இத்தனை சோகமான வடுக்களுக்கு அப்பாலும் கலைஞர்களை சிறப்பாகஉபசரிக்கும் இந்த மக்களைப்போல இன்னொரு சமூகத்தினரை நான் சந்தித்ததே இல்லை -ரி.எம்.கிருஷ்ணா

.

krishna.tmலைஞர்களை சிறப்பாக உபசரிக்கும் இந்த மக்களைப்போல இன்னொரு சமூகத்தினரை நான் ஒருபோதும் சந்தித்ததே இல்லை என்று நினைவு கூருகிறார். போரினால் சின்னா பின்னமாக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு சமீபத்தில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞரான ரி.எம். கிருஷ்ணா. அங்கு அவர் கண்டது சுற்றியுள்ள பேரதிர்ச்சிகளையும் தாண்டி வெளிவரத் துடிக்கும் கலைமீது கொண்டுள்ள அளவு கடந்த காதலை.

நம்பிக்கை, சுய உறுதி, விசுவாசம் போன்ற வார்த்தைகளை அவை கதைப் புத்தகங்களிலும் செய்தித்தாள்களிலும் கற்பனையாக விபரிக்கப் பட்டிருந்த போதும் நாம் மிகவும் சௌகரியமாகப் பயன்படுத்துவது எதிர் அனுபவங்களுக்காகத்தான். இந்தக் குணாதிசயங்கள் ஒருவருடைய சொந்த வளர்ப்பு மற்றும் சமூகச்சூழல் என்பனவற்றிலிருந்து பிறப்பன அல்ல ஆனால் நாகரிகத்தின் ஒவ்வொரு சிறுபகுதியும் முக்கியமான இந்தத் தூண்களை உறுதிப்படுத்துவதை நோக்கியே பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஸ்ரீலங்காவின் வடபகுதியில் ஏதாவது ஒரு தமிழரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையயும் உண்மையில் எனது எண்ணம் இதுவாகத்தான் இருந்தது. இந்த அற்புதமான மனிதர்களால் தாங்கள் கண்டு அனுபவித்த துயரங்களுக்கு மத்தியிலும்; இன்னும் புன்னகை பூக்கவும் உரத்துச் சிரிக்கவும் முடிகிறது. இதைத் தவிர வேறு வழியில்லை அவர்களுக்கு. 30 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் வவுனியா அகிய இடங்களுக்கான எனது இசைச் சுற்றுப்பயணம் ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது.

ஆழமான பிணைப்பு

உலகின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அநேக யாழ்ப்பாணத் தமிழர்களை சந்தித்ததின் பயனாக அவர்களின் கலாச்சாரத்தில் குறிப்பாக அவர்களின் மொழி, இசை, மற்றும் சமயம் என்பனவற்றில் அவர்கள் கொண்டிருந்த ஆழமான பற்றுதலை நான் நன்கறிந்திருந்தேன். இந்தப் புரிதலைத்; தவிர நான் இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்கிற பயம் என்னுள் ஏற்பட்டிருந்தது. ஒருவருடைய வாழ்க்கையில் இசையும் கலையும் மிக முக்கியமானவை அவரைச் சுற்றியுள்ள மற்ற எல்லாம் உடைந்து நொறுங்கினாலும் இவை இரண்டும் அழியாதவை. நான் ஆச்சரியத்தில் உறைந்து போனேன். அதற்கான பதில் அடுத்த நாள் நான் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறியபோது எனக்கு கிடைத்தது. அரங்கு நிறைந்த சபையினர் அளவுகடந்த நேசத்துடனும் பாசத்துடனும் என்னை வாழ்த்தியதற்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இசையின் மீது கொண்ட அளவுகடந்த ஆர்வமும் தாகமும் அங்கு வீற்றிருந்த பார்வையாளர்களான ஒவ்வொரு தனிநபரிடத்தும் காணப்பட்டது. தீவிரமாக இரசித்துக் கேட்பது, எண்ணியுணர்ந்து பாராட்டுவது, உடனடியாக கைதட்டி வரவேற்பது போன்றவை ஆச்சரியமூட்டுவதாக இருந்தது.

இந்த இடத்தில் நான் மிகவும் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, கலைஞர்களை சிறப்பாக உபசரிக்கும் இந்த மக்களைப்போல இன்னொரு சமூகத்தினரை நான் சந்தித்ததே இல்லை என்பதை. உண்மையான மரியாதை மற்றும் எல்லாக் கலைஞர்கள் மீதும் கொண்ட அளவு கடந்த பாசம் மற்றும் அவர்களுக்கு உதவவேண்டும் என்கிற அவா என்பன எப்போதும் அவர்களிடத்தில் நிறைந்து நின்றன

எங்களது யாழ்ப்பாண இசை நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் இப்போது இசை, நடனம், மற்றும் மாணவர்களுக்கான இடைவினைக் கலைக் காட்சிகளை பயிற்றுவித்து வரும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரிக்கு எங்களை அழைத்திருந்தனர். அவர்களுடைய செயல்திறன் பகுதிக்கு நாங்கள் சென்றபோது கிட்டத்தட்ட 400 வரையான மாணவர்கள் எங்களை வாழ்த்தி வரவேற்றனர். அந்த முகங்கள் அவற்றில் மலர்ந்த சிரிப்புகள், அவர்களிடமிருந்த உந்துதல், கேள்விகள் மற்றும் அவர்கள் வழங்கிய துடுக்கான பதில்கள் யாவுமே அழகாக இருந்தன. இது சென்னையில் நடைபெறும் ஒரு கலைப்பள்ளியைப் போலவே இருந்தது. உண்மையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இங்கிருக்கும் மாணவ மாணவிகள் ஒவ்வொருவரினதும் குடும்ப உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராவது போரினால் பாதிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்கள் என்பதை கற்பனை செய்யக்கூட முடியவில்லை? தங்களைச் சுற்றியுள்ள சோகமான அதிர்வுகளுக்கு மத்தியிலும் இத்தனை இளைஞர்களும் கலைகளைக் கற்பதில் காட்டும் ஆர்வம் வியப்பூட்டுவதாகவுள்ளது.

jaffnahouseயாழ்ப்பாணத்தில்கூட நாம் காணும் ஒவ்வொருபொருளிலும் யுத்தத்தின் வடுக்கள் தேங்கி நின்றன. டச்சுக் கோட்டை மீளக் கட்டியமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு ஏற்பட்ட அழிவுகள் இன்னமும் தெளிவாகத் தெரிகின்றன. யாழ்ப்பாண நூலகம் அது ஒருகாலத்தில் இருந்ததைப் போன்று பொக்கிசக் களஞ்சியமாக இப்போது தென்படவில்லை. மூடப்பட்டிருந்த பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் இப்போது திறக்கப் பட்டுள்ளன ஆனால் அந்த இடங்களில் அதிகமான மக்கள் வசிக்கவில்லை. குடா நாடு முழுவதும் துப்பாக்கி ஏந்தியபடி சந்தேகப் பார்வை பார்க்கும் இராணுவத்தினரை இன்னமும் காணக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாண பிரதேசத்திலுள்ள சிறிய நகர் பகுதிகளில் எறிகணைத் தாக்குதல் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பனவற்றால் சேதமடைந்த வீடுகள் சிறிய புள்ளிக் கோலங்கள் போல இயற்கையழகுக்கு இடையே காட்சி தருகின்றன. மாவிட்டபுரத்தில் உள்ள மேற்கூரையில்லாத கோவிலைப்போல பல கோவில்கள் இங்கே இடிந்து போய் காட்சியளிக்கின்றன. மாலை ஆறு மணிக்கே இங்குள்ளோர் வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்து விடுகிறது. போக்கு வரத்து வசதியின்மை காரணமாக மாணவர்கள் பலருக்கு எங்கள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றுகூட எங்களிடம் சொல்லப்பட்டது. இவை யாவும் இருந்தாலும்கூட காவி நிறக் கோபுரத்துடனும் கோவிலின் உட்புறக் கூரை துணிகளால் அலங்கரிக்கப்பட்டும் நல்லூர் கோவில் அழகுடன் மிளிருகிறது.

அடுத்த நாள் கிளிநொச்சியில் நடைபெற்ற இசைக் கச்சேரிக்கு சிறிய அளவிலான ஆட்களே வருகை தந்திருந்தனர், மற்றும் இங்கு நிலமை இன்னும் சீரடையவில்லை என்றும் மக்கள் யுத்ததம் முடிவடைந்த பின்னர் தங்கள் சொந்தக் கால்களில் நிற்பதற்கான வழிகளை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. ஆனால் கச்சேரி முடிவடைந்த பின்னர் என்னால் மறக்க முடியாத சம்பவம் ஒன்று இடம்பெற்றது. ஒரு வயதான மனிதர் கண்ணீர் நிறைந்த விழிகளுடன் என்னிடம் வந்து தனது வாழ்க்கையில் கடந்த முப்பது வருடங்களில் தான் சந்தித்திராத மகிழ்ச்சியான ஒரு தருணம் இதுதான் என்று நா தழுதழுக்க கூறினார். உண்மையில் எனது வாழ்க்கையையே மாற்றிய ஒரு கணமாக அது இருந்தது.

இராணுவ பிரசன்னம்

அடுத்த நாள் வவுனியாவுக்கு போவதற்கு முன்பு முல்லைத்தீவுக்கு ஒரு முறை விஜயம் செய்ய முயற்சி செய்து பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். போகும் வழியில் முதல் தடவையாக சிறுவர்கள் புத்தகப் பைகளைக் காவியபடி குடைகளை பங்கிட்டுக் கொண்டு பாடசாலைகளுக்கு நடந்து செல்லும் காட்சி என் கண்ணில் பட்டது. உண்மையில் மனதைக் கொள்ளை கொள்ளும் ரம்மியமான காட்சி. திடீரென எங்குமில்லாதவாறு பழுதான சீரூந்துகள், பேரூந்துகள் பார ஊர்திகள், மிதி வண்டிகள், உந்து வண்டிகள் போன்றவற்றை குவித்து வைத்திருக்கும் குவியல் கண்ணில் பட்டது. அதைத் தொடர்ந்து கண்ணி வெடிகளின் ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கைகள் தென்னை மரங்களில் அடையாளப் படுத்தப் பட்டிருப்பதைக் காணமுடிந்தது.தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நீண்டதூரம் பயணம் செய்த பிறகு அதிகளவிலான இராணுவ முகாம்களையும், சோதனைச் சாவடிகளையும் மற்றும் குறைவான மக்களையும் கண்டோம்.ஆவி நகரமான புதுக்குடியிருப்பில் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த கட்டிடங்களையும், நேரடிக் கண்ணிவெடிகளையும் கண்டதற்கு முரண்பாடாக, முல்லைத்தீவில் அழகான கடற்கரைகளையும், ஓடைகளையும்,பறவைகள். மற்றும் கோவில்களையும் காண்பது ஒருவருடைய நினைவிலிருந்து அழிப்பதற்கு கடினமான காட்சிகளாகும்.

ஒரு பயணி என்ற வகையில் எனக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது முரணான காட்சிகள் மற்றும் கருத்துக்களுடன் போராடவேண்டியிருந்ததேயாகும். நான் ஏன் அங்கு பிரசன்னமாகியிருக்கிறேன் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. நான் ஒரு கலாச்சாரத் தூதுவரா? அல்லது நான் ஒரு சுற்றுலா பயணியா? நான் சாட்சியாகவிருக்கும் மோதல்கள் மற்றும் அதன் எச்சங்களைப் பற்றி என்ன சொல்வது? இதுதான் என்னுள்ளே எழுந்து மிகத் தீவிரமான போராட்டம், மற்றும் இன்னும் என்னால் அதனை தீர்த்து வைக்க முடியவில்லை.

இந்த மக்களுக்கு இந்தியாவுடனான தொடர்பு இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையே உள்ள அடையாளங்கள் மற்றும் இயற்கை இணைப்புகள் காரணமாக மிகவும் ஆழமானதாகவும், பழமையானதாகவும்; உள்ளது. இந்தியா இவர்களுக்கு வழங்க வேண்டியது ஏராளமாக உள்ளது. ஆம், உட்கட்டமைப்புகள் மற்றும் நிதியுதவி என்பன மிகவும் முக்கியமானவைகள்தான் ஆனால் மானிட மீள்கட்டமைப்புக்கு நாம் வழங்கும் ஆதரவுதான் நமது மிகப் பெரிய பங்களிப்பாக இருக்க வேண்டும். தெற்கே இருக்கும் நமக்கு தமிழர்கள் அந்நியர்கள் அல்ல நம்மை ஒத்தவர்கள், மற்றும் அவர்கள் எண்ணங்களையும் மற்றும் வழிகளையும் மற்ற யாரையும் காட்டிலும் நமக்கு நன்கு புரிந்து கொள்ள முடியும். யாராவது தங்கள் நலன் சார்ந்த உணர்வு பூர்வமான பங்களிப்பை அவர்களுக்கு வழங்குவார்களாயின் அது நாமாகத்தான் இருக்க முடியும். சமூகம் என்பது மக்களால் நெய்யப்பட்ட ஒரு துணியைப் போன்றது. ஆகவே மன உறுதியுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கு நாங்கள் உணர்ச்சிகளை பண்பாடு மற்றும் வரலாறு ஊடாக அவர்களுக்கு ஊட்ட வேண்டும். ஸ்ரீலங்காவின் வடபகுதியில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் இசை, நடனம், நாடகம் மற்றும் இலக்கியம் என்பன தீவிரமான பங்களிப்பினை ஆற்ற வேண்டும் என நான் நம்புகிறேன். சாதாரணமாக ஒரு தைலம் தடவுவதைப்போல மென்மையாக இல்லாமல் உண்மையில் நாங்கள் மறந்து விட்ட ஆனால் அவர்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கும் பலகாலப் பழைய உறவுக்கு புத்துயிர் அளிப்பதைப்போல அது இருக்க வேண்டும். அவர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் அதிக சுய நம்பிக்கை, பெருமை, மற்றும் விசுவாசம் என்பனவற்றை வழங்குவதற்கு கலாச்சார உறவினை ஒரு கருவியாக நாம் பயன்படுத்தலாம்.

கலைஞர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டாம், யுத்த களத்திற்குப் போய் சண்டையிட வேண்டாம். ஆனால் இவர்களின் வாழ்க்கையின் உயிர் மூச்சான சந்தோசத்தை கலைஞர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் வழங்குவோம்.

(எழுத்தாளர் சென்னையை அடித்தளமாககக் கொண்ட ஒரு கர்நாடக இசைப் பாடகர்)

நன்றி: த.ஹிந்து

தமிழில்: எஸ்.குமார்

No comments: