல்லாம் பிதுக்கிகிட்டு வெளிய வந்து, வில்லனை புரட்டி புரட்டி எடுத்து............ புது மருந்து கண்டுபுடிச்சி எல்லாரையும் காப்பாத்தறார். டிவி ஸ்டேஷன்ல உக்காந்துகிட்டு மக்களுக்கு அறிவுரை சொல்றாரு. பேட்டியோட படம் முடியுது.

முருகதாசுக்கு சில கேள்விகள் / பதில்கள்:
  1. போதிதர்மனை நாங்க ஞாபகம் வச்சிக்கல ன்னு கோச்சிக்கறீங்களே, இல்ல தெரியாமத்தான் கேக்கறேன், நாங்க எதுக்கு சார் ஞாபகம் வச்சுக்கணும். அவரு பொறந்தது மட்டும்தான் இங்க. வாழ்ந்தது பூரா சீனாவுல. மக்களுக்கு சேவை செஞ்சதும், சண்டை போட்டதும் சீனாவுல தான். கடையெழு வள்ளல்கள், காலத்தை வென்ற சேர சோழ பாண்டிய மற்றும் குறுநில மன்னர்கள், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் - இதெல்லாம் ஒரு சாம்பிள். இவங்க எல்லாரையும் மறந்தா போய்ட்டோம்? இன்னொன்னு சார். அன்னை தெரசாவை நாம தான் கொண்டாடுறோம். அல்பேனியா நாட்டுல அவங்களை யாரும் கண்டுக்கறது இல்லை. அரவிந்தர் அன்னையை நாம்தான் கடவுளாக வழிபடுகிறோம். அவர் பிறந்த பிரான்ஸ் நாட்டில் அவரை யாரும் நினைவில் வைத்துக்கொள்ளக் கூட இல்லை. இதே லாஜிக் வைத்து பார்த்தால் சீனர்கள் கொண்டாடுவதிலும் நாம அவரை மறந்ததிலும் எந்த ஒரு ஆச்சரியமும், தவறும் கிடையாது.
  2. இவ்வளவு தமிழ்ப் பற்று பத்தி, பத்திபத்தியா பேசுற நீங்க, தமிழே சரியா உச்சரிக்க வராத ஸ்ருதிஹாசனை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?
  3. உலக சினிமாவுல எல்லாம் சண்டை காட்சிகள்ல இயற்பியல் விதிகளை சரியாக கடைபிடிக்கிறார்கள். ஆனா இந்த படத்துல வில்லன் ஒரு உதை விட்ட உடனே ஹீரோ ஒரே நேர்கொட்டுல போய் மரத்துல மொதுறாரே? எப்படி? தூரம் கம்மியா இருந்தாலும் பரவாயில்லை, ஒத்துக்கலாம். எப்புடி சார்? கிராபிக்ஸ் காட்சிகள்ளேயும் இயற்பியல் விதிகளை காத்துல விட்டுட்டு, பூவையேல்லாம் எங்க காதுல விட்டுட்டீங்க சார்.
  4. உண்மையாவே போதிதர்மனின் புகழை சொல்ல நினைச்சிருந்தா முழு வாழ்க்கை வரலாறாய் எடுத்துருக்கணும். நடுவுல காதல், டூயட் பாட்டு, சோக பாட்டு, இதெல்லாம் எதுக்கு சார்?
  5. இத்தனை போலீஸ்காரர்கள் கொலை செய்யப்பட்டது எவ்வளோ பெரிய நியூசாயிருக்கணும்? சப்பாத்தி சுட்டா மாதிரி சிம்பிளா முடிச்சிட்டீங்களே ஐயா. நியாயமா?
  6. கமல்  பொண்ணு, நடிப்பு ரத்தத்திலேயே கலந்திருக்கும்'ன்னு நினைச்சி கூட்டிட்டு வந்துட்டீங்க. அடுத்த முறை கொஞ்சம் நடிக்க சொல்லிக் குடுத்து கூட்டிட்டு வாங்க சார். இவ்வளவு வேய்ட்டான கதாப்பாத்திரத்துக்கு கண்ணு முதற்கொண்டு நடிக்கணும். கண்ணுல அந்த நடிப்பே இல்லை சார். உடம்பை நடிச்சா மட்டும் போதுமா?
கடைசியாக.....
மிகுந்த பொருட்செலவுன்னு நீங்க சொன்னது, சூர்யா சம்பளத்தை மட்டும் இல்லல்ல?

அடுத்து எவனாவது உலக சினிமா எடுத்துருக்கேன்னு சொல்லிட்டு மைக் புடிச்சிகிட்டு தயவுசெய்து டிவில பேசாதீங்க. ஏன்னா, "உலக சினிமாவிலேர்ந்து எடுக்கறதுக்கும்", உலக சினிமா எடுக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

No comments: